இனி மக்கள் ராமர் நினைவாகத்தான் இருக்கப் போகிறார்கள்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கற்களை இறக்கிக் கொண்டிருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத்.  இதைப் பார்த்து ஆச்சயப்படவேண்டியதில்லை! அயோத்தியில் இடிக்கப்பட்ட மசூதியின் செங்கற்களைக் கொண்டுதான் இந்துத்துவ அமைப்புகளின் கட்டுமானங்கள் வளர்ந்தன. குறிப்பாக பாஜக வின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்ததே 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான்.

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தி முதல் ஆரியக் குடியேற்றம் நடந்த இடங்களில் ஒன்று. வரலாற்று ரீதியாக ஆரியக் குடிகளுக்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. டி. என். ஜா போன்ற வரலாற்றிஞர்கள் இந்த நகரம் குறித்து இப்படித்தான் குறிக்கிறார்கள். இராமாயணம் புராணமாக இருந்தாலும் அதில் உள்ள கதாபாத்திரங்கள் நிஜத்தில் வாழ்ந்தவர்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் மூக்கை நுழைப்பதில் யாருக்கும் உரிமை இல்லைதான். ஆனால், இதையே காரணம் காட்டி அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் அடைவதைக் கேள்வி கேட்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது.

1949-ஆம் ஆண்டு பாபர் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமர் சிலையை வைத்ததில் இருந்து இந்த அரசியல் ஆரம்பிக்கிறது. அந்த சிலையை அகற்ற முஸ்லிம் மக்கள் அஞ்சியது, அதைக் காரணம் காட்டி, சிலை உள்ள இடத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்றதும் அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் மத சுதந்திரம் என்று சட்டத்தை துணைக்கு அழைத்துக்கொண்டன இந்துத்துவ அமைப்புகள். 1986-ஆம் ஆண்டு வழிபடும் உரிமையை நீதிமன்றம் பெற்றுக்கொடுத்தது.

பெரும்பான்மை இந்து மக்கள் இந்த மூளைச்சலவைகளுக்கு  ஆளான இந்தக் காலக்கட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியும் வளரத் தொடங்கியது. இந்து-முஸ்லீம்கள் பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்த 1990களில் ராமர் கோயில் கட்டுவதில் பாஜகவின் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அசோக் சிங்கால் போன்றோர் தீவிரம் காட்டினர். அதற்கான திட்டங்களைத் திட்டினர். தங்களுடைய திட்டத்துக்கு நாடு முழுவதும் ரதயாத்திரை நடத்தினார் அத்வானி.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வந்த 1996-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரண்டாவது பாஜக திட்டமிட்டதுபோல வளர்ச்சி கண்டது.  ஆட்சியமைக்க முயன்று ஆட்சியும் அமைத்தது. 13 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.

பாபர் மசூதிக்குப் பிறகான 20 ஆண்டுகளில் பாஜக அமோக வளர்ச்சியைக் கண்டுள்ளது. இன்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலும் அமர்ந்திருக்கிறது. நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்பதை முக்கிய அம்சமாக முன்வைத்தார். அதைக் காப்பாற்றுவார் என்பதற்காகவே இந்துத்துவ அமைப்புகள் அவரைக் கொண்டாடின. நடுநிலையாளர்கள் பயந்தார்கள். அதுபோலவே தான் இப்போதை சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

பாஜக ஆட்சிக்கு வந்த முதலே மதவன்முறையை, சகிப்பின்மையைத் தூண்டும் விவகாரங்கள் நாடெங்கிலும் அதிகரித்தன. ஒன்று மாற்றி ஒன்றாக மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை, பீதியை மக்கள் மத்தியில் ஆட்சியாளர்களே ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலை அடுத்த அச்சுறுத்தலாக வந்து நிற்கிறது ராமர் கோயிலைக் கட்டும் விவகாரம். இனி மக்கள் மோடியின் வளர்ச்சி பற்றி ஆசைக்காட்டிய வார்த்தைகளை மறந்துவிடுவார்கள்; கருப்பு பணம் தங்களுடைய வங்கிக் கணக்குக்கு வந்து சேருமா என்கிற ஏக்கத்தை விட்டுவிடுவார்கள்; கல்வி அந்நியமயமாக்கப்படுவதை பற்றி கேள்விக் கேட்கமாட்டார்கள். இனி எப்போதும் ராமர் நினைவுதான், அவர்களை ஆக்கிரமிக்கப் போகிறது!

தினச்செய்தி நாளிதழில் வெளியானது