தேர்தல் நேர காளான்கள்!

அனைத்திந்திய எம் ஜி ஆர் கட்சி, அனைத்திந்திய திராவிடர் சமத்துவ கழகம், அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம், அனைத்து மக்கள் முன்னேற்ற கழகம், அன்பு உதயம்  கட்சி, அப்பாம்மா மக்கள் கழகம், பாரத சமத்துவ மக்கள் கழகம், பாரத மக்கள் காங்கிரஸ், பாரதிய திராவிட மக்கள் கட்சி, பாரதிய டெமாக்ரடிக் தள், தேச மக்கள் முன்னேற்ற கழகம்…
இப்படி ஆங்கில எழுத்து ஏயில் ஆரம்பித்து இஸட் வரை நாம் கேள்விப்படாத புது புது பெயர்களைத் தாங்கிக் கொண்டிருக்கும்  180க்கும் மேற்பட்ட கட்சிகள் இப்போதை(2014ன் படி)க்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொண்டுள்ள கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் கட்சிகள்.

மதத்தின் பெயரால் தொடங்கப்பட்ட கட்சிகள், சாதியை பெயரில் தாங்கியிருக்கும் கட்சிகள், கொள்கைகளை பெயராக கொண்ட கட்சிகள், கொள்கைகளே இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் என தேர்தல் நேரத்தில், மழை நேர காளான்களைப் போல கட்சிகள் புதிதுபுதிதாக முளைக்க ஆரம்பிக்கின்றன.

குறிப்பிட்ட பகுதியில் பிரபலமாக இருப்பவர், சாதித் தலைவர்கள், பொருளாதார செல்வாக்கு இருக்கிறவர் இதில் எதுமே இல்லையென்றால் எனக்கு பத்து பேரைத் தெரியும் என்பவர்கூட ஒரு பெயரை வைத்துக்கொண்டு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட முடியும். ஆனால், ஆங்கீகாரம் பெறுவது அவ்வளவு எளிதானதல்ல.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டுமானால் சில பல சட்ட திட்டங்கள் உண்டு. அதில் ஒன்று முந்தைய தேர்தல்களில் கட்சி 6% வாக்குகளையாவது பெற்றிருக்க வேண்டும். நீண்ட திட்டத்துடன் அரசியலில் களம் இறங்கிறவர்களுக்குத்தான் இந்தக் கவலை. காளான்கள் இதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். பெரும்பாலான காளான் கட்சிகளின் நோக்கம் குறுகியது.

அதாவது ‘எங்களிடம் இத்தனை ஆதரவாளர்கள் இருக்கிறார்கள், அவை எல்லாம் ஓட்டுகள் ’என்று பெரிய கட்சிகளிடம் பணம் பறிப்பது அல்லது அதிகாரத்தின் நிழலில் ஒதுங்கிக் கொள்ளும் நோக்கத்தில் தான்  இவர்கள் கட்சி தொடங்குகிறார்கள். அணு உலை எதிர்ப்பு போராளி சுப. உதயகுமாரன் தொடங்கியிருக்கும் பச்சைத் தமிழகம் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் கட்சி. ஆனால், இவர் போன்றோரைப் பொருத்தவரை வெகுமக்களின் ஆதரவு பெற முடியுமா என்பதே பிரச்சினை. எந்தவொரு கட்சியும் ஆரம்பிக்கப்படும் போது சிறிய அளவிலான வெற்றிகளையே பெருகிறது. தாக்குப் பிடிக்கும் திறன், அரசியல் செய்யும் பாங்கு இவற்றின் அடிப்படையில்தான் அது முன்னோக்கிச் செல்ல முடியும்.

திராவிட கட்சிகளின் எழுச்சி, காங்கிரஸின் வீழ்ச்சியில் ஆரம்பித்தது. திராவிட கட்சிகளின் வீழ்ச்சிக்கான காலம் நெருங்கிவிட்டது; மக்கள் புதிய அலை கட்சிக்காக ஏங்குகிறார்கள் என சில அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். திராவிட கட்சிகள் சரிவை சந்தித்திருப்பது உண்மைதான். ஆனால் அதுவும் சித்தாந்த அடிப்படையில். இந்த இரண்டு கட்சிகளையும் திட்டிக்கொண்டே, ரெண்டில் ஒன்றைத் தொடுகிற மனப்பான்மையில்தான் வெகுமக்கள் இருக்கிறார்கள். திடீர் என்று ஒரு கட்சி தோன்றி தமிழ் தேசியத்தையோ, மதவாதத்தையோ முன்வைத்து ஆட்சியை பிடித்துவிட முடியும் என்கிற கனவு இன்றைய தமிழக சூழலில் கனவாகத்தான் இருக்க முடியும்.

தலைமுறைகளும் வாழ்க்கைச் சூழலும் மாறிக்கொண்டிருக்கும் சூழலில் பழையன கழிதலும் புதியன வருதலும் இயல்பே. இருக்கிற கட்சிகள் தங்களை புதுப்பித்துக் கொள்ளாத வரை, புதிய கட்சிகளின் எழுச்சி நடந்தே தீரும். அது எதன் அடிப்படையில் அமையும் என்பது காலத்தின் புதிர்!

பின்குறிப்பு: மாற்றம் முன்னேற்றத்தை முன்னெடுக்கும் பாமகவும் கூட்டணி ஆட்சிக்கு அடித்தளம் அமைக்கப்போவதாகக் கூறும் மதிமுகவும் விடுதலை சிறுத்தைகளும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள்.

தினச்செய்தி நாளிதழுக்காக எழுதியது.