’’உணர்வுகளைச் சொல்வதே சிறந்த புகைப்படம்!’’

portrait

”ஒரு புகைப்படம், உங்களைப் பாதிக்கணும். சிறு புன்னகை, ஒரு துளி கண்ணீர், பொங்கும் கோபம் என உங்களுக்குள் ஏதோ ஓர் உணர்வைக் கிளப்ப வேண்டும். அதுதான் சிறந்த புகைப்படம்!” – நிதானமான வார்த்தைகளில், அழுத்தமாகப் பேசுகிற நந்தினி வள்ளி, புகைப்படக் கலைஞர்!
தமிழ்நாட்டில் அவ்வளவாகப் பிரபலமாகாத ‘ஸ்டேஜ் போட்டோகிராஃபி’ நந்தினி வள்ளியின் அடையாளம்!
”இயற்கையாக இருப்பதை எடுப்பது ஒரு வகை. கமர்ஷியலாக ஜோடித்து எடுப்பது இன்னொரு வகை. ஸ்டேஜ் போட்டோகிராஃபி என்பது மூன்றாவது வகை. சுருக்கமாகச் சொன்னால், இது மாடர்ன் ஆர்ட் மாதிரி. ஏதாவது ஒரு எண்ணத்தை அடிப்படையாகவைத்து, அதற்கான விஷயங்களை செயற்கையாக உருவாக்குவோம். கிருஷ்ணர், இந்தக் காலத்தில் பூமிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பது ஒரு கான்செப்ட். நட்சத்திர விடுதியில் கிருஷ்ணர் உட்கார்ந்திருப்பார். அப்படி ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போது உங்களுக்குள் விதவிதமான உணர்வுகள் தோன்றுமே… அதுதான் ஸ்டேஜ் போட்டோகிராஃபி!” என்று விளக்கம் தருகிறார் நந்தினி வள்ளி.

Nandhini valli
”எம்.ஏ., ஃபிரெஞ்ச் படித்து முடித்த பிறகு, லண்டன் ஆர்ட் இன்ஸ்டிட்யூட்டில் போட்டோகிராஃபி படிக்க வாய்ப்பு கிடைச்சது. தொழில்நுட்பம் எங்கேயும் கற்றுக்கொள்ளலாம். படைப்புத்திறன் நம்முடையதுதானே. நாமே நமக்கான ஸ்டைலை உருவாக்கிக்க முடியும். அப்படி எனக்காக நான் பிடிச்ச ஸ்டைல், ஸ்டேஜ் போட்டோகிராஃபி!
முதல் முயற்சியிலேயே என் படங்கள் நிறைய கேலரிகளில் இடம்பிடித்துவிட்டன. என் எல்லைகள் இன்னும் இன்னும் விரிவடைய வேண்டும் என்பதே என் விருப்பம்!” என்கிறார் நந்தினி வள்ளி.

நம்மைச் சுற்றி 1000 போபால்கள்!

“நள்ளிரவில் கனவுகளோடு தூங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி, லட்சக்கணக்கானவர்களை முடமாக்கிய போபால் விபத்து நடந்து 22 வருடங்கள் ஓடிவிட்டன. அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியோ முறையான நிவாரணங்களோ கிடைக்கவில்லை. இத்தனை பேரை காவு வாங்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர்கள் இன்னும் சொகுசு வாழ்க்கையில் தான் திளைக்கிறார்கள். உலகம் அறிந்து நடந்த இவ்வளவு பெரிய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லையே?  இன்னும் நம்மைச் சுற்றி 1000 போபால்கள் இருக்கின்றன!” என்கிறார் சென்னையில் இயங்கும் சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா நாராயணன்.

”கடலூர் மாவட்டத்திலுள்ள சிப்காட் வளாகத்தில் பெருமளவில் காற்று மாசு நிறைந்து இருக்கிறது. அழுகிய முட்டையின் நாற்றம், ரப்பர் எரிக்கும் போது வரும் மணம், அழுகிய உடம்பின் நாற்றம், நெயில் பாலிஷ் வாசனை என மாசுபட்ட காற்றிலிருந்து ஏராளமான சாம்பிள்கள் எடுத்திருக்கிறோம். அத்தனையும் சிப்காட்டிலுள்ள ஒவ்வொரு கம்பெனியும் வெளிவிடும் மாசுக்கள்.

இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு தொடர்ந்து சளி, ஆஸ்துமா என சுவாசம் தொடர்பான பாதிப்புகள் அதிகம். இதில் இன்னொரு அவலம்…சிப்காட் பகுதியில் வாழும் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவது சவாலான விஷயமாகிவிட்டது. பெண்கள் வயதுக்கு வருவது தள்ளிப்போவது முதல், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு, கருச்சிதைவு, குழந்தையின்மை என்று அவர்களின் வாழ்க்கையில் கோர விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கின்றன.

இந்தப் பகுதியின் ஒவ்வொரு அணுவிலும் கலந்துவிட்ட விஷ வேதிப் பொருட்கள் சிப்காட்டில் மட்டுமல்ல, மேட்டூரில் உள்ள சன்மார் ஆலை, சென்னைக்கு அருகில் அங்கீகரிக்கப்படாத குப்பை எரிக்கும் இடமாக மாறிக் கொண்டிருக்கும் கொடுங்கையூர், கேரளாவில் உள்ள காசர்கோடு எண்டோசல்பான் ஆலை என்று ஆபத்தை அடுத்த தலைமுறைக்கு விதைத்துக் கொண்டிருக்கும் இவற்றின் ஹிட் லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கிறது.

சென்னை கொடுங்கையூரில் குப்பைகளை எரிப்பதால் அருகில் வசிக்கும் 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. சன்மார் ஆலை வெளியிடும் ரசாயனத்தால் மேட்டூரைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நிலத்தடி நீரின் நிறமே மாறிவிட்டது. அந்தப் பகுதிகளில் மக்கள் தண்ணீரைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தும் புதிய பாத்திரங்கள் ஒரு வாரத்திற்குள் பழுப்பு நிறத்துக்கு வந்துவிடும். இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் உடல் குறைபாடுகளுடனோ, மூளை வளர்ச்சி அற்றவர்களாகவோ பிறக்கிறார்கள். இதைத்தான் அந்தந்த பகுதியில் வசிக்கும் தன்னார்வம் மிக்க புகைப்படக் கலைஞர்களை வைத்து பதிவு செய்திருக்கிறோம்.

இந்த இடங்களில் எந்த வகையில் பாதிப்பு இருக்கிறது என்பதை ஆவணமாக அரசுக்கு கொடுக்கப் போகிறோம். நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடவும் தயாராக இருக்கிறோம்” என்கிறார் ஸ்வேதா.

சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழுவினர் ‘1000 போபால்கள்’ என்ற பெயரில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியே வரும் கழிவுகள் எந்த அளவு மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது என்பதை புகைப்படமாக்கி காட்சியமைத்திருந்த போது ‘குங்குமம்’ இதழில் எழுதியது.