சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது‘
தன் கவிதையைப் போலவே காற்றின் திசை வழி பறந்து, எங்கெங்கெல்லாமோ வாழ்ந்து, எப்படியோ முடிந்துபோன வாழ்க்கை கவிஞர் பிரமிளுடையது. இலக்கிய உலகின் மர்மயோகி. சுடும் விமர்சனங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய விமர்சனங்களின் தாக்கத்தைத் தாக்குப்பிடிக்கமுடி யாமல் பிரமிளின் படைப்பாற்றல் குறித்து இலக்கியப் பரப்பில் போதுமான விவாதங்கள் நிகழாமலேயே இருக்கின்றன. ஏப்ரல் 20ல் தொடங்கும் பிரமிளின் 70வது பிறந்த தினத்தைக் கொஞ்சம் விமரிசையாகக் கொண்டாட இருக்கிறார் அவரது நண்பர் காலசுப்ரமணியம். பிரமிளின் புத்தகங்களை மறுபதிப்பு செய்யவும் அவரது ஓவியங்களைக் கண்காட்சிப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன.
”அதுவரை தமிழில் வந்துகொண்டு இருந்த கவிதைகளிலிருந்து மாறுபட்டு, பல பரிமாணங்களைக் கொண்டதாக இருந்தன பிரமிளின் கவிதைகள். நெருப்பைத் தீண்ட அஞ்சுவதைப் போல இலக்கியவாதிகள் அவரை நெருங்கத் தயங்கினார்கள்” என்கிறார் காலசுப்ரமணியம்.
”இலங்கை திரிகோணமலையின் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவருக்குப் பள்ளி இறுதி வரைதான் படிப்பு சாத்தியப்பட்டது. ஆனால், அங்கிருந்தபடியே அவர் தமிழ்நாட்டு இலக்கிய நடப்புகளை அறிந்துகொண்டு இருக்கிறார். 19 வயதிலேயே இலக்கிய இதழ்களில் அவர் படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கின. ஓவியத்தின் மீதிருந்த ஆர்வத்தால், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்‘ல் ஓவியம் கற்றிருக்கிறார். ஒரே உறவான அம்மாவும் இறந்த பிறகு, இந்தியா வந்த பிரமிள், மதுரை, சென்னை, டெல்லி எனச் சுற்றியலைந்துவிட்டு சென்னையிலேயே தங்கிவிட்டார். பிரான்சுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா வந்தவருக்கு அது இறப்பு வரை சாத்தியப்படவில்லை.
’’காசுக்காக எழுதமாட்டேன்’’ என்று பிடிவாதமாக இருந்தார். நண்பர்களின் உதவியில்தான் வாழ்ந்தார். ஜோதிடத்திலும் நியூமராலஜியிலும் அதிகமான நம்பிக்கை. அடிக்கடி பெயரை நியூமராலஜிப்படி மாற்றிக்கொண்டே இருப்பார். தர்மு சிவராம், டி.அஜித்ராம் பிரேமிள், பிரமிள் என அவர் மாற்றிக்கொண்ட பெயர்களின் பட்டியல் நீளமானது.
அபாரமான விமர்சனப் பார்வை உடையவர். போலித்தனமான இலக்கியவாதிகளை எப்போதும் விமர்சித்தபடியே இருப்பார். பலருக்கும் புரிபடாமல் இருந்த மௌனியின் எழுத்து எப்படிப்பட்டது என்று இவர் எழுதிய கட்டுரைதான், மௌனியைப் பலருடைய வாசிப்புக்குக் கொண்டுசென்றது. இவருடைய ‘கடலும் வண்ணத்துப்பூச்சியும்’, ‘கண்ணாடியுள்ளிருந்து’ கவிதைகள் அபாரமான வீச்சு உடையவை. ஒரு மாத காலம் காய்ச்சலால் அவதிப்பட்டவரை நண்பர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போதுதான் அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. வீரியமான பிரமிள் விரலசைக்க முடியாமல் செயலிழந்து கிடந்தார். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் தனது 56வது வயதில் இறந்தார். இறப்புக்குப் பிறகும் கவனிக்கப்படாத கலைஞன் பிரமிள்!” வருத்தத்தோடு முடித்தார் காலசுப்ரமணியம்.
ஆனந்த விகடன் 23-04-08 இதழில் நான் எழுதிய கட்டுரை…