தேர்தல் நேரத்தில் மாற்றப்படும் தேர்தல் ஆணையர்கள்…ஏன்?

தேர்தலில் வெற்றி பெற கட்சிகளுடையே கூட்டணி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் ‘ஒத்துழைப்பும்’ மிக முக்கியம் என்ற எழுதப்படாத விதி இந்திய தேர்தல் நடைமுறைகளில் உள்ளது.

தற்சமயம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக உள்ள சந்தீப் சக்சேனா, தேர்தல் ஆணையத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்திப் சக்சேனா, டெல்லிக்கு மாற்றம் கோரி விண்ணப்பித்ததாகவும் அதன் பேரிலே அவரை விடுவித்துள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு தமிழக முதன்மை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட சந்தீப் சக்சேனா ஸ்ரீரங்கம், ஆர். கே.நகர் இடைத் தேர்தல்களில் ஆளும் அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று கூறி அவரை மாற்ற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்து வந்தன.

“தேர்தலில் வன்முறை என்பது இந்தியாவெங்கும் ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. சமீப காலங்களில், கிட்டத்தட்ட இந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் தேர்தல் முறைகேடு அதிக அளவில் நடந்துள்ளது. முறைகேடுகளில் அரசியல்வாதிகள் ஈடுபடும் காலம் போய் வாக்காளர்களே வாக்குக்குப் பணம் பெற்றுக்கொள்ளும் முறைகேட்டில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள். பீகார் தேர்தல் வன்முறைக்கு பெயர்பெற்றது. தமிழகத் தேர்தல் முறைகேடுகளுக்கு பெயர் பெற்றிருக்கிறது” என்கிறார் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆர். முத்துக்குமார்.

2009-ஆம் ஆண்டு திருமங்கலத்தில் நடந்த இடைத் தேர்தலின் போது அப்போதைய திமுக அரசு வாக்களர்களுக்கு பெருமளவில் பணம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி கண்டதால் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என சிறப்புப் பெயரையும் அந்தத் தேர்தல் பெற்றது. அப்போது தமிழக தேர்தல் ஆணையராக இருந்தவர் நரேஷ் குப்தா. நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர் என்றாலும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு முன் அவருடைய அதிகாரத்தால் வலுவாகப் போராட முடியவில்லை.

“இந்திய சுதந்திரம் அடைந்து முதல் தேர்தல் நடந்தபோது தேர்தல் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும் என்றார் ஜவஹர்லால் நேரு. ஆனால் இப்போது தேர்தல் ஆணையர் என்றாலே ஆளும் அரசுக்கு ஆதரவாகத்தான் இருப்பார் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது” என்கிற முத்துக்குமார், தேர்தல் ஜனநாயகத்தை மீட்டெடுக்க தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தம் தேவை என்கிறார்.

“தேர்தல் ஜனநாயகத்தில் மாற்றம்கொண்டுவர வலுவான ஆயுதம் தேவை. சில சமயம் இந்த ஆயுதங்களே ஜனநாயகத்தை சீர்குலைத்திருப்பது கடந்தகால வரலாறு. இனியும் அப்படி நடக்காமல் தேர்தல் ஆணையம் தன்னுடைய சுதந்திரத்தன்மையை நிலைநிறுத்த முயல வேண்டும். கடந்த காலங்களில் தமிழக தேர்தல்களில் தேர்தல் ஆணையம் மீது விழுந்த மோசமான பிம்பத்தைக் களைய நேர்மையான, வலுவான தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்” என்கிறார் ஆர். முத்துக்குமார்.

இந்நிலையில், சுற்றுலாத் துறை செயலாளராக உள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹர்சகாய் மீனா தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பொறுப்புக்கு நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த முதன்மைச் செயலாளர்கள் சிலரது பெயரும் பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆட்சியில் பங்கேட்கும் கட்சிகளின் கனவு பலிக்குமா?

allai

பெரிய கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கெல்லாம் தமிழகத்தில் வாய்ப்பேயில்லை என்று பேசிவந்த காலம் போய், சிறிய கட்சிகள் கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்கொண்டால்தான் கூட்டணிக்கே வருவோம் என பெரிய கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. அதிமுகவுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாத காரணத்தினால் திமுகவால் நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற அடுத்த நிலையில் உள்ள கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும் திமுகவுடன் கூட்டணிக்கு வரத் தயார் இல்லை என்கின்றன.

தமிழகக் கட்சிகள் – கூட்டணி

காங்கிரஸ்-திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ்-அதிமுகவுடன் கைக்கோர்க்க முயற்சிக்கிறது. வைகோவின் மதிமுக, திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் – தேமுதிகவை இழுக்கப்பார்க்கிறார்கள். பாஜக-தேமுதிக-பாமக கூட்டணிக்கு முயற்சிக்கிறது. புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் அதிமுகவுடன் சேர விரும்புகின்றன.

கட்டுப்பாடு போடும் காங்கிரஸ்

அண்மையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன். தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகள் நக்மா, குஷ்பூ போன்றவர்கள் காங்கிரஸுக்குப் புத்துயிர் தருவாவர்கள் என நம்புகிறார் அவர். எனவே, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “கூட்டணி ஆட்சிக்கு யார் ஒத்துக்கொள்கிறார்களோ அவர்களுடன் மட்டும்தான் கூட்டணி அமைப்போம். இதில் நாங்கள் உறுதியாக இருப்போம். இனி தேர்தலுக்கு மட்டும் கூட்டணி பிறகு நட்பான அணுகுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

பாஜகவின் கனவு

மக்களவைத் தேர்தலை இணைந்தே சந்தித்ததைப் போல பாஜக தங்களுடன் பாமக,தேமுதிக கட்சிகளை இணைத்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க விரும்புகிறது. இதன் மூலம் கணிசமான இடங்களைப் பிடித்து ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைந்ததுபோல தமிழகத்திலும் அமைக்க வேண்டும் என்பது பாஜக தலைவர் அமித் ஷாவின் திட்டம். ஆனால் இந்தக் கூட்டணியில் பாமக-தேமுதிக எப்படி இணைந்திருப்பார்கள் என்பது அவர்கள் முன் உள்ள சவால். கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஆதரவாக வட மாவட்டங்களில் பாமகவினர் சரியாக தேர்தல் பணியாற்றவில்லை; தங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டியது தேமுதிக. ஆனால் பாமகவோ தாங்கள் மனசாட்சிப்படி பணியாற்றியதாக விளக்கம் சொல்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தங்களுடன் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று சொல்லியிருந்தார். இதை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரேமலதா, காரணம் அன்புமணியை முதல்வராக எப்படி ஏற்கமுடியும் என்பதே. விஜயகாந்த், அன்புமணி என முதல்வர் பதவியை தீவிரமாக விரும்புகிறவர்கள் ஒரே கூட்டணியில். அதை எப்படி எதிர்கொள்வது என்பதே பாஜக முன் இருக்கும் சவால்.

மக்கள் நலக் கூட்டியக்கம் விரும்பும் விஜயகாந்த்

அதிமுக, திமுகவுக்கு அடுத்து தீர்மானிக்கு சக்தியாக மாறியுள்ள தேமுதிகவை நான்கு கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு தலைமை ஏற்ற வைக்க வேண்டும் என்பது வைகோவின் விருப்பம். ஆனால் விஜயகாந்த் பிடிகொடுப்பதாகத் தெரியவில்லை. கணவனும் மனைவியும் அதிமுக, திமுகவென பிரித்துக்கொண்டு கடுமையாக மேடைகளில் விமர்சித்துவருகிறார்கள். இந்த இரண்டுக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லியே வருகிறார்கள். ஆனாலும் தங்களுடைய நிலைப்பாடு பற்றி தமிழக அரசியல் கட்சிகளிடையே குழப்பமான நிலையையே இவர்கள் உருவாக்கிவருகிறார்கள். இந்தக் குழம்பியக் குட்டையில் யார் தேமுதிக என்னும் வளமான மீனைப் பிடிக்கப் போகிறார்?