#metoo: இதுவரை என்ன நடந்தது? ஒரு முழுமையான அறிக்கை!

இந்தியாவில் மீ டூ இயக்கம் கடந்த மூன்று வாரங்களாக பேசுபொருளாகியிருக்கிறது. இதுவரை பேசத்துணியாத பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் கூட்டுக்குரலாக பணியிடங்களில் ஆண்களால் எதிர்க்கொண்ட ஒடுக்குமுறை, பாலியல் வன்முறைகளைப் பேசினர். இதில் மோடி அரசின் பங்குபெற்றிருந்த அமைச்சர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டும் அடக்கம்.

பாதிக்கப்பட்ட பெண்களின் அனுபவ பகிர்வுகளிலிருந்து அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையேதான் பணியாற்றி வந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த இயக்கம் பெண் பணியாளர்களின் உரிமைகள் குறித்த உரையாடலை உண்டாக்கியது. ஒடுக்குமுறை, வன்முறையற்ற, பாதுகாப்பான பணியிடத்தை பெண் பணியாளர்களுக்கு உருவாக்கித்தர வேண்டும் என்கிற பேச்சுக்களையும் அது உருவாக்கியது. சட்ட ரீதியாக அணுகுவது உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெறுவது குறித்தும் பேசப்பட்டது. இன்னொரு பக்கம், பெயர் சொல்லப்படாமல் வெளிவரும் புகார்களை கையாள்வது எப்படி எனவும் பேசினார்கள். தலித், ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களின் குரல்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.

இந்த இயக்கத்தின் மிகப் பெரிய வெளிப்பாடாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பரின் பதவி விலகலைச் சொல்லலாம். 1980களிலிருந்து 1990களின் தொடக்கம் வரை 16க்கும் மேற்பட்ட பெண்கள் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டினர். பாஜகவில் இணையும் முன் டெல்லியில் பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது நடந்த சம்பவங்கள் இவை. முதன்முதலில் இவர் பெயரைச் சொன்ன பத்திரிகையாளர் ப்ரியா ரமானி மீது இவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

மீ டூ இயக்கம் செப்டம்பர் 25-ஆம் தேதி வேகமெடுத்தது. பாலிவுட் நடிகர் தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா பட்டேகர் மீது பாலியல் வன்கொடுமை புகார் சொன்னார். இந்த சம்பவம் 10 ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்பு தளத்தில் நடந்ததாக அவர் கூறினார். அதன்பின், அக்டோபர் 4-ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த மஹிமா குக்ரேஜா என்ற இளம் நகைச்சுவை நடிகர், தன் சக நகைச்சுவை நடிகரான உத்சவ் சக்ரவர்த்தி மீது பாலியல் ஒடுக்குமுறை கூறினார். உத்சவ் மீது மேலும் ஒரு பெண் குற்றம்சாட்டினார். அடுத்த நாள் பெங்களூருவைச் சேர்ந்த பகுதி நேர பத்திரிகையாளர் சந்தியா மேனன், மூன்று வெவ்வேறு பத்திரிகைகளில் தனக்கு நேர்ந்த பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்து எழுதினார். த வயரில் பணியாற்றும் அனு பூயான், வேறொரு பத்திரிகையில் தனக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

அரசியல், ஊடகம், பொழுதுபோக்கு, கலை, சட்டம், விளையாட்டு, கல்வி, தொழில்துறை உள்ளிட்ட 14 துறைகளைச் சார்ந்த வெளியான மீ டூ குற்றச்சாட்டுக்களின் தொகுப்பு இங்கே…

பத்திரிகை துறை:

மீ டூ இயக்கத்தின் வாயிலாக வெளியான பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களின் காரணமாக இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான ஆங்கில செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை இழந்துள்ளனர். அதோடு, பலர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு, நிறுவனத்துக்குள்ளே அல்லது வெளியே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

டி.என்.ஏ-வின் முன்னாள் ஆசிரியரும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஆசிரியராக பணியாற்றியவருமான கவுதம் அதிகாரி, US think-tank Centre for American Progress (CAP) என்ற அமைப்பிலிருந்து வெளியேறினார். இவர் மீது மூன்று பெண்கள், விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார் என குற்றம்சாட்டியிருந்தனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஹைதராபாத் பதிப்பின் ஆசிரியரான கே. ஆர். ஸ்ரீனிவாஸ் மீது பத்திரிகையாளர் சந்தியா மேனன் உள்ளிட்ட ஆறு பெண்கள் அவருடைய தலைமையகத்தில் புகார் அனுப்பினர்.

த வயரில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது, நிஷ்தா ஜெயின் என்ற திரை இயக்குநர் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் வினோத் துவாவின் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நிஷ்தா ஜெயின் அளித்த புகாரை விசாரிக்க தனி குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் மூத்த பத்திரிகையாளர் பிரசாந்த் ஜா தன்னுடைய பதவியை விட்டு விலகினார். இவர் மீது வழக்கறிஞராக உள்ள அவந்திகா மேத்தா புகார் கூறியிருந்தார். இவர்கள் இருவருக்கிடையே நடந்த குறுஞ்செய்தி பறிமாற்றங்கள் பொதுவெளியில் வெளியானபோது, தார்மீக அறத்தின் அடிப்படையில் பதவி விலகுவதாக பிரசாந்த் ஜா அப்போது கூறினார்.

பிஸினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையின் நிருபர் மானக் ஜெயின் மீது தனது மறுப்பை தெரிவித்தபோதுமம் பாலியல் உறவுக்கு அழைத்ததாக த வயரின் அனு பூயான் குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். இதனால் மானக் ஜெயின் பதவி விலகினார்.

தி இந்துவின் கவுரிதாசன் நாயர், யாமினி நாயர் மற்றும் சிலர் பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக குற்றம்சாட்டியிருந்தனர். இதனால் இவரை அலுவலக விடுப்பில் அனுப்பியது தி இந்து.

என்டிடீவி தன்னுடைய பணியாளர் ஒருவருக்கு எதிரான பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை விசாரிப்பதாக உறுதியளித்தது.

ஹஃபிங்டன் போஸ்ட் தன்னுடைய முன்னாள் பணியாளர்கள் அனுராக் வர்மா, உத்சவ் சக்ரவர்த்தி மீதான புகார்களை விசாரிக்க உள்விசாரணைக்குழு அமைத்திருப்பதாக கூறியது.

க்விண்ட் இணையதளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், தன் சக பெண் பத்திரிகையாளரிடம் முறை தவறி நடந்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்டார். மேக்நாத் போஸ் என்ற பத்திரிகையாளர் மீது ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரியில் உடன் படித்த பெண் அளித்த பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டின் காரணமாக நிர்வாக விடுப்பில் அனுப்பப்பட்டார்.

நியூஸ் லாண்ட்ரி இணையத்தளத்தின் பணியாற்றும் அலுவலர் மீது எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க உள் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலர்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா மீ டூ குற்றச்சாட்டுக்களை முக்கியத்துவம் கொடுத்து கவனிப்பதாக அறிக்கை வெளியிட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பணியிடங்களில் பாலியல் ஒடுக்குமுறை குறித்த சிறப்பு பயிற்சி பட்டறைகளை நடத்துவதாக அறிவித்தது.

டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. எடிட்டர்ஸ் கில்டு செய்தியறைகளில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறை குறித்து அறிக்கை வெளியிட்டது.

மும்பை பத்திரிகையாளர் மன்றமும் ஊடக பெண்கள் நெட்வொர்க்கும் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிப்பதாக அளிக்கை வெளியிட்டன. பாலியல் ஒடுக்குமுறை தொடர்பான சட்டங்கள் குறித்த விவாதம் ஒன்றையும் நடத்தின. இந்திய பத்திரிகையாளர் மன்றம், பெண் பத்திரிகையாளர் அமைப்பு, தெற்காசிய பெண் ஊடவியலாளர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டங்கள் பணியிடங்களில் அமல்படுத்தப் படாததற்கு கண்டனம் தெரிவித்தன. ஃபர்ஸ்போஸ்ட் இணையதளம் மீடூ உரையாடல் என்ற பெயரில் மீ டூ இயக்கத்தில் வெளியான பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்த நிகழ்ச்சியொன்றை நடத்தி வருகிறது. இந்திய செய்தி அறைகளில் நடக்கும் பாலியல் ஒடுக்குமுறைகள் குறித்த சர்வே ஒன்றை நடத்திக்கொண்டிருக்கிறது ஊடக பெண்கள் நெட்வொர்க்.

அடித்தளத்தில் பணியாற்றும் பெண் பத்திரிகையாளர்களின் ‘கபார் லஹரியா’ என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் நிருபர்கள் பிந்தங்கிய, கிராமப்புறங்களில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படையாக எழுதியிருந்தனர். இப்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு காரணமாக போர்னோ வீடியோக்கள், பாலியல் நகைச்சுவை துணுக்குகள் அனுப்பிக்கொண்டிருந்த ஆண்கள், அதை நிறுத்தியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அரசியல்

ஏசியன் ஏஜ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.ஜே. அக்பர் மீது இதுவரை 16 பெண்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை சொல்லியிருக்கிறார்கள். வெளியுறவுத் துறை இணை அமைச்சராக இருந்த அவர், இந்த குற்றச்சாட்டுக்களின் காரணமாக ராஜினாமா செய்தார். பத்திரிகையாளர் ப்ரியா ரமானி மீது அக்பர் தொடுத்திருக்கும் அவதூறு வழக்கை திரும்பப் பெற எடிட்டர் கில்டு கோரியிருந்தது. மிண்ட் பத்திரிகையின் வாராந்திர இணைப்பான லாங்க்’ இல் ப்ரியா ரமானி பத்தி எழுதிவருகிறார். ப்ரியாவுக்கு தங்களுடைய ஆதரவை தரும் பொருட்டு, பத்தி எதுவும் வெளியிடாமல் அந்த இடத்தில் ‘நாங்கள் ப்ரியாவுடன் இருக்கிறோம்’ என்ற ஹேஷ் டேக் மட்டும் பிரசுரித்திருந்தது மிண்ட்.

பத்திரிகையாளர் அமைப்புகள் அனைத்தும் அமைச்சருக்கு எதிராக நின்றன. மணி கண்ட்ரோல் என்ற இணையதளத்தின் ஆசிரியர் சுசித்தா தலால் மற்றும் பத்திரிகையாளர் ஹரீந்தர் பவேஜா ஆகியோர் ப்ரியாவின் வழக்கு செலவுகளுக்காக நிதி திரட்டி தருவதாக அறிவித்தனர்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அக்பரின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பாவிட்டாலும் பாலியல் ஒடுக்குமுறைகளை குறித்து பேசும் பெண்களின் மன உறுதியை பாராட்டினார். அதே சமயம் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் மீ டூ இயக்கம் வக்கிரபுத்தி உள்ளவர்களின் செயல்பாடு என்றார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி, இந்த இயக்கத்தை அதரித்தார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அரசு பாலியல் ஒடுக்குமுறைகளை எதிர்க்கொள்ள சட்ட மற்றும் அமைப்பு ரீதியிலான குழு ஒன்றை அமைத்தது. மேனகா காந்தி பாலியல் ஒடுக்குமுறையில்லாத பணியிடத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மூத்த நீதிபதி மற்றும் சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். ஊடக நிறுவனங்கள் மற்றும் மாநில, தேசிய கட்சிகள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டுக்களை விசாரிக்க உள்விசாரணைக்குழு அமைக்க வேண்டும் எனவும் கோரினார்.

தேசிய பெண்கள் ஆணையம் பணியிடத்தில் பாலியல் ஒடுக்குமுறை குறித்து விசாரிக்க சிறப்பு மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டது. மின்னணு புகார் பெட்டி ஒன்றை அமைத்ததோடு, புகார் பதியப்பட்டவுடன் தொடர்புள்ள துறைக்கு அந்த புகாரை தானாகவே அனுப்பும் முறையையும் அறிமுகப்படுத்தியது.

டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டவர்களை விசாரிக்க தனி விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதோடு டெல்லி பெண்கள் ஆணையமும் மீ டூ புகார்களை அளிக்க தனி மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்கள் பலர் மீ டூ இயக்கத்தை பொதுப்படையாக ஆதரித்தாலும் வழக்கம்போல மோடி தனது வாயைத் திறக்கவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற வக்கிர புத்தி கொண்ட அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பெண்களை வக்கிரபுத்தி படைத்தவர்கள் என குற்றமசாட்டினார்கள்.

இளைஞர் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஃபெரோஸ் கான் என்பவர் பதவி விலகினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சச்சின் பைலட், சல்மான் குர்ஷித், விவேக் தன்ஹா, கபில் சிபல், ஸ்ரீனிவாஸ் பி.வி., சசி தரூர் போன்றோர் மீ டூ இயக்கத்தை வரவேற்றனர்.

மத்திய அமைச்சர் உமா பாரதி, இந்த இயக்கம் பணியிடத்தில் பெண்களுக்கு நல்லதொரு மாற்றத்தை உண்டாக்கும் என தெரிவித்தார். பாஜக எம்பிக்கள் மீனாட்சி லேகி மற்றும் பூனம் மஹாஜன் ஆகியோரு வரவேற்றனர்.

திமுக எம்.பி. கனிமொழி தனது ஆதரவை தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களை நம்ப வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். மலையாள நடிகரும் சிபிஎம் எம்.எல்.ஏவுமான முகேஷ் குமாருக்கு எதிராக டெஸ் ஜோசப் என்பவர் சொன்ன குற்றச்சாட்டின் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் என கோரப்பட்டது.

பாலிவுட்டில் மீ டூ!

தனுஸ்ரீ தத்தா, நானா பட்டேகர் மீது சொன்ன குற்றச்சாட்டு இந்தியாவின் ஹார்வி ஹெயின்ஸ்டீன் தருணம் என பலரும் கூறுகிறார்கள். 2008-ஆம் ஆண்டு இதே குற்றச்சாட்டுக்களை தனுஸ்ரீ சொன்னபோது, எவரும் கண்டுகொள்ளவில்லை. இம்முறை ஊடகங்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டன.

’ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பின்போது நானா பட்டேகர் பாலியல் ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாக தனுஸ்ரீ குற்றம்சாட்டினார். இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி (அறிவுஜீவிகள், மனித உரிமை செயல்பாட்டாளர்களை அர்பன் நக்ஸல் என்ற முத்திரை குத்திய நபர்-அதே பெயரில் நூல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்) மீது இழிவாக பேசுதல், ஒடுக்குமுறை புகாரை தனுஸ்ரீ கூறியிருந்தார்.

மகாராஷ்டிர பெண்கள் ஆணையம் நானா பட்டேகர், படத்தின் இயக்குநர் ராகேஷ் சாரங் மற்றும் நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இவர் மூவர் மீதும் தயாரிப்பாளர் சாமீ சித்திக் மீதும் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இவர்கள் நால்வரும் தனுஸ்ரீ மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

சினிமா பெண்களுக்கான அமைப்பு தனுஸ்ரீக்கு ஆதரவளித்தது. சினிமா மற்றும் டிவி நடிகர்கள் சங்கம் 2008-ஆம் ஆண்டு தனுஸ்ரீ கொடுத்த புகாரை பதிய மறுத்ததற்காக மன்னிப்பு கோரியது. நானா பட்டேகர் மீதான போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்திழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த போராட்டக்குழுவினர் தனுஸ்ரீக்கு ஆதரவளித்தது.

அடுத்து பாலிவுட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் பிரபல நடிகர் அலோக் நாத். எழுத்தாளர்-இயக்குநர்- தயாரிப்பாளர் வினிதா நந்தா இவர் மீது பாலியல் வல்லுறவு புகார் கூறியதோடு, காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்தார். நடிகர்கள் சந்தியா மிருதுள், தீபிகா அமீன் ஆகியோர் அலோக் நாத் மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டைக்கூறினர். திரை எழுத்தாளர்கள் அமைப்பு, வினிதாவுக்கு ஆதரவளித்தது. விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தியது. பிரதமர் நரேந்திர மோடிக்கு, வினிதா எழுதிய கடிதத்தில் நீதியை நிலைநாட்ட இந்தப் பிரச்சினையில் தலையிடுமாறு கோரியிருந்தார். (மோடியின் மவுனம் இன்னமும் களையவில்லை.)

பாலிவுட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்றாவது பெரிய பெயர், இயக்குநர் சஜீத் கான். பத்திரிகையாளர் கரிஷ்மா உபாத்யாய், நடிகர்கள் ரேச்சர் ஒயிட், சிம்ரன் சூரி உள்ளிட்ட பலர் இவர் மீது குற்றம்சாட்டினர். இந்திய சினிமா இயக்குநர்கள் சங்கள், இந்த புகார்கள் குறித்து விளக்கம் அளிக்கும்படி சஜீத் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

ஹவுஸ்ஃபுல்-4 படத்தின் இயக்குநராக பணியாற்ற இருந்த சஜீத் நீக்கப்பட்டார். நானா பட்டேகரும் இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான அக்‌ஷய் குமார் இவர்கள் மீதான குற்றச்சாட்டு காரணமாக இவர்களை நீக்கினார்.

நான்காவது நபர், இயக்குநர் விகாஸ் பால். ஹஃபிங்டங் போஸ்ட் வெளியிட்ட விசாரணையில் ‘குவின்’ படப்பிடிப்பின்போது ஒரு பெண்ணை எத்தகைய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கினார் என தெரியவந்தது. இந்தப் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கங்கணா ரணவத், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவளித்தார். விகாஸ் தன்னிடம்கூட முறை தவறி நடந்ததாக கங்கணா பேசினார். அமேசான் பிரைம்-க்காக தயாரிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியிலிருந்து விகாஸ் நீக்கப்பட்டார். அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோட்வானி, மது மண்டேனா, விகாஸ் பால் ஆகியோர் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விகாஸ் நீக்கப்பட்டார். நடிகர் ஹிரிதிக் ரோஷன், விகாஸ் இயக்கவிருந்த படத்திலிருந்து அவரை நீக்குமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டார்.

பாலிவுட்டைச் சேர்ந்த பலர் மீது இப்படிப்பட்ட புகார்கள் குவிந்தன. நடிகர் ரஜத் கபூர் மீதான புகார் காரணமாக அவர் நடிக்கவிருந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார். தன்னுடைய செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்டார்.

யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வர்த்தக தலைவர் ஆசிஸ் பட்டேல் மீதான குற்றச்சாட்டின் காரணமாக அவர் நிர்வாக விடுவிப்பில் அனுப்பப்பட்டார். ஃபாஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், இயக்குநர் முகேஷ் சப்ராவை தங்களுடைய தயாரிப்பிலிருந்து நீக்கியது. நான்கு பெண்கள் புகார் அளித்ததன் காரணமாக திரை விமர்சகர் சிபாஜி ராய்சவுத்ரியின் ஒப்பந்ததை ரத்து செய்தது டைம்ஸ் நவ். இயக்குநர் ஈரே கவுடா மீதான குற்றச்சாட்டின் காரணமாக ‘பாலேகெம்பா’என்ற படத்தை திரை விழாக்களில் திரையிடப்போவதில்லை என அறிவித்தது அந்தப் பட தயாரிப்பு நிறுவனம்.

தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவளிக்க மறுத்த அபிதாப் பச்சன், கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பொத்தாம் பொதுவாக எந்த பெண்களும் பாதிக்கப்படக்கூடாது என அறிக்கை வெளியிட்டார். நடிகர் அமீர்கானும் இயக்குநர் கிரண் ராவும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் பெயர் குறிப்பிடாத ஒரு சகபணியாளருடன் இனி ஒருபோதும் பணிபுரியப்போவதில்லை என தெரிவித்தனர். இவர்கள் அடுத்து தயாரிக்க விருந்த படத்தை சுபாஷ் கபூர் இயக்கவிருந்தார். அவர் மீது பலர் புகார் கூறியிருந்தனர். இதுபோல பூஷன் குமார், ஏக்தா கபூர் ஆகியோரும் சுபாஷ் கபூரை தங்களுடைய தயாரிப்புகளிலிருந்து நீக்கினர்.

பாலிவுட் நடிகர்கள் எம்ரான் ஹாஸ்மி, ராதிகா ஆப்தே, ஃபர்ஹான் அக்தர், பிரியங்கா சோப்ரா, எழுத்தாளர் சோபா டே ஆகியோர் மீ டூ இயக்கத்தை ஆதரித்தனர். ஸ்டார் டிவி குழுமம் இந்த இயக்கத்தை ஆதரித்தது. கொங்கனா சென் சர்மா, நந்திதா தாஸ், கவுரி ஷிண்டே, சோனாலி போஸ், கிரண் ராவ், ஸோயா அக்தர் உள்ளிட்ட 11 பெண் இயக்குநர், குற்றம்சாட்டு நிரூபிக்கப்பட்ட நபர்களுடன் பணிபுரியப் போவதில்லை என அறிக்கை வெளியிட்டனர். நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்தத் துறையில் உள்ள பாலியல் புகார்களை விசாரிக்க சிறப்புக்குழு அமைக்க ஒப்புக்கொண்டன.

தென்னிந்திய சினிமாவில் மீடூ!

2017-ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட குற்றச்சாட்டில் நடிகர் திலீப் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’விலிருந்து விலகினார். இவருடைய விலகலை தலைவராக உள்ள மோகன்லால் ஏற்றுக்கொண்டார். ஆனால் நடிகர் சங்கம் திலீப்புக்கு ஆதரவாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதன்காரணமாக ‘அம்மா’விலிருந்து பலர் விலகினர். மலையாள சினிமாவில் பணியாற்றும் பெண்கள் இணைந்து பெண்கள் அமைப்பொன்றை தொடங்கினர். இந்த அமைப்பு திலீப்புக்கு ஆதரவாக அம்மா செயல்படுவதாக குற்றம்சாட்டியது. பணியிடங்களில் பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வலியுறுத்தில் சினிமா பெண்கள் அமைப்பு வழக்கு ஒன்றையும் கேரள உயர்நீதிமன்றத்தில் தொடுத்தது.

தெலுங்கு திரைப்பட உலகம், பெண்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க தொடர்புகொள்ள வேண்டியவர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது. தெலுகு ஃபிலிம் சேம்பர், ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திலும் புகார்களை பெற குழு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

கன்னட நடிகர், இயக்குநர், தொழிற்நுட்ப கலைஞர்களைக் கொண்ட சுதந்திர அமைப்பொன்றை கன்னட சினிமா துறை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பு இந்தத் துறை சார்ந்த பாலியல் ஒடுக்குமுறை புகார்களை பதிவு செய்து விசாரிக்கும்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ள விஷால், பாலியல் ஒடுக்குமுறை புகார்களை விசாரிக்க மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைத்துள்ளதாக அறிவித்தார். பாடகர் சின்மயி மற்றும் லீனா மணிமேகலைக்கு ஆதரவளிக்கும் வகையில் தென்னிந்திய சினிமா பெண்கள் அமைப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. சின்மயி -உடன் மேலும் இரண்டு பெண்கள் கவிஞர் வைரமூத்து மீது குற்றம்சாட்டியிருந்தனர். லீனா மணிமேகலை இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை கூறியிருந்தார். நடிகர் அமலா பால், லீனாவுக்கு ஆதரவளித்ததோடு, சுசு கணேசன் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

பொழுதுபோக்கு துறை

சிறுமிகள் உள்பட பல பெண்கள் ஸ்டேண்ட் அப் காமெடியன் உத்சவ் சக்ரவர்த்தி மீது குற்றம்சாட்டியிருந்தனர். தன்னுடைய செயலுக்காக உத்சவ் மன்னிப்புக்கேட்டார். நகைச்சுவையாளர்கள் குழுமத்தின் நிறுவனராக உள்ள தன்மய் பட், உத்சவ் மீதான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அந்த குற்றச்சாட்டுக்களை கண்டுகொள்ளாமல் உத்சவு-க்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதாக விமர்சிக்கப்பட்டார்.
இந்த அமைப்பின் நிகழ்ச்சியை ஹாட் ஸ்டார் ரத்து செய்தது. பழைய நிகழ்ச்சிகளையும் நீக்கியது. சக பெண் நகைச்சுவையாளரிடம் முறை தவறி நடந்துகொண்டதற்காக அதிதி மிட்டல் மன்னிப்புக்கேட்டார்.

குறும்பட தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் சிந்தன் ரூப்ரேல் தன் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி விலகினார்.

இசைத்துறை

ஒளிப்படக்கலைஞர் நடாஷா ஹேம்ராஜ் , பாடகர்கள் சோனா மஹோபாத்ரா ஆகியோர் தெரிவித்த பாலியல் புகாரின் காரணமாக பாடகர் கைலாஷ் கெர் மன்னிப்புக் கேட்டார்.
பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டின் காரணமாக சோனி டிவி இந்தியன் ஐடல் நிகழ்ச்சியிலிருந்து இசையமைப்பாளர் அனு மாலிக்கை நீக்கியது

மீ டூ இயக்கத்தை ஆதரித்து ஏ. ஆர். ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். மியூசிக் அகாடமி குற்றச்சாட்டுக்கு உள்ளான கர்நாடக இசை துறையைச் சேர்ந்த என். ரவிக்கிரண், ஓ. எஸ். தியாகராஜன், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமூசம் வி. ராஜாராவ், நாகை ஸ்ரீராம், ஆர். ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோரை இந்த ஆண்டு தன்னுடைய சபா நிகழ்ச்சியிலிருந்து நீக்குவதாக தெரிவித்தது. கர்நாடக இசை கலைஞர்கள் கூட்டாக பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிட்டது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் மீ டூ!

வீடியோ தன்னார்வலர் என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்டாலின் கே. பத்மா மீது பல பெண்கள் பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டை கூறியிருந்தனர். இதனால் இவர் பதவி விலகினார். இந்த அமைப்பிலிருந்து தங்களுடைய உறவை துண்டித்துக் கொள்வதாக டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோசியல் ஸ்டடீஸ் மற்றும் ஸ்கூல் ஆஃப் மீடியா அண்ட் கல்ச்சர் நிறுவனங்கள் முடிவெடுத்தனர். டீச் பார் இந்தியா என்ற நிறுவனம் தனது ஊழியர் மூவரை விடுப்பில் அனுப்பியது, அவர்கள் மீதான புகாரையும் நிறுவனம் விசாரிக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனர் மேத்யூ ஜேக்கப், பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகினார்.

தீபிகா படுகோனே-வின் லிவ் லவ் லாஃப் பவுண்டேஷன் தனது ட்ரஸ்டீ ஒருவரை பாலியல் ஒடுக்குமுறை புகார் காரணமாக பதவி விலகியதாக தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுடைய அமைப்பு ஆதரவாக இருக்கும் எனவும் அறிவித்தது.

கலைத்துறை மீ டூ!

பிரபல ஓவியர் ஜதின் தாஸ் மீது நான்கு பெண்கள் புகார் கூறியிருந்தனர். இதற்காக இவர் பிறகு மன்னிப்பும் கேட்டார்.
ஓவியர் ரியாஸ் கோமு மீதான புகார் காரணமாக கொச்சி முசிறி பினாலே விழாக்குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இவரும் மன்னிப்புக்கேட்டார். மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

மும்பையைச் சேர்ந்த கலைக்கூடமான ‘டார்க்’, ஒளிப்படக் கலைஞர் ஷாகித் தத்தாவாலா மீதான புகார் காரணமாக அவருடைய காட்சியை ரத்து செய்தது.

இலக்கியத்தில் மீ டூ!

மீ டூ இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் எழுத்தாளர் ரஜினி ஜார்ஜ் குழு ஒன்றை தொடங்கினார். இந்தக் குழுவில் இதுவரை 500 முன்னணி ஓவியர்கள், எழுத்தாளர்கள் இணைந்துள்ளனர். மீ டூ இயக்கத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான எழுத்தாளர், பிரபலங்கள் எவரும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

எழுத்தாளர் சச்சின் கார்க், முறைதவறி நடந்துகொண்டதற்காக ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார். பெங்களூரு இலக்கிய விழாவின் நிறுவனரான சுபோத் சங்கர், பாலியல் புகாருக்கு உள்ளான எவருக்கும் வாய்ப்பளிக்கப்படாது என அறிவித்துள்ளார்.

சட்ட துறையில்!

சட்ட துறையைச் சேர்ந்த பல நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீ டூ இயக்கத்துக்கு ஆதரவளித்துள்ளனர். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் பட்டேல் ஆதரவளித்திருக்கிறார். சட்ட மாணவர் கோஷிகா கிருஷ்ணா என்பவர் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சரவையில் பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவினரின் பெயரை நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வலியுறுத்த வேண்டும் என மனு ஒன்றை அளித்திருக்கிறார். மாற்று சட்ட கருத்துக்களம் (Alternative Law Forum) பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி செய்வதாக அறிவித்துள்ளது. வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நீதிக்காக போராடிய தாலிப் உசைனுக்காக வழக்காடப் போவதில்லை என தெரிவித்திருக்கிறார். தாலிப் உசைன் மீது பாலியன் வல்லுறவு புகார் எழுந்த நிலையில் அவர் இப்படி அறிவித்திருக்கிறார்.

வர்த்தகம் மற்றும் விளம்பரத்துறை மீ டூ!

விளம்பர துறையைச் சேர்ந்த சுகைல் சேத் மீது பல பெண்கள் புகார் அளித்த நிலையில் குளோபல் மெண்டோர்ஷிப் பிளாட்ஃபார்ம், வேர்ல்டு உமன் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சுகைல் சேத் -உடனான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன. டாடா குழுமம், கோககோலா, மகேந்திரா குழுமம் ஆகியவையும் உறவை துண்டிப்பதாக அறிவித்துள்ளன.
விளம்பரத்துறையைச் சேர்ந்த கார்த்திக் ஐயர், பிரவீன் தா, போதிசத்வா தாஸ்குப்தா, தினேஷ் சுவாமி ஆகியோர் பாலியல் ஒடுக்குமுறையை தவறான நடத்தை குற்றச்சாட்டின் காரணமாக பதவி விலகியுள்ளனர்.

முத்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்யூனிகேஷன் அகமதாபாத், அதன் இயக்குனர் பிரவீன் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க முன்வந்துள்ளது.

டிடிபி முத்ரா குழுமம் தன்னுடைய ஊழியர் மூவருக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கிறது.
பாலிசி இந்தியா நிறுவனம் அதன் க்ரியேட்டிவ் இயக்குநர் இஷ்ரத் நவாஸ் மீதான குற்றச்சாட்டு காரணமாக அவரை நீக்கியுள்ளது. உடோப்பியா கம்யூனிகேஷன் இணை நிறுவனர், பாலியல் நடத்தை குற்றச்சாட்டு காரணமாக விடுப்பில் அனுப்பப்பட்டிருக்கிறார்.

விளம்பரம், வடிவமைப்பு மற்றும் ஊடக பெண்கள் அமைப்பு இந்தத் துறையில் உள்ள பாலியல் ஒடுக்குமுறை புகார்கள் மீது ஒருமுகப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பில் விளம்பர ஊடக துறையைச் சேர்ந்த பிரபல பெண்கள் பலர் கையெழுத்திட்டுள்ளனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் ரங்கராஜ், பாலியல் ஒடுக்குமுறை புகார் காரணமாக விடுப்பில் அனுப்பப் பட்டிருக்கிறார். அவர் மீதான புகாரும் விசாரிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அஜித் தாக்கூர் பதவி விலகியிருக்கிறார். விபூ சர்மா என்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அவர் பணிபுரியும் நிறுவனம் பெண்கள் மட்டுமே உள்ள விசாரணைக்குழு அமைத்துள்ளது.

ஐடிசி நிறுவனம் தன்னுடைய அனைத்து கிளைகளிலும் பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்க குழு அமைத்துள்ளது.

விளையாட்டு துறையில்…

டென்னிஸ் விளையாட்டு வீரர் மகேஷ் பூபதி மீ டூ இயக்கத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். பிசிசிஐ செயல் இயக்குநர் ராகுல் ஜோக்ரி மீது பாலியல் ஒடுக்குமுறை குற்றச்சாட்டு வெளியான நிலையில், அவர் விடுவிப்பில் அனுப்பப் பட்டிருக்கிறார்.

கல்வி துறையில் மீ டூ!

கல்வி துறையில் புகார்கள் பெருகிவருவதன் காரணமாக, கல்வி அமைப்புகளில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஐஐஎஸ்.சி பெங்களூருவைச் சேர்ந்த மூத்த கல்வியாளர் ஒருவர் மீது பிஎச்டி மாணவி ஒருவர் குற்றம்சாட்டினார். திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் பிஎஸ்ஸி மாணவி ஒருவர், பேராசிரியர் ஒருவர் மீது குற்றம்சாட்டியிருந்தார். அவரை நிர்வாகம் நீக்கியிருக்கிறது. அசோகா பல்கலையைச் சேர்ந்த மாணவி ஒருவர், பாலியல் ஒடுக்குமுறை செய்யும் பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் காப்பாற்றுவது நிறுத்த வலியுறுத்தி கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். சிம்பாலிஸிஸ் செண்டர் பார் மீடியா அண்ட் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குனர் அனுபம் சித்தார்தா குற்றச்சாட்டு காரணமாக விடுவிப்பில் அனுப்பப்பட்டிருக்கிறார். பல கல்வி நிறுவனங்கள் கல்விக்கூடங்களில் பாலியல் ஒடுக்குமுறை குறித்த விவாதத்தை துவக்கியுள்ளன. ஜம்மு காஷ்மீர் பள்ளி கல்வித்துறை மாவட்ட வாரியாக பாலியல் ஒடுக்குமுறைகளை விசாரிக்கும் கமிட்டி அமைக்க முடிவு செய்துள்ளது. ஹைதராபாத் உயர்நீதிமன்றம், பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கானா அரசிடம் தெரிவித்துள்ளது.

பொது சமூகத்தின் முன்னெடுப்புகள்!

சிறு சிறு குழுக்களாக பொது சமூகம் மீ டூ இயக்கத்தை ஆதரித்து வருகிறது. ‘ஐ வில் கோ அவுட்’, ஏஜெண்ட்ஸ் ஆப் இஸ்க் போன்ற அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும் ஆதரவையும் அளித்து வருகின்றன. டெல்லி ஆக்ஸ்போர்டு புத்தநிலையம் மீ டூ இயக்கம் குறித்தும் தண்டனைக்குரிய குற்றம் குறித்து உரையாடல் நிகழ்வை நடத்தியது.

பெண்ணிய அமைப்பான ‘ஷிரோஸ்’ பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டுவந்த கதைகளை கேட்க உதவி எண்களை ஏற்படுத்தியுள்ளது. TheLifeofScience.com இணையதளம் அறிவியல் துறையில் உள்ள ஒடுக்குமுறைகளை பதிவு செய்ய விண்ணப்பங்களை உருவாக்கியுள்ளது.

தலித் வுமன் ஃபைட் என்ற அமைப்பு மீ டூ இயக்கத்தை ஆதரித்துள்ளது. காஷ்மீர் பெண்கள் அமைப்பு பாலியல் ஒடுக்குமுறைக்கு உள்ளானர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. பாலியல் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டு மீண்டவர் #MeTooK12 என்ற ஹேஷ்டேக்கின் மூலமாக இளம் தலைமுறையினருக்கு பாலியல் ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வையும் உரையாடலையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

கத்தோலிக் திருச்சபையைச் சேர்ந்த மேகாலயா கிறித்துவ அமைப்பு, தன் உறுப்பினர் ஒருவர் மீதான பாலியல் வன்முறை புகாரை விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

மீ டூ இயக்கத்தின் மீது தமிழகத்தில் ஒரு எதிர்மறையான உணர்வே உள்ளது. இருவேறு நபர்களிக்கிடையேயான பிரச்சினையாக திரிக்கும் அயோக்கியத்தனத்தை பலரும் தொடக்கம் முதலே செய்து வருகிறார்கள். இந்த நீண்ட பதிவை வாசித்த பிறகாவது இது இருவர் தொடர்பான பிரச்சினையல்ல, மீ டூ இயக்கம் பணிபுரியும் இடத்தில் பாலியல் சமத்துவத்துக்கான ஒரு போராட்டம் என்பதை புரிந்துகொள்வார்கள் என நம்பலாம். வரலாற்று காலம் தொட்டு பெண்ணுரிமைப் போராட்டங்கள் அவ்வளவு எளிதானதாக இருந்ததில்லை.

நன்றி: த வயர், வினவு

மீண்டும் நீதி கேட்கிறார் நிர்பயா!

நிர்பயாவை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. டிசம்பர் 16-ஆம் தேதி 2012ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் ஆறு பேரால் மிகக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பேருந்திலிருந்து வீசியயெறியப்பட்டவர். வழிபோக்கர்கள் அவரை காப்பாற்றினர்.  படுபயங்கரமாக சிதைந்துபோன அவருடைய பால் உறுப்புகளும் அதனால் ஏற்பட்ட இரத்த இழப்பும் மருத்துவசிகிச்சையால் சரியாக்க முடியாத நிலைமைக்கு அவரைத் தள்ளின. நிர்பயா இறந்துபோனார்!

‘பயமற்றவள்’ என்று பொருள்படி ஜோதி பாண்டேவுக்கு ‘நிர்பயா’ என்கிற பெயர் (பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை அவருடைய அல்லது அவருடைய குடும்பத்தாரின் அனுமதியின்றி பொதுவெளியில் சொல்லக்கூடாது என்பது சட்டம்) வைக்கப்பட்டது. “என் மகள் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. அவர் தன் மீது திணிக்கப்பட்ட குற்றத்துக்கு எதிராகப் போராடித்தான் தன் உயிரை இழந்திருக்கிறாள். எனவே, அவள் பெயரைச் சொல்வதில் எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை” என்றார் அவருடைய தந்தை.  என்றாலும் இந்தியாவில் நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கான உச்சபட்ச அறிவுறுத்தலாக  ‘நிர்பயா’ என்கிற பெயர் இருக்க வேண்டும் என்றே  அரசும் சமூக ஆர்வலர்களும் ஊடகங்களும் இந்தப் பெயரைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் குற்றம் நடந்த அடுத்த 24 மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் 17 வயது சிறுவன். சிறைச்சாலையில் ஒரு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுவனைத் தவிர மற்ற நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  இந்திய தண்டனைச் சட்டத்தின்படி 18 வயதானவர்களுக்குத்தான் தண்டனைத் தர முடியும். 17 வயது 5 மாதங்களுமான சிறுவனுக்கு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி அங்கே அவன்  மூன்று வருடங்கள் தண்டனையை கழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னது.  இந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் மற்றவர்களுக்கு கிடைத்த மரண தண்டனை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு சிறந்த பாடமாக இருக்கும் என மக்கள் அதை வரவேற்றார்கள்.

இந்தியாவின் எந்தவொரு மூலையில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாலும்  நம் நினைவில் வந்துபோனார் நிர்பயா.  தற்போது மீண்டும் செய்தியாகியிருக்கிறார் நிர்பயா. இந்த முறை மீண்டும் தன்னுடைய நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.  நிர்பயா வழக்கில் மிகக் கொடூரமான குற்றவாளி வேறு யாருமல்ல, அந்த 17 வயது சிறுவன்தான்.  தன்னுடைய மூன்று வருட தண்டனைக் காலத்தை முடித்துக்கொண்டு டிசம்பர் 16-ஆம் தேதி சிறார் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து சிறுவன் இளைஞனாக வெளிவருகிறார்.
பாலியல் வன்கொடுமை என்பதையும் தாண்டி, நிர்பயாவை இரும்புக் கம்பியால் பாலியல் உறுப்புகளில் தாக்கியது, உடலெங்கும் கடித்து காயத்தை ஏற்படுத்தியது போன்ற மிக மிகக் கொடூரமான குற்றங்களைச் செய்தது இந்த 17 வயது சிறுவனே. இந்நிலையில் எப்படி அவனை வெளியே சுதந்திரமாக விடலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

உள்துறை அமைச்சகம், அந்த இளைஞனிடம் இனி ஒழுங்காக நடந்துகொள்வேன் என கையெழுத்து வாங்கிக்கொண்டும் விடுதலை செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. விடுதலைக்குப் பிறகு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் அங்கேயே தங்க வைக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகிவருகிறது.

சிறு வயதில் பாலியல் ரீதியாக அவன் துன்புறுத்தப்பட்டதால்தான் நிர்பயாவிடன் அப்படி நடந்துகொண்டான் என குற்றவாளியின் வழக்கறிஞர் சொல்கிறார்.
இந்திய தண்டனைச் சட்டப்படி தண்டனை பெறும் வயதை 18லிருந்து 16ஆக குறைப்பது குறித்து விவாதங்கள் எழுந்துவருகின்றன.  16 வயது என்பது மனித வாழ்நாளின் மூன்றில் ஒரு பகுதி. 16 வயதில் தண்டனை பெற்ற ஒருவன் மீதி உள்ள தன் வாழ்நாளில் திருந்தி வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு என்பதாலேயே கடுமையான தண்டனை பெறும் வயதை 18 ஆக வைத்திருக்கிறார்கள்.

மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உள்ள மனிதநேய கண்ணோட்டத்தோடு, மிகக் கொடூரமான இதுபோன்ற குற்றங்களைச் செய்தவர்களை மிக சொற்ப தண்டனையுடன் வெளியே சுதந்திரமாக வெளியே விடுவது நல்ல முன்னுதாரணமாக முடியாது.  மூன்று வருட தண்டனை என்பதை அதிகப்படுத்தும் சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும்.  ஏனெனில் சமீபகாலமாக சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது. இவர்கள் மற்ற வயதினரைக் காட்டிலும் மிகக் கொடூர மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். இவர்களை அதிகபட்ச தண்டனை வரம்புக்குள் கொண்டுவரவிட்டாலும் குறைந்தபட்ச தண்டனை இவர்கள் செய்த குற்றங்களுக்கு ஒருபோதும் நீதி பெற்றுத்தராது என்கிறார்கள் சமூக செயல்பாட்டாளர்கள்.

“அவன் சுதந்திரமாக வெளியே வந்தால், எங்களுக்கு எப்படி நீதி கிடைத்ததாக சொல்லிக் கொள்ள முடியும்? அரசு அவனை வெளியே விட்டால், மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். இது போன்ற கொடூர குற்றச் செயல்களில் ஈடுபடும் இவன் வயதில் உள்ளவர்களுக்கு தவறான செய்தியைத்தான் அரசு சொல்லப் போகிறதா?” என்று தன் மகளுக்கு நீதி கேட்கிறார் நிர்பயாவின் தாய்.

நீதி மீண்டும் அரசின் கைகளில்!

தினச்செய்தி(13-12-2015) நாளிதழில் வெளியான கட்டுரை.

 

பாலியல் வன்கொடுமை குற்றம் செய்தவருக்கு ஆண்மை அகற்றம் தண்டனை சரியா?

Untitled

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பலாத்காரர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல்படுத்துவதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பரிந்துரைத்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தால் குற்றம் குறைந்துவிடுமா என்று சர்ச்சை கிளம்பியதுபோல் நீதிபதியின் ‘ஆண்மை அகற்ற’க் கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2011–ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் காப்பகத்துக்கு வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர், அந்த காப்பகத்தில் தங்கியிருந்து 9–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் ஒருவருக்கு கல்வி வாய்ப்பு வழங்குவதாக கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதன் பின்னர் ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற நிறுவனத்தின் மூலம் (Justice and Care Organisation) அச்சிறுவன் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அந்த நபரை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்திய தண்டனைச் சட்டம், சிறார் நீதி பாதுகாப்புச் சட்டம் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தனக்கு எதிராக கீழ் கோர்ட் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி பிரிட்டனைச் சேர்ந்த அந்த நபர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், “பாலியல் அச்சுறுத்தல்களை கையாள்வதில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் பயனற்றதாக இருக்கும்போது, இந்த நீதிமன்றம், நாடு முழுவதும் நடக்கும் மிகக் கொடூரமான குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை, கூட்டு பலாத்காரங்களை கண்டும் காணாமல் கைகட்டி வேடிக்கைப் பார்க்க முடியாது.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பலாத்காரர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல்படுத்தினால், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வெகுவாக குறையும்” எனக் கூறி, குற்றவாளியின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் அவர், “கட்டாய ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை முறை என்பது காட்டுமிராண்டித்தனமாகத் தெரியலாம். ஆனால், காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு அதே பாணியில்தான் தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். தண்டனையை நினைத்துப் பார்க்கும்போதே ஒருவர் அந்த குற்றத்தைச் செய்வதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். நீதிபதியின் கருத்து சமூக ஊடகங்களிலும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

“ஆண்மை அகற்றம் செய்வதால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை அந்தத் துறைச் சார்ந்த மருத்துவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆனால் எனக்குப் பல அடிப்படைக் கேள்விகள் உள்ளன. பாலியல் வன்கொடுமை என்பது மட்டும்தான் இங்கே மிகப் பெரிய குற்றமா? ஆண்மை நீக்கப்பட்ட ஒருவன், ஒரு பெண்ணை பொதுவெளியில் நிர்வாணமாக்கி, துன்புறுத்தினால்-கொலை செய்தால் அது எவ்வகையான குற்றமாகப் பார்க்கப்படும்?

இயல்புக்கு மீறிய பாலியல் செயல்பாடு இருந்தால் அதற்குரிய மருத்துவத்தை அளிப்பதை ஒரு வழியாக மேற்கொள்ளலாமே தவிர, ஆண்மை அகற்றம் செய்வதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. 17 வயதில் ஒரு இளைஞன் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை செய்து அதற்குத் தண்டனையாக ஆண்மை அகற்றம் செய்யப்படுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் அடுத்து வாழப்போகும் 50 ஆண்டுகளில் எப்படிப்பட்ட மனிதனாக வாழ்வான்? திருந்தி வாழ்வானா? அல்லது வெறிப்பிடித்தவனாக மாறுவானா?” என்று கேட்கிறார் பெண்ணிய சிந்தனையாளர் ஓவியா. பாலியல் குற்றங்கள் தனி மனிதச் செயல்பாடாகப் பார்க்கப்படக்கூடாது. ஒட்டுமொத்த சமூகமும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் ஓவியா.

“பாலியல் வன்கொடுமை தண்டிக்கப்பட வேண்டிய, இந்தச் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய குற்றம்தான். ஆனால், ஒருவன் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுவதற்கு அவன் மட்டுமே காரணமா? என்னைப் பொருத்தவரை இந்தச் சமூகம்தான் காரணம் என்பேன்.

இந்தச் சமூகத்தில் எங்குப் பார்த்தாலும் பாலியலை மிகைப்படுத்தும் சம்பவங்கள்…உதாரணத்துக்கு ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் அரைகுறை ஆடைகளுடன் பாலுணர்வுகளை வெளிப்படுத்தும் சினிமா பாடல்களுக்கு சிறுவர், சிறுமியர் நடன ஆடுகின்றனர். அதைப் பெற்றோர் பார்த்து ரசிக்கின்றனர். பாலுணர்வுகளை மிகைப்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் இவர்கள்தான் பாலியல் வன்கொடுமை செய்தால் ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டும், அவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று கர்ஜிக்கிறார்கள்” என்று கூறினார் ஓவியா.

நீதிபதியின் ஆண்மை அகற்றக் கருத்து, சமூகவியலாளர்களால் பிற்போக்குத்தனமாகப் பார்க்கப்பட்டாலும் அவரே பாலியல் கல்வி குறித்தும் பேசிகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். “பதின்ம பருவக் குழந்தைகள், பாலியல் சார்ந்த விவரங்களை தங்களது நண்பர்கள், இணையம், சினிமா ஆகியனவற்றின் மூலம் அரைகுறையாக தெரிந்துகொள்கின்றனர். தவறான புரிதல் ஆபத்தானது. எனவே அவர்களுக்கு பாலியல் தொடர்பாக அறிவியல்பூர்வமான தகவல்களை பாலியல் கல்வி மூலம் வழங்க வேண்டும்” என்கிறார் நீதிபதி கிருபாகரன்.

“பாலியல் குறித்த சரியான புரிதல்களை சமூகத்தில் ஏற்படுத்துவதை விட்டுவிட்டு, ஒரு குறிப்பிட்ட நபருக்கு தண்டனை கொடுத்துவிடுவதால் மட்டும் பாலியல் குற்றங்கள் குறைந்துவிடாது. சாமானியரைப் போல இயல்புக்கு ஒத்துவராத ஆண்மை அகற்றம் போன்ற பரிசீலனைகளை உயர்நீதிமன்ற நீதிபதியே செய்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது” என்கிறார் ஓவியா.

அண்மையில் டெல்லியில் நடந்த சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும்வகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறுவர் குற்றவாளிகளுக்கான தண்டனை பெறும் வயதை 18லிருந்து 15ஆக குறைக்கும் சட்டத் திருத்தம் கொண்டுவருவது குறித்து தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை எப்படி குறைப்பது என்கிற விவாதம் எழுந்துகொண்டிருக்கும் நிலையில் நீதிபதி கிருபாகரனின் கருத்து மற்றொரு விவாதத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

ஓவியா சொல்வதுபோல சமூகத்தின் அடித்தள சிந்தனைகளில் மாற்றம் கொண்டுவராதவரை கடுமையான சட்டங்கள் போட்டு பாலியல் குற்றங்களை குறைத்துவிட முடியாது என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர வேண்டும்.

 

 

சாதி இந்திய சமூகத்தின் இயல்பான மனநோய்!

ஆதவன் தீட்சண்யாவின்  ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை முன்வைத்து…

சமீபத்தில் மகாத்மா புலேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் படித்தேன். 19ம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இந்திய சமூகத்தில் வேறோடிப் போயிருக்கும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து, கட்டுக்கதைகளை உடைக்கும் வகையில் விமர்சனப் போக்கில் எழுதியிருப்பார். அந்த நேரத்தில் சாதி ஒடுக்குமுறைகளை குறித்து ஆட்சியாளர்களுக்கு அறிவிக்கும்பொருட்டும் ஒடுங்கிக் கொண்டிருந்த மக்களின் உரிமைகளை உணர்த்தும் பொருட்டும் சமூக நீதிக்கான பாதையை வகுத்துக் கொடுத்தது அவர் எழுத்து.  புலேவின் தொடர்ச்சியாக ஆதவன் தீட்சண்யாவின் எழுத்தைப் பார்க்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து பலரும் எழுதுகிறார்கள், அவையெல்லாம் இந்த மக்களின் அவலங்கள், பாடுகள் குறித்துதான் அதிகம் பேசுகின்றன. இத்தகைய அவலங்கள், பாடுகளுக்கான சமூக காரணிகளை இவை பேசுவதில்லை.
ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’  முன் அட்டையில் தொடங்கி பின் அட்டை வரை நந்தஜோதி பீம்தாஸ் என்கிற எழுத்தாளர் வழியாக, சமகால சமூக அரசியல் சார்ந்து தனித் தனி களங்களுக்கு படிப்பவரை இட்டுச் செல்கிறது.

Adhavan the novel

மகாத்மா புலே, அயோத்திதாசர், அம்பேத்கர், பெரியார் என நம் புரட்சியாளர்கள் சாதி குறித்த பெருமிதங்களை உடைத்தெறிந்துவிட்டார்கள். நூறாண்டுகளாக தொடரும் இந்த சாதி வேரை பிடிங்கி எறியும் பனி இன்னமும் முடிவு பெறும் கட்டத்தை அடையவில்லை. இன்றைய கட்சி அரசியல் சூழல் சாதிக்கு குளிர் நீரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் ரத்தத்தையும் சத்தாக அளிக்கிறது. புரட்சியாளர்கள் சடங்குக்குரிய கற்சிலைகளாக மட்டும் இன்று நினைக்கப்படுகிறார்கள். சாதி இல்லை, சாதியெல்லாம் இப்ப யாரு பார்க்கிறா? போன்ற பேச்சுக்கள் அதிகபட்சம் 1% க்கும் கீழே உள்ள மெட்ரோவில் வசிக்கும் மேல்தட்டு வர்க்கம் கோபித்துக் கொள்கிறது. 1%த்துக்கும் குறைவான இந்த மக்கள் சாதியை விட்டொழித்தவர்கள் என்று எண்ணி விடுவதற்கு வாய்ப்பு உண்டு, உண்மையில் இவர்களை சாதியைக் கண்டு கொள்ளாதவர்கள் என வகைப்படுத்தலாம். எனக்கென்ன, எனக்கொன்றும் சாதியால் பாதிப்பில்லை என்பது இவர்களுடைய மனோபாவம். இந்த 1%த்தினரில் தலித் இருக்கலாம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பார்ப்பனர் என எந்த சாதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். இவர்கள் ஒன்று படுவது வர்க்க அடிப்படையில், அதாவது மேல்தட்டு வர்க்கம் என்ற அடிப்படையில்.

இந்த 1 சதவீதத்தினர் குறித்து நாம் ஏன் இவ்வளவு ஆராய வேண்டி இருக்கிறது என்றால், இவர்கள்தான் முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள், கொள்கைகள், திட்டங்கள் போடுபவர்களாக இருக்கிறார்கள், இவர்களின்றி அதிகாரத்தின் ஓர் அணுவும் அசையாது! இவர்கள் கண்ணைக் மூடிக்கொண்டு சதா வசதிகளில் திளைத்துக்கொண்டு எல்லாம் நல்லதாகவே நடக்கிறது, நல்லதாகவே நடக்கும் என்று மந்திர வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அம்பேத்கர் பாடலை ரிங் டோனாக வைத்திருக்கும் ஒரே காரணத்துக்காக ஒரு தலித் இளைஞன், ‘சாதி’ இந்துக்களால் அடித்து, நொறுக்கப்பட்டு, நெடுஞ்சாலைகளில் வாகனங்களால் மீண்டும் மீண்டும் நசுக்கப்படும் விபத்துக்குள்ளான ஒரு பிராணியைப் போல, ‘சாதி’ இந்துக்களின் இரு சக்கர வாகனங்களால் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறான். இப்படியான கொடூரத்திலும் கொடூர மனநிலை, மனநோய் இந்திய சாதிய சமூகத்தின் இயல்பான குணங்களாக இன்று வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பேசப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் சுதந்திரத்திற்குப் பிறகு, கட்சிகளின் அரசியல் அதிகார போதையில் மறக்கடிக்கப்பட்டன.   சுதந்திர இந்தியாவின் ‘வளர்ச்சி’ திட்டங்களுக்கிடையே திறந்துவிடப்பட்ட முதலாளித்துவ கதவுகள், உலகமயமாக்கலின் நவீன வசதி வாய்ப்புகள் சமூக சீர்திருத்தங்களிலிருந்து பெரும்பான்மை மக்களை தள்ளி வைத்துவிட்டன. தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள் மீதான ஒடுக்குதல்கள் சுதந்திரத்துக்கு முன் இருந்த இந்தியாவின் நிலையைப் போல இன்றும் ஒத்துப் போகின்றன. இன்னமும் கிராமங்களில் சேரிகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘சட்டப்படி’ தடை செய்யப்பட்ட பலதார மணமுறை இன்னமும் வட இந்திய பகுதிகளில் கோலுச்சுகிறது. நீர்குடங்கள் சுமப்பதற்காகவே இரண்டு, மூன்று ‘தண்ணீர்’மனைவிகள் ஒரு ஆணுக்குத் தேவைப்படுகிறார்கள். அமைச்சர்கள் பாலியல் வன்கொடுமைகள் பரஸ்பர ஒப்புதலுடனே நடப்பதாக அறிவிக்கிறார்கள். (பாலியல் வன்கொடுமை செய்வதை பொழுதுபோக்காக கொண்ட அந்த கால ஜமீன் மைனர்களின் வாரிசுகள்) பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் அனுபவத்தின் வாயிலாகத்தான் இத்தகைய முடிவுகளுக்கு வரமுடியும். அக்ரஹாரங்களில் நுழைவதற்கே தகுதி வேண்டும் என்பதைப் போல ஐஐடி போன்ற இந்தியாவின்  உயர்ந்த கல்வி நிறுவனங்கள் நவீன அக்ரஹாரங்களாக உள்ளன.  அக்ரஹாரத்தில் கீழ்சாதிகள் நுழைவது தடை செய்யப்பட்டதைப்போல அம்பேத்கரும் பெரியாரும் இன்று தடை செய்யப்படுகிறார்கள். ஆக, சுதந்திரம் யாருக்கு வந்தது என்பது குறித்தும் எது சுதந்திரம் என்பது குறித்தும் நிறையவே எண்ணத் தோன்றுகிறது.

கடத்தப்பட்டும் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பிக்கவும் இலங்கைக்குச் சென்ற தலித்துகளின் அசாதாரண மரணங்கள், இன்று உலகம் முழுக்கவும் அகதிகளாக பயணிக்கும் மக்கள் படும் துயரங்களுடன் ஒத்துப்போகிறது. உதாரணமாக மியான்மரின் ரொஹியாங்கா முஸ்லீம்களின் நிலை, நாவலில் சொல்லப்படும் மலையகத் தமிழர்களுடம் பொருந்திப் போகிறது.

தலித்துகளின் மீதான வன்முறைகள், சாதிய படிநிலைகளை தீவிரமாக்கும் போக்கு,  ஒடுக்கப்பட்ட மக்கள்  அடிப்படை வாழ்வாதாரத்துக்காக  சந்திக்கும் நெருக்கடிகள் சமீப காலங்களில் அபாய நிலையை எட்டியுள்ளன. சமூக செயல்பாட்டாளர்கள் தீவிரமாக செயல்பட்டாக வேண்டிய நேரத்தில், அதற்கொரு முன்னுரையை அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்நாவல்.

ஒரு புனைவு உங்களுக்கு சமூகத்தின் பல்வேறு இடர்பாடுகளை அழுத்தங்களை அடக்குமுறைகளை  இனம் காட்டுகிறதென்றால் அது புனைவு என்கிற வரையறைத் தாண்டி வேறொன்றை அடைகிறது. . ஆதவன் தீட்சண்யாவின் ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலை வாசித்த பிறகு அதை சீர்திருத்த எழுத்து என்று வரையறை செய்கிறேன். ‘இஸங்கள்’ ‘கூறுகள்’ பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது, நான் ஒரு வாசகி, நான் வாசிக்கின்ற ஒன்று எத்தகையது என்று கருத்து சொல்லும் உரிமை எனக்குள்ளதாக நினைக்கிறேன்.

நாவலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஆன் லைனில் வாங்கலாம்..

ஊடகங்கள் செய்யும் பாலியல் வன்கொடுமை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பதிவு செய்வதற்காக இன்றைய நாளிதழ்களை தேடியபோது, கிருஷ்ணகிரி கல்லூரி பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தியை தினமலர் எழுதியிருக்கும் விதம் மிகவும் அருவருக்கத்தக்கதாக இருந்தது. உடலால் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணை எழுத்தால் வன்முறை செய்திருந்தது தினமலர். சம்பவத்தை நேரில் பார்த்து எழுதியதைப் போல் எல்லா தகவல்களும் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் பாதி இட்டுக்கட்டிய பொய். மஞ்சள் பத்திரிகைகளில் எழுதுவதுபோல படிப்பவர்களுக்கு கிளுகிளுப்பான உணர்வை தர வேண்டும் என்று எழுதுபவர்கள் பத்திரிகையாளர்களா? இவர்களிடம் எப்படிப்பட்ட ஊடக அறத்தை எதிர்பார்க்க முடியும்? இதோ இந்தச் செய்தியைப் படித்துப் பாருங்கள்.

கிருஷ்ணகிரி: காதலனை கட்டிப்போட்டு விட்டு, கல்லூரி மாணவியை கற்பழித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டினம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், வேலம்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் ஒருவருக்கும் இடையே கடந்த ஒராண்டாக காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் கல்லூரி முடிந்த பின், பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை, இருவரும் காரில் சென்று ராயக்கோட்டை அருகேயுள்ள கோட்டம்பட்டி என்ற இடமருகே, உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த, வாகன ஓட்டிகளான பிரகாஷ்(28), சுப்ரமணியம்(28), பிரகாஷ்(24) மற்றும் மணி(22) ஆகியோர் காதலர்கள் இருவரையும் பார்த்துள்ளனர். அவர்கள் நான்கு பேரும், காதலனை கட்டிப்போட்டு விட்டு, கல்லூரி மாணவியை கற்பழித்துள்ளனர். மேலும் அதனை தங்கள் செல்போனில் பதிவு செய்தனர். பிரகாஷ் என்பவரின் செல்போன் எண்ணை கொடுத்து, தாங்கள் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் என மிரட்டியுள்ளனர். சற்று நேரட்டில் மாணவியும், அவரது காதலனும் மயங்கினர். இதனை அந்த பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் கண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சேலம் சரக டி.ஐ.ஜி.,அமல்ராஜ் மற்றும் எஸ்.பி., கண்ணம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். கல்லூரி மாணவியிடமிருந்த செல்போன் எண்ணை கொண்டு 4 பேரையும்பிடித்த போலீசார், அதில் மணியை தவிர மற்ற மூன்று பேரை கைது செய்துள்ளனர். மணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.