விஷ்ணுப் பிரியாவின் காதல் தோற்றது எப்படி?

உயர்சாதி தோழியுடன் பேசிக்கொண்டிருந்ததற்கே படுகொலை செய்யப்பட்ட தலித் மாணவன் கோகுல்ராஜின் வழக்கை விசாரித்த விஷ்ணுப் பிரியாவின் மரணம் முக்கியத்துவம் பெறுவதில் வியப்பில்லை. ஆனால் அந்த முக்கியத்துவத்தை சிதைப்பது எப்படி என்பதுதான் பெரும்பான்மை சாதியின் விருப்பமாக இருக்கிறது.

வி்ஷ்ணுப் பிரியாவின் அசாதாரண மரணத்துக்குக் காரணம் காதல்தான் என்பதை சிபிசிஐடி போலிசார் புலனாய்ந்து சொல்வதற்கு முன் புலனாய்வு ஊடகங்கள் கண்டறிந்து சொல்ல ஆரம்பித்திருக்கின்றன. யூகத்தில் சொல்வதற்கும் ஒரு அடிப்படை இருக்க வேண்டும். இல்லாத அடிப்படைகளைப் புனைவதுதான் ஊடகங்களின் அறமாக இருக்கிறது. ‘விஷ்ணுப் பிரியா வீட்டுக்குள் வந்தால் எப்போதும் செல்போனில் பேசியபடியே இருப்பார்’ என அவருடைய பணிப்பெண், சிபிசிஐடி போலீஸாரிடம் சொன்னதாக ஒரு பத்திரிகை எழுதுகிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரியான விஷ்ணுப் பிரியாவின் வேலை பரபரப்பானது. வீட்டை, நண்பர்களை விட்டு தனித்திருக்கும் பலருக்கு செல்போன் தான் துணை. வேலை நிமித்தமாகவோ, அல்லது தனது வீட்டினருடனோ நண்பர்களிடமோ கூட விஷ்ணுப் பிரியா பேசியிருக்கலாம். ஒரு பெண் செல்போன் பேசினாலே அவர் காதல் வயப்பட்டிருப்பார் என்பது 21-ஆம் நூற்றாண்டின் வடிகட்டின முட்டாள்தனம்!

அடுத்து, கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரி, தன் தோழியின் மரணத்தையொட்டி சொன்ன ஆதங்க வார்த்தைகளுக்கு இவர்கள் என்ன விளக்கம் தருவார்கள்? மகேஸ்வரிக்கு தன் தோழியின் காதல் தெரிந்திருக்காதா? தன் தோழியின் காதலை மறைத்து உயரதிகாரி மீது பழிபோட அவருக்கு என்ன தேவை ஏற்பட்டது? எஸ்பி செந்தில்குமாருக்கும் மகேஸ்வரிக்கும் அப்படியென்ன என்ன பகை? இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

வடமாநிலங்களில் சுற்றித்திரிந்த ‘அட்டாக்’ பாண்டியை ஸ்காட்லாண்டு யார்டுக்கு இணையான தமிழக போலீஸ் வளைத்துப் பிடிக்கிறது. ஆனால் வாட்ஸ் அப்பில் போலீசுக்கே சவால் விடும் யுவராஜ் என்ற குற்றவாளியைப் பிடிக்க முடியவில்லை. பிடிக்க முடியவில்லை என்பதா? பிடிக்க விரும்பவில்லை என்பதா?

விஷ்ணுப் பிரியாவின் மரணத்துக்கான காரணங்களாக, அவர் தலித் என்பதும், பெண் என்பதும், அதோடு அவர் கோகுல்ராஜ் என்ற தலித்தின் அசாதாரண மரணம் குறித்து விசாரித்தார் என்பதும் வெட்ட வெளிச்சமாகிவிட்ட நிலையில் காதல்தான் விஷ்ணுப் பிரியாவைக் கொன்றது என கதைக் கட்டுவதில் ஒளிந்திருப்பது உயர்சாதி செருக்கு அன்றி வேறென்ன?

‘நான் இந்த வேலையைக் காதலிக்கிறேன். இது எனக்குக் கடவுள் போல’ என தன்னுடைய மரண சாசனத்தை எழுதிவிட்டுச் சென்ற விஷ்ணுப் பிரியாவுக்கு இந்தச் சாதிய சமூகம் சிறப்பான அஞ்சலியை செலுத்திக்கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் சிபிசிஐடி விசாரணையின் முடிவும் விஷ்ணுப் பிரியாவின் காதல் கதையை உறுதிப்படுத்தலாம்.

ஆனாலும் நாம் கதறத்தான் வேண்டியிருக்கிறது ‘விஷ்ணுப் பிரியாவுக்கு நீதி எங்கே?’ என்று!

குதிரை வீரன் பயணம்

சமீபத்தில் கௌதம சித்தார்த்தனிடம் ‘உன்னதம்’ மீண்டும் எப்போது வரும் என்று கேட்டதற்கு இனி கொண்டுவரும் எண்ணமே இல்லை என்றார்.

பெண்ணிய, தலித் மற்றும் நாட்டுப்புற வாய்மொழி இலக்கியம் குறித்த பதிவுகளைத் தாங்கி வந்த உன்னதம், இனி வரப்போவதில்லை’ என சொன்னது வருத்தத்தைக் கொடுத்தது. அதேவேளையில் ‘இனி வருவதற்கு வாய்ப்பில்லை’ என்று சொல்லப்பட்ட சிற்றிதழ், மீண்டும் அச்சேரியிருப்பது இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த சிற்றிதழ் ‘குதிரை வீரன் பயணம்’.

புத்தகக்கடையில் ஏதோ ஒரு தேடலில் பார்த்த ‘குதிரை வீரன் பயணம்’ பெயரில் மட்டுமல்ல உள்ளடக்கத்திலும் ஈர்ப்பை உண்டாக்கியது. வேட்டைபெருமாள் எழுதிய சிறுகதை,, பெயர் தெரியாத ஒரு எழுத்தாளரின் மொழிபெயர்ப்பு சிறுகதை ஒன்றும் இன்னமும் மனதில் நிற்கின்றன. அதன் ஆசிரியர் யூமா. வாசுகியை ‘குங்குமம்’ இதழுக்காக சந்தித்தபோது, அவர் பழைய இதழ்கள் இரண்டு, மூன்றைக் கொடுத்தார். பாதுகாத்து வைத்துக்கொள்ளக்கூடிய விஷயம் உள்ளவையாக அந்த இதழ்கள் இருந்தன. இன்னமும் பாதுகாப்பாக இருக்கின்றன. அந்த சந்திப்பில் ‘குதிரை வீரன் பயணம்’ மீண்டும் வருமா? என்று கேட்டதற்கு ‘வாய்ப்பில்லை’ என்றார். இப்போது மீண்டூம் குதிரை வீரன் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

இப்போது குதிரை வீரன் தன்னுடைய உருவத்தை பெரிதாக்கி இருக்கிறார். படிப்பதற்கு ஏற்ற எளிமையான வடிவமைப்பு. முந்தைய இதழ்களை விஞ்சும் உள்ளடக்கம்.
முதலாவது, எழுத்தாளர் எர்னட்ஸ் ஹெமிங்வேயின் நேர்காணல். இதை நேர்காணல் என்று சொல்ல முடியாது. கட்டுரையும் நேர்காணலும் கலந்த வடிவம். ரொம்ப ஈர்ப்பான ஒரு கதையாடலைப் போன்றதொரு உணர்வைத் தருகிறது இந்த எழுத்து வடிவம்.

ஹெமிங்வேயை நேர்காணல் செய்ய தான் மேற்கொண்ட பிரயத்தனங்களை, ஹெமிங்வே பற்றி அவர் மேற்கொண்ட விசாப்புகள் இவற்றின் ஊடே, அவரின் நேர்காணலையும் பதிவு செய்திருக்கிறார் மில்ட் மச்லின். மொழிபெயர்ப்பும் அருமை. ஹெமிங்வேயின் புகழ்பெற்ற ‘கிழனும் கடலும்’
(ஆங்கிலத்தில் படிக்க இங்கே)

நாவலில் வரும் கிழவன் உண்மையான கதாபாத்திரமா என்ற கேள்விக்கு, சுவாரஸ்யமான பதில் தந்திருக்கிறார் ஹெமிங்வே.

அடுத்தது…‘என் வாழ்க்கை தரிசனம்’ என்ற பேராசிரியர் ஜான்சி ஜேக்கப்பின் கட்டுரை. அருமையான சூழலியல் கட்டுரை. மலையாளத்திலிருந்து இந்தக் கட்டுரையை கதிரவன் மொழிபெயர்த்திருக்கிறார். ஜான்சி சொல்லிச் செல்லும் தரிசனத்தை சூழலியலில் ஆர்வமுள்ள அத்தனைபேரும் தங்கள் வாழ்விலும் கண்டிருப்பார்கள். எனக்குப் பிடித்த இந்த வரிகள்..

‘‘மனிதர்களைப் பொறுத்தவரை கொஞ்சும் பெரிய கண்டுபிடிப்புகள் உண்டு. ஒள்று நெருப்பைக் கண்டுபிடித்தது. இன்னொன்று சக்கரத்தைக் கண்டுபிடித்தது. மூன்றாவதாக மிகப் பெரிய கண்டுபிடிப்பு ஆயுதங்கள் அல்ல… நவீன முறையிலான விவசாயச் செயல்பாடுதான். அதாவது விவசாயப் புரட்சி’’

ஈழக் கவிஞர் சு. வில்வரத்னம் படத்தை அட்டையில் தாங்கி வந்திருக்கிறது. அவரின் ‘தோப்பிழந்த குயிலின் துயர்’ கவிதை இதழில் இடம்பெற்றிருக்கிறது. பனைமரங்களைக் கொண்ட நிலத்தை விட்டு விலகியிருக்கும் தன்னுடைய பிரிவுத் துயரைச் சொல்கிறது இந்தக் கவிதை.

நிக்கோலஸ் க்யுல்லன் என்ற க்யூபக் கவிஞர் பற்றிய அறிமுகத்தோடு, அவருடைய கவிதைகளும் இதழில் இடம்பெற்றிருக்கின்றன. கூத்தலிங்கம். கண்ணகன், பிரான்சிஸ் கிருபா கவிதைகளும் இதழில் இடம்பெற்றிருள்ளன.
புகழ்பெற்ற எழுத்தாளரான ஓம்பிரகாஷ் வால்மீகியின் சவ ஊர்வலம் என்கிற சிறுகதை இடம்பெற்றிருப்பது இதழுக்கு சிறப்பு சேர்க்கிறது.

‘ஆதவனின் முகம் அணிந்த சண்டை விளையாட்டுக் கவிஞன்’ என்ற தலைப்பில் கே.பி. ராமகிருஷ்ணனின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார் பேயாளன். நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு டூப் போட்டவர் இவர். நேர்காணல் மூலம் ஏராளமான விஷயங்கள் பதிவாகியுள்ளன.

மறைந்த தோழர் என். வரதராஜனுக்கும் பத்திரைகையாளர் கிருஷ்ணா டாவின்சிக்கும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு, இனி காலாண்டிதழாக குதிரை வீரன் பயணம் வரும் என்றிருக்கிறார் யூமா. வாசுகி. கலை, இலக்கியம், அரசியல், சமூகம் எல்லாமும் நம் களம் என்கிறார். செறிவுமிக்க ஒரு சிற்றிதழ் மீண்டும் வருவது தமிழிலக்கிய வாசகர்களுக்கு இப்போது தேவையும்சுட.
இலக்கியத் தேடல் உள்ளவர்கள் தொடர்புகொள்ள
யூமா வாசுகி (9840306118)

லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி!

kandhamal violence

ஒரிசாவில் இந்துத்துவம் பின்னணி

ஒரிசாவின் கந்தமால் மாவட்டம் இந்துத்துவதீவிரவாதத்திற்கு உதாரணமாகும் சிறப்புத் தகுதி உடையது. காலங்காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வாழும் தலித்துகளும் பழங்குடிகளும் இம்மாவட்ட மக்கள். கிறித்துவ மிஷனரிகள்  தலித்,பழங்குடிகள் மத்தியில் பணியாற்றிவருகிறார்கள். விளைவாக மதமாற்றங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பழங்குடிகள் கிறித்துவர்களாக மாறும்போது பழங்குடிகளுக்குண்டான அரசாங்க உரிமைகள் அத்தனையும் கிடைக்கும் என்பதும் தலித்துகள் கிறித்துவர்களாக மாறும் தலித்துகளுக்குரிய உரிமைகள் இல்லை, அதனால் மிஷனரிகள் பிரத்யேக உரிமைகளை தலித்துகளுக்குப் பெற்றுத்தர முயற்சித்தார்கள் என்பதும் இங்கு தலித்பழங்குடிகளிடையே புகைச்சல் ஏற்பட்டதன் பின்னணி. இதை ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பா..க போன்ற இந்துத்துவ சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. இந்த புகைச்சலை ஊதிப்பெரிதாக்கிள எரிய விட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தன். 1994 முதல் தலித்பழங்குடி மோதல் கிறித்துவர்கள்இந்துக்கள் இடையேயான மோதலாக உருவெடுத்தது. விஷ்வ ஹிந்து பரிஷத்,ஆஸ்ரமங்கள் என்ற பெயரில் கந்தாஸ் பழங்குடி இன மக்களை வன்முறையாளர்களாக இந்துத்துவ ரவடிகளாக மாற்றத் தொடங்கியது. இதில் முக்கியமானவர் லக்ஷ்மாணனந்தா சாமியார் 1960களிலே கர சேவை செய்வதற்காக கந்தமால் மாவட்டத்தில் ஆசிரமம் அமைத்தவர். கிறித்துவத்துக்கு மாறும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பழங்குடி மக்களை இந்துத்துவ விஷத்தை ஊட்டி ஏவி விட்டுக்கொண்டிருந்தவர். கிறித்துவதுக்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை தாய்மதத்திற்கு திருப்புவதுதான் பல பத்தாண்டுகளாக இவர் செய்து வந்த குறிப்பிடத்தகுந்த மற்றொரு வேலை!

 

கிறிஸ்துமசுக்கு முன் தினமான டிசம்பர் 24, 2007ல் சதாரணமாக இருதரப்பினருக்கிடையே ஆரம்பித்த வாய்ச்சண்டை கிறித்துவ தலித்துகளுக்கு எதிராக பெரும் கலவரமாக வெடித்தன் பின்னணியில் லக்ஷ்மணானந்தா சாமியார் இருந்ததாக கைகாட்டுகிறார்கள். சர்ச்சுகளுக்கு முன்பு தலித் கிறித்துவர்கள் உயிரேடு கொலுத்தப்பட்டது, கிராமம் கிராமமாக கிறித்துவர்களின் வீடுகள்,இருந்த சுவடே தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டது, குழந்தை,பெண்கள் உள்பட பல கிறித்துவர்கள் தேடிக் கொல்லப்பட்டது என வன்முறைகள் இந்துத்துவதீவிரவாதிகளால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்டன. (தலையில் காவித்துணி கட்டி, இரண்டு கைகளும் வாள் ஏந்தி விண்ணை அதிரவைக்கும்படி கூவிக்கொண்டு வன்முறையை காட்டிய ஒரு காவித்தொண்டரின் புகைப்படம் அத்தனை நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வந்தது நினைவிருக்கலாம்!) பா..க ஆதரவோடு ஆட்சியை அலங்கரித்துக்கொண்டிருந்த நவீன் பட்நாயக் அரசு வன்முறையை தடுத்து நிறுத்தும் நோக்கில் எதுவும் செய்யவில்லை, கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அந்த தாக்குதலின் போது சேதமான வீடுகள்கூட இன்னும் அங்கே சீரமைக்கப்படவில்லை.

 லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி!

கடந்த வாரம் என்னுடைய தோழியை சந்திப்பதற்காக எத்திராஜ் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். தோழியை பார்க்க நேரமெடுத்ததில் எதிரே இருந்த ஷாப்பிங் காம்ளக்ஸ்சுக்குள் நுழைந்து பராக்கு பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் காப்பிகள் கண்ணில் பட்டன. ‘லக்ஷ்மணானந்த படுகொலை யார் கொலையாளி?’ தலைப்பில் எஸ்.குருமூர்த்தி துக்ளத் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் நகல்கள் அவை. அந்தக்கடைக்காரர் காவித்தொண்டர் போலும் இலவச விநியோகம் செய்துகொண்டிருந்தார்.

ஆகஸ்ட் 2008ல் லக்ஷ்மணானந்தா என்ற விஷ்வ ஹிந்து பரிஷத் சாமியார் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் குருசாமி. கட்டுரையின் சாரம் லக்ஷ்மணானந்தா, ஒரிசாவில் ஆற்றிய தொண்டுகள், அப்பாவியான அவரை கிறித்துவ தீவிரவாத அமைப்புகளும் மாவோயிஸ்டுகளும் சேர்ந்து தீர்த்துக்கட்டினர் என்பதே. அவர் துணைக்கு அழைத்திருந்தது ஒரிசா முன்னாள் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவரை.

” ‘இந்த(கந்தமால்) தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவர்கள்என்று ஒரிஸ்ஸாவின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவர் தன்னுடைய கட்டுரையில் எழுதியிருக்கிறார்என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டு..

“மலைவாழ் மக்களிடையே நடக்கும் மத மாற்றங்கள் நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்களில் கிறித்துவ தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் மாறி பிரிவினை சக்திகளை தூண்டி விட்டிருக்கிறது என்கிறார் அசோக் சாகுஎன்று தன்னுடைய துப்பு துலக்கலுக்கு ஆதாரம் காட்டுகிறார் குருசாமி. வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் தழைக்க நிதர்சனமான காரணங்களான அரசாங்க புறக்கணிப்பும் தொடரும் வறுமையும் வேலையின்மையும் வசதியாக மூடி மறைக்கப்பட்டு, கிறித்துவர்களாக மாறியதே காரணமென கண்டுபிடித்துச் சொல்கிறது காவிப்படை. அந்த காரணத்தை ஒரிசாவுக்கும் பொறுத்தப்பார்க்கிறது. இந்த காரணத்தை கண்டுபிடித்தமைக்காக குருசாமி சிபாரிசு செய்தாரோ என்னவோ.. அதே அசோக் சாகுதான், கந்தமால் தொகுதி பா... வேட்பாளர்.

 

 

sadhu violence

வேட்பாளரைக் காணவில்லை!

இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு பா..கவில் தனித்த இடம் உண்டு. நான்கு சிறுபான்மையினரை வெட்டிக்கொன்றால் அல்லது 40 சிறுபான்மையினர் வீடுகள் நாசமா போகக்காரணமாக இருந்தால் இந்தா புடி எம்.பி சீட்டு என்று வெளியே சொல்லப்படாத சட்டம் இருக்கும்போல. போன மாதம்தான் குஜராத் கலவரத்தில் தேடப்பட்டு வந்த மோடி அமைச்சரவையின் உயர் கல்வித்துறை அமைச்சர் போலீசில் சரணடைந்தார். இப்போது கந்தமால் தொகுதி வேட்பாளர் அசோக் சாகுவைத் தேடுகிறது மாநில போலீஸ். எம்.பி ஆகி அமைச்சர் ஆவதற்குள் விதி விளையாடிவிட்டது. முன்னாள் விஷ்வ ஹிந்து தொண்டரும் ஐபிஎஸ் படித்தவருமான அசோக் சாகு, ஒரிசாவின் குருசாமி! தேடித்தேடி கிறித்துவபயங்கரவாதம், ‘முஸ்லிம்தீவிரவாதம் என்றெல்லாம் கட்டுரை எழுதுவார். (சங்க் பரிவார் இணைய தளத்தில் இவருடைய கட்டுரைகள் படிக்கக் கிடைக்கும்) எழுதுவதோடு, காவித்தொண்டாற்றுவதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எம்.பி.சீட்டுக்கு ஆசைப்பட்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார். போதாத காலம்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவர் பேசிய எழுச்சியூட்டும் பேச்சு‘(‘லக்ஷ்மணானந்தா சாமிகளை கொன்றது யார்? கொலை செய்தவனுக்குத் தெரியுமா இதற்கு பயங்கரமான பின்விளைவுகள் ஏற்படும் என்று?’) தேர்தல் ஆணைய விதிகளின்படி சர்ச்சைக்குரிய பேச்சாகிவிட்டது. மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய காவல்துறை காத்திருக்க அப்ஸ்கான்ட் ஆகிவிட்டார் அசோக் சாகு!

இப்படிப்பட்ட மதிப்பிற்குரியவர் எழுதிய கட்டுரைகளைத் தோண்டித்துருவி ஆராய்ந்து கந்தமால் மக்களின் ரட்சகர்களாக காவித்தொண்டர்களை முன்னிறுத்த கட்டுரை எழுதியிருக்கிறார் குருசாமி. அப்பட்டமான மத படுகொலைகளுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறது காவித்துணி. இப்போதைக்கு அது கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது!