சமீபத்தில் கல்யாண் ஜுவல்லரியின் அச்சு விளம்பரம் ஒன்றில் அரச கமீரத்துடன் அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஒரு சிறுவன் குடை பிடிப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. சிறுவர் பணிக்கு அமர்த்தப்படுவது ஒழிக்கப்பட்ட இந்த காலத்தில் இப்படியான விளம்பரங்கள் அதை ஊக்குவிப்பதாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். அந்த விளம்பரத்தின் நுண்ணிய அரசியலே குடை பிடிக்கும் சிறுவன் கறுப்புத் தோலுடயவான சித்தரித்ததில்தான் இருந்தது. அதையும் சுட்டிக் காட்டி ஊடகங்களில் விமர்சனம் எழுந்த பிறகு. ஐஸ்வர்யா தன்னுடைய பங்கை விளக்கினார். நகைக்கடை நிறுவனம், வேறு வழியில்லாமல் மன்னிப்புக் கேட்டது. பிரச்னை முடிந்துவிட்டது! ஆனால் என்னால் அந்த விளம்பரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதில் இருந்த சிறுவன், என் மகனை நினைவு படுத்தினான். அரச குமாரிக்கு குடை பிடிக்கும் சிறுவனாக என் மகனை ஒரு கணம் நினைத்துப் பார்த்தபோது, என் மனம் வலித்தது. நிச்சயம் இந்த விளம்பரத்தை வடிவமைத்தவர்கள், எம்மைப் போன்ற கறுப்பினத்தவராக இருந்திருக்க முடியாது. வெள்ளைத் தோலில், சாதியின் உச்சியில் நிற்பதாக பரவசம் கொள்ளும் பார்ப்பன மேட்டிக்குடிகளாகத்தான் இருக்க முடியும்.
நூறாண்டுகளுக்கு முன் உங்களுக்கு குடை பிடித்ததை, சமத்துவ சமூகம் நிலை நாட்டப்பட்டுவிட்டதாக சொல்லப்படும் இந்த நூற்றாண்டிலும் நினைவு படுத்தி எங்களை இழிவு படுத்துகிறீர்கள் மிஸ்டர் பரத்வாஜ். ஆனால் மனிரத்னம் இயக்கிய ’ஓ காதல் கண்மணி’ படத்தில் பார்ப்பனர்கள் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது என்கிற ஒற்றைவரியை சினிமா விமர்சகர்கள் சொல்லும்போது அது உங்களுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. உடனே தமிழ் சினிமாவில் வர்க்கமும் சாதியும் என்று கட்டுரை எழுதுகிறீர்கள். உங்கள் கொந்தளிப்புக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது தி இந்து. உங்களுடைய பல சினிமா விமர்சனங்களில் பிற்போக்குத்தனமான போக்குகளை சுட்டி எழுதுவீர்கள், பெண்களைப் பற்றிய மோசமான சித்தரிப்புகளையும் நீங்கள் கோடிட்டி காட்டுவீர்கள். உங்கள் மீது மதிப்பிருந்தது. ஆனால் தி இந்துவின் நடுப்பக்கத்தில் நீங்கள் எழுதிய கட்டுரை, உங்களுடைய பார்ப்பன ஒரிஜினை, பார்ப்பன மேலாதிக்கத்தை அருமையாக எனக்கு உணர்த்திவிட்டது மிஸ்டர் பரத்வாஜ்! தமிழ் சினிமாவில் பார்ப்பனர்கள் கேலிக்குரியவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள், பார்ப்பன பின்னணியில் கதைக்களம் அமைவது சினிமாக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை. ’ஓ காதல் கண்மணி’யில் முக்கிய கதாபாத்திரங்கள் பார்ப்பனர்களாக சித்தரிக்கப்படுவதில் என்ன தவறு இருக்கிறது, இறுதியாக வர்க்கமும் சாதியும் சினிமாவில் சாதியைக் காட்டுவதாலோ, சினிமா விமர்சனத்தில் அதை சுட்டுவதலோ அழிந்துவிடுவதில்லை என்று முடிகிறீர்கள்.
இதில் ஒரு முத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்…அந்தக் கட்டுரையில் வேலையில்லா பட்டதாறி படத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள். தனுஷுக்கு அருண் சுப்ரமணியன் என்கிற பார்ப்பன வில்லன் வெகுஜெனங்களை திருப்தி படுத்துவதற்காக தேவைப்படுகிறார் என்றும் இதனால்தான் நம் கதாநாயகர்கள் ஒழுங்காக படிக்காதவர்களாக இருந்தும், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களாக, ப்ளூ காலர் வேலைக்குச் செல்பவர்களாக காட்டப்படுகிறார்கள் என்றும் கட்டுரையின் ஒரு பத்தியில் வருகிறது. (ஆனால் அந்தப் படத்தில் தனுஷ் ஒயிட் காலர் வேலை செய்பவராகக் காட்டப்படுகிறார்..) நீங்கள் பார்ப்பனர் அல்லாதவர் மீது எத்தகைய காழ்ப்பில் இருக்கிறீர்கள் என்பதை கோடிட்டு காட்டும் வரிகள் இவை. அதாவது இடஒதுக்கீடுக்கு எதிரான கருத்தை வலியுறுத்துகிறீர்கள். ஆமாம் எங்களால் ஆங்கிலம் பேச முடியாது, அல்லது சரிவர பேச முடியாது, பள்ளி- கல்லூரிகளில் சராசரியாக 60 சதவீத மதிப்பெண் பெறுவதே எங்கள் தலைமுறையினருக்கு பெரிய சாதனையாக இருக்கும். ஏனெனில் என் அம்மா-அப்பா எட்டாம் வகுப்பை தாண்டாதவர்கள், என் தாத்தாவுக்கு படிக்கத் தெரியாது, என் தாத்தாவின் தாத்தாவின் வரலாறே எனக்குத் தெரியாது(வரலாறு எழுதுமளவுக்கு எழுத்தறிவு எங்கள் பரம்பரைக்கே கிடையாது!). இப்படியிருக்க என்னால் ஆங்கிலம் பேசவோ, 90 சதவீத மதிப்பெண் பெறவோ நிச்சயம் முடியாது. அதற்காக எங்களை கீழானவர்கள் என்று நீங்கள் வலியுறுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. காலம்காலமாக எங்களை சிறுமைப் படுத்தினீர்கள். இப்போதும் அதிகார மையங்களில் அமர்ந்து எங்களை சிறுமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள், இதற்கு எதற்கு முற்போக்கு வேடம்? உங்கள் வேடம் களைந்தது மிஸ்டர் பரத்வாஜ்!
பதிப்புக்கு பின் மேம்படுத்தியது: திரு. பரத்வாஜ் ரங்கன் , ‘ஓ கா. க’ படத்தின் விமர்சனத்தில் படத்தின் பார்ப்பன பின்னணியை சுட்டிக்காட்டியபோது, ஏன் படத்திற்கு பார்ப்பன முத்திரையை தருகிறீர் என விமர்சனத்திற்கு கருத்திட்டவர்கள் சுட்டிக் காட்டியதாகவும் அதற்காகத்தான் நடுப்பக்கக் கட்டுரையை எழுதியதாகவும் என்னுடைய கமெண்ட் பதிவுக்கு பதிலளித்து தன்னுடைய வலைப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாவதாக நான் நாளிதழில்தான் கட்டுரையைப் படித்தேன், தி இந்துவின் இணையதளத்திலோ, திரு. ரங்கனின் வலைப்பதிவிலோ அல்ல. அதனால் விமர்சனத்துக்கு எத்தகைய எதிர்வினை வந்தது என்பது எனக்குத் தெரியாது. அதோடு, திரு. ரங்கனின் விமர்சனத்தை இந்துவில் படித்தேன். அவர் சுட்டிக்காட்டியிருக்கும் விமர்சன வரிகளில் ஆட்சேபத்துக்கு இடமில்லை. பார்ப்பனர் வாழ்வியலை படமாக்குவது குறித்தும் அதை ரசிப்பது குறித்தும் எனக்கு எந்த காழ்ப்பும் இல்லை.
திரு. ரங்கன் சுட்டிக்காட்டியது போன்றே மற்ற விமர்சகர்களும் ’ஓ. கா. க’வின் பார்ப்பன பின்னணி குறித்து சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக சினிமா விமர்சனத்துக்கு வந்த விமர்சனத்துக்காக திரு. பரத்வாஜ் ரங்கனுக்கு தி இந்துவின் நடுப்பக்கத்தில் கொதித்தெழுந்து எழுத வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? அவர் வழக்கமாக எழுதும் மெட்ரோ பிளஸ் பத்தியிலேயே அதை எழுதியிருக்கலாமே! அவர் கொடுத்த முக்கியத்துவம், கட்டுரையில் இருக்கும் நுண் அரசியல் அல்லது பார்ப்பனர்களின் பிரதிநிதியாக அவர்களின் உளவியலை பிரதிபலிக்கும் கருத்துகளுக்கு என்னுடைய கருத்தை பதிந்திருக்கிறேன். அதோடு நாம் மதிக்கும் ஒருவரிடமிருந்து இப்படியான கருத்துக்கள் வருவது அதிர்ச்சியானதும்கூட!
சினிமாக்களில் பார்ப்பனர் சித்தரிப்பு பற்றி தனி கட்டுரையே எழுதலாம். அதில் பாஸிட்டிவ்வான சித்தரிப்புகள்தான் அதிகமாக இருக்கும். அதையே ஒடுக்கப்பட்ட/ கீழ்சாதிகள் பற்றி எடுத்துக் கொள்ளுங்கள்…பெரும்பாலானவை நெகட்டிவ்வான சித்தரிப்புகள்தான். திரு.ரங்கனுக்கு ஏற்பட்ட ஒரிரு சம்பவங்களை வைத்து எல்லாருமே பார்ப்பனர்களை வெறுக்கிறார்கள் என்கிற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அவர் சுட்டும் ஒரு சம்பவத்திலேகூட பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனர் அல்லாதவர்களாக இல்லாதபோது ‘பார்ப்பனர்களாக’ புரிந்துகொள்ளப்படும் பெயர்களை ஏன் கதாநாயகனுக்கு சூட்ட வேண்டும்? அப்படியான பெயர்கள் வேண்டாம் என மறுப்பதில் என்ன தவறு இருக்கிறது? பார்ப்பனர்களின் வாழ்வியலை பற்றிய கதைக்களம் அமையும்போது அவர் அவராக வருவதில்தான் எதார்த்தம் இருக்கும். அதுபோல பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவனாக ஒரு கதாநாயகனை உருவாக்கும்போது அவனுக்குரிய பெயரை வைப்பதுதானே சரி…திரு. ரங்கன் குறிப்பிடுவது போல ஆங்கிலம் பேசத் தெரியாத, பள்ளிக்கூடம் போகாத, டீக் கடையில் வேலை பார்க்கும் கதாநாயகனுக்கு ராகுல் என்று பெயர் வைத்தால் நன்றாகவா இருக்கும்?!
திராவிட அரசியல்வாதிகள் அவர்களுக்கு கூட்டாளியாக விரும்பும் சினிமாக்காரர்கள் பார்ப்பன எதிர்ப்பை திட்டமிட்டு மக்கள் மத்தியில் உருவாக்குகிறார்கள் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.