வெள்ள நீரில் கலந்த சாதியம்: கடலூரில் நிவாரணம் மறுக்கப்படும் தலித் மக்கள்

தமிழகத்தை புரட்டிப் போட்டிருக்கும் வெள்ளம் எல்லா மக்களையும் வர்க்கம், சாதி, மதம் தாண்டி இணைத்திருக்கிறது என்கிற செய்திகளை சமூக வலைத்தளங்களில் படித்துவருகிறோம். ஆனால் பெரும் துயரத்திலும் கடலூர் மக்கள் சாதியத்தை தூக்கி சுமப்பதாக தலித் உரிமைகளுக்கான தேசிய பிரச்சார இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழகத்தில் பெய்த பெருமழையில் அதிக பாதிக்கப்பட்ட மாவட்டம் கடலூர்.  இந்த பாதிப்புகளில் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருப்பது தலித் மக்களே என்கிறது இந்த அறிக்கை. National Campaign for Dalit Human Rights (NCDHR), Social awareness Society of Youth (SASY) இணைந்து கடலூரில் 20 கிராமங்களில் ஆய்வு நடத்தியது.

* இந்த கிராமங்களில் 90 சதவிகித தலித் மக்களின் குடிசைகள், வீடுகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன.

* பயிர்களும் வெள்ளத்தால் வீணாகியிருக்கின்றன. கால்நடைகளை இழந்திருக்கிறார்கள்

*  ஆறுகளின் கரையோரங்களில் நீர்நிலைப்பகுதிகளில் தலித்துகளின் குடியிருப்புகள்(அதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாக) அமைந்திருந்ததும் அதிகப்படியான சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

* கடலூர் மாவட்டத்தில் தலித்துகளின் வசிப்பிடங்களில் பள்ளிகள், சமூகக் கூடங்கள் இல்லை. கடும் மழையிலும் வெள்ளத்திலும் திறந்த வெளிகளில் கழித்திருக்கிறார்கள். குறிப்பாக கொங்குராயன்பாளையம், அகரம், அம்பேத்கர் நகர் போன்ற கிராமங்களில்…

*  அரசு மீட்புப் பணிகளுக்கு கடலூரி உள்கிராமங்களுக்குச் செல்லவில்லை. சில்லான்குப்பம், காடுவெட்டி, வரகூர்பேட்டை, அன்னவல்லி போன்ற தலித்துகள் அதிகம் வசிக்கும் குக்கிராமங்களுக்கு மீட்புப் படையினர் செல்லவில்லை.

* வடக்குத்துறை, கொங்குராயன்பாளையம் போன்ற பகுதிகளில் தலித் மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டிருக்கிறார்கள். கொங்குராயன்பாளையத்தில் ‘மேல்சாதியினர்’ எனச் சொல்லிக் கொள்ளும் மக்கள், தலித் மக்களுக்கு பொது குடிநீர் உபயோகிக்க அனுமதிக்கவில்லை.

* அலமேலுமங்காபுரத்தில் அரசு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமுக்கு ‘மேல்சாதியினர்’ பிரச்சினை செய்வார்கள் என்று தலித்துகள் தங்களுடைய உடல்நலை பரிசோதித்துக் கொள்ள வரவில்லை.

*  அலமேலுமங்காபுரம், நாலாந்தீவு, வடக்குத்துறை போன்ற ஊர்களில் வெள்ளநீரோடு, கழிவு நீரும் கலந்து தேங்கியிருப்பதால் நோய்கள் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

TamiPost

 

இந்தியாவில் சகிப்பின்மை இல்லை: மோடி இங்கிலாந்தில் விளக்கம்

இந்தியாவில் சகிப்பின்மை இருக்கிறதா இல்லையா என்பது குறித்து இந்திய மக்களின் பிரதமராக தெளிவுபடுத்தாத இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும்பொருட்டு சென்றிருக்கும் பிரிட்டனில் ‘இந்தியாவில் சகிப்பின்மை இல்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.

வியாழக் கிழமை பிரிட்டன் சென்ற இந்திய பிரதமருக்கு அரசு மரியாதை அளித்து கவுரவித்தது பிரிட்டன் அரசு. டேவிட் கேமரூனுடன் ஒன்பது பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பாதுகாப்புத் துறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மோடி, பிறகு பிரிட்டன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது நாட்டில் அதிகரித்துவரும் சகிப்பின்மை சூழல் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த மோடி, “அரசியலமைப்புச் சட்டம் இந்தியர் ஒவ்வொருவரின் சுதந்திரத்தையும் கருத்தையும் பாதுகாக்கிறது” என்றவர்,

“இந்தியா காந்தியும் புத்தரும் வாழ்ந்த பூமி. இங்கே சகிப்பின்மைக்கு இடமில்லை. இந்தியாவின் எந்தப் பகுதியில் சகிப்பின்மைக்கு எதிரான சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று விளக்கம் கொடுத்தார்.

மோடி பத்திரிகையாளர்களை சந்தித்த இடத்துக்கு அருகிலேயே மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீக்கியர்கள், தலித்துகள், இஸ்லாமியர், தமிழர்கள் என பலதரப்பட்ட பிரிட்டன் வாழ் இந்தியர்கள் பங்கெடுத்தனர்.

சாதி இந்திய சமூகத்தின் இயல்பான மனநோய்!

ஆதவன் தீட்சண்யாவின்  ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை முன்வைத்து…

சமீபத்தில் மகாத்மா புலேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் படித்தேன். 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இந்திய சமூகத்தில் வேறோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து, கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் விமர்சனப் போக்கில் எழுதியிருப்பார். அந்த நேரத்தில் சாதி ஒடுக்குமுறைகளை குறித்து ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கும்பொருட்டும் ஒடுங்கிக் கொண்டிருந்த மக்களின் உரிமைகளை உணர்த்தும் பொருட்டும் சமூக நீதிக்கான பாதையை வகுத்துக் கொடுத்தது அவர் எழுத்து.  புலேவின் தொடர்ச்சியாக ஆதவன் தீட்சண்யாவின் எழுத்தைப் பார்க்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து பலரும் எழுதுகிறார்கள், அவையெல்லாம் இந்த மக்களின் அவலங்கள், பாடுகள் குறித்துதான் அதிகம் பேசுகின்றன. இத்தகைய அவலங்கள், பாடுகளுக்கான சமூக காரணிகளை இவை பேசுவதில்லை.
ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’  முன் அட்டையில் தொடங்கி பின் அட்டை வரை நந்தஜோதி பீம்தாஸ் என்கிற எழுத்தாளர் வழியாக, சமகால சமூக அரசியல் சார்ந்து தனித் தனி களங்களுக்கு படிப்பவரை இட்டுச் செல்கிறது.

Adhavan the novel

மகாத்மா புலே, அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார் என நம் புரட்சியாளர்கள் சாதி குறித்த பெருமிதங்களை உடைத்தெறிந்துவிட்டார்கள். நூறாண்டுகளாக தொடரும் இந்த சாதி வேரை பிடிங்கி எறியும் பனி இன்னமும் முடிவு பெறும் கட்டத்தை அடையவில்லை. இன்றைய கட்சி அரசியல் சூழல் சாதிக்கு குளிர் நீரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் ரத்தத்தையும் சத்தாக அளிக்கிறது. புரட்சியாளர்கள் சடங்குக்குரிய கற்சிலைகளாக மட்டும் இன்று நினைக்கப்படுகிறார்கள். சாதி இல்லை, சாதியெல்லாம் இப்ப யாரு பார்க்கிறா? போன்ற பேச்சுக்கள் அதிகபட்சம் 1% க்கும் கீழே உள்ள மெட்ரோவில் வசிக்கும் மேல்தட்டு வர்க்கம் கோபித்துக் கொள்கிறது. 1%த்துக்கும் குறைவான இந்த மக்கள் சாதியை விட்டொழித்தவர்கள் என்று எண்ணி விடுவதற்கு வாய்ப்பு உண்டு, உண்மையில் இவர்களை சாதியைக் கண்டு கொள்ளாதவர்கள் என வகைப்படுத்தலாம். எனக்கென்ன, எனக்கொன்றும் சாதியால் பாதிப்பில்லை என்பது இவர்களுடைய மனோபாவம். இந்த 1%த்தினரில் தலித் இருக்கலாம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பார்ப்பனர் என எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். இவர்கள் ஒன்று படுவது வர்க்க அடிப்படையில், அதாவது மேல்தட்டு வர்க்கம் என்ற அடிப்படையில்.

இந்த 1 சதவீதத்தினர் குறித்து நாம் ஏன் இவ்வளவு ஆராய வேண்டி இருக்கிறது என்றால், இவர்கள்தான் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள், கொள்கைகள், திட்டங்கள் போடுபவர்களாக இருக்கிறார்கள், இவர்களின்றி அதிகாரத்தின் ஓர் அணுவும் அசையாது! இவர்கள் கண்ணைக் மூடிக்கொண்டு சதா வசதிகளில் திளைத்துக்கொண்டு எல்லாம் நல்லதாகவே நடக்கிறது, நல்லதாகவே நடக்கும் என்று மந்திர வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அம்பேத்கர் பாடலை ரிங் டோனாக வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக ஒரு தலித் இளைஞன், ‘சாதி’ இந்துக்களால் அடித்து, நொறுக்கப்பட்டு, நெடுஞ்சாலைகளில் வாகனங்களால் மீண்டும் மீண்டும் நசுக்கப்படும் விபத்துக்குள்ளான ஒரு பிராணியைப் போல, ‘சாதி’ இந்துக்களின் இரு சக்கர வாகனங்களால் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறான். இப்படியான கொடூரத்திலும் கொடூர மனநிலை, மனநோய் இந்திய சாதிய சமூகத்தின் இயல்பான குணங்களாக இன்று வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பேசப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் சுதந்திரத்திற்குப் பிறகு, கட்சிகளின் அரசியல் அதிகார போதையில் மறக்கடிக்கப்பட்டன.   சுதந்திர இந்தியாவின் ‘வளர்ச்சி’ திட்டங்களுக்கிடையே திறந்துவிடப்பட்ட முதலாளித்துவ கதவுகள், உலகமயமாக்கலின் நவீன வசதி வாய்ப்புகள் சமூக சீர்திருத்தங்களிலிருந்து பெரும்பான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டன. தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் மீதான ஒடுக்குதல்கள் சுதந்திரத்துக்கு முன் இருந்த இந்தியாவின் நிலையைப் போல இன்றும் ஒத்துப் போகின்றன. இன்னமும் கிராமங்களில் சேரிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘சட்டப்படி’ தடை செய்யப்பட்ட பலதார மணமுறை இன்னமும் வட இந்திய பகுதிகளில் கோலுச்சுகிறது. நீர்குடங்கள் சுமப்பதற்காகவே இரண்டு, மூன்று ‘தண்ணீர்’மனைவிகள் ஒரு ஆணுக்குத் தேவைப்படுகிறார்கள். அமைச்சர்கள் பாலியல் வன்கொடுமைகள் பரஸ்பர ஒப்புதலுடனே நடப்பதாக அறிவிக்கிறார்கள். (பாலியல் வன்கொடுமை செய்வதை பொழுதுபோக்காக கொண்ட அந்த கால ஜமீன் மைனர்களின் வாரிசுகள்) பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவத்தின் வாயிலாகத்தான் இத்தகைய முடிவுகளுக்கு வரமுடியும். அக்ரஹாரங்களில் நுழைவதற்கே தகுதி வேண்டும் என்பதைப் போல ஐஐடி போன்ற இந்தியாவின்  உயர்ந்த கல்வி நிறுவனங்கள் நவீன அக்ரஹாரங்களாக உள்ளன.  அக்ரஹாரத்தில் கீழ்சாதிகள் நுழைவது தடை செய்யப்பட்டதைப்போல அம்பேத்கரும் பெரியாரும் இன்று தடை செய்யப்படுகிறார்கள். ஆக, சுதந்திரம் யாருக்கு வந்தது என்பது குறித்தும் எது சுதந்திரம் என்பது குறித்தும் நிறையவே எண்ணத் தோன்றுகிறது.

கடத்தப்பட்டும் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிக்கவும் இலங்கைக்குச் சென்ற தலித்துகளின் அசாதாரண மரணங்கள், இன்று உலகம் முழுக்கவும் அகதிகளாக பயணிக்கும் மக்கள் படும் துயரங்களுடன் ஒத்துப்போகிறது. உதாரணமாக மியான்மரின் ரொஹியாங்கா முஸ்லீம்களின் நிலை, நாவலில் சொல்லப்படும் மலையகத் தமிழர்களுடம் பொருந்திப் போகிறது.

தலித்துகளின் மீதான வன்முறைகள், சாதிய படிநிலைகளை தீவிரமாக்கும் போக்கு,  ஒடுக்கப்பட்ட மக்கள்  அடிப்படை வாழ்வாதாரத்துக்காக  சந்திக்கும் நெருக்கடிகள் சமீப காலங்களில் அபாய நிலையை எட்டியுள்ளன. சமூக செயல்பாட்டாளர்கள் தீவிரமாக செயல்பட்டாக வேண்டிய நேரத்தில், அதற்கொரு முன்னுரையை அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்நாவல்.

ஒரு புனைவு உங்களுக்கு சமூகத்தின் பல்வேறு இடர்பாடுகளை அழுத்தங்களை அடக்குமுறைகளை  இனம் காட்டுகிறதென்றால் அது புனைவு என்கிற வரையறைத் தாண்டி வேறொன்றை அடைகிறது. . ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை வாசித்த பிறகு அதை சீர்திருத்த எழுத்து என்று வரையறை செய்கிறேன். ‘இஸங்கள்’ ‘கூறுகள்’ பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது, நான் ஒரு வாசகி, நான் வாசிக்கின்ற ஒன்று எத்தகையது என்று கருத்து சொல்லும் உரிமை எனக்குள்ளதாக நினைக்கிறேன்.

நாவலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஆன் லைனில் வாங்கலாம்..

யானையும் பலாமரமும் கூடவே சாதியும

இருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும்  என் கிராமம் தன் சுயமான அடையாளத்துடனே இருந்தது. சுனை நீரை தேக்கி வைத்திருக்கும் பாறைகளும் புதர் படிந்த காடுகளும் சூழ இருந்தது என் கிராமம். ஜுலை மாதங்களில் வானம் பார்த்த பூமியெங்கும் போர்த்தப்பட்டிருக்கும் மஞ்சள் நிற கடுகு பூக்கள் அழகோ அழகு! நீர் வளம் நிறைந்த இடத்தில்கூட அவ்வளவு செழிப்பாக ராகி பயிர் வளர்ந்து நான் பார்த்ததில்லை. இந்த பூமியில் எதைப்போட்டாலும் அது பல மடங்காகி வீடு வந்து சேரும்.  பலாமரங்களும் பேரிச்சம் மரங்களும் தேக்கு மரங்களும் என் கிராமத்தை இன்னும் வசீகரமாக்கிக் கொண்டிருந்தனர். பக்கத்திலே காடு என்பதால் பலா பழங்களை ருசிக்க யானைகள் எங்கள் வீடுகளுக்கு அருகேயே வந்துவிடும். சற்று தூரத்தில் பலாபழங்களை ருசி பார்த்துக்கொண்டிருக்கும் யானைகளை விரட்ட தீப்பந்தம் ஏந்தியபடி கும்பலாக செல்வார்கள். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இப்படி யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரக்கூடும் என்று முன்னோர் அறிந்திருந்த படியால் கிராமத்தை பள்ளமான பகுதியில் அமைநத்திருந்தார்கள். கிராமத்துக்குள் நுழைய செங்குத்தாக கீழ்நோக்கி இறங்கி வர வேண்டியிருக்கும். இதேபோல நிலக்கடலை அறுவடையாகும் நேரத்தில் முள்ளம்பன்றிகள் வந்து ருசி பார்த்து, நாங்கள் விளையாட இரண்டு முட்களை தன் உடம்பிலிருந்து உதிர்த்துவிட்டு போகும்.
தமிழகடத்தில் இருந்தாலும் எங்கள் ஊரில் கன்னட மொழி பேசுபவர்கள்தான் வசித்தோம். இரண்டொரு தமிழ் குடும்பத்தினரும் கன்னடமே பேசினார்கள். அய்யந்தாம் வகுப்பு வரை இருந்த பள்ளியிலும் கன்னட மொழி வழிக்கல்விதான் சொல்லித்தரப்பட்டது. அதனால் தமிழ் படிக்க நான் நான்கைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது. என்னோட எனக்கு அடுத்த வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் நண்பர்களும் வருவார்கள். பெட்ரோல், டீசல் வாசனை நுகர்ந்திராத அந்த மண் சாலையில் நாங்கள் விளையாடிய படிய காட்டுச்செடியில் கனிந்திருக்கும் பழங்களை பறித்து சாப்பிட்டுக்கொண்டு பள்ளி போய் சேருவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது ஒற்றையடி பாதையை கண்டுபிடித்துக்கொண்டு சாகச பயணம் செய்வோம். மாம்பழ சீசன் என்றால் சொல்லவே வேண்டாம்.. வழி நெடுக விதவிதமான மாம்பழங்கள் மரங்களிலிருந்து பழுத்து விழுந்து கிடக்கும். விருப்பம் போல அள்ளித் திண்று, மாடுகள் தண்ணீர் குடிக்க வெட்டி வைத்திருக்கும்   குளங்களில் கை கழுவுவோம். அந்த காலத்தை நினைத்தாலே இனிக்கிறது!
எங்களுடைய ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் இருக்கும். காப்பிச்செடிகளும் செர்ரி மரங்களும் டேரியாவும் டிசம்பர் பூக்களும் பீன்ஸ் செடியும் சிவப்பு‍, வெள்ளை கொய்யா, சப்போட்டா பழ மரங்களுமாக நிறைந்திருக்கும்.
இவையெல்லாவற்றையும் எங்கள் கிராமத்தில் இருந்த‌ சாதி  முழுங்கிக்கொண்டிருந்தது. கன்னட லிங்காயத்துகளுக்கென தனி வீதியும், இடைநிலை சாதிகளுக்கென தனி வீதியும் தலித்துகளுக்கு தனி வீதியுமாக சாதியின் கனகச்சிதமான அடையாளத்தோடு இருந்தது எங்கள் கிராமம். ஊருக்கு நடுவே இருந்த கிணற்றில் இடைநிலை சாதிக்காரர்களும் லிங்காயத்துகளுமே  தண்ணீர் எடுக்கும் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தார்கள். தலித்துகள் ஊருக்கு வெளியே இருந்த ஏரியில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தலித்துகளுக்கு அவரசமாக தண்ணீர் தேவைப்பட்டால் கிணற்றை பயன்படுத்தும் உரிமை பெற்றவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைந்து ஊற்றுவார்கள். நான் கிராமத்தில் வசித்த‌ பத்தாண்டுகாலமும் இந்த எழுதப்படாத விதி எந்த சந்தர்ப்பத்திலும் மீறப்படாமல் இருந்தது.
இடைநிலை சாதிக்காரர்கள் லிங்காயத்துகளின் சமையல‌றைக்கும் பூஜை அறைக்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தலித்துகளுக்கான அனுமதியோ எல்லோர் வீடுகளிலும் வாசல் படியோடு நின்றுவிட்டது.
சாதி படிநிலைக்கு ஏற்றபடி தன்னைவிட உயர்சாதியை சேர்ந்தவரை  ‘சாமி’ என்றுதான் விளிப்பார் கீழ்சாதி என்று கருதப்பட்டவர். கன்னடர், தெலுங்கர், மராத்தி, தமிழர் என்று பல மொழியினர் சேர்ந்து வசித்த என் கிராமம் திட்டம்போட்டு உருவாக்கியதைப்போல முழுக்க முழுக்க சாதியத்தால் உண்டாக்கப்பட்டிருந்தது. கிராமத்தை விட்டு வந்து 15 வருடங்கள் ஆகிறது. சாதியத்தை உடைக்கும் முயற்சிகள் ஏதேனும் நடந்ததா என்பது பற்றி தெரியவில்லை. சாதி படிநிலை ஒழிந்துபோன என் கிராமத்தை தரிசிக்கவே விரும்புகிறேன். ஆனால் எனக்கு தெரியும் நான் வரும்போது காபி கொடுக்க எனக்காக அங்கே தனியாக ஒரு கோப்பையை எடுத்து வைத்திருப்பார்கள் என்று…