மனிதனோடு தோன்றிய உயிரினம்…

அழிந்துவரும் இந்திய வனஉயரினங்களின் பட்டியலில் வரையாடும் ஒன்று. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகள், இமயமலை தொடர்களில் மட்டுமே வரையாடுகள் வாழுகின்றன. இந்த இரண்டு பகுதிகள்தான் வரையாடுகள் வாழத் தேவையான சூழல் உள்ளதாக காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். வரையாடுகள் குறித்து ஆராய்ச்சிகள்கூட குறைவாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில பத்தாண்டுகளில் இந்த உயிரினத்தை வனவிலங்கு காட்சியகங்களில்கூட பார்க்க முடியாமல் போகலாம்.

சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் தன்னுடைய எழுத்தில் வரையாடுகள் குறித்து பதிவு செய்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த பிந்து ராகவன் என்பவர் வரையாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் எழுதியதன் அடிப்படையில், பிந்து ராகவனை சந்தித்தேன். கால்நடை மருத்துவரான பிந்து ராகவன். கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்சமயம் கணவருடன் சென்னையில் வசிக்கிறார். கணவரும் கால்நடை மருத்துவர், பாம்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறார். இருவரும் டேராடூனில் இருக்கும் காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்தவர்கள். படிக்கிற காலத்தில் லடாக் வரையாடு குறித்து சிறப்பு ஆராய்ச்சி செய்தவர் பிந்து. பிறகு, அதையே தொடர்ந்து லடாக் வரையாடுகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் என்கிற தலைப்பில் ஆராய்ந்து வருகிறார்.
“மனிதன் தோன்றிய காலத்தில் வரையாடுகளும் தோன்றிவிட்டன என்பதுதான் இவற்றை ஆராய காரணம். உயரமான பனிமலைச் சிகரங்களைக் கொண்டது லடாக். வரையாடுகள் இத்தகைய சூழலில்தான் வாழும். பாறைகளுக்கு நடுவே முளைத்திருக்கும் தாவரங்களை உண்டு வாழக்கூடியவை இவை. ஆடுகளைப் போல இருக்கும் இதன் உருவமும் செங்குத்தான பாறைகளில் ஏறுவதற்கு ஏற்ப உடல்வாகும் கொண்டது. பாறை இடுக்குகளில் வசிக்கும் இவை, பனிக்காலங்களில் மலை அடிவாரங்களுக்கு வரும். மலை அடிவாரங்களில் வசிக்கும் மக்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளுடன் இவை சேர்ந்து கொள்ளும். இப்படி சேரும்போது வீட்டு விலங்குகளுக்கு வரக்கூடிய தொற்றுநோய்கள், வரையாடுகளுக்கும் பரவும். தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் வேட்டையாடப்பட்டு வேகமாக அழிந்துவரும் வரையாடுகள், தொற்றுநோய்க்கு ஆளாகியும் அழிந்துவருகின்றன. இதுகுறித்த ஆராய்ச்சியில் இருக்கிறேன்” என்கிற பிந்து, நூறு வருடங்களுக்கு முன் வரையாடுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்ததாகவும் தற்போது 2 ஆயிரம் வரையாடுகள் தான் இருக்கின்றன என்கிறார். இவை மலை அடிவாரத்திற்கு வரும் பனிக்காலங்கள்தான் ஆராய்ச்சி செய்வதற்கு உகந்த காலம் என்கிறார் இவர்.
“வரையாடுகள் வேகமாக ஓடக்கூடியவை. இவற்றை பின்தொடர்ந்து போகும்போது சில சமயம், இருட்டிவிடும். தங்கியிருக்கிற இடத்துக்குச் செல்ல முடியாது. பக்கத்தில் மக்கள் வசிக்கிற இடங்களைத் தேடிப் போவேன். விருந்தாளி போல அந்த மக்கள் என்னை உபசரிப்பார்கள். பொதுவாக இந்த பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் என்று சொல்வார்கள். ஆனால் நான் ஒரு போதும் அப்படிப்பட்டவர்களை சந்தித்ததில்லை” என்கிறார் பிந்து.
தன் கணவர் ராகவன், மற்றும் சில நண்பர்களுடன் இணைந்து நிழிகிறிணி என்கிற அமைப்பை நடத்திவருகிறார். பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது இந்த அமைப்பு.

நன்றி : தினகரன் வசந்தம்
13.5.2007