’ஐ’யும் ஷங்கரின் மூழ்கிக் கொண்டிருக்கும் கோலிவுட் மசாலா கப்பலும்

90களின் இடையில் கிராமத்து பஞ்சாயத்து, தீவிரவாதி-அரசியல்வாதி-நேர்மையான கதாநாயக படங்கள் ட்ரெண்டாகி தமிழக மக்களை மாவாக்கிக் கொண்டிருந்த நிலையில் ஜெண்டில்மேன் படத்தின் மூலம் மசாலா படங்களுக்கு வித்யாச முலாம் பூசி அறிமுகமானார் இயக்குநர் ஷங்கர். 6 பாட்டு, 6 சண்டைதான். ஆனால், அதில் பிரமாண்ட செலவிருக்கும், திருடப்பட்ட ஹாலிவுட் கதையிருக்கும். இதுதான் ஷங்கரின் மசாலா படத்துக்கு தேவையானவை. இந்த மசாலா பாணி அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் கை கொடுத்தது. ஆனால் வரலாற்றில் தொடர் வெற்றியாளர் என்று யாரும் இல்லையே! முதல் சருக்கல் பாய்ஸ். அதைப் பற்றி ஏராளமானவர் பேசிவிட்டார்கள், ஏசிவிட்டார்கள். அடுத்தது பலத்த அடி…வசூல் மன்னனை வைத்து கொடுத்த எந்திரன். அதிலிருந்தாவது பாடம் கற்றுக் கொண்டு நமக்கு சரக்கு தீர்ந்துவிட்டது என படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கியிருக்கலாம். அடுத்து ஒரு ரீமேக் படத்தை இயக்கினார். அதுபோல ரீமேக்கிங்கிலாவது கவனம் செலுத்தலாம். அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மிகுந்த பில்ட் அப்பில் ஐ படத்தை இயக்கி உலவ விட்டிருக்கிறார்.

ஐ படத்தில் கதை, திரைக்கதை நேர்த்தி, பிரமாண்ட பொருட்செலவு குறித்தெல்லாம் நான் பேச வேண்டிய தேவையில்லை. நான் விமர்சகர் இல்லை. ஆனால் அந்த சினிமாவைப் பார்த்த ஒரு பார்வையாளராக என்னில் தோன்றியதை பகிர்கிறேன். சமீபத்தில் ஷங்கர் தயாரித்த, இயக்கிய படங்களைப் பார்த்தேன். முதலில் ஐ…

ஷங்கர் என்னும் அறிவாளி, தன்னைச் சுற்றிலும் மெத்தப் படித்தவர்களை வைத்துக்கொண்டுள்ள ஒருவர், முட்டாள்களுக்குப் படம் இயக்குகிறார். மெட்ராஸ் இளைஞனை தமிழகத்தின் கடைக்கோடி சினிமா ரசிகன்கூட நன்றாக அறிவான். உங்கள் சினிமாப் படி பார்த்தால் லிங்கேசன் (கதாநாயகன்) எங்கோ பிறந்து கூவத்து கரை பக்கம் தத்துக்கொடுக்கப்பட்டவனாகத் தெரிகிறான். மெட்ராஸில் வசிக்கும் ஒருவனைக் காட்ட அவனை ’இன்னாமா’ என்று பேச வைத்தால் போதும் என்பது பாலச்சந்தர் கால பழைய ஃபார்முலா. கதை சுடுவதில் உள்ள மெனக்கெடலை இதற்கும் சற்று பயன்படுத்தியிருக்கலாம்.

எனக்குத் தெரிந்த மெட்ராஸ் பையன் திருநங்கைகளோடு நட்பு பாராட்டித்தான் பார்த்திருக்கிறேன். வெறுமனே வசைச் சொற்களாக மட்டுமே ‘பொட்டை’ என்பது இங்கே பயன்படுத்தப்படுகிறது. பாலினம் மாறிய ஒருவரைப்பார்த்த சில நொடிகளிலேயே மிகக் கேவலமாக (மூன்றாம் தர ரசிகர்களை குஷிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு) ஊரோரம் புளிய மரம் பாட்டை பாடும் அளவுக்கு கேவலமான மெட்ராஸ்காரனை நான் பார்த்ததில்லை. அவனைத்தான் ஷங்கர் தன் படத்தில் காட்டியிருக்கிறார். நாட்டிலே திறமையான ஒருவரைப் பார்த்த உடனே அவர் திருநங்கை என்பதாலேயே அவரை மலினமாக கதாநாயகனும் அவனது தோழனும் அவமானப் படுத்துவதாக காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். படத்துக்கு தேவையே இல்லாத இந்தக் காட்சி அமைப்பின் மூலம் மெட்ராஸ் இளைஞர்களை திருநங்கைகளையும் என்னைப் போன்ற பார்வையாளர்களையும் அவமதித்திருக்கிறார். இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.

ஒரு திருநங்கை காதல் வயப்படக்கூடாதா? தெரிந்தோ, தெரியாமலோ சில காட்சி அமைப்புகள் மூலம் கதாநாயகியின் காதலைவிட அவருடைய காதல்தான் எனக்கு உயர்வானதாக பட்டது. கதாநாயகனால் அவருடைய காதல் நிராகரிக்கப்படும்போது அவரது துக்கத்தை உணர்ந்தேன். எப்படியோ சாமான்ய ரசிகனுக்கு ஒரு திருநங்கையின் காதலும் அதனால் உண்டான வலியும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எனக்குத் தெரிந்து ஒன்போது என்று சொல்லிக்கொண்டிருந்த பலரும் இன்று திருநங்கைகள் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார். திருநங்கைகள் மீதான சமூக கண்ணோட்டம் நேர்மறையாக உருமாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சமூகத்தின் ஆழம் வரை சென்று பாயும் கோலிவுட் மசாலாக்கள் சட்டென்று எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிடுகின்றன. இந்தப் படத்துக்கு எதிராக திருநங்கைகள் போராட்டம் முக்கியமானது. இனி இப்படிப்பட்ட காட்சிகளை வைப்பதற்கு கோலிவுட் கனவான்கள் யோசிப்பார்கள்.

மேக்கப் வித்யாசம் காட்ட வேண்டும் என்று எடுக்கப்பட்ட படத்தில் எதற்காக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தை கேவலமாக சித்தரிக்க வேண்டும்? இதனால்தான் சொல்கிறேன் ஷங்கரிடம் மசாலா சரக்கு தீர்ந்துவிட்டது என்று.  படம் இயக்குவதில் மட்டும் அல்ல, படம் தயாரிப்பதிலும் இவரிடம் சரக்கு இல்லை. இவர் தயாரித்த கப்பல், கீழ்த்தரமான படம். பால் இச்சைக்காக அலையும் இளைஞர்கள்தான் கதைக்குரியவர்கள். இதையும் நாளை தமிழக தொலைக்காட்சி வரலாற்றீலேயே முதன்முறையாக காட்டும்போது தமிழர் குடும்பங்கள் பார்க்கத்தான் போகின்றன.

எனவே, என்னுடைய முடிவுரைக்கு வருகிறேன். திரு. ஷங்கர் அவர்களே இனி இயக்குவதை விட்டுவிடுங்கள், தயாரிப்பதையும்தான்! நீங்கள் நிறைய சம்பாதித்து சாதித்துவிட்டீர்கள். தமிழில் நல்ல படங்கள் வரவேண்டியிருக்கிறது. அவற்றுக்கு வழிவிடுங்கள்!

’’நினைச்சவுடனேயே அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு?’’

தற்காலச்சூழலில் பெண்ணியம், தமிழ் நாடக வெளியில் இயங்கிவரும் ஆளுமை அ. மங்கை. குங்குமம் இதழில் வெளிவந்த நான் தொடருக்காக அவரைச் சந்தித்து எழுதிய தன்அறிமுகம் இது.

”ஒரு பொண்ணுன்னா இப்படியிருக்கணும், அப்படியிருக்கணும்னு ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள். உட்கார்றது, நடக்கிறது, சிரிக்கிறதுன்னு பெண்ணை உடல்சார்ந்து ஒடுக்கி, தட்டி, கொட்டி வெச்சிருக்காங்க. அப்படிப்பட்ட பெண்ணை கையை வீசி, சுதந்திரமா நடக்க வைக்கிற இடமா மேடை இருக்கு. வளைஞ்சி, நெளிஞ்சி, குனிஞ்சி கிடக்கிற பெண்களைக் குறைந்தபட்சம் தங்களுக்கும் முதுகெலும்பு இருக்குன்னு உணர்த்துகிற வெளியா நாடகம் இருக்கு. யாராவது பார்த்தா தலையை குளிஞ்சிக்கணும்னு பெண்ணுக்குச் சொல்லித்தர்ற சமூகத்துல, நாலு பேரை தலை நிமிர்ந்து பார்த்து பேச வைக்கிற இடம்தான் நாடக மேடை. பெண் விடுதலைக்கான சாத்தியமா நான் மேடையைப் பார்க்கிறேன். நான் நாடகத்தை எனக்கான கலையா ஆக்கிக்கிட்டதுக்கும் இதுதான் காரணமா அமைஞ்சது.
பாரம்பரியமா இருக்கிற கலைகள் எல்லாம் எத்தனை தூரம் பெண்களைப் பங்கெடுக்க வெச்சிருக்குங்கிறதை நாம ஆராய வேண்டியிருக்கு. பெண்கள் கூத்தாடக் கூடாதுன்னு ஒரு மரபே இருந்துக்கிட்டு இருக்கு. அப்போ கற்பனையா சொல்லப்படற கலைகள்லேயும் ஏற்றத்தாழ்வு இருக்குன்னுதானே அர்த்தமாகுது. கலைகள் கலாசாரத்தோட வெளிப்பாடுன்னு சொன்னா, நம்மோட கலாசாரமே ஏற்றத்தாழ்வோட இருக்கான்னு கேள்வி எழுது.
தமிழ் கற்பு, தமிழ் சார்ந்த வாழ்க்கைன்னு அதிகமாக பேசப்படுது. சங்க இலக்கியம் சொல்ற கற்பை நாம எப்படி புரிஞ்சி வெச்சிருக்கோம்? கற்புங்கிறது சொல் திரும்பாமைன்னு சங்க பாடல்கள்ல அவ்வை வெளிப்படையா சொல்லியிருக்காங்க. கற்புங்கிறது அறவியல் சார்ந்த சொல், அதுல எப்படி பெண் சம்பந்தப்பட்டாங்கிறது ஆய்வுக்குரிய விஷயம். இவ்வளவு சொன்ன அவ்வையை நாம எப்படி உருவகப்படுத்துறோம்…எந்த ஆதாரமும் இல்லாம மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டமாதிரி, சங்க இலக்கியத்துல வாழ்ந்த அவ்வையும் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த அவ்வையும் ஒண்ணுங்கிறோம். ஆனா, அந்த காலத்திலயே தனியா வாழ்ந்த ஒரு பெண்ணா அவ்வை இருந்திருக்கா. கள் குடிச்சிருக்கா. அதியமானுடன் நல்ல பகிர்தலுக்குரிய நட்போட இருந்திருக்கா, புலால் சாப்டிருக்கா. பின்னாடி வந்த நாம என்ன பண்ணியிருக்கோம்? தமிழ் நாகாரிகம், பண்பாடுங்கிற பேர்ல குமரியா இருந்தவளை, கிழவியாக்கிட்டோம்.

பெண்ணோட பார்வையை, இருப்பைக் கேள்வி கேட்கிற நாடகங்களைத்தான் நான் மேடையில கொண்டுவர்றேன்.எவ்வளவு தூரம் இதையெல்லாம் நாடகத்துல செய்ய முடியும்னு தெரியலை. சுயத்தை கேள்வி கேட்காத, வீட்டுல வளர்க்கிற வளர்ப்பு பிராணிமாதிரிதானே பெண்களை வெச்சிருக்கோம். பிராமணீயம் உண்டாக்கின சாதி வேறுபாடுகளை எதிர்க்கிற நாம, அது முன்நிறுத்துகிற பெண் அடிமைத்தனத்தை மட்டும் ஏத்துகிறது முரண்பாடா தெரியுது. இதையெல்லாம் பேசினா ஆண்களுக்கு எதிரானவங்க நினைக்கிறாங்க. கவுரவம், அந்தஸ்துங்கிற பேர்ல சம்பாதிக்கிற மெஷினா ஆண்கள். காலம் முழுக்க அவங்க உழைப்பை உறிஞ்சுகிற அட்டைப் பூச்சிகளா பெண்கள் இருக்காங்க. நினைச்சவுடனேயே வெட்கப்படாம அழற தைரியம் எத்தனை ஆண்களுக்கு இருக்கு? பொதுஇடத்துல அப்படி வெட்கப்படாம தன் உணர்ச்சியைக் கொட்ற ஒருத்தனை நான் உண்மையான ஆண்மகன், வீரத் திருமகன்னு ஒத்துக்கிறேன். ஆணோ, பெண்ணோ, திருநங்கையோ அவங்கவங்க சுயத்தோட இருக்கணும். அடிப்படையான மனிததேவையும் அதுதான். இதையெல்லாம் சொல்றதால நீங்க பெண்ணியவாதியான்னு கேட்கலாம். பெண்ணியவாதின்னு சொன்னாதான் உங்களுக்குப் புரியும்னா, என்னை பெண்ணியவாதின்னு சொல்லிக்கிறதுல எந்த தயக்கமும் இல்லை.

mangai
ஒரு வழக்கமான குடும்பத்துலதான் நான் பிறந்தது. சின்ன வயசிலேயே படிக்கிறதுக்காக வீட்டை விட்டு வந்துட்டேன். அந்த வீட்டுக்குரிய பழக்க வழக்கங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அதுக்கு பிறகு நானா எனக்கான வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன். யாரை திருமணம் செய்துக்கணும், தாலி கட்டிக்கணுமா வேண்டாமா, எப்போ குழந்தை பெத்துக்கணும், எப்படி வளர்க்கணுங்கிறதை நானே தேர்ந்தெடுக்கிட்டேன்.
கணவர் அரசுக்கும் எனக்குமான உறவு ரொம்ப இணக்கமானதுன்னு சொல்லிக்க விரும்பலை. எல்லா குடும்பங்கள்ல இருக்கிறதுபோல நெருடல்களும் கருத்து மோதல்களும் எங்களுக்குள்லேயும் வந்ததுண்டு. நிச்சயம், இந்த இடத்துல என்னுடைய மாமியருங்கிற உறவைப் பத்தி சொல்லியாகணும். அவங்க கிராமத்துல பிறந்து, வாழ்ந்தவங்க.நான் செய்ற சில உணர்வுப்பூர்வமான செயல்களுக்கு அவங்கதான் எனக்கு பக்கபலமா இருந்திருக்காங்க. என்னோட நாடகத்துக்கு அவங்கதான் முதல் பார்வையாளரா இருந்தாங்க. நான் ஏதோ பொறுப்பான செயல்ல இருக்கேன்னு அவங்க நம்பினாங்க. அவங்களோட இருப்பு எனக்கு மிகப்பெரிய பலமா இருந்துச்சு.
அரசியல் பின்னணியோ, கலை பின்னணியோ எனக்குக் கிடையாது. 70களின் மத்தியில் எமர்ஜென்ஸி, வங்கப்போர்னு அரசியல் கொந்தளிப்பு இருந்த சமயம். கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ரொம்ப சீரியசான பகிர்தல் இருந்தது. அந்தப் பகிர்தல் பல மாணவர்களை அரசியலுக்குக் கொண்டு வந்தது. திராவிட கட்சிகளிலும் இடதுசாரி கட்சிகளிலும் இணைந்து பணியாற்றினாங்க. அப்படித்தான் எனக்கும் ஆர்வம் வந்தது. அரசியல் தெளிவோடதான் நாங்க செயல்பட்டோம்னு சொல்ல முடியாது. பின்னால அமைப்புரீதியா செயல்பட ஆரம்பிச்சப்போ நிறைய தெளிவு கிடைச்சது. அப்புறம் நாடகங்கள் மீது ஈடுபாடு. ஆரம்பத்துல நடிக்கவும் செஞ்சேன். பிறகு நெறியாள்கை செய்றது மனசுக்குப் பிடிச்ச வேலையா இருந்தது.
சென்னையை ஒப்பிடும்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்கள்ல நாடகங்களுக்கு இருக்கிற மரியாதை அதிகம். நாடகத்தைச் சினிமாவும் டி.வி.யும் அழிச்சிருச்சின்னு சொல்லவே முடியாது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருக்கிற அளவுக்கு டி.வி.யும் சினிமாவும் இங்கே வளர்ந்துடலை. ஆனா, அங்க நாடகத்துக்குப் போறதை இன்னமும் முக்கியமான பழக்கமா வெச்சிக்கிட்டு இருக்காங்க. சரியான நாடக அரங்கங்கள், நாடக ஒத்திகைக்கான இடம், நடிகர்களுக்குக் குறைந்தபட்சம் போக்குவரத்து செலவைக்கூட கொடுக்க முடியாத சூழல்னு நிறைய வருத்தங்கள் தமிழ் நாடகத்துறையில இருக்கு. ஒண்ணும் தராத வேலைதான், ஆனாலும் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கோம்.’’

27-9-2007 அன்று வெளியானது. நான் என்ற பெயரில் குங்குமம் இதழில் வெளியான இந்தத் தொடர் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்தது. காவ்யா பதிப்பகம் இதை வெளியிட்டது.

DSCN0267