கற்பழிப்பு என்கிற சொல் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பி, சில ஊடகங்கள் அந்தச் சொல்லை பாலியல் வல்லுறவு, பாலியல் வன்செயல் என மாற்றுச் சொற்களோடு பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழ் மக்கள் அதிகம் படிப்பதாக சொல்லப்படும் தினத்தந்தி, தினமலர் போன்றவை இன்னமும் கற்பழிப்பு என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றன. கற்பழிப்பு என்ற சொல்லில் இவர்கள் கொண்டுள்ள தனிப்பட்ட ஈர்ப்பை புரிந்து கொள்ள, இவர்கள் எழுதும் கற்பழிப்பு செய்திகளை படிப்பது அவசியம். இன்றைய தினத் தந்தியில் நாமக்கல்லில் ஒரு மாணவி பாலியல் வன்செயலுக்கு உள்ளாக்கப் பட்டு கொல்லப்பட்ட செய்தி வந்துள்ளது. செய்தியின் தொடக்கத்தில் மூன்று பேர் அந்தப் பெண்ணை பாலியல் வன்செயலுக்கு உட்படுத்தி கொன்றதாக எழுதப்பட்டுள்ளது. செய்தியின் அடுத்தடுத்த பத்திகளில் மாணவியின் காதலன் குற்றத்தில் ஈடுபடாததும் மற்ற இருவருமே குற்றவாளிகள் என்பதும் தெரிகிறது. மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த அவள் காதலனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய நிருபரின் இதழியல் தர்மம் இங்கே சுட்டிக் காட்ட வேண்டிய ஒன்று.
மாணவியும் காதலனும் ஜாலியாக இருந்தார்கள் என்று எழுதுகிறது தந்தி. அதாவது இவர்களின் இதழியல் தர்மத்தில் தமிழ் அல்லது இந்திய கலாச்சாரத்துக்கு மாறாக ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன் உறவு கொள்வதற்குப் பெயர் ஜாலியாக இருப்பது! இது இதழியல் தர்மமா? இந்து தர்மமா?
டெல்லியில் கூட்டு பாலியல் வன்செயலுக்கு உள்ளாகி, இறந்துபோன அந்தப் பெண்ணின் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்று ‘நிர்பயா’ எனப் பெயர் சூட்டி, உலக பரப்பில் முக்காடு போட்டி தங்கள் மானத்தை காப்பாற்றிக் கொண்டது இந்து அரசாங்கம், அதை காப்பாற்றின இந்து ஊடகங்கள். ஆனால் தமிழகத்தில் பாலியல் வன்செயலுக்கு உள்ளான ஒரு பெண்ணின் பெயர், முகவரி, புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கின்றன தினத்தந்தி குழும ஊடகங்கள். இது என்ன ஊடக தர்மம்? ஊருக்கு ஊர் ஒரு நியாயமா அல்லது தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? ஏன் எந்த தமிழக பெண்ணியவாதியும் இதைப் பற்றி கேள்வி எழுப்புவதில்லை?
செய்தி எழுதும்போதே ஒரு ஃபோர்னோ படத்துக்குரிய திரைக்கதையுடன் செய்தி எழுதும் போக்கை இந்த ஊடகக்காரர்கள் எப்போது மாற்றிக் கொள்வார்கள். சமீபத்தில் இந்தியாவின் மகள் கட்டுரையில் எழுத்தாளர் ஜெயமோகன், இந்தியாவின் மகன்களின் மனநிலையை தெளிவாகச் சொல்லியிருந்தார். அதாவது இந்திய ஆண் மகன்கள் பாலியல் வன்செயல்களில் ஈடுபடுவது இயல்பான செயல் என்று உளவியல் ரீதியாக விளக்கியிருந்தார். தந்தி வகையறா செய்திகளைப் படிக்கும் எந்தவொரு இந்திய, தமிழக மகனும் நிச்சயம் பாலியல் வன்செயல் செய்ய நேரம் பார்த்துக் கொண்டிருப்பான் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை!