குப்பை மேட்டில் ஓர் வேடந்தாங்கல்!

சென்னை, வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் இருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று சொல்லப்படும் பிரமாண்டமான குப்பைமேடு!  சென்னையின் குப்பைகளைக் கிண்டிப் பசியாற பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கிறது பெலிக்கன் பறவை. விரையும் வாகன இரைச்சல்களுக்கு இடையே இன்னும் பல நூறு வெளிநாட்டுப் பறவைகள் திடுக்கிட்டுத் தவிக்கின்றன. காகத்தைத் தவிர, வேறு பறவையைப் பார்க்க முடியாதசென்னை நகரத்துக்குள் விதவிதமான வண்ணத்திலும் வடிவத்திலும் வித்தியாசமான பறவைகள் எப்படி வந்தன? குப்பைமேட்டில் இவற்றுக்கு என்ன வேலை?
”வேடந்தாங்கலைவிட இரண்டு மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது பள்ளிக்கரணை!” என்கிறார் கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பல்லுயிர் பெருக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசன்.
”கோணமூக்கு உள்ளான், ஊசிவால் வாத்து, சாம்பல் தலை ஆள்காட்டி, மஞ்சள் வாலாட்டி, சோழக் குருவி, நீர் தாழைக் கோழி, நாமக் கோழி, தாமிர இலைக் கோழி, அரிவாள் மூக்கன், செந்நீலக் கொக்கு, கானான் கோழி, பவளக் கொத்தி என உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் வந்து போகும் இடம் இது. இங்கே வளர்ந்து நிற்கிற கோரைப் புல், இயற்கையான பயோஃபில்டர். வேண்டாததை உறிஞ்சிவிட்டு, நல்லதை அப்படியே அரணாகப் பாதுகாக்கும். பறவைகள் இதில்தான் கூடு கட்டி வாழும். ஆனால், குப்பைகளைக் கொட்டிக் கொட்டி நச்சு நிலமாக்கிவிட்டார்கள். ஆமை, மீன் போன்ற உயிரினங்கள் மாசுபட்ட நீரிலும் வாழப் பழகிவிட்டன. ஆனால், அதைப் பிடித்து உண்கிற ஏழை மனிதனுக்குத்தான் புதுப்புது வியாதிகள் வருகின்றன” என்கிறார் சூழலியல் ஆர்வலரான திருநாரணன்.
”1970-களின் தொடக்கத்தில், வேளச்சேரியில் இருக்கும் என் தாத்தா வீட்டுக்கு வருவேன். பேருந்தில் வரும்போது சைதாப்பேட்டை முடிகிற இடம்தான் கடைசி நிறுத்தம். அங்கே தொடங்கி நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் வரைக்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் தண்ணீர்தான் இருக்கும். ஏரிக் கரையில் நடந்தபடியே நீரில் மூழ்கி இரை தேடிக்கொண்டு இருக்கும் விதவிதமான பறவைகளை ரசித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
தென்னிந்தியாவிலேயே பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ரொம்பவும் ஸ்பெஷலான பகுதி. சதுப்பு நிலமென்றால் ஆறு அடிக்கும் குறைவாகத் தண்ணீர் இருக்கும், உயிர் வளம் நிறைந்த குழைவான மண்ணுடன் இருக்கும். மற்ற இடங்களில் உள்ள சதுப்பு நிலத்தில் உப்புத்தன்மை இருக்கும். ஆனால், பள்ளிக்கரணை ஒரு பக்கம் நல்ல தண்ணீர் உள்ள சதுப்பு நிலமாகவும் இன்னொரு பக்கம் உப்புத்தன்மை கலந்த சதுப்பு நிலமுமாகவும் இருக்கிறது. 114 வகையான பறவைகள், 46 வகையான மீன்கள், 29 வகையான புல் வகைகள், ஆமை, தவளை வகைகள், பாம்புகள், பட்டாம்பூச்சிகள் என வளமான பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதி. 2002-ல் இருந்து இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்ற வேண்டுமெனப் பல போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக இப்போதுதான் சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்றியிருக்கிறார்கள்” என்றவர், இவ்வளவு வளமிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாழான கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.


”சென்னை நகரம் விரிவடைந்துகொண்டே போனபோது, வட சென்னைப் பகுதி கிட்டத்தட்ட ஆந்திர எல்லையைத் தொட்டுவிட, தென் சென்னையின் மீது அனைவரின் கவனமும் திரும்பியது. வெள்ளைக்காரன் காலத்திலேயே ‘புறம்போக்கு மேய்ச்சல் நிலம்’ என அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத் தைச் சீரழிக்கும் பணி அப்போது மும்முரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. ‘புதுசா காலனி போடணுமா… பட்டா போடணுமா… பள்ளிக் கரணையில் போடலாம்’ என்கிற அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிவேகமாக நடந்தன. இது எல்லாமே அரசாங்கத்தின் ஆதரவோடுதான் நடந்தது. உண்மையில் பள்ளிக்கரணையைச் சீரழித்ததே அரசாங்கம்தான்.
பெருங்குடியில் குப்பை கொட்டுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியார் கல்லூரிகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டவும் கொடுத்துவிட்டு, வளமான தண்ணீர் உள்ள பகுதியில் எந்தவித ஒழுங்கும் இல்லாமல் இஷ்டப்படி குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறது சென்னை மாநகராட்சி. ஏறக்குறைய 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த சதுப்பு நிலத்தில், இப்போது உயிர்ப்போடு இருப்பது 420 ஹெக்டேர் மட்டும்தான். ஆக்கிரமிப்புகள் போக மீதியிருக்கிற 132 ஹெக்டேர் அளவுக்கு குப்பைகளைக் கொட்டிப் பாழடித்து வைத்திருக்கிறார்கள்.

சென்ற மாதம் ஏதோ ரசாயனத்தைக் கொட்டியதால் இந்தப் பகுதி தண்ணீர் முழுக்க சிவப்பு நிறமாக மாறிவிட்டது; கூடவே சகிக்க முடியாத நாற்றம் வேறு. மக்கும் குப்பை, மக்காத குப்பை என எல்லாமே ஒன்றாகக் கொட்டி அமுக்கிவைத்திருக்கிறார்கள். குப்பை பொறுக்குகிறவர்கள் டயர் போன்ற பொருட்களில் இருக்கும் இரும்பைப் பிரித்தெடுக்க நெருப்பு வைத்துக் கொளுத்திவிடுகிறார்கள். அந்த நெருப்பு எல்லா இடங்களுக்கும் பரவி, ஏரியாவே எப்போதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. ஒரு லட்சம் பேர் ஒரே இடத்தில் அமர்ந்து புகை விடுவதற்குச் சமமான அளவு, புற்றுநோய் உண்டாக்கும் டயாக்சின் உள்பட நச்சு வாயுக்கள், இந்தக் குப்பைகள் எரிக்கப்படுவதால் வெளியாகிறது. அரசாங்கத்திடம் இந்தப் பிரச்னையை எத்தனையோ முறை எடுத்துச் சொல்லிவிட்டோம். இன்னும் நடவடிக்கைதான் இல்லை!” என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ.
தற்போது பள்ளிக்கரணையில் குப்பைமேட்டில் குப்பை பொறுக்குகிறவர்களுக்குத் தடை விதித்திருக்கிறது ஒக்கியம் நகராட்சி. ஆனாலும் நூறு சிறுவர்களுக்கு மேல் குப்பை பொறுக்க தினமும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறார் குப்பை மேட்டில் காவல் காக்கும் அரசு ஊழியர் ஒருவர். அந்தப் பகுதியைக் கடக்கும்போதே நுனி நாசிவரை நாற்றம் ஏறுகிறபோது, அதிலேயே உழலும் குப்பை பொறுக்குகிற சிறுவர்களின் உடல் நலனுக்கு யார் பொறுப்பாவார்கள் என்று தெரியவில்லை.
குண்டூசி குத்துமளவுக்குக்கூட இடம் தெரியாமல் மொய்த்துக்கொண்டு இருக்கும் ஈக்களோடு நாள் முழுக்கக் காவலில் இருக்கும் அரசாங்க ஊழியர்களின் நிலைமையும் பரிதாபம்தான்.
”மாநகராட்சி இப்போது கொடுங்கையூரிலும் பெருங்குடியிலும் மட்டுமே குப்பை கொட்டுகிறது. இந்தக் குப்பைகளிலிருந்து உரம், மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. கூடிய விரைவில் பெருங்குடியில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது” என்கிறார் சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன்.

சென்னையின் நீர்வளம் குறையவோ கூடவோ காரணம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக் கப்படுவதில்தான் இருக்கிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள். இன்னொரு அதிர்ச்சியானவிஷயமும் தெரிய வந்தது. 2005-ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்குக் காரணம்பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம் பாழடிக்கப்பட்டதுதான்!

”சென்னையின் ஒட்டுமொத்த மழைநீருக்கும் வடிகாலாக இருப்பது பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம்தான். ஒரு பக்கம் நீரைத் தேக்கிவைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் சிறிது சிறிதாக மீதியிருக்கிற நீர் ஒக்கியம் மடுவுக்குச் செல்கிறது. அந்த மடுவிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கடலுக்குள் செல்கிறது. அந்த வழியாகத் தான் கடல் தண்ணீரும் உள்ளே வரும். ஆனால், ஒக்கியம் மடுவு இருந்த இடத்தை முற்றிலுமாக அடைத்துவிட்டது ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. தண்ணீரைத் தேக்கிவைக்கும் இடத்திலும் குப்பைகளைக் கொட்டி சின்னச் சின்ன மலைகளை உருவாக்கிவிட்டார்கள். பிறகு எப்படி வெள்ளம் வடியும்? வெள்ளப்பெருக்கு வராமல் இருக்கும்?
ஒட்டுமொத்தமாக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கத்தின் மீது மட்டுமே சொல்லி விட முடியாது. நம்முடைய வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும் என்று அத்தனை குப்பைகளையும் வீதியில் சேர்க்கிற நாமும்தான் குற்றவாளிகள். எத்தனை பேர் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று வீட்டிலேயே தரம் பிரித்து அனுப்புகிறோம்?! நாமே தவறுக்குப் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு, எல்லாம் பாழான பிறகு உச்சுக்கொட்டுவதில் என்ன பயன்?” – நாளைய சந்ததி கேட்கப்போகும் கேள்வியை இப்போதே கேட்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ!

நன்றி : காட்டுயிர் புகைப்படக்கலைஞர் ஸ்ரீராம்

மனிதனோடு தோன்றிய உயிரினம்…

அழிந்துவரும் இந்திய வனஉயரினங்களின் பட்டியலில் வரையாடும் ஒன்று. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகள், இமயமலை தொடர்களில் மட்டுமே வரையாடுகள் வாழுகின்றன. இந்த இரண்டு பகுதிகள்தான் வரையாடுகள் வாழத் தேவையான சூழல் உள்ளதாக காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். வரையாடுகள் குறித்து ஆராய்ச்சிகள்கூட குறைவாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில பத்தாண்டுகளில் இந்த உயிரினத்தை வனவிலங்கு காட்சியகங்களில்கூட பார்க்க முடியாமல் போகலாம்.

சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் தன்னுடைய எழுத்தில் வரையாடுகள் குறித்து பதிவு செய்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த பிந்து ராகவன் என்பவர் வரையாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் எழுதியதன் அடிப்படையில், பிந்து ராகவனை சந்தித்தேன். கால்நடை மருத்துவரான பிந்து ராகவன். கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்சமயம் கணவருடன் சென்னையில் வசிக்கிறார். கணவரும் கால்நடை மருத்துவர், பாம்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறார். இருவரும் டேராடூனில் இருக்கும் காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்தவர்கள். படிக்கிற காலத்தில் லடாக் வரையாடு குறித்து சிறப்பு ஆராய்ச்சி செய்தவர் பிந்து. பிறகு, அதையே தொடர்ந்து லடாக் வரையாடுகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் என்கிற தலைப்பில் ஆராய்ந்து வருகிறார்.
“மனிதன் தோன்றிய காலத்தில் வரையாடுகளும் தோன்றிவிட்டன என்பதுதான் இவற்றை ஆராய காரணம். உயரமான பனிமலைச் சிகரங்களைக் கொண்டது லடாக். வரையாடுகள் இத்தகைய சூழலில்தான் வாழும். பாறைகளுக்கு நடுவே முளைத்திருக்கும் தாவரங்களை உண்டு வாழக்கூடியவை இவை. ஆடுகளைப் போல இருக்கும் இதன் உருவமும் செங்குத்தான பாறைகளில் ஏறுவதற்கு ஏற்ப உடல்வாகும் கொண்டது. பாறை இடுக்குகளில் வசிக்கும் இவை, பனிக்காலங்களில் மலை அடிவாரங்களுக்கு வரும். மலை அடிவாரங்களில் வசிக்கும் மக்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளுடன் இவை சேர்ந்து கொள்ளும். இப்படி சேரும்போது வீட்டு விலங்குகளுக்கு வரக்கூடிய தொற்றுநோய்கள், வரையாடுகளுக்கும் பரவும். தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் வேட்டையாடப்பட்டு வேகமாக அழிந்துவரும் வரையாடுகள், தொற்றுநோய்க்கு ஆளாகியும் அழிந்துவருகின்றன. இதுகுறித்த ஆராய்ச்சியில் இருக்கிறேன்” என்கிற பிந்து, நூறு வருடங்களுக்கு முன் வரையாடுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்ததாகவும் தற்போது 2 ஆயிரம் வரையாடுகள் தான் இருக்கின்றன என்கிறார். இவை மலை அடிவாரத்திற்கு வரும் பனிக்காலங்கள்தான் ஆராய்ச்சி செய்வதற்கு உகந்த காலம் என்கிறார் இவர்.
“வரையாடுகள் வேகமாக ஓடக்கூடியவை. இவற்றை பின்தொடர்ந்து போகும்போது சில சமயம், இருட்டிவிடும். தங்கியிருக்கிற இடத்துக்குச் செல்ல முடியாது. பக்கத்தில் மக்கள் வசிக்கிற இடங்களைத் தேடிப் போவேன். விருந்தாளி போல அந்த மக்கள் என்னை உபசரிப்பார்கள். பொதுவாக இந்த பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் என்று சொல்வார்கள். ஆனால் நான் ஒரு போதும் அப்படிப்பட்டவர்களை சந்தித்ததில்லை” என்கிறார் பிந்து.
தன் கணவர் ராகவன், மற்றும் சில நண்பர்களுடன் இணைந்து நிழிகிறிணி என்கிற அமைப்பை நடத்திவருகிறார். பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது இந்த அமைப்பு.

நன்றி : தினகரன் வசந்தம்
13.5.2007

”இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மக்கள் ஒன்று சேர வேண்டும்!”

ரோமுலஸ்விட்டேகர்இந்தியாவின் ஸ்டீவ் இர்வின். ஆனால், இருவருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இவர், ஸ்டீவ் இர்வினைப் போல முதலைகளையும் பாம்புகளையும் வைத்து வேடிக்கை காட்டும் சாகசக்காரர் அல்ல. அவற்றைக் காப்பாற்ற வந்த காட்ஃபாதர்! சென்னை, கிண்டி பாம்புப்பண்ணையும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப்பண்ணையும்  இந்த அமெரிக்கர் உருவாக்கியவை. கிட்டத்தட்ட அழிந்தேவிட்ட சில அரியவகை முதலைகளும் பாம்புகளும் உயிரோடு இருப்பது இவருடைய பண்ணைகளில்தான். ஆக்ரோஷமான முதலைகளிடம் அத்தனை பரிவுகாட்டும் இவருக்கு மனிதர்கள் மீதுதான் கொஞ்சம் கோபம்!

”முதலைகள் பற்றி உங்கள் தாத்தா பாட்டியிடம் கேட்டுப்பாருங்கள். அவ்வளவு கதை சொல்வார்கள். ஆனால், நாமோ மிருகக்காட்சிச் சாலைகளில்தான் முதலைகளைப்பார்க்கிறோம். இன்று ஆறுகளில் முதலைகளே இல்லை என்று சொல்லலாம். மனிதனுக்கும் முதலைகளுக்கும் நடந்தயார்பெரியவன்?’ போட்டியில் முதலைகள் பாவம்,  தோற்றுப் போய்விட்டன. மீன்களையே சாப்பிடும் மீன்கள் இருக்கின்றன. அந்த மீன்களை மட்டும்தான் முதலைகள் சாப்பிடும். முதலைகள் அழிக்கப்பட்டதால் மீன்களைச் சாப்பிடுகிற மீன்கள் அதிகமாகிவிட்டன.எனவே, மற்ற மீன் இனங்கள் குறைந்துவிட்டன. இயற்கையின் சங்கிலித்தொடரில் ஒரு கண்ணியை உருவினாலும் பாதிப்பு எல்லோருக்கும்தான்!

வட இந்திய ஆறுகளில் மட்டுமேவாழ்ந்தகரியால்இனமுதலைகள்அவற்றின் தோலுக்காக மிச்சசொச்சம் இல்லாமல் வேட்டையாடப்பட்டன. தென்னிந்தியாவில் முதலைகளின் முக்கியத்துவம் தெரியாமல், அவை பயங்கரமானவை என்ற காரணத்துக்காகவே அழிக்கப்பட்டுவிட்டன. ‘பயங்கரமானதுஎன்று வர்ணிக்கப்படும் எந்தவொரு உயிரினமும் உண்மையில் பயங்கரமானது அல்ல. தன்னைத் தற்காத்துக்கொள்ளவே தாக்குகின்றன. முதலை அற்புதமான குணம் கொண்டது. மனிதர்களைப்போல் தாய்மை குணமுள்ள உயிரினம் அது. முட்டையிடும் சமயத்தில் அதை நெருங்கவே முடியாது. தன் முட்டையை யாராவது களவாடுகிறார்கள் என்று தெரிந்துவிட்டால், எவ்வளவு வேகமாகப்போனாலும் துரத்தி வந்து பிடித்துவிடும்.

மீன்களின் பெருக்கத்துக்குக் காரணமாக இருப்பதால் முதலைகள், மீனவர்களின் நண்பன். அதுபோல பாம்புகள், விவசாயிகளுக்கு நண்பன். விளைவதில் சரிபாதி விளைபொருள்களை வீணாக்கும் அத்தனை எலிகளையும் நம்மால் ஒழிக்கமுடியாது. வயல்வெளி எலிகளை ஒழிக்க அரசாங்கம் எத்தனையோ கோடிகளைக் கொட்டிக்கொடுக்கிறது. ஆனால், பாம்புகள் சர்வசாதாரணமாக ஆயிரக்கணக்கான எலிகளை ஒழித்துவிடும். நாம் அதனைச் சீண்டாதவரை அதுநம்மை எந்தவிதத்திலும் துன்புறுத்தாது. ஆனால், அந்தப் பண்பு நம்மிடம் இல்லையே!

பாம்புகளிலேயே மிக மிக சுவாரஸ்யமானது ராஜநாகம். 13 அடிஅழகானராட்சசன்! பாம்புகளிலேயே ராஜநாகம்மட்டும்தான் கூடுகட்டி முட்டைகளை வைக்கும். மலைக்காடுகளில்தான் வசிக்கும். மேற்குவங்காளத்தில் இருக்கும் சுந்தரவனக்காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் என இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே ராஜநாகங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலைகளில் வாழும் ராஜநாகங்கள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.” ”இதுவரை எந்தப் பாம்பும் உங்களைக் கடித்ததில்லையாஎன்றுகேட்டால், தன் வலது ஆள்காட்டி விரலைத் தடவிக்கொண்டு சிரிக்கிறார். ”இருபது வயதில் அமெரிக்க பாலைவனத்தில் வாழக்கூடிய பற்றிய ஆராய்ச்சிக்காகப் போயிருந்தேன். கொஞ்சம் அலட்சியமாக ஒருபாம்பைப்பிடித்துவிட்டேன். அதுதன்னை தற்காத்துக் கொள்ள என் வலதுகை ஆள்காட்டிவிரலைக் கடித்து விட்டது. அந்தவிரலில்நரம்புகள் துண்டிக்கப்பட்டு, உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. அந்த பாம்புமேல தப்பு இல்லை. தப்பு என்மேல் தான்!” என்பவர் தொடர்ந்து… ”நான் பிறந்தது நியூயார்க். ஏழுவயதில்அம்மாவோடு இந்தியா வந்தேன். பாம்புபிடிக்க ஆரம்பித்தது நான்கு வயதில். என் ஆர்வத்தைப்புரிந்து கொண்டு பாம்புகள் பற்றிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார் அம்மா. பாம்பு, முதலைகளைத்தேடி இந்தியா முழுக்கத் திரிந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் சூழல் எனக் கேற்றதுபோலஇருந்ததால், இங்கேயே தங்கிவிட்டேன். இயற்கை சூழலைக்காப்பாற்றுவது குறித்து எந்த அக்கறையும் நம்மில் பலருக்குக் கிடையாது. முக்கால் பங்குகாடுகள் அழிந்துபோய், தொழிற்சாலைகளாகவும் பொறியியல் கல்லூரிகளாகவும் நிற்கின்றன. சுதந்திரப்போராட்டத்துக்கு இந்தியமக்கள் ஒன்று சேர்ந்ததுபோல, இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மக்கள் ஒன்று சேரவேண்டும். இயற்கையைச் சமநிலைப்படுத்துகிற உயிரினங்களைக் காப்பாற்றினால் போதும்உலகம் சூடாவது பற்றியும் கவலைப்படவேண்டாம், பசுமைப்புரட்சி செய்ய மண்டையை உடைத்துக் கொள்ளவும் வேண்டாம்!” என்கிறார் ரோமுலஸ், ஆதங்கமும் வருத்தமும் தோய்ந்தகுரலில்.