ஊடகங்களில் தொடர்ந்து துவேஷ கருத்துக்களைப் பரப்பிவரும் பாஜக ஆதரவாளர்கள் குறித்தும் அவர்களை என்ன நோக்கத்துக்காக ஊடகங்கள் பயன்படுத்துகின்றன என்பது குறித்தும் பேசுகிறது இந்தப் பதிவு. இப்போது.காமில் வெளியானது.
Tag Archives: தினமணி
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: அஇஅதிமுகவின் அதிகாரப் பூர்வ நாளேடு எது? அ.நமது எம்ஜியார் ஆ.தினமணி ஆப்ஷன்கள் ஒரு டஜனுக்கு மேல் தேரும்…தலைப்பின் நீளம் கருதி மற்றவை உள்ளே…
சொத்து வழக்கில் அல்லது சொத்து குவிப்பு வழக்கில் அல்லது ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் முதல்வரும் தமிழகத்தின் அடுத்த முதல்வருமான ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். மோடி, வைகோ, தமிழிசை, ஜி.கே.வாசன் இதர இந்திய அரசியல் தலைவர்கள் வழியில் நானும் வாழ்த்துக்களை சொல்லி வைக்கிறேன். வாழ்த்துக்கள்! சின்மயி போல பாடத் தெரிந்தால் நானும் ஏதாவது ஒரு பெருமாள் கோயிலில் சுப்ரபாதம் பாடி அசத்தியிருப்பேன். கழுதைக் குரல் எனக்கு!
டெல்லியின் அரசியல் தரகு வேலைப் பார்க்கும் ஊடகங்கள் பற்றி தெரிய வந்திருக்கிறது. தமிழகத்தில் அந்தக் குறையை போக்கும்விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தினமணி. குறிப்பாக அதிமுக அல்லது அம்மாவின் அடுத்த ‘மூவ்’ எப்படி இருக்கும் என்பதை தினமணியை கூர்ந்து நோக்கும் எவராலும் தெரிந்துகொள்ள முடியும். நமது எம்ஜிஆரைத் தாண்டி அம்மாவின் செயல்திட்டங்களை மக்கள் மத்தியில் சேர்க்கும் பணியினை செம்மையாக செய்துவருகிறது தினமணி. நமது எம்ஜிஆரைவிட கணிசமான வாசகர்களை வைத்திருக்கும் தினமணி, ’நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளோடு’ அதைச் செய்து வருகிறது. அந்த வகையில் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீடு இப்படித்தான் முடியும் என்பது நான் எதிர்பார்த்ததுதான். அதனால் நீதிபதி குமாரசாமி 3 நிமிடங்களில் தீர்ப்பு சொன்னதைக் கேட்டு எனக்கு ‘இதய அடைப்பு’ வரவில்லை.
தினமணியின் இணையத்தில் தீர்ர்பு வருவதற்கு முன்பே இரட்டை இலையை காட்டி வெற்றிச் சிரிப்பில் திளைத்த ஜெயலலிதாவை பார்த்தபோது என் முன்முடிவுகள் சரியென முடிவுக்கு வந்தேன்.
பொதுவாகவே தமிழக (பார்ப்பன) ஊடகங்கள் ஜெயலலிதாவின் அரசி பிம்பத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருப்பவைதான். ஆனால் அவையெல்லாம் ஜெயலலிதாவுக்கு விசுவாசத்தைக் காட்டும் பணியாட்கள்போல. தள்ளி நின்று கும்பிடு போடுவார்கள். தினமணிதான் ஜெயலலிதாவின் ராஜகுரு! அது சொல்வதைத்தான் அவர் கேட்பார்! பாருங்கள் ஜெயலலிதாவின் விடுவித்தலுக்கு மோடியே எப்படி சல்யூட் அடிக்கிறார் என்று…
தினமணியின்படி அம்மாவின் அடுத்த ‘மூவ்’ எப்படி இருக்கும். சில துளிகள்….
- அடுத்த ஆண்டுதான் தேர்தல் வரும். தற்போதைய சட்டப்பேரவை விரைவில் களைக்கப்படும் என்று அரசியல் நோக்கர்கள் அநாவசியமாக எதிர்பார்க்கத் தேவையில்லை.
- ஜி.கே.வாசன் கட்சி தொடங்கியதில் இருந்தே, அவர் கட்சி யாரோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தினமணி தீர்மானித்துவிட்டது. அதன்படி வாசன், அதிமுகவின் கூட்டணியில் முதலில் போய் சேர்வார்.
- இதைச் சொல்ல வேண்டும் என்பதில்லை, பாஜக – அதிமுக கூட்டணி உறுதி. தினமணி நடுநிலையோடு பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவுக்கு கணிசமான தொகுதிகளைப் பெற்றுத் தரும்.
இப்போது தலைப்பில் கேட்டிருக்கும் கேள்விக்கு பதிலளிப்பது எளிதாக இருக்கும் என்று நம்புகிறேன். பதில் தெரிந்துவிட்டதால் மற்ற ஆப்ஷன்களை பற்றி ஆராய வேண்டிய தேவை இதனால் தவிர்க்கப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு படிக்கவும் இங்கே…
ஊழல் அரசுடன் ஊடகங்களின் கூட்டு; 2015திலும் ஏமாறுவோம் மக்களே!
ஜெயலலிதா அரசின் ஊழல் புகார்களை திரட்டி(இவர்களாக கண்டுபிடித்து அல்ல) அவ்வவ்போது அறிக்கையாக வெளியிட்டு ‘ஊழலுக்கு எதிரான’ இமேஜை கட்டியமைத்துக் கொண்டிருக்கிறது பாமக. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள் பாமகவினர் தமிழக ஆளுநரை சந்தித்து ஊழல் பட்டியலை அளிப்பது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது. இடைத்தேர்தலில் நிற்காவிட்டாலும் ஆளுநரிடம் அளித்த பட்டியலை தங்கள் கூட்டணியில் உள்ள (இன்னமும் கூட்டணியில்தான் இருக்கிறார்களாம்) பாஜகவினருக்கு கொடுத்திருக்கலாம். அல்லது இடைத்தேர்தல் நேரத்தின்போதாவது அறிக்கையாக வெளியிட்டிருக்கலாம்.
மக்களவையில் அன்புமணி வெற்றி பாமகவுக்கு புது தெம்பைக் கொடுத்திருக்கிறது. அதற்குப் பிறகான பாமகவின் நகர்வுகள் ஒவ்வொன்றும் திட்டமிடப்படுகின்றன. ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றி மேலும் அவர்களுக்கு உற்சாகமூட்டியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டுகள் உள்ள நிலையில், சேலம் மாநாட்டில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கும் அறிவிப்புக்குக் காரணம் டெல்லியின் உற்சாகமே. அறிவித்த கையோடு ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருக்கிறது பாமக.
ஜெயலலிதா அரசின் ஊழல் வெளிவந்தது பாமகவால் அல்ல, ஆனால் அதை தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்கிறது பாமக. ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகளாக பாமக வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு வாய்ப்பையும் மக்கள் பல முறை அளித்துவிட்டார்கள். இவர்களால் என்ன மாற்றத்தை மக்கள் அடைந்தார்கள் என்பதற்கும் வழமையாக மற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என்ன செய்தார்களோ அதைத்தான் செய்தார்கள் என்பதே பதில்.
‘ஊழலுக்கு எதிரானவர்கள்’, திராவிட கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மாயையான வார்த்தைகள்தான். பாமகவின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் மறந்துவிடமாட்டார்கள். முக்கியமாக ஒரு சாதிக் கட்சியாக உள்ள பாமகவுக்கு எப்படி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை அரசியல் அதிகாரத்துக்கு திட்டமிடும் கட்சியின் தலைமை சிந்திப்பதாகத் தெரியவில்லை. தலித்துகள் மீது நேரடியான வன்மத்துடன் அறிக்கை வெளியிட்ட பாமக, இன்று வாக்குக்கு கையேந்தி ‘ஊழலுக்கு எதிரானவன்’ என்ற நல்லவனை முன்னிறுத்துகிறது. ஊழல் பெரியதா, உயிர் பெரியதா என்கிற நிலையில் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட சாமானியனுக்கு உயிரோடு இருப்பதே பெரியது!
மூன்றே ஆண்டுகளில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கிறது, நம்மால் முடியவில்லையே என்கிற ஆதங்கம் மக்களை சாதிய ரீதியாக துண்டாட நினைக்கும் ஒரு சாதிக் கட்சிக்கு வரக்கூடாது. இதை ஆதங்கம் என்று சொல்வதைவிட அரசியல் அதிகாரத்திற்கான ஆசை என்று கூறலாம். இந்த ஆசை காரணமாக பாமக தன் வலதுசாரி ஊடகங்களின் ஆதரவை இழந்துவருவதை இனி உணரக்கூடும். வலதுசாரி ஊடகங்களின் ஏகபோக முதன்மையாளரான ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த செய்தியும் வெளியிடப்படக்கூடாது என்று தங்களுக்குள் எழுதப்படாத விதியுடன் இவை செயல்படுகின்றன. சாலை சரியில்லை என்பது தொடர்பாக ஏதோ வழமையான மனுவை பாமக அளித்தது போன்றே தமிழக அரசுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணை மனு குறித்த செய்தியும் இரண்டு வரிகளில் வெளியாகியுள்ளது. அதிலும் தினமணி தமிழக அரசின் ஊழல்கள் என்பதற்கு பதிலாக, ‘தமிழக அரசு மீதான புகார்களை’ என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறது. தினத்தந்தி மட்டும் பாமகவின் முழு அறிக்கையில், எடிட் செய்யப்பட்ட பகுதியை வெளியிட்டிருக்கிறது. இணைய ஊடகங்களில்கூட முழு அறிக்கையும் வெளியாகவில்லை. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த இந்திய கருப்பு முதலாளிகளின் பட்டியலை வெளியிட்ட எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்துதான் தமிழக அரசின் ஊழல் தொடர்பான செய்திகளைக்கூட வெளியிடக் கூடாது என்கிற கொள்கையை வைத்திருக்கும் தினமணியும் வெளிவருகிறது!
இத்தனை காலமும்(பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல்) பாமகவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள், முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின், மிகுந்த கவனத்துடன் பாமகவை தவிர்க்கின்றன, அல்லது அறிக்கைகளை மட்டுப்படுத்துகின்றன. பாமகவும் ஊழலுக்கு எதிரானது அல்ல, வலதுசாரி தமிழ் ஊடகங்களும் ஊழலுக்கு எதிரானவை அல்ல. உண்மையில் தமிழக மக்கள் மாறி மாறி ஊழல் அரசுகளால் ஆளப்பட்ட இந்த ஊடகங்கள்தான் காரணம். இவர்கள் கட்டியெழுப்பும் பிம்பங்களே மாறிமாறி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் முதலில் புறக்கணிக்க வேண்டியது இந்த ஊடகங்களைத்தான். வாக்குக்கு கையூட்டு வாங்குவதை நியாயப்படுத்துவதும், மக்களை ஊழலுக்கு பழக்குவதும் இந்த ஊடகங்கள்தாம். ஆகவே நாம் 2015திலும் ஏமாறுவோம் என்பதில் மாற்று இருக்க முடியாது!
(நண்பர் ஒருவர் தினமலரை ஏன் குறிப்பிடவில்லை என இந்தப் பதிவில் கேட்டிருந்தார். இரண்டாம் தரமான மொழி நடையில் எழுதப்படும் பிரபல தினசரிகளை நான் படிப்பதில்லை. முக்கியமாக பெண்கள் தொடர்பான செய்திகளை இவர்கள் எழுதும்விதம் அருவருக்கத்தக்கது. அதனால் மலர், தந்திகளை நான் படிப்பதில்லை. ஒரு வகையில் தினமணி எனக்கு தமிழைக் கற்றுக் கொடுத்த இதழ், என்றாலும் அதன் வலதுசாரி தனத்தை என்னால் இனம்காண முடியும். தினமணியுடன் தி இந்து தமிழை சில ஊடகவியலாளர்கள்கூட ஒப்பிட்டு சொல்கிறார்கள். நிச்சயம், தினமணியின் தமிழ் நடையுடன் தி இந்துவை ஒப்பிட முடியாது. தி இந்து, ஆ.வி. பாணி தமிழின் தினசரி வடிவம் என்பதே சரி)
ஆம் ஆத்மி, தினமணி, தி இந்து…
கருத்துக் கணிப்புகள் சொன்னதை விட ஆம் ஆத்மி அதிக இடங்களில் முன்னிலைப் பெற்றிருக்கிறது. 70க்கு 70 பெற்றாலும் பெறலாம். ஒரு சாதாரண மனிதனின் வெற்றியாக டெல்லி மக்கள் கொண்டாடுகிறார்கள். ஊடகங்கள் கொண்டாடிய மோடிக்கும் அவருடைய 8 மாத ஆட்சிக்கும் மிகப் பெரிய பரிசை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் . மாய்ந்து மாய்ந்து மோடி-அமித் ஷா மாயாஜாலம் டெல்லியிலும் பலிக்கும் என்று எழுதிய ஊடகங்களை பின்நோக்கிப் பார்க்கிறேன்.
தி இந்துவின் ஆசிரியராக மாலினி பார்த்தசாரதி பொறுப்பேற்றுக் கொண்ட அடுத்த நாளின் கார்ட்டூன் பகுதியில் அரவிந்த கெஜ்ரிவால் எதிர் கட்சி வரிசையில் அமரப் போவதாக சித்திரம் வெளியானது. மோடி பிரதமராக ஆட்சிக்கு வந்தவுடன் மாலினி பார்த்தசாரதி அவரைச் சந்தித்து கைகுலுக்கினார். தன் ட்விட்டர் பக்கத்தில் மோடி என்னமா இங்கிலீஷ் பேசறார் என டிவி சீரியல் பார்த்து வியக்கும் ஒரு குடும்பத் தலைவியின் வியப்பைக் காட்டியிருந்தார். மோடியிடம் வியப்பதற்கு அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்! போகட்டும்… சாதாரண விஷயத்துக்கே வியப்பை வெளிப்படுத்தும் இப்படிப்பட்ட மோடி அபிமானி ஒரு பத்திரிகையின் ஆசிரியரானால் எப்படிப்பட்ட நடுநிலை செய்திகள் வெளியாகும் என்பது என் போன்ற வாசகரின் கேள்வி. (தி இந்துவின் வரலாற்றில் ஒரு பெண் ஆசிரியராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதற்காக அவருக்கு வாழ்த்து சொல்லலாம்தான். ஆனால் தாத்தாவின் நிறுவனத்தில் பேத்தி ஆசிரியராக பொறுப்பேற்பதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்றும் தோன்றுகிறது!) டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று இந்த ஊடகவியலாளர்கள் தெரிந்து வைத்திருந்தாலும் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பிரசாரம் செய்தன. தினமணியில் ஒரு செய்தி, அதில் பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி என்பதற்கு பதிலாக பாஜக முதல்வர் கிரண்பேடி என்று எழுதி தன் எஜமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டது தினமணி.
காலையில் ஆம் ஆத்மி முன்னிலை என்று செய்தி எழுதினாலும் பாஜக பின்னடைவு என்றோ, கிரண்பேடி ஆரம்பம் முதலே பின்னடைவில் இருக்கிறார் என்றோ வராமல் தணிக்கையுடன் செய்தி வெளியிடுகிறது தினமணி.
இவர்கள் மட்டுமல்ல பெரும்பாலான ஊடகங்கள் இப்படியான ஒரு தலைபட்சமான, தணிக்கை செய்யப்பட்ட செய்திகளைத்தான் வெளியிட்டு வருகின்றன. ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு வாக்கியத்திற்கும் இடையே அவர்களின் சார்பை வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பாக நடுநிலை ஊடகமாக போக்குக் காட்டிக் கொண்டிருக்கும் புதிய தலைமுறையை சுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டும். ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்கு உறுதிகளைக்கூட இவர்கள் வெளியிடவில்லை.
என்னுடைய பதிவின் நோக்கம் ஊடகங்களின் ஒரு சார்பை சுட்டிக்காடுவதே அன்றி, ஆம் ஆத்மி மேல் அபிமானம் காட்டுவதல்ல, நான் அபிமானியும் அல்ல. இந்திய கட்சிகளில் ஆம் ஆத்மி எவ்வகையில் மேம்பட்டதாக இருக்கப்போகிறது என்பதை பார்வையாளராக இருந்து பார்க்கப் போகிறேன். இந்திய ஆட்சியாளர்களின் மேல் நம்பிக்கை இழந்த ஒரு சாமானிய பெண்ணுக்கு உண்டான எதிர்பார்ப்பில் நானும் மாற்றத்தை எதிர்நோக்குகிறேன். ஆனால் அந்த மாற்றம் ஆம் ஆத்மியால் நடக்கும் என்று தோன்றவில்லை!!