மியாட் மருத்துவமனை மீது மட்டும் ஏன் இவ்வளவு கரிசனம்?

பிரபல நாளிதழ்கள், ஊடகங்கள் (நானும் அவர்கள் பாணியிலே சொல்கிறேன்) தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் 18 பேர் இறந்ததாக செய்தி போட்டார்கள்.  இன்னும் சிலர் அதுபற்றிய செய்தியைக்கூட பிரசுரிக்கவில்லை. எல்லாம் விளம்பர நோக்கம்தான் என்று மேம்போக்காக புரிந்துகொண்டாலும் ஊடகங்கள் தனியார் மயத்துக்கு ஆதரவாகத்தான் செயல்படுகின்றன; பிரச்சாரம் செய்கின்றன என்கிற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் தனியார்மயம், தாராளமயம் தனிநபர்களை மிகப் பெரும் சொத்துக்களுக்கு அதிபதிகளாக மாற்றியதுபோல, ஊடகங்களின் நிறுவனர்களையும் மிகப் பெரும் பணக்காரர்களாக்கியுள்ளது. இதை கைவிட யாரும் விரும்பமாட்டார்கள். ஜனநாயகத்தின் மற்ற மூன்று தூண்கள் சாய்ந்ததுபோலவே, நான்காவது தூணும் விளம்பரங்களுக்காக ஏங்கி சாய்ந்து நீண்ட நெடுங்காலம் ஆகிறது.  எனவே தனியார் மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் செய்யும் தகிடு தத்தங்களை இவர்கள் ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டார்கள்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் மேல் எழுந்த ‘அக்கறை’யால் அனைத்து ஊடகங்களும் மாய்ந்து மாய்ந்து எழுதின.  அரசுத் துறையில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் இருக்கும் அக்கறையால் அல்ல; வெகுஜென மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்திய அந்தச் சம்பவங்களைக் காசாக்கிப் பார்க்கும் ஆர்வம் ஊடகங்களுக்கு இருந்தது.

அப்படி உண்மையிலே மக்கள் மீதான கரிசனம் இருக்குமானால் ஏன் ஊடகங்கள் 18 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மியாட் மருத்துவமனை மீது எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை? இந்த 18 பேரின் உயிரிழப்பில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், பாமகவின் ராமதாஸ் தவிர, மியாட் மருத்துவமனை மீது நடவடிக்கை வேண்டும் என எந்த அரசியல்வாதியும் கேட்கவில்லை. ஆளும் அரசு ஓடிவந்து மியாட் மருத்துவமனைக்கு முட்டுக் கொடுக்கிறது.

தனியார்மயத்துக்கும் தாராளமயத்தும் ஆதரவு கரம் நீட்டும் மேல்தட்டு வர்க்கத்தினரே மருத்துவமனையில் படுகொலைகளை செய்யப்பட்டிருக்கிறார்கள்.  அவர்களுக்காக குரல் தர, அவர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள். அப்படி குரல் கொடுத்தால் தன்னையே குற்றவாளி கூண்டில் நிறுத்திக் கொள்ள நேரிடலாம்.

சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: களமிறங்கும் கட்சிகள்

socail media

தமிழக தேர்தல் களத்திலிருந்து காதைப் பிளக்கும் ஒலிப்பெருக்கிகள், வழியை மறிக்கும் ஆளுயற கட் அவுட்களுக்கு இனி ஓய்வெடுக்கும் காலம் வந்துவிட்டதுபோல. இப்போது சமூக வலைத்தளங்கள்தான் தேர்தலுக்காக பரபரத்துக்கொண்டிருக்கின்றன. 35 சதவித இளம் வாக்காளர்களை முன்வைத்து கட்சிகள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கென்றே தனிப் பிரிவுகளை ஏற்படுத்தி செயல்பட்டுவருகின்றன.

தமிழக தேர்தல் களத்தில் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து வேலையை ஆரம்பித்த பாட்டாளி மக்கள் கட்சி, சமூக வலைத்தளத்திலும் தன்னுடைய பிரச்சாரத்தை ஆறு மாதத்துக்கு முன்பே முடுக்கிவிட்டது. இதற்கென்றே பாமகவில் தகவல் தொழிற்நுட்பம் படித்தவர்களைக் கொண்டு தமிழ் சமூக ஊடகத்துறை என்ற பெயரில் ஒரு பிரிவு செயல்படுகிறது.

“சமூக வலைத்தளங்களில் பாமகவின் முக்கிய உத்தி, அன்புமணியின் பெயரில் வெளியிடப்பட்ட ஆப் என்று சொல்லலாம். இந்த ஆப்பை பாமகவினர் அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த ஆப் மூலம் ‘விழித்திரு’ என்ற பெயரில் தினமும் அன்புமணி ஒரு ஊக்கப்படுத்தும் வாக்கியத்தை அனுப்புவார். சில சமயம் விடியோக்களும் ஆப் வழியாக அனுப்பப்படும். இந்த விஷயங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்வதற்கு ஆப்’பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆப் வைத்திருப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் இவற்றைப் பகிர்ந்துகொள்வார்கள்” என்கிறார் பாமகவின் சமூக வலைத்தள நிர்வாகிகள் குழுவில் உள்ள ஜெயக்குமார்.

பாமக அறிவித்துள்ள வரைவு தேர்தல் அறிக்கையை சிறு சிறு பகுதிகளாக்கி அதை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பகிர்வதை தற்சமயம் செய்துவருவதாகச் சொல்லும் இவர், தமிழக கட்சிகளில் பாமக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் முன்னோடியாகச் செயல்படுவதாகச் சொல்கிறார்.

“மீம்ஸ் வடிவமைத்த பிறகு மின்னஞ்சல் குழுக்கள், வாட்ஸ் அப் குழுக்கள் வழியாக கட்சியினருக்கு அனுப்புவோம். அவர்கள் அதை சமூக வலைத்தளங்களில் பகிரச் செய்வார்கள்” என்கிறார். இந்தக் குழுவில் பெண்களும் இருப்பதாகச் சொல்கிறார் ஜெயக்குமார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ பயணத்தை சமூக வலைத்தளங்களில் பரப்ப ஐந்து பேர் கொண்ட குழு செயல்படுகிறது. இணையதளத்தை நிர்வகிப்பது, ஸ்டாலினின் பயணங்கள் பற்றிய பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்வது இந்தக் குழுவின் முக்கியமான வேலை. மற்ற கட்சியினரை விமர்சிக்கும் மீம்ஸ் வடிவமைப்பது திமுகவினரும் திமுக அனுதாபிகளுமே என்கிறார் இந்தக் குழுவில் உள்ள ஒருவர்.

“ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தை கேலி செய்து நிறைய மீம்ஸ் வரும். அதற்கு கவுண்ட்டர் கொடுப்பதுபோல நமக்கு நாமே பயணத்தைப் பற்றிய பாஸிட்டிவ் மீம்ஸை வெளியிடுவார்கள். எதிர் தரப்பை கேலி செய்யும் மீம்ஸும் போடுவார்கள். பெரும்பாலும் திமுகவினரே இதைச் செய்கிறார்கள்” என்கிறார் திமுக சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கும் பிரிவைச் சேர்ந்த ஒருவர்.

எதிர்க்கட்சிகள் சமூக வலைத்தள பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கும் நிலையில் கடந்த விஜயதசமி அன்று தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது அதிமுக. அஸ்பையர் சாமிநாதன் தலைமையில் தகவல் தொழிற்நுட்பப் பிரிவு இந்தப் பணிக்கென்றே செயல்படுகிறது.

“இளைஞர் இன்று கண்விழிப்பதே ஃபேஸ் புக்கிலும் ட்விட்டரிலும்தான். அவர்கள் தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. அதனால்தான் அம்மாவின் நல்லத் திட்டங்கள் பற்றி எடுத்துச் சொல்ல விஜயதசமியில் ‘ஒளிரும் நிகழ்காலம் மிளிரும் வருங்காலம்’ என்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தோம். பத்து நாட்களுக்குப் பிறகு, ‘தழைக்கட்டும் தமிழர்கள் செழிக்கட்டும் தமிழகம்’ என்ற கோஷத்தை முன்னெடுத்தோம். அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை
பெசண்ட் நகர் கடற்கரையில் புதிய பிரச்சாரப் பயணம் ஒன்றை தொடங்கவிருக்கிறோம்” என்கிற சாமிநாதன், விஜயதசமியில் வெளியிடப்பட்ட அதிமுகவின் சாதனைகளைச் சொல்லும் விடியோவை இரண்டு கோடி பார்வைகளுக்கும் மேல் சென்றிருப்பதாகச் சொல்கிறார்.

சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதற்காக தனிக் குழு என்று சொல்லும் இந்தக் கட்சிகளைத் தவிர, காங்கிரஸ், பாஜக, மக்கள் கூட்டணி போன்ற கட்சிகள் சமூக ஊடகப் பிரச்சாரம் குறித்து அறிவிக்கவில்லை. ஆனால், அந்தந்த கட்சி சார்ந்தவர்கள் அவ்வவ்போது நடக்கும் நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

 

பாமக சாதி அரசியல் நடத்தவில்லையா?!

என்னுடைய முந்தைய பதிவில் பாமக குறித்து எழுதியிருந்தேன். அதற்கு மாதவன் என்பவர் நேர்மறையான பின்னூட்டங்களை இட்டிருந்தார். நேர்மறையான என்று ஏன் சொல்கிறேன் என்றால், சாதி பற்றி எழுதினாலே மிக மோசமான, கண்மூடித்தனமான வசவுகளை பின்னூட்டமாகப் பெற வேண்டியிருக்கும். மாதவன், என் பதிவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மட்டும் பின்னூட்டமிட்டிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் இட்ட பின்னூட்டங்களின் தொகுப்பு இதோ… என்னுடைய விளக்கம், கேள்வியை பின்னால் தருகிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சி ஜாதிக்கட்சி என்று மக்களோ, கட்சியின் உறுப்பினர்களோ, தலைவர்களோ யாரும் அறிவிக்கவில்லை. ஆனால் ஊடகங்களான நீங்கள் தான் பா.ம.க வின் நிலைப்பாட்டை மக்களிடம் மறைத்து அதனை வேறு பிம்பமாக மாற்றி மக்களிடம் காட்டுகிறீர்கள். ஊடகங்களின் உண்மையை தோலுரிக்கும் நல்ல நேர்மையான கட்டுரை. அதே சமயம் நீங்கள் பாமக-வை பற்றி நேர்மையாக எழுதவில்லையோ என தோன்றுகிறது.

ஊழலை மறைக்கும் அதே ஊடகங்கள் தான் பாமக-வை தலித் எதிரியாக சித்தரித்தது என்பது எனது கண்ணோட்டம். இன்றைய நிலை அல்லது தேவை என்பது அதிமுக ஆட்சிக்கு வந்தபின் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லா துறைகளிலும் ஊழல் மிக பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. இதை இரண்டு பேர் மட்டும் தான் தட்டி கேட்க முடியும். ஒன்று ஊடகங்கள், மற்றொன்று எதிர்கட்சிகள். இந்த நிலையில் பார்க்கும் போது இதுவரை எந்த ஊடகங்களும் (ஜூனியர் விகடன் சற்று விழித்துள்ளது, தினமலம் தேவைற்கேற்ப) பெரிய அளவில் மக்களிடம் ஊழல் பிரச்னையை கொண்டு செல்லவில்லை. எதிர்கட்சிகள் என்று பார்த்தால் இதுவரை துணிச்சலாக தொடர்ந்து குரல் கொடுப்பது பாமக மட்டுமே. அவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் எனக்கு ஒத்த கருத்து இல்லையென்றாலும், அவர்களின் ஊழலுக்கு எதிரான நிலைபாடு பாராட்டுக்குரியதே. “ஜெயலலிதா மீது பாமக பட்டியலிடும் பரபரப்புப் புகார்” என்ற தலைப்பில் சவுக்கு எழுதியுள்ள கட்டுரையை படித்தால் உண்மை உங்களுக்கு புரியும்.

 

கடந்த 2012ல் தர்மபுரி நத்தம் காலனி இளவரசன் – திவ்யா காதல் காரணமாக எரித்து நாசமாக்கப்பட்டது. அதை எரித்தது வன்னிய சாதியினர் என்பதும், பின்னணியாக இருந்தது பாமக என்பது தர்மபுரி மாவட்ட சிறார்களுக்குக் கூடத் தெரியும். நானும்கூட தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவள் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (நான் என்ன சாதியாக இருக்கக்கூடும் என ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்).

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, இளவரசனின் அகால மரணம்(கொலை) வரை பாமக தலைவர்கள் விட்ட அறிக்கைகள், அவர்கள் பின்னணியில் இயக்கியது என எல்லாம் காலத்தால் அழிக்க முடியாதவை. பாமக ஆதரவு வலைத் தளங்களிலேயே இவர்களின் அறிக்கைகள் அப்படியேதான் உள்ளன.  வன்னியர் என்கிற சொல்லைப் பயன்படுத்தாமல் இன்றுவரை இவர்கள் அரசியல் நடத்த முடியாது என்பது வெளிப்படையான ஒன்று.

அதிமுக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டுவந்தது உண்மையில் பாராட்டுக்குரிய ஒன்றுதான். அதற்காக வெளிப்படையாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது வெறுப்பை உமிழும் ஒரு கட்சியை அரசியல் அதிகாரத்தில் அமர்த்த முன்மொழிவது ஆபத்தில் கொண்டுவிடும் என்பதை மாதவன் போன்ற பாமக அனுதாபிகள் உணர வேண்டும். ஊழல் பேயை ஓட்ட, சாதிப் பேயையா அழைப்பது?

பாமகவுக்கு அரசியல் எதிரி வெளியில் இல்லை, அவர்கள் கட்சிக்குள்ளாக ஒரு எதிரி இருக்கிறது. சாதி அரசியல் என்பதே அந்த எதிரி!

ஜூனியர் விகடனில் வந்த பாமக-ஆளுநர் சந்திப்பு பின்னணி பற்றி சொல்லி, ஜூவி பாமகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக சொல்லியிருக்கிறார் மாதவன். ஜூவி அலசியிருக்க வேண்டியது அதிமுகவின் ஊழல்களைத் தானே தவிர, பாமக-ஆளுநர் சந்திப்பு பின்னணி பற்றி அல்ல. கைமேல் இவ்வளவு விடயங்கள் கிடைத்தால் தமிழகத்தை பரபரப்பாக்கும் வெளிவராத பல தகவல்கள் ஜூவி போன்ற இதழ்கள் தந்திருக்க வேண்டும். இரண்டாம் தரமான கிசுகிசுக்களை கொடுத்து உண்மையில் மக்களை வேறு திசையில் திருப்பும் வேலையைத்தான் இவை செய்கின்றன.

ஊழல் அரசுடன் ஊடகங்களின் கூட்டு; 2015திலும் ஏமாறுவோம் மக்களே!

ஜெயலலிதா அரசின் ஊழல் புகார்களை திரட்டி(இவர்களாக கண்டுபிடித்து அல்ல) அவ்வவ்போது அறிக்கையாக வெளியிட்டு ‘ஊழலுக்கு எதிரான’ இமேஜை கட்டியமைத்துக் கொண்டிருக்கிறது பாமக. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள் பாமகவினர் தமிழக ஆளுநரை சந்தித்து ஊழல் பட்டியலை அளிப்பது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது. இடைத்தேர்தலில் நிற்காவிட்டாலும் ஆளுநரிடம் அளித்த பட்டியலை தங்கள் கூட்டணியில் உள்ள (இன்னமும் கூட்டணியில்தான் இருக்கிறார்களாம்) பாஜகவினருக்கு கொடுத்திருக்கலாம். அல்லது இடைத்தேர்தல் நேரத்தின்போதாவது அறிக்கையாக வெளியிட்டிருக்கலாம்.

மக்களவையில் அன்புமணி வெற்றி பாமகவுக்கு புது தெம்பைக் கொடுத்திருக்கிறது. அதற்குப் பிறகான பாமகவின் நகர்வுகள் ஒவ்வொன்றும் திட்டமிடப்படுகின்றன. ஆம் ஆத்மியின் டெல்லி வெற்றி மேலும் அவர்களுக்கு உற்சாகமூட்டியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டுகள் உள்ள நிலையில்,  சேலம் மாநாட்டில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கும் அறிவிப்புக்குக் காரணம் டெல்லியின் உற்சாகமே.  அறிவித்த கையோடு ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருக்கிறது பாமக.

ஜெயலலிதா அரசின் ஊழல் வெளிவந்தது பாமகவால் அல்ல, ஆனால் அதை தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொள்கிறது பாமக. ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகளாக பாமக வேட்பாளர் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு வாய்ப்பையும் மக்கள் பல முறை அளித்துவிட்டார்கள். இவர்களால் என்ன மாற்றத்தை மக்கள் அடைந்தார்கள் என்பதற்கும் வழமையாக மற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என்ன செய்தார்களோ அதைத்தான் செய்தார்கள் என்பதே பதில்.

‘ஊழலுக்கு எதிரானவர்கள்’, திராவிட கட்சிகளுக்கு மாற்று என்பதெல்லாம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மாயையான வார்த்தைகள்தான். பாமகவின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் மறந்துவிடமாட்டார்கள். முக்கியமாக ஒரு சாதிக் கட்சியாக உள்ள பாமகவுக்கு எப்படி தமிழக மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை அரசியல் அதிகாரத்துக்கு திட்டமிடும் கட்சியின் தலைமை சிந்திப்பதாகத் தெரியவில்லை. தலித்துகள் மீது நேரடியான வன்மத்துடன் அறிக்கை வெளியிட்ட பாமக, இன்று வாக்குக்கு கையேந்தி ‘ஊழலுக்கு எதிரானவன்’ என்ற நல்லவனை முன்னிறுத்துகிறது. ஊழல் பெரியதா, உயிர் பெரியதா என்கிற நிலையில் காலம்காலமாக ஒடுக்கப்பட்ட சாமானியனுக்கு உயிரோடு இருப்பதே பெரியது!

மூன்றே ஆண்டுகளில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கிறது, நம்மால் முடியவில்லையே என்கிற ஆதங்கம் மக்களை சாதிய ரீதியாக துண்டாட நினைக்கும் ஒரு சாதிக் கட்சிக்கு வரக்கூடாது. இதை ஆதங்கம் என்று சொல்வதைவிட அரசியல் அதிகாரத்திற்கான ஆசை என்று கூறலாம். இந்த ஆசை காரணமாக பாமக தன் வலதுசாரி ஊடகங்களின் ஆதரவை இழந்துவருவதை இனி உணரக்கூடும். வலதுசாரி ஊடகங்களின் ஏகபோக முதன்மையாளரான ஜெயலலிதாவுக்கு எதிராக எந்த செய்தியும் வெளியிடப்படக்கூடாது என்று தங்களுக்குள் எழுதப்படாத விதியுடன் இவை செயல்படுகின்றன. சாலை சரியில்லை என்பது தொடர்பாக ஏதோ வழமையான மனுவை பாமக அளித்தது போன்றே தமிழக அரசுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணை மனு குறித்த செய்தியும் இரண்டு வரிகளில் வெளியாகியுள்ளது.  அதிலும் தினமணி தமிழக அரசின் ஊழல்கள் என்பதற்கு பதிலாக, ‘தமிழக அரசு மீதான  புகார்களை’ என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறது. தினத்தந்தி மட்டும் பாமகவின் முழு அறிக்கையில், எடிட் செய்யப்பட்ட பகுதியை வெளியிட்டிருக்கிறது. இணைய ஊடகங்களில்கூட முழு அறிக்கையும் வெளியாகவில்லை. ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த இந்திய கருப்பு முதலாளிகளின் பட்டியலை வெளியிட்ட எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்துதான் தமிழக அரசின் ஊழல் தொடர்பான செய்திகளைக்கூட வெளியிடக் கூடாது என்கிற கொள்கையை வைத்திருக்கும் தினமணியும் வெளிவருகிறது!

இத்தனை காலமும்(பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல்) பாமகவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள், முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின், மிகுந்த கவனத்துடன் பாமகவை தவிர்க்கின்றன, அல்லது அறிக்கைகளை மட்டுப்படுத்துகின்றன. பாமகவும் ஊழலுக்கு எதிரானது அல்ல, வலதுசாரி தமிழ் ஊடகங்களும் ஊழலுக்கு எதிரானவை அல்ல. உண்மையில் தமிழக மக்கள் மாறி மாறி ஊழல் அரசுகளால் ஆளப்பட்ட இந்த ஊடகங்கள்தான் காரணம். இவர்கள் கட்டியெழுப்பும் பிம்பங்களே மாறிமாறி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் முதலில் புறக்கணிக்க வேண்டியது இந்த ஊடகங்களைத்தான். வாக்குக்கு கையூட்டு வாங்குவதை நியாயப்படுத்துவதும், மக்களை ஊழலுக்கு பழக்குவதும் இந்த ஊடகங்கள்தாம்.  ஆகவே நாம் 2015திலும் ஏமாறுவோம் என்பதில் மாற்று இருக்க முடியாது!

(நண்பர் ஒருவர் தினமலரை ஏன் குறிப்பிடவில்லை என இந்தப் பதிவில் கேட்டிருந்தார்.  இரண்டாம் தரமான மொழி நடையில் எழுதப்படும் பிரபல தினசரிகளை நான் படிப்பதில்லை. முக்கியமாக பெண்கள் தொடர்பான செய்திகளை இவர்கள் எழுதும்விதம் அருவருக்கத்தக்கது. அதனால் மலர், தந்திகளை நான் படிப்பதில்லை. ஒரு வகையில் தினமணி எனக்கு தமிழைக் கற்றுக் கொடுத்த இதழ், என்றாலும் அதன் வலதுசாரி தனத்தை என்னால் இனம்காண முடியும். தினமணியுடன் தி இந்து தமிழை சில ஊடகவியலாளர்கள்கூட ஒப்பிட்டு சொல்கிறார்கள். நிச்சயம், தினமணியின் தமிழ் நடையுடன் தி இந்துவை ஒப்பிட முடியாது. தி இந்து, ஆ.வி. பாணி தமிழின் தினசரி வடிவம் என்பதே சரி)