ஆஷிஷ் நந்தியும் இன்னபிற சகிக்க முடியாத பேச்சுக்காரர்களும்

பிரபல அரசியல் மற்றும் கலை விமர்சகரும் சமூகவியல் கோட்பாட்டாளருமான ஆஷிஷ் நந்திக்கு கண்டனங்கள் எழுந்த போது நான் நம்பிக்கை கொண்டேன், ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒலிக்க குரல்கள் இருக்கின்றன என்று! இப்படியெல்லாம்கூட நெகிழ முடிகிறது பாருங்கள். என்னைச் சுற்றி எல்லாவிதமான மக்களும் இருக்கிறார்கள். அவர்களின் எல்லாவிதமான பேச்சுக்களையும் நான் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். சில சமயம் சகிக்க முடியாத பேச்சுக்களையும்.
சகிக்க முடியாத பேச்சு : 1
‘‘என்கூட படிச்ச …. சாதி பொண்ணு பத்தாவதிலும் பனிரெண்டாவதிலும் பார்டர் மார்க் வாங்கி பாஸ் பண்ணா. கோட்டா மூலமா டீச்சர் டிரெயினிங் முடிச்சு கவர்மெண்ட் ஸ்கூல்ல டீச்சராயிட்டா. எடுத்த எடுப்பிலேயே மாசம் 12 ஆயிரம் ரூபா சம்பளம். அதுபோகட்டும். பார்டர்ல பாஸ் பண்ணவங்க கோட்டாவுல டீச்சர் ஆகற ஸ்கூல்ல நம்ம பிள்ளைகளை படிச்சா நூத்துக்கு நூறா வாங்குவாங்க?’’
சகிக்க முடியாத பேச்சு : 2
‘‘பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் லஞ்சம் வாங்குகிறார்கள். இப்போது அந்த வரிசையில் பழங்குடிகளும் சேர்ந்துவிட்டார்கள்’’
ச.மு.பேச்சு: 1 மற்றும் ச.மு.பேச்சு: 2 ‘ஸோ கால்டு மிடில் கிளாஸ்’ கண்ணோட்டத்தில் மிக மிக சரியானவையாகப் படுகின்றன. இதில் வேதனையான  விஷயம்… இடஒதுக்கீடு மூலம் முன்னுக்கு வந்தவர்கள் இடஒதுக்கீட்டு எதிராக செயல்படுவதும் அறிவுஜீவிகளாக காட்டிக்கொள்பவர்கள் சமூகத்தை பின்னோக்கி இழுப்பதுவும்தான்.
முன்னோக்கிய சமூத்தைச் சேர்ந்தவர்கள் எதை சதா யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்? கையில் இருக்கும் கடைசி ரூபாயைக்கூட பிடிங்கிக்கொள்ளும் தனியார் பள்ளிகளின் அட்டூழியங்களை எப்படி ஒழிப்பது என்றா? இல்லவே இல்லை… என்னைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர் எப்படி முன்னேறலாம்? என்பதாகத்தான் சதா சிந்தனைகள் இருக்கின்றன. அறிவுஜீவிகளும் இதைத்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் பழங்குடிகளும் புதிதாக லஞ்சம் வாங்குவது லஞ்சம் வாங்குவதில் முன்னோடிகளான முன்னோக்கிய சமூகத்துக்கு கண்டனத்துக்குரியதாக இருக்கிறது. அதன் ஒட்டுமொத்த பிரதிநிதியாகி இருக்கிறார் ஆஷிஷ் நந்தி. ஒரு கட்டுரையாளர் எழுதினார் ‘‘ஆஷிஷ் நந்தி பேச நாட்டில் நிறைய விஷயங்கள் இருக்கிறது’’ என்று.
ஆஷிஷ் நந்தி வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தபோது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ‘‘இது போன்ற கருத்துகளைச் சொல்ல உங்கள் க்ளையண்ட் (ஆஷிஷ் நந்தி) எந்தவித லைசென்ஸும் பெறவில்லை’’ என்று பேசியது, கருத்து சுதந்திரம் பேசும் அறிவுஜீவிகளுக்கு பதில் சொன்னது.
ஆனால் என்னை சுற்றியுள்ள முன்னோக்கிய சமூகத்தின் சகிக்க முடியாத பேச்சுக்காரர்களுக்கு எதன் மூலம் பதில் சொல்வது?