ராகுல் – ஜெட்லி சந்திப்பு: நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக இருக்குமா?

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முந்தைய மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக பல்வேறு முக்கிய மசோதாக்களை அரசால் நிறைவேற்ற முடியவில்லை.

தேங்கியிருக்கும் மசோதாக்கள்

மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாத நிலையில் 11 மசோதாக்களும், மக்களவையில் 13 மசோதாக்களும் இருக்கின்றன. இவற்றில் 5 மசோதாக்கள் பல்வேறு துறைகளின் நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் பரிசீலனையில் உள்ளன.
இதேபோல், மத்திய அரசு உத்தேசித்திருந்த சரக்கு – சேவை வரிகள் மசோதாவும் (ஜி.எஸ்.டி.) முந்தைய கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவில்லை.

கூட்டத்தொடர் அறிவிப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரானது நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை (26-11-1949) நினைவுகூரும் விதமாக, கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாள்களான 26, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமர்வுகளில் அரசமைப்புச் சட்டத்தில் நமது பங்களிப்பு குறித்தும், அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான கடமையுணர்வு, அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கரின் பங்கு குறித்தும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த தினங்களில் கேள்வி நேரங்கள் இருக்காது.

வெங்கய்ய நாயுடு கோரிக்கை

குளிர்காலக் கூட்டத்தொடரில் சரக்கு – சேவை வரி மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை அரசு நிறைவேற்றும் என நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு. இதுவரை முரண்டு பிடித்துக் கொண்டிருந்த மத்திய அரசு, “இந்த மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுடன் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது” என கீழிறங்கி வந்துள்ளது.

‘பீகார் முடிவுகளை வைத்து நாடாளுமன்றத்தை முடக்கக்கூடாது’

சகிப்பின்மைக்கு எதிரான சூழலும் அதை எதிரொலித்த பீகார் தேர்தல் முடிவுகளும் நாடாளுமன்றத்தை முடக்கக் கூடும் என மத்திய அரசு தெரிந்து வைத்திருக்கிறது.

“பீகார் தேர்தல் முடிவு மக்கள் அளித்துள்ள தீர்ப்பு. அதை நாங்கள் வரவேற்கிறோம். பீகார் மக்கள், அவர்கள் விருப்பப்படி தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனை எதிர்க்கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவானது அம்மாநிலத்தின் அரசியல், சூழ்நிலை ஆகியவற்றைப் பொருத்தது. அது ஒட்டுமொத்த தேசத்தின் மீதான தாக்கம் கிடையாது. பிகார் தேர்தல் முடிவுகளை முன்னிறுத்தி, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்க வேண்டாம்” என்று வெங்கய்யா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

ராகுல்-ஜேட்லி சந்திப்பு

இதனிடையே இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அருண் ஜெட்லி, நாடாளுமன்றத்தில் சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்ற ராகுலிடம் பேசத் தயார் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் வட்டாரங்கள் இந்தச் சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடந்ததாக கூறுகின்றன. முன்னதாக அருண் ஜெட்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.

மகளின் திருமணத்திற்கு அழைப்பு

சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, “எனது மகள் சோனாலியின் திருமண வரவேற்பு நிகழ்வு வரும் டிசம்பர் 9-ஆம் தேதி டெல்லியில் உள்ள எனது இல்லத்தில் நடக்க உள்ளது. ராகுலை அதற்காகவே சந்தித்தேன். அரசியல் நிகழ்வுகள் பற்றியும் பேசினேன்” என்றார்.

எதிர்க்கட்சியினரை தனித்தனியாக சந்தித்து பேச்சு

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடர், நாடாளுமன்றக் மழைக்காலக் கூட்டத் தொடர் அலுவல்கள் சுமுகமாக நடைபெற காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அனுமதிக்கவில்லை. இதனால், இரு அவைகளின் அலுவல்கள் முடிங்கின. அதேநிலை இம்முறையும் தொடரக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் தனித்தனியாகப் பேசி ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி வருகின்றனர். இதையொட்டி, வரும் 22-ஆம் தேதி தனது இல்லத்தில் இரு அவைகளிலும் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை வெங்கய்ய நாயுடு சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருக்கிறார்.