“மோடி, நவாஸ் ஷெரீஃப்புடன் ஒரு கப் டீக்காக, ஏழு இந்திய உயிர்களை பலிகொடுக்க வேண்டியிருக்கிறது. உலக ஒற்றுமைக்காக பாடுபடும் முன், இந்தியா மீது கவனம் கொள்வது நல்லது” சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சாம்னா பத்திரிகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து எழுதிய வார்த்தைகள் இவை.
கடந்த மூன்று நாட்களாக இந்தியாவின் பாஞ்சாப் மாநில எல்லை வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள், பதன்கோட் விமான படை தளத்துக்குள் நுழைந்து சுட ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதலில் ஏழு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ஆறு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த வாரம், ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்ப இருந்த மோடி திடீர் பயணமாக பாகிஸ்தானுக்குச் சென்றார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லச் சென்றதாக பிறகு பிரதமர் அறிவித்தார். ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு, காஷ்மீர் விவகாரம், எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்தது.
பாகிஸ்தான் – இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என்று எதிர்க்கிற இயக்கங்கள் பதன்கோட் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒரு மாதம் முன்பு பஞ்சாப்பில் ஒரு காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத் தகுந்தது. முதல் கட்ட தகவலில் பஞ்சாப் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையோரத்தில் கண்காணிப்பு குறைவே தீவிரவாதிகள் ஊருவக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த எல்லைப் பகுதியில் கடுமையான நிலப்பகுதி காரணமாக தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை இருந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், பாதுகாப்பில் குறைபாடு எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறது பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தத் தாக்குதல் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது, குழுவின் அறிக்கையில் என்ன காரணம் என்று தெரிந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், மோடியின் நடவடிக்கைகளே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என எதிர்க்கட்சிகளும் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சிவ சேனாவும் கடுமையாக தாக்கிவருகின்றன. குறிப்பாக பாகிஸ்தானியர் இந்தியாவுள் சுற்றுலாப் பயணிகளாக வருவதற்குக் கூட எதிர்ப்பு தெரிவிக்கும் சிவ சேனா, இந்திய பிரதமரின் ‘திடீர்’ பயணத்தை கடுமையாகத் தாக்கியது. பாகிஸ்தானை நம்ப வேண்டாம் என்று தாங்கள் எச்சரித்தது இப்போது உண்மையாகிவிட்டது என உத்தவ் தாக்கரே சீறுகிறார்.
பாகிஸ்தானிய முன்னாள் அமைச்சரை பத்திரிகை வெளியீட்டு அழைத்த சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு மை வீசியது, பாகிஸ்தான் பாடகரை மும்பையில் பாட அனுமதிக்க மாட்டோம் என அவரைத் துரத்தியது, சுற்றுலா வந்த பாகிஸ்தான் பயணிகளுக்கு ஹோட்டலில் இடம் தரக்கூடாது என ஹோட்டல்காரர்களை மிரட்டி சொல்ல வைத்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணனையாளர்களை விரட்டியது என சிவசேனா தனது பழைய ‘எதிரி பாகிஸ்தான்’ என்கிற அரசியலை கையில் எடுத்திருக்கிறது. மகாராஷ்டிராவில் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ள சிவ சேனாவுக்கும், சிவ சேனாவின் ஆதரவில் ஆட்சியமைத்திருக்கும் பாஜகவுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டிருக்கிறது. தன்னை முதன்மையாக காட்டிக்கொள்ளும் விதத்தில் மீண்டும் கையிலெடுத்திருக்கும் ‘எதிரி பாகிஸ்தான் அரசியலு’க்கு உரமூட்டக்கூடியதாக இருக்கிறது பதன்கோட் தாக்குதல்.
பாகிஸ்தானின் அல்லது பாகிஸ்தானின் பேரைச் சொல்லிக்கொண்டு இந்தியா மீது நடக்கு தாக்குதல்களுக்கு பாகிஸ்தானின் குடிமக்கள் எந்தவகையிலும் பொறுப்பாக முடியாது. ஆனால், சிவசேனா போன்ற அரசியல்வாதிகள் பாகிஸ்தான் என்கிற பெயரிலிருந்து எல்லாமே நமக்கு எதிரிகள்தான் என்பதுபோல பொதுமக்கள் மனதில் விதைக்க ஆரம்பிக்கிறார்கள்.
‘இந்துத்துவத்தை நிலைநிறுத்த வாஜ்பாயிக்கு கார்கில் யுத்தம் தேவைப்பட்டதுபோல, மோடிக்கு பாகிஸ்தானுடன் இன்னொரு யுத்தம் தேவையாக இருக்கலாம்’ என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள். பாகிஸ்தானிய அடிப்படைவாதிகளின் எழுச்சி இடமளிக்கும் வகையில் இந்திய அரசியல்வாதிகள் இந்துத்துவ அடிப்படைவாதத்தைக் கையில் எடுக்க நினைக்கிறார்கள். அதற்கு இந்திய அரசு துணைபோகக்கூடாது. பாகிஸ்தானிய அடிப்படைவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவதைத் தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போல இந்திய அடிப்படைவாதத்தையும் வளரவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், பாஜக அரசு தனது சக கூட்டாளியான சிவ சேனாவின் வாயைக் கட்டுப்படுத்துமா என்பது கேள்வியாகவே இருக்கும்!
தினச்செய்தி (5-1-2016) நாளிதழில் வெளியான கட்டுரை..