ரஜினிக்கு விருது கொடுத்து பாஜக ஏன் குளிர்விக்கப்பார்க்கிறது?

கோவாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தர இருப்பதாக அறிவித்துள்ளது மத்திய கலாச்சார துறை அமைச்சகம். இந்த அறிவிப்பு இரண்டு விதங்களில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ரஜினிக்கு முன்பே திரைப்படங்களில் நடிக்க வந்தவர், நடிப்பில் அவரைவிடவும் திறனையாளரான கமல்ஹாசனுக்குத் தராமல், ரஜினிக்கு தருவதா என சினிமா ஆர்வலர்கள் ஒருபக்கம் விமர்சிக்கிறார்கள். ஆந்திர அரசு சமீபத்தில் கமலுக்கும் ரஜினிக்கும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கவுரவித்தது. இதில் கமலுக்கு முதல் ஆண்டும், ரஜினிக்கு அடுத்த ஆண்டும் விருதுகள் அளிக்கப்பட்டன என்பதை இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது. ஒரு மாநில அரசாங்கத்துக்கு உள்ள பொறுப்புக்கூட, மத்திய அரசாங்கத்துக்கு இல்லையா எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இன்னொரு பக்கம், அரசியல் தொடர்புடையது! சினிமா – கலை – அனுபவம் போன்றவற்றைக் கடந்து சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தப்போகும் ‘அரசியல்’ தொடர்பான சர்ச்சை அது. ரஜினிகாந்தை அரசியலில் இழுக்க கடந்த ஆறாண்டுகளாக படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது பாஜக தரப்பு. அவரை எப்படியெல்லாம் ‘குளிரிவிக்கலாம்’ என பாஜக தலைவர்கள் சதா யோசித்துக்கொண்டே இருக்கிறார்கள் போல. இந்த முயற்சிகளில் ஒரு பகுதியாகத்தான் இந்த விருது வழங்கப்படவிருக்கிறது என்பதே அரசியல் தரப்பிலிருந்து எழுந்திருக்கும் சர்ச்சை.

விருது அறிவிப்பு காலத்தை நோக்கும்போது, அரசியல் நோக்கங்கள் அதிகமாக உள்ளது தெளிவாகவே புலனாகிறது. ஜனவரியில் ரஜினிகாந்த் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என்று வதந்திகள் கிளம்பிக்கொண்டிருக்கும் நிலையில், தனது நீண்ட நாள் நண்பரான ரஜினியை குளிர்விக்க, ‘நீங்க நம்ம ஆளுதான்’ என்பதை மறுபடியும் நினைவூட்ட இந்த விருதை பாஜக அரசாங்கம் அறிவித்திருக்கலாம்.

2014-ஆம் ஆண்டு இந்திய அரசியலில் எப்போதும் இல்லாத வகையில் ‘பிரதமர் வேட்பாளராக’ நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். அப்போதைய தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி, தனிப்பட்ட முறையில் ரஜினியை சந்தித்து ‘தங்களுடைய நட்பை’ தேர்தல் ஆதாயத்துக்காக வெளிப்படுத்தினார். வெளிப்படையாக மோடியை ஆதரிக்க விட்டாலும், (அப்போது ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) தேர்தல் நேரத்தில் இருவர் சந்திக்கொள்வது எதற்காக என்பதை ரஜினி அறியாமல் சந்தித்திருக்கமாட்டார். ஆகவே, அப்போதே பாஜகவின் ‘நெருங்கிய’ உறவாகிவிட்டார் ரஜினி.

நடிகர் கமல்ஹாசனின் ‘மைய அரசியலை’ யூகித்ததாலோ என்னவோ, அவரை அப்போதிலிருந்து தள்ளிவைத்து பார்த்தது பாஜக. ரஜினியின் ‘இந்துத்துவ ஆன்மீக ஈடுபாடு’ம் அவற்றை அவர் நடிக்கும் படங்களில் திணிப்பதும், மட்டுமல்லாமல் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ‘பார்ப்பன இந்து மத’த்தின் மேன்மைகளை எடுத்துச் சொல்வதும் பாஜகவினருக்கு நெருக்கத்தை உண்டாக்கிறது.

இப்போது அல்ல, நீண்ட காலமாகவே ரஜினி, இந்துத்துவ அரசியலுக்கு தோதான ஆளாகவே பாஜகவினரும் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்பினரும் பார்த்து வந்துள்ளனர். ரஜினிக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் இந்து முன்னணி அவரை காத்து நின்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரும் சோ விட்ட அரசியல் பணியைத் தொடர்பவருமான குருமூர்த்தி ‘பாஜகவும் ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும்’ என ரஜினி உள்ள மேடையிலேயே இணைப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

முழுக்க முழுக்க எதிர்ப்பு நிலையிலேயே தங்களை வைத்திருக்கும் தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடிக்க பாஜக பல வகையிலும் திட்டமிடுகிறது. சினிமா செல்வாக்குள்ள, தங்களுடைய ‘கொளுகை’களுக்கு ஒத்துப்போகும் ரஜினி போன்ற பிம்பத்தின் பின்னால் வளரலாம் என்பது அவர்களுடைய நீண்ட கால திட்டம்.

இதுபற்றி ரஜினியின் மனநிலை என்னவாக இருக்கிறது? நடிகர் ரஜினிகாந்த் தான் உண்டு, தன்னுடைய தொழில் உண்டு, தன்னுடைய ஆன்மீகம் உண்டு என வாழ நினைக்கும் மனிதர். அவருடைய ‘கொளுகை’கள் காவிமயமானவை; தமிழக மக்களின் எண்ணங்களுக்கு, வாழ்வியலுக்கு எதிரானவை. இதை அவர் உணர்ந்திருந்தாலும் தன்னுடைய சித்தாந்தத்திலிருந்து அவர் ஒருபோதும் கீழே இறங்கியதில்லை.

ஆனாலும், தமிழகத்தின் மத எதிர்ப்பு அரசியலை எதிர்கொள்ள அவருக்குப் போதிய மன தைரியம் இல்லை என்பதோடு அது வெற்றி பெறவும் செய்யாது என்பதை அறிந்திருக்கிறார். கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் ‘ஆன்மிக’ திணிப்புகளை தன் படங்களில் இலைமறை காயாக காட்டியபோதும், அவை எதுவும் தமிழகத்தின் இயல்புத்தன்மையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை.

திராவிட அரசியலின் பின்னணியில் அரசியலுக்கு வந்து வெற்றி கண்ட எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற ஆளுமையாக ரஜினியால் ஒருபோதும் வரமுடியாது என்பதை அவரும் அறிந்தே இருக்கிறார். அவருடைய இத்தனை ஆண்டுகால தயக்கமே இதை உணர்த்தக்கூடியதுதான். ஆனால் பாஜகவுக்கு இது பொருட்டில்லை.

‘ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற ஒற்றை வரி பிரச்சாரத்தை முன்னிறுத்திய முப்பது ஆண்டுகளில் பாஜக அசுரத்தனமாக வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்தையும் தங்களுடையதாக்க பாஜகவினர் திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறார்கள். இன்று சட்டம் – அரசியலமைப்பு – நீதிமன்றம் என அனைத்தையும் தலைகீழாக மாற்றும் அளவுக்கு அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்து நிற்கிறது.

ஒற்றை மதத்தை முன்னிறுத்திய பெரும்பான்மைவாத அரசாக அது விசுவரூபம் எடுத்துள்ளது. ரஜினி என்பது பாஜகவுக்கு ஒரு முகமதிப்பு மட்டுமே. பணபலத்தைப் பற்றியோ, ஆள் பலத்தைப் பற்றியோ ரஜினி கவலைகொள்ளத் தேவையில்லை; அதை பாஜக கவனித்துக்கொள்ளும். பாஜகவுக்குத் தேவை தங்களுடைய சித்தாந்தத்தைத் தாங்கிச் செல்லும் ஒரு முகம். அந்தப் பணிக்கு ரஜினி கச்சிதமாகப் பொருந்துவார் என அவர்கள் திடமாக நம்புகிறார்கள். அதற்காகத்தான் இத்தனை கவனிப்புகள்!

இந்தப் பின்னணி காரணங்களுக்கு தமிழக மக்கள் என்ன எதிர்வினையை செய்ய இருக்கிறார்கள்? ரஜினி – பாஜக கூட்டணியை மக்கள் ஏற்பார்களா? திராவிட பாரம்பரியத்தில் வந்த திமுக – அதிமுக கட்சிகள் முன்பு ரஜினி – பாஜக கூட்டணி வெல்லுமா? போன்ற கேள்விகளுக்கான விடையை எதிர்காலமே சொல்லும்.

மத போதகருக்கு மொட்டையடித்து, கழுதையில் ஏற்றி ஊர்வலம்: கிறித்துவர்களை குறிவைக்கும் இந்துத்துவ அமைப்புகள்!

ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியில் 2008-ஆம் ஆண்டு கிறித்துவர்களின் மதமாற்றத்தை தடுப்பதாகக் கூறி விஷ்வ ஹிந்து பரிஷத் தூண்டிவிட்ட கலவரம் மறக்கக் கூடியதல்ல.  இந்தக் கலவரத்தில் 60 பேர் கொல்லப்பட்டதும் 50 ஆயிரம் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து அகதிகளானதும் நடந்தது.  அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் பிரதமர் மன்மோகன் சிங், ‘நாட்டின் அவமானம்’ என்று இதை சொல்லியிருந்தார்.

இந்து மதத்தின் தனித்துவத்தை காப்பாற்றும் பொருட்டு, பழங்குடி மக்கள் கிறித்துவ மதத்துக்கு தாவுவதை தடுக்கும் வகையில் கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாமியார்கள் இதை முன்னின்று நடத்தினர். இந்த சம்பவங்களுக்கெல்லாம் முன்னோடியாக 1999-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னுடைய இருமகன்களுடன் ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்தபோது எரித்துக் கொல்லப்பட்டார். இதைச் செய்தது விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த தாராசிங் என்பவர்.

இந்தச் சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் உத்தர பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை கிறித்துவ போதகர் ஒருவர் மிகக் கடுமையான முறையில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். பாதி மழித்த மீசை, பாதி மழித்த தலைமுடி, புருவ முடியும்கூட பாதி மழிக்கப்பட்டநிலையில், செருப்பு மாலைகள் அணிவிக்கப்பட்டு கழுதையில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டிருக்கிறார். இவரை இப்படி ஊர்வலமாக பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஆட்கள் அழைத்துச் சென்றனர்.
பஜ்ரங் தள் அமைப்பினர் போதகர் மேல் குற்றச்சாட்டு, மூன்று இந்துக்களை ஏமாற்றி கிறித்துவர்களாக மதம் மாற்றி அவர்களை மாட்டிறைச்சி உண்ண வைத்தார் என்பதே. மாட்டிறைச்சியை வேண்டுமென்றே உண்ண வைத்தார் என்று இவர்கள் அழுத்தம் சேர்த்துக் கொள்கின்றனர்.

தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்றவும் அதைப் பற்றி போதனை செய்யவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியரின் அடிப்படை உரிமையாக வரையறுக்கிறது. இந்நிலையில் மதத் தூய்மைவாதம் பேணுகிறோம் என்கிற பெயரில் இந்துத்துவ அமைப்புகள், அடிப்படை உரிமைகளை பறிக்கும்வகையிலும் மனிதத் தன்மையற்ற முறையிலும் இத்தகைய செயல்களைச் செய்கின்றன. உபியில் மனிதத்தன்மையற்று போதகரிடம் நடந்து கொண்டவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, 2015-ஆம் ஆண்டில் மட்டும் முஸ்லிம், கிறித்துவ மதத்தினருக்கும் எதிராக 600க்கும் மேற்பட்ட வன்முறைகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. இந்த வன்முறைகளில் 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த விவரம் சொல்கிறது. கிறித்துவர்களுக்கு எதிராக மட்டும் 149 வன்முறைச் சம்பவங்கள். இதில் கொல்கத்தாவில் 70 வயது கன்னிகாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும் அடங்கும்.

பெரும்பாலும் முஸ்லிம்களை குறிவைத்தே அரங்கேறிய வன்முறை சம்பவங்கள், இப்போது கிறித்துவர்களை நோக்கி படர ஆரம்பித்துள்ளன. மவுனப் பிரதமராக பெயர் பெற்ற மன்மோகன் சிங், மத வெறியாட்டங்களைப் பார்த்துக்கொண்டு எப்போதும் மவுனமாக இருந்ததில்லை. ஆனால், அக்லக் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரமாகட்டும் சிறுபான்மையினருக்கு எதிரான எந்தவொரு வன்முறையாகப்பட்டும் இன்றைய பிரதமர் மோடி, வாயைத் திறக்காமல் மவுனம் காக்கிறார். இந்த மவுனம்தான் இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு வன்முறையை அவிழ்த்துவிட சம்மதமாகத் தெரிகிறதோ என்னவோ?!

தினச்செய்தி(31-01-2016) நாளிதழில் வெளியானது.

சுபாஷ் சந்திர போஸை முன்வைத்து அமித் ஷா-மோடியின் அரசியல்!

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகான வரலாற்றில் மர்மமாக நீடிப்பவர் சுபாஷ் சந்திர போஸ். சுபாஷ் சந்திர போஸ் மரணமடைந்துவிட்டாரா அல்லது இன்னமும் வாழ்கிறாரா என்பதை புனைகதைகளை விஞ்சும் புதிய புதிய கதைகள் மூலம் திரும்ப திரும்ப ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.  இதில் அவரவர் கட்சி சார்ந்து அரசியல் செய்வதற்கு சுபாஷ் சந்திர போஸ் உதவிக் கொண்டிருக்கிறார் என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் சந்திர போஸின் குடும்பத்தினரைச் சந்தித்த பிரதமர் மோடி, சந்திர போஸ் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். அவருடைய அறிவிப்பு வெளியான அடுத்த மாதமே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,  மாநில அரசிடன் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் பொது மக்கள் பார்வைக்கு விட்டார்.  மேற்கு வங்க தேர்தலை ஒட்டி மாநிலத்தில் கணிசமாக உள்ள ‘போஸ்’ வகுப்பினரின் ஓட்டுக்களை கவரும் உத்தியுடனே பிரதமரும் மாநில முதலமைச்சரும் கணக்குப் போட்டார்கள். இதில் திதி முந்திக்கொண்டார்.

மம்தா வெளியிட்ட ஆவணங்கள், சுபாஷ் சந்திர போஸின் மரண சர்ச்சையைத் தீர்த்து வைத்ததா? அதுதான் இல்லை. இங்கு சர்ச்சையே இல்லை. தெளிவான ஆவணங்கள், சுபாஷ் சந்திர போஸ் ஜப்பான் செல்லும் வழியில் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி தைபெய்யில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தார் என்று தெரிவித்தன.  ஆனாலும் ‘புனைகதை மன்னர்கள்’ சுபாஷின் மரண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இல்லை.
பிரதமர் வெளியிடவிருக்கும் ஆவணங்களுக்காக காத்திருந்தார்கள். நடுவில் இங்கிலாந்து இணையதளம் ஒன்று, சுபாஷ் சந்திர போஸின் மரணம் விமான விபத்தில் நேர்ந்தது என ஆதாரங்களுடன் சொன்னது. போஸின் மரண சர்ச்சை ஒருவகையில் முடிவுக்கு வந்ததற்கான அமைதி நிலவியது.

இந்தச் சூழ்நிலையில் கடந்த 23-ஆம் தேதி போஸின் பிறந்த தினத்தில் தேசிய ஆவணக் காப்பகத்தின் மூலம் போஸ் குறித்த இந்தக் கோப்புகள் டிஜிட்டல் முறையில் வெளியிட்டார் பிரதமர் மோடி. இத்தனை ஆண்டு காலமும் இந்தக் கோப்புகளை ரகசியமாக காங்கிரஸ் அரசு பேணி வந்ததற்கு காரணம் இருந்தது. பிரபல வரலாற்று அறிஞர்களும்கூட இந்த ரகசிய ஆவணங்களைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. காரணம், போஸ் குறித்து முதல் பிரதமர் நேருவின் கருத்துக்களும் கடிதப் பரிமாற்றங்களும்கூட அதில் இருந்தன என்பதே.

நேருவும் போஸும் இரு வேறு துருவங்களாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் களம் கண்டவர்கள். இங்கிலாந்துடன் போர் புரிவது ஒன்றே இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தரும் என்று ஆயுதம் ஏந்தி, ஜெர்மன் கொடுங்கோலர் ஹிட்லரின் உதவியை நாடினார் போஸ். நேருவின் பாதை, காந்தி முன்னிறுத்தி இருந்தது.  எனவே, இவர்களுக்கிடையே விமர்சனங்கள் கடுமையானதாக இருந்திருக்கலாம். இந்த ஆவணங்கள் வெளியே வந்தால் அவை சர்ச்சைகளைக் கிளப்பும் என காங்கிரஸ் அரசு நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இதை அரசியலாக்க முயற்சித்தது. அதன் வெளிப்பாடே போஸ் ஆவணங்களை வெளியிடும் முடிவு. இந்திய அரசுக்கு நன்றாகத் தெரியும், போஸ் மரணம் விபத்தினால் ஏற்பட்டதுதான் என்பது. ஆனால் அவரது மரண சர்ச்சையை முன்வைத்து, நேரு-போஸ் கடிதங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்பதே பாஜக அரசுக்கு இருந்த உள் அரசியல். அதன்படி ஆவணங்களும் வெளியிட்டாகிவிட்டது.

ஆனால், ஆதாயம் கிடைத்ததா என்றால் அதுதான் இல்லை. நேரு எழுதியதாக வெளியிட்ட ஒரு கடிதம், போஸ் ஒரு போர்க் குற்றவாளி என நேரு சொல்வதாக எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதம் இங்கிலாந்து பிரதமர் அட்லிக்கு எழுதப்பட்டதாகவும் அதை இந்திய பிரதமராக இருந்த நேரு எழுதியதாகவும் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளுடன் வெளியாகியிருக்கிறது. இந்தக் கடிதம் எழுதப்பட்ட காலம் 1945 என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகே, நேரு பிரதமரானார். ஆனால், அந்தக் கடிதம் 1945-ஆம் ஆண்டு நேரு பிரதமர் என்பதாக உள்ளது.
இத்தனை ஓட்டைகளுடன் இந்த ஆவணம் ஆவணக் காப்பகத்தில் இத்தனை ஆண்டுகள் இருந்ததா என்றும், ஆங்கிலப் புலமை பெற்ற, நேரு இத்தனை தவறுகளுடன் கடிதம் எழுதினாரா என்பதும் வரலாற்று அறிஞர்களிடம் நகைப்பை உண்டாக்கியிருக்கிறது.  போட்டோஷாப்புக்கு புகழ்பெற்ற மோடி அரசின் புகழ் போஸின் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களில் முழுமையடைந்திருப்பதாக சமூக ஊடகங்கள் பகடி செய்கின்றன.
இந்நிலையில்  இனி ஒவ்வொரு மாதமும் 25 ரகசியக் கோப்புகளை வெளியிடுவதற்கு தேசிய ஆவணக் காப்பகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறது. அதாவது மேற்கு வங்க தேர்தல் முடியும் வரை இந்த ரகசியக் கோப்புகள் வெளிவரும் என நம்பலாம். ஆனால், ரகசிய கோப்புகளை மட்டும் நம்பக்கூடாது!
கொசுறு:  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உறவினர் சந்திரா போஸ் பாஜகவில் இணைந்தார். பாஜகவின் போஸ் பற்றுக்கும் இந்த இணைவிற்கும் ஏதும் தொடர்பில்லை என நம்புவோமாக!

#2015 : இந்துத்துவ பரிசோதனைகளின் ஆண்டு!

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் காங்கிரஸுக்கு பின்னடைவைத் தரும் என்பது அனைவரும் எதிர்ப்பார்த்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் தவிர, மற்ற கட்சிகள் மத்தியில் பெரும்பான்மைப் பெற்றதில்லை. அந்த வகையில் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிருப்தி காரணமாக காங்கிரஸும் பெரும்பான்மை பெறாது; மற்ற கட்சிகளும் பெரும்பான்மை பெற முடியாது என்றே அரசியல் ஆரூடங்கள் சொல்லிவந்தன. பாரதிய ஜனதா கட்சியை பெரும்பான்மை பெறக்கூடிய கட்சியாக எவரும் கணிக்கவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் திட்டம் ’சிறப்பானதாக’ நடைமுறைப்படுத்தக்கூடியதாக மாற்றி அமைக்கப்பட்டது. இதை மாற்றி அமைத்தது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம்! கூட்டணி ஆட்சி மத்தியில் அமையலாம், அப்படி அமைந்தால் பிரதமர் ஆக்கப்படலாம் என்கிற கனவில் இருந்த எல்.கே. அத்வானியை புறம்தள்ளிவிட்டு, நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்பட்டார்.  அத்வானியும் ஆர் எஸ் எஸ்ஸின் தீவிர தொண்டர்தான், ஆனால் அவருடைய ‘அரசியல்’ காலாவதியாகிவிட்டதாகக் கருதியது ஆர். எஸ். எஸ்.
போலியை மறைக்கும் பொலிவான வளர்ச்சி முகமாகத் தெரிந்தார் மோடி. குஜராத்தில் அவர் முன்வைத்த ‘மத அரசியல்’, ‘வளர்ச்சி’ என்ற பூச்சால் அழகாக பூசி மெழுகப்பட்டிருந்தது. இதை குஜராத் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்; அதுபோல இந்த பூச்சை நாடு முழுவதிலும் பரப்புவதற்கு நரேந்திர மோடியைத் தேர்ந்தெடுத்தது ஆர்.எஸ்.எஸ்.

இல்லாததை இருப்பதென காட்ட தொழில்முறை காப்பொரேட் நிறுவனங்கள் தேர்தல் பணியாற்ற அமர்த்தப்பட்டார்கள். வெற்றி எதிர்பாராததாக அமைந்தது. மிகப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியில் ஏறியது. முதல் ஆறு மாதங்கள் ஆரம்பக் கட்ட அதிகார டாம்பீகங்களைக் காட்டிக் கொள்வதுமாக சென்றது. இந்துத்துவ அமைப்புகள் இந்தக் காலத்தில் எதிர்காலத்திட்டங்களை கூர்தீட்டிக் கொண்டார்கள்.

வழக்கமாக பாஜகவின் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் இந்து சாமியார்கள் ‘சர்ச்சைக்குரிய’ கருத்துக்களை சொல்ல ஆரம்பித்திருந்தார்கள்.  அவற்றை ஆரம்பம் முதலே அது அவர்களுடைய சொந்தக் கருத்து என்று தப்பித்துக்கொள்ளும் வழிமுறையை பாஜக சொல்லக் கற்று வைத்திருந்தது. டெல்லியில் கர்வாப்ஸி(தாய் மதத்துக்கு திரும்புதல்) என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் இந்து மதத்துக்கு திருப்பிக் கொண்டிருந்தன இந்துத்துவ அமைப்புகள். அதன் அடுத்த கட்டமாக  2015 ஜனவரியில் டெல்லியில் கிறித்துவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடந்தது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஒபாமா, அமெரிக்காவுக்குச் சென்று தேவாலய தாக்குதல்கள் குறித்து கண்டித்தார்.

“மதமாற்றத்தை மத்திய அரசு முழுமையாக தடை செய்யும் வரை தாய் மதம் திரும்பும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்” என விசுவ இந்து பரிஷத் தலைவர் ப்ரவீன் தொகாடியா பேசினார்.  ஆனால் அரசு தரப்பில் இருந்து கண்டிப்புக்கு பதிலாக கண்டுகொள்ளாத தன்மை வெளிப்பட்டது. இந்த கண்டுகொள்ளாத தன்மையை இந்த அமைப்புகளுக்கு பாஜக அரசு தரும் க்ரீன் சிக்னலாக புரிந்து கொள்ள வேண்டும்.

நாடுமுழுவதும் அடுத்த மூன்று மாதங்கள் கர்வாப்ஸி நிகழ்வுகள் ஜரூராக நடந்தன. தமிழகத்திலும் ஆங்காங்க ஒரு சிலர் இந்துக்களாக மதம் மாறினர். இந்துக்களாக மதம் மாற இந்து அமைப்புகள் பணம் கொடுத்ததாக பத்திரிகைகள் துப்பு துலக்கிய நேரத்தில், இந்து அமைப்புகள் அடுத்த விவகாரத்துக்கு தாவின. இந்த முறை அவர்களின் கவனம் பகுத்தறிவாளர்கள் பக்கம் திரும்பியது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கோவிந்த் பன்சாரே, சமகாலச் சூழலில் இந்துத்துவ மோசடிகளை, மூடநம்பிக்கைகளை கேள்வி கேட்டவர். கோயில்களில் தலித்துகள், பெண்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைகளுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்தார்; இயக்கம் நடத்தினார்.  சிவாஜியை முன்னிறுத்தி சிவ சேனாவும் மற்ற இந்து அமைப்புகளும் மத அரசியலை முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில் பன்சாரே எழுதிய ‘சிவாஜி யார்?’ என்கிற புத்தகம் சிவாஜியின் உண்மையான வரலாற்றைச் சொன்னது. ஏற்கனவே தங்களின் ‘எதிரி’கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த அவரை, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒழிப்பது இந்துத்துவ அமைப்புகளுக்கு மிக எளிதான செயலாகத்தான் இருந்தது. அதிகாலையில் நடைபயிற்சிக்குச் சென்றிருந்த பன்சாரே நெற்றிப் பொட்டில் சுடப்பட்டார்.

நாடு முழுவதும் இந்துத்துவ அமைப்புகளின் எழுச்சி ஆரம்பித்த அதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் அந்த எழுச்சியானது எழுத்தாளர் பெருமாள் முருகனை முன்வைத்து நடந்தேறியது. பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் வெளியானபோது வராத விமர்சனம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது.  தங்கள் சாதி மக்களை தவறாக சித்தரிப்பதாக ஒரு குறிப்பிட்ட சாதி சங்கங்கள் போராட்டங்கள் என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்துக்களை நடத்தின. அதற்கு இந்துத்துவ அமைப்புகள் முழு ஆதரவும் கொடுத்தனர். இறுதியில் பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் இறந்துவிட்டார் என்று அவரையே எழுத வைத்தார்கள்.

இந்துத்துவம் முன்வைக்கும் ‘புனித’ பிம்பங்களுக்கு எதிராக எழுதுவதையோ, விமர்சிப்பதையோ வேரறுக்க வேண்டும் என்பதை முதல் பணியாக இந்துத்துவ அமைப்புகள் கொண்டன. அடுத்த ‘பலி’யை அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். எம். எம். கல்புர்கி, பசவண்ணரின் தத்துவ சாரத்தை மீண்டும் மக்கள் முன்வைத்த சிந்தனையாளர், பேராசிரியர். கர்நாடகத்தில் இந்து மதம் முன்வைத்த சாதி தீண்டாமையை ஒழிக்க புதிய மதத்தை தோற்றுவித்தவர் பசவண்ணர்.

காலப் போக்கில் பசவண்ணரை இந்துத்துவ சக்திகள் இந்து மத ஞானியாக மாற்றினர், அவருடைய கொள்கைகளை மழுங்கடித்தனர். இதனை மீண்டும் கர்நாடக மக்களுக்கு நினைவுபடுத்தும் பணியைச் செய்து வந்தார் கல்புர்கி. இந்து மதம் உருவ வழிபாட்டை முன்வைத்த போது, அதை மறுத்த பசவண்ணிரின் கருத்துக்களை கல்வி மேடைகளில் பேசினார். இதுதான் இந்துத்துவ அமைப்புகளுக்கு  பிரச்சினையாக இருந்தது. கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்ட அதே பாணியில் கல்புர்கியும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கல்புர்கியின் மரணம்தான் இந்தியாவின் மனசாட்சியை எழுப்பி விட்டது. சமூகத்தின் மனசாட்சிகளாக கருதப்படும் எழுத்தாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.  இந்தியாவின் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பி அளித்தார்கள். அரசியல் சார்பற்று தன்னெழுச்சியாக நடந்தது இந்தப் போராட்டம். தமிழ் எழுத்தாளர்களைத் தவிர, அனைத்து இந்திய மொழிகளில் எழுதும் விருது பெற்ற எழுத்தாளர்கள் தங்களுடைய விருதைத் திருப்பி அளிப்பதன் மூலம் இந்துத்துவ அமைப்புகளின் ‘தாலிபான்’ கலாச்சாரத்தைக் கண்டித்தார்கள்.

ஒருபுறம் எழுத்தாளர்களின் விருதைத் திருப்பி அளிக்கும் போராட்டம் வலுக்க ஆரம்பித்த அதே நேரத்தில், மாட்டிறைச்சி அரசியலை பாஜகவும் இந்துத்துவ அமைப்புகளும் கையில் எடுத்தன. ‘புனித பசு’ என்னும் முன்னிறுத்தி இவர்கள் செய்து வந்த ‘வெறுப்பு’ அரசியலின் விளைவாக உத்திர பிரதேசத்தில் முகமது அக்லக் என்னும் அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டது. ‘அடித்துக் கொல்லுதலை’ நியாயப்படுத்த புராணங்களை துணைக்கு வரவழைத்துக் கொண்டார்கள் இந்துத்துவ சக்திகள். முகமது அக்லக்கின் கொலையில் உள்ளூர் பாஜகவினரே குற்றவாளிகளாக இருந்தார்கள்.

‘300 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து ஆட்சி’ அமைந்ததில் 300 ஆண்டுகாலமாக செய்ய மறுக்கப்பட்ட அத்தனை விஷயங்களையும் பாஜகவின் ஐந்தாண்டுகால ஆட்சியில் செய்து விடலாம் என்கிற முனைப்பில் பாஜகவின் மறைமுக அஜெண்டாவாக இருக்கிறது என்பதும் அதற்கான முன்னோட்டமாக இந்த ஆண்டின் அடுத்தடுத்த நிகழ்வுகளை அரங்கேற்றின இந்து அமைப்புகள்.  முஸ்லிம், கிறித்துவர் உள்ளிட்ட சிறுபான்மையினரை தாய் மதம் திரும்ப அழைப்பது, மறுப்பவர்களை பாகிஸ்தானுக்குப் போ என்று சொல்வது, உணவை முன்வைத்து மக்களைப் பிரிப்பது, கல்வி அமைப்புகளில் இந்துத்துவ ஆட்களை நியமிப்பது, அறிவியலுக்குப் புறம்பான புராண கதைகளை உண்மையென நிறுவ முயல்வது, பகுத்தறிவாளர்களை அச்சுறுத்துவது என இந்த ஆண்டு இந்துத்துவத்தின் ‘எழுச்சி’ ஆண்டாகவே அமைந்துவிட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு என்கிற முத்திரையுடன் பாஜக அரசு மிக நுணுக்கமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த நுணுக்கங்கள் வெளிப்படையாக அரசிடமிருந்தே வெளிப்படலாம். ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை வைத்து  பிரித்தாளக் காத்திருக்கிற இந்துத்துவ சக்திகளிடமிருந்து மக்கள் எப்படி தங்களைக் காத்துக்கொள்ளப் போகிறார்கள்? புத்தாண்டை வரவேற்கும் வேளையில் இந்தக் கேள்விக்கான பதிலையும் தேடுவோம்…

தினச்செய்தி(1-1-2016) நாளிதழில் வந்த கட்டுரை.

இனி மக்கள் ராமர் நினைவாகத்தான் இருக்கப் போகிறார்கள்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கற்களை இறக்கிக் கொண்டிருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத்.  இதைப் பார்த்து ஆச்சயப்படவேண்டியதில்லை! அயோத்தியில் இடிக்கப்பட்ட மசூதியின் செங்கற்களைக் கொண்டுதான் இந்துத்துவ அமைப்புகளின் கட்டுமானங்கள் வளர்ந்தன. குறிப்பாக பாஜக வின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்ததே 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான்.

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தி முதல் ஆரியக் குடியேற்றம் நடந்த இடங்களில் ஒன்று. வரலாற்று ரீதியாக ஆரியக் குடிகளுக்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. டி. என். ஜா போன்ற வரலாற்றிஞர்கள் இந்த நகரம் குறித்து இப்படித்தான் குறிக்கிறார்கள். இராமாயணம் புராணமாக இருந்தாலும் அதில் உள்ள கதாபாத்திரங்கள் நிஜத்தில் வாழ்ந்தவர்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் மூக்கை நுழைப்பதில் யாருக்கும் உரிமை இல்லைதான். ஆனால், இதையே காரணம் காட்டி அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் அடைவதைக் கேள்வி கேட்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது.

1949-ஆம் ஆண்டு பாபர் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமர் சிலையை வைத்ததில் இருந்து இந்த அரசியல் ஆரம்பிக்கிறது. அந்த சிலையை அகற்ற முஸ்லிம் மக்கள் அஞ்சியது, அதைக் காரணம் காட்டி, சிலை உள்ள இடத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்றதும் அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் மத சுதந்திரம் என்று சட்டத்தை துணைக்கு அழைத்துக்கொண்டன இந்துத்துவ அமைப்புகள். 1986-ஆம் ஆண்டு வழிபடும் உரிமையை நீதிமன்றம் பெற்றுக்கொடுத்தது.

பெரும்பான்மை இந்து மக்கள் இந்த மூளைச்சலவைகளுக்கு  ஆளான இந்தக் காலக்கட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியும் வளரத் தொடங்கியது. இந்து-முஸ்லீம்கள் பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்த 1990களில் ராமர் கோயில் கட்டுவதில் பாஜகவின் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அசோக் சிங்கால் போன்றோர் தீவிரம் காட்டினர். அதற்கான திட்டங்களைத் திட்டினர். தங்களுடைய திட்டத்துக்கு நாடு முழுவதும் ரதயாத்திரை நடத்தினார் அத்வானி.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வந்த 1996-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரண்டாவது பாஜக திட்டமிட்டதுபோல வளர்ச்சி கண்டது.  ஆட்சியமைக்க முயன்று ஆட்சியும் அமைத்தது. 13 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.

பாபர் மசூதிக்குப் பிறகான 20 ஆண்டுகளில் பாஜக அமோக வளர்ச்சியைக் கண்டுள்ளது. இன்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலும் அமர்ந்திருக்கிறது. நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்பதை முக்கிய அம்சமாக முன்வைத்தார். அதைக் காப்பாற்றுவார் என்பதற்காகவே இந்துத்துவ அமைப்புகள் அவரைக் கொண்டாடின. நடுநிலையாளர்கள் பயந்தார்கள். அதுபோலவே தான் இப்போதை சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

பாஜக ஆட்சிக்கு வந்த முதலே மதவன்முறையை, சகிப்பின்மையைத் தூண்டும் விவகாரங்கள் நாடெங்கிலும் அதிகரித்தன. ஒன்று மாற்றி ஒன்றாக மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை, பீதியை மக்கள் மத்தியில் ஆட்சியாளர்களே ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலை அடுத்த அச்சுறுத்தலாக வந்து நிற்கிறது ராமர் கோயிலைக் கட்டும் விவகாரம். இனி மக்கள் மோடியின் வளர்ச்சி பற்றி ஆசைக்காட்டிய வார்த்தைகளை மறந்துவிடுவார்கள்; கருப்பு பணம் தங்களுடைய வங்கிக் கணக்குக்கு வந்து சேருமா என்கிற ஏக்கத்தை விட்டுவிடுவார்கள்; கல்வி அந்நியமயமாக்கப்படுவதை பற்றி கேள்விக் கேட்கமாட்டார்கள். இனி எப்போதும் ராமர் நினைவுதான், அவர்களை ஆக்கிரமிக்கப் போகிறது!

தினச்செய்தி நாளிதழில் வெளியானது