பாஜக அரசு கண்டுபிடித்திருக்கும் சரஸ்வதி நதி இதுதான்!

சரஸ்வதி நதி… புராணங்களில் சொல்லப்படும் நதி. ரிக் வேதத்தில் சில இடங்களில் சரஸ்வதி நதி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. புனித நதியாகக் குறிப்பிடப்படும் சரஸ்வதியைத் தேடி, இந்துத்துவவாதிகள் இப்போது கையில் செம்பட்டியும் கடப்பாரையுமாக களம் இறங்கியிருக்கிறார்கள்.

ஹரியாணாவை ஆண்டுகொண்டிருக்கும் பாஜக அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, புராண நதியை நிஜத்தில் தேட பல கோடி ஒதுக்கி, பூமியைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சாமியார் உமா பாரதி, 2014-ஆம் ஆண்டு சரஸ்வதி நதியைக் கண்டுபிடிப்பதில் அரசு தனிச் சிரத்தையுடன் நடந்து கொள்ளும் என்று தெரிவித்தார்.
ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் (முஸ்லீம்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் மாட்டுக்கறி உண்பதை நிறுத்த வேண்டும் என்றாரே,அவரேதான் ) கடந்த பிப்ரவரி மாதம், சரஸ்வதி நதியைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். அதன்படி மே மாதம், ஒரு இடத்தில் ஆய்வுக்குழுவினர், தோண்டிக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் தண்ணீர் வந்தது, உடனே சரஸ்வதி நதி கண்டறியப்பட்டு விட்டது என்று குதூகலித்தனர். அந்த இடத்தை வணங்க ஆரம்பித்தார்கள்.

saraswathi river

சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையாக, இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தை நிறுவும் பொருட்டு இந்துத்துவவாதிகள் சரஸ்வதி நதியைத் தேடும் பணியைச் செய்துவருவதாக காட்டமான விமர்சனம் வைக்கிறார் வரலாற்று அறிஞர் இர்பாஃன் ஹபீப்.

ஹரியாணா அரசின் கூற்றுப்படி சரஸ்வதி நதி, இமயமலையில் உற்பத்தியாகி, ஹரியாணா வழியில் பாய்ந்து அரபிக் கடலில் கலந்ததாம். ஆனால் தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்று அறிஞர்களும் இப்படியொரு நதி, இந்தப் பாதையில் கடந்த 10ஆயிரம் ஆண்டுகளில் பாய்ந்திருப்பதற்கான எந்தச் சுவடும் இல்லை என்கிறார்கள். நதியல்ல, ஓடை ஓடியதற்கான சான்றுகூட இல்லை என்கிறார்கள்.

ஆனாலும், ஹரியாணா அரசு பின்வாங்குவதாக இல்லை. நிலத்தை ஆழமாகத் தோண்டும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. தோண்டிய பிறகு, நதி எதுவும் கிடைக்காவிட்டாலும் செயற்கையாக ஒரு நதியை உருவாக்கும் மாற்றுத் திட்டத்தை இவர்கள் வைத்திருக்கிறார்கள். ஹரியாணாவின் யமுனா நகர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு தோண்டி ஒரு ‘நதி’ப் பாதையை உருவாக்கியிருக்கிறார்கள்.  தொலைவில் உள்ள நீர்த்தேக்கத்திலிருந்து இந்த இடத்துக்கு நீரைக் கொண்டு வந்து சரஸ்வதி நதியாக ஓட விடுவார்களாம். சரஸ்வதி நதி நாகரீகம் மிகப் பழமையான நாகரீகம் என உலகத்துக்கு காட்டுவதற்கான ஏற்பாடு இது என்கிறது அரசு.

கடந்த 2014-ஆம் ஆண்டு மருத்துவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “யானையின் தலையுடன் விநாயகரின் தலையை ஒட்ட வைத்து அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அறிவியலில் முன்னோடியாக நமது முன்னோர்கள் திகழ்ந்திருக்கிறார்கள்” என்று பேசினார்.  ஒரு நாட்டின் பிரதமரே அறிவியலுக்கும் புராணத்துக்கும் வேறுபாடு தெரியாமல் பேசும்போது, அவர் வழி வந்த ஒரு மாநில அரசு இல்லாத நதியைத் தேடுகிறோம் என்று பூமியைக் குடைகிறது.

இல்லாத நதியைத் தேடுவதில் காட்டும் அக்கறை ‘இந்து’க்களின் பாவங்களைப் போக்கும் நதிகளாக போற்றப்படும் கங்கை, யமுனை இன்னும் பல இந்திய நதிகளைக் காப்பாற்றுவதில் ஏன் காட்டுவதில்லை? அதன் பெயர்தான் இந்துத்துவ அரசியல்!

Bloomberg.com ல் வந்த கட்டுரை அடிப்படையாகக் கொண்டு எழுதியது.

தினச்செய்தி(30-12-2015) நாளிதழில் வெளியானது.

இனி மக்கள் ராமர் நினைவாகத்தான் இருக்கப் போகிறார்கள்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கற்களை இறக்கிக் கொண்டிருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத்.  இதைப் பார்த்து ஆச்சயப்படவேண்டியதில்லை! அயோத்தியில் இடிக்கப்பட்ட மசூதியின் செங்கற்களைக் கொண்டுதான் இந்துத்துவ அமைப்புகளின் கட்டுமானங்கள் வளர்ந்தன. குறிப்பாக பாஜக வின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்ததே 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான்.

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தி முதல் ஆரியக் குடியேற்றம் நடந்த இடங்களில் ஒன்று. வரலாற்று ரீதியாக ஆரியக் குடிகளுக்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. டி. என். ஜா போன்ற வரலாற்றிஞர்கள் இந்த நகரம் குறித்து இப்படித்தான் குறிக்கிறார்கள். இராமாயணம் புராணமாக இருந்தாலும் அதில் உள்ள கதாபாத்திரங்கள் நிஜத்தில் வாழ்ந்தவர்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் மூக்கை நுழைப்பதில் யாருக்கும் உரிமை இல்லைதான். ஆனால், இதையே காரணம் காட்டி அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் அடைவதைக் கேள்வி கேட்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது.

1949-ஆம் ஆண்டு பாபர் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமர் சிலையை வைத்ததில் இருந்து இந்த அரசியல் ஆரம்பிக்கிறது. அந்த சிலையை அகற்ற முஸ்லிம் மக்கள் அஞ்சியது, அதைக் காரணம் காட்டி, சிலை உள்ள இடத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்றதும் அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் மத சுதந்திரம் என்று சட்டத்தை துணைக்கு அழைத்துக்கொண்டன இந்துத்துவ அமைப்புகள். 1986-ஆம் ஆண்டு வழிபடும் உரிமையை நீதிமன்றம் பெற்றுக்கொடுத்தது.

பெரும்பான்மை இந்து மக்கள் இந்த மூளைச்சலவைகளுக்கு  ஆளான இந்தக் காலக்கட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியும் வளரத் தொடங்கியது. இந்து-முஸ்லீம்கள் பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்த 1990களில் ராமர் கோயில் கட்டுவதில் பாஜகவின் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அசோக் சிங்கால் போன்றோர் தீவிரம் காட்டினர். அதற்கான திட்டங்களைத் திட்டினர். தங்களுடைய திட்டத்துக்கு நாடு முழுவதும் ரதயாத்திரை நடத்தினார் அத்வானி.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வந்த 1996-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரண்டாவது பாஜக திட்டமிட்டதுபோல வளர்ச்சி கண்டது.  ஆட்சியமைக்க முயன்று ஆட்சியும் அமைத்தது. 13 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.

பாபர் மசூதிக்குப் பிறகான 20 ஆண்டுகளில் பாஜக அமோக வளர்ச்சியைக் கண்டுள்ளது. இன்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலும் அமர்ந்திருக்கிறது. நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்பதை முக்கிய அம்சமாக முன்வைத்தார். அதைக் காப்பாற்றுவார் என்பதற்காகவே இந்துத்துவ அமைப்புகள் அவரைக் கொண்டாடின. நடுநிலையாளர்கள் பயந்தார்கள். அதுபோலவே தான் இப்போதை சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

பாஜக ஆட்சிக்கு வந்த முதலே மதவன்முறையை, சகிப்பின்மையைத் தூண்டும் விவகாரங்கள் நாடெங்கிலும் அதிகரித்தன. ஒன்று மாற்றி ஒன்றாக மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை, பீதியை மக்கள் மத்தியில் ஆட்சியாளர்களே ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலை அடுத்த அச்சுறுத்தலாக வந்து நிற்கிறது ராமர் கோயிலைக் கட்டும் விவகாரம். இனி மக்கள் மோடியின் வளர்ச்சி பற்றி ஆசைக்காட்டிய வார்த்தைகளை மறந்துவிடுவார்கள்; கருப்பு பணம் தங்களுடைய வங்கிக் கணக்குக்கு வந்து சேருமா என்கிற ஏக்கத்தை விட்டுவிடுவார்கள்; கல்வி அந்நியமயமாக்கப்படுவதை பற்றி கேள்விக் கேட்கமாட்டார்கள். இனி எப்போதும் ராமர் நினைவுதான், அவர்களை ஆக்கிரமிக்கப் போகிறது!

தினச்செய்தி நாளிதழில் வெளியானது

பீகார் தேர்தல் : கூட்டணிகளின் பலமும் பலவீனமும்

நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் பீகாரின் தேர்தல் முடிவுகள் இதோ நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு இது சோதனையான தேர்தல். 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நிதிஷ்குமாரும் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்கிற கேள்வியை எழுப்பிய தேர்தல். பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் நிதிஷ்குமார் தலைமையில் ஒரு கூட்டணியும் இந்தத் தேர்தலில் மோதினார்கள். இந்தக் கூட்டணிகளின் பலம், பலவீனம் என்ன?

பாஜக கூட்டணி:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி,ஹிந்துஸ்தானி அவாம் மோட்சா போன்ற கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன.

பலம்:

* மக்களவைத் தேர்தலில் மொத்தமிருந்த 27 தொகுதிகளில் 22 இடங்களைக் கைப்பற்றி பெரும் வெற்றியைக்கண்டது பாஜக. ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணியில் இருந்தபோது துணை முதல்வராக இருந்த சுஷில்குமார் மோடி பாஜகவின் முக்கியமான பலம். அந்த பலம் மக்களவைத் தேர்தலில் பலன் கொடுத்ததுபோல சட்டப்பேரவைத் தேர்தலிலும் பலம் கொடுக்கும் என்று பாஜக நம்புகிறது.

* மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் வளர்ச்சித் திட்டங்கள் விரைவாக நடக்கும் என்கிற கோஷம்.

* பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட சிரத்தையுடன் பீகார் தேர்தலில் வாக்கு சேகரித்தது. கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட பிரச்சாரக் கூட்டங்களில் அவர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.

* பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்.

பலவீனம்

* துணை முதல்வராக நிதிஷ் குமாரின் ஆட்சியில் பங்பெற்ற சுஷில்குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது.

* பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர்களின் படங்களே தேர்தல் பேனர்களில் பயன்படுத்தப்பட்டதால் உள்ளூர் பாஜகவினரிடையே ஏற்பட்ட அதிருப்தி.

* அடிக்கடி ரத்தான தேர்தல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள். நரேந்திர மோடி பங்கேற்க இருந்த மொதுக்கூட்டங்கள் மூன்று முறை ரத்தாகின. ஜார்க்கண்ட் பாஜக முதல்வர் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் ரத்தானதால் தொண்டர்கள் நாற்காலி, மேசைகளை அடித்து நொறுக்கினர்.

* இடஒதுக்கீடு கூடாது என்று பாஜகவின் நெருங்கிய தொடர்புள்ள அமைப்புகள் தொடர்ந்து சொல்லிவருவது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் உள்ள பீகாரில் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரதமரே இடஒதுக்கீட்டுக்கு பங்கம் ஏற்படாது என்று அறிவித்த பின்னும் மக்கள் அச்சம் விலகுமா என்பது சந்தேகமே..

* வளர்ச்சியை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த பாஜக, அதைச் செய்யாமல் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வந்ததும் சமீப காலமாக மாட்டிறைச்சியை முன்வைத்து நடந்து வரும் அரசியலும் நிச்சயம் பாஜகவுக்கு பின்னடைவைத் தரும் முக்கிய பலவீனமாக இருக்கும்.

மகா கூட்டணி:

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ் இணைந்து மகா கூட்டணியை அமைத்தன.

பலம்:

* பாஜக ஆதரவுடன் பீகாரில் ஆட்சியமைத்திருந்த ஜக்கிய ஜனதா தளம், நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, பாஜகவுடன் தன்னுடைய உறவை முறித்துக்கொண்டார்.வெறுப்பு அரசியல் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இது நிதிஷ் தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துவிட்டது.

* தலித்துகள், முஸ்லிம்களை கணிசமான அளவில் கொண்டிருக்கும் பீகாரில் சிறுபான்மையினரின் நலனில் அக்கறையுள்ள கூட்டணியாக தன்னை முன்னிறுத்திக் கொண்டது மகா கூட்டணி.

* 10 ஆண்டுகால நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி மீது மக்களுக்கு பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்பதும் வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாகப் பார்க்கப்படுகிறது.

* பெண்களுக்கு முக்கியத்துவம் தந்த நிதிஷின் திட்டங்கள் தேர்தலில் முக்கிய பங்காற்றும் என்று சொல்லப்பட்டது. மேடை தோறும் நிதிஷ், பெண்களை வாக்குச் சாவடிக்கு வரும்படி அரைகூவல் விடுத்தார். அதுபோலவே ஆண்களைவிட பெண்களின் வாக்கு அளிப்பு சதவிகிதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பலவீனம்

* மத்திய அரசை பகைத்துக்கொண்டு மாநில மக்களுக்கு பெரிய நன்மைகள் எதுவும் விளைந்துவிடாது என்று பாஜக கூட்டணி முன்வைத்த வாதம்.

* முன்பு பரம எதிரிகளாக நின்ற லாலுவும் நிதிஷும் கைக் கோர்த்தது.

* மக்களவைத் தேர்தலில் சந்தித்த பின்னடைவு

* ஊழல் செய்த லாலுவுடன் கூட்டணி, மீண்டும் காட்டாட்சியை ஏற்படுத்திவிடுமோ என்கிற பயம்.

 

மோடி, மாந்த்ரீகம், பீகார் தேர்தல்!

narendra-modi-s

பாஜக பீகார் தேர்தலை மிகவும் எதிர்ப்பார்ப்புடன் எதிர்கொண்டது. இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் பாஜக பின்னடைவை சந்திக்கும் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. நரேந்திர மோடியின் தேர்தல் பேரணி ரத்தாகியுள்ளதால் பீகார் பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக பாஜக எம்பியும் நடிகருமான சத்ருஹன் சின்ஹா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் பக்கத்து மாநிலமான ஜார்க்கண்டின் பாஜக முதல்வர் ரகுவர் தாஸ் சனிக்கிழமை கலந்துகொள்வதாக இருந்த பேரணி ரத்துசெய்யப்பட்டதால் கொதிப்படைந்த பாஜக தொண்டர்கள், பேரணி மேடையை சூறையாடினர்.

இந்தச் சம்பவங்களை அடுத்து, பாஜக இல்லாத பீகார் என்று காங்கிரஸ் கட்சி சமூக வலைத்தளங்களில் பாஜகவை விமர்சித்து வருகிறது. பாஜகவினர் முன்பு சொன்ன சர்ச்சைக்குரிய கருத்துகளை நினைப்படுத்தி ட்விட்டி வருகிறார்கள் காங்கிரஸார்.

நவம்பர் 1-ந் தேதி பீகாரின் மாதேபுரா மாவட்டத்தில் மோடி பங்கேற்கும் பேரணிக்காக மண்டல் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்த 500 மரங்கள் வேரோடு வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கிறது. இது அப்பகுதி மக்களிடைய கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் பாஜகவின் ஆதரவுடன் இந்துத்துவ அமைப்புகள் வன்முறையில் இறங்கிவருவது தொடர்கதையாகியுள்ள நிலையில், பீகாரில் தன்னுடைய தோல்வியை இப்போதே உணர ஆரம்பித்துவிட்டது பாஜக.

யார் நாவில் சாத்தான்?

பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத்தேர்தலில் எப்படியேனும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்கிற கடுமையான முயற்சியில் இருக்கிறது பாஜக. கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அடுத்து மோடி அதிகம் செல்லும் இந்திய மாநிலம் பீகார்தான். நிதிஸ்குமார்-லாலு பிரசாத் யாதவ் கூட்டணி வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கணிப்புகள் சொல்லும் சூழலில், தனது ஆட்சிக் கனவை மெய்ப்பிக்க பாஜக மேலும் கடுமையாக ‘உழைக்க’ வேண்டியிருக்கிறது. பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டப் பேச்சும் அந்த வகையில்தான் இருக்கிறது.

மாட்டிறைச்சி உண்பது குறித்து லாலு பிரசாத் யாதவ், ‘இந்துக்களும்கூடத்தான் மாட்டிறைச்சி’ உண்கிறார்கள் என்று சொல்லப்போக, அதற்கு மோடி, லாலுவின் பேச்சு யாதவ மற்றும் பீகார் மக்களை அவமானப்படுத்தி விட்டது. லாலுவின் நாவில் சாத்தான் இறங்கி, இவ்வாறு பேச செய்துள்ளது என்று கடுமையாக விமர்சித்தார். இதுவரையில் அரசியல் எதிரிகளுடன் போராடிய நிலைமாறி, தீய சக்திகளுக்கு எதிராக போராட வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தாத்ரியில் முகமது அக்லக் கொல்லப்பட்டதற்கு பிரதமர் என்ற முறையில் எந்த சலசலப்பையும் காட்டாதாக பிரதமர், இத்தகைய சம்பவங்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிவருதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

“தாத்ரி படுகொலை தொடர்பாக பிரதமர் மோடி வாயைத் திறந்து விட்டார் என்று சில ஏடுகள் பிரமாதப்படுத்துகின்றன. “நான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் “பொறுப்பற்ற அறிக்கைகளை விடக்கூடும்; மக்களே அவற்றைப் பொருட்படுத்தாதீர்கள்” என்றுதான் அவர் பேசியிருக்கிறார். அதாவது சங்பரிவாரத்தினர் பொறுப்பில்லாமல்தான் பேசுவோம் மக்கள்தான் பொறுத்துப் போக வேண்டும் என்கிறார்!இதற்கு அவர் பேசாமலேயே இருந்திருக்கலாம்.

அதுவாவது பராவயில்லை “இந்துக்களிலும் பசுமாமிசம் சாப்பிடுவோர் உண்டு எனச் சொல்லி லாலு யாதவமகாஜனங்களைக் கேவலப்படுத்தி விட்டார்” பிராமணியக் கலாச்சாரத்தை அனைத்து இந்துக்களின் கலாச்சாரம் போலச் சொல்லி அதிலே சாதியத்தையும் கலந்து தேர்தல் அரசியல் நடத்தியிருக்கிறார் பிரதமர். வெட்கக்கேடாக பேச்சு இது. இதற்கு மோடி பேசாமலே இருந்திருக்கலாம்!” என்று தன்னுடைய கண்டனத்தை இப்போது.காம் மூலம் பதிவு செய்தார் பேராசிரியர். அருணன்.