அதிகரித்துவரும் சிறார் குற்றங்கள்: சிறார் நீதிச் சட்டம் திருத்தப்பட வேண்டுமா?

வழக்கு : 1

2012 -ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் மதிப்பெண்கள் குறைத்தார் என்பதற்காக ஆசிரியைக் குத்திக் கொன்றார் ஒன்பதாம் வகுப்பு மாணவர். அவருக்கு சிறார் நீதிமன்றம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் 2 ஆண்டுகள் இருக்க தண்டனை கொடுத்தது.

வழக்கு: 2

மிகவும் பேசப்பட்ட  நிர்பயா வழக்கு. 2013-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஜோதி பாண்டே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். குற்றவாளிகளில் அதிகபட்ச வன்முறையை ஜோதி மீது செலுத்தியது 17 வயதான சிறுவர் குற்றவாளி என்பது நிரூபணமானது. மற்ற அனைவருக்கும் தூக்கி தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறார் நீதிமன்றத்தில் 3 வருட தண்டனை பெற்றார் 17 வயது குற்றவாளி.

இந்த இரண்டு வழக்கிலும் குற்றவாளிகள் சிறுவர்கள்தான் முதன்மையான மற்றும் அதிகபட்சம் குற்றம் செய்தவர்களாக இருக்கிறார்கள்.  இந்திய தண்டனைச் சட்டத்தின் படி 18 வயதுக்குக் கீழானவர்கள் எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும் அவர்கள் சிறார் நீதிமன்றம் மூலமே விசாரிக்கப்படுவார்கள்.  சிறார் நீதிச் சட்டம் – 2000ன் படி, கொடிய குற்றம் புரிந்த சிறுவர்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை வழங்க முடியும். இந்த மூன்று ஆண்டுகளும் அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் தங்க வைக்கப்படுவார்கள்.

’நிர்பயா’ வழக்குக்குப் பிறகு, சிறார் நீதி சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று பேச்சு சமூகத்தில் வேகமாக எழுந்தது. வேறொரு கொலை வழக்கில் சிறார் என்ற காரணத்தைக் காட்டி தண்டனையை குறைக்க முனைந்த ஒருவரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட தீவிர குற்றங்களை சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கலாமா என்பதை மறு ஆய்வு செய்யுமாறு  மத்திய அரசைக் கேட்டது.

2014-ஆம் ஆண்டு சிறார் தண்டனை பெறும் வயதை 18-லிருந்து 16 வயதாக குறைக்கும் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தது மத்திய அரசு. இந்த சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தற்சமயம் நடந்துகொண்டிருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவை இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ், இடதுசாரிகள், அதிமுகவினர் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

சிறார் நீதி சட்டத்தில் மாற்றம் வேண்டும். ஆனால் தண்டனை வயதை 18லிருந்து 16 ஆக குறைப்பதை ஏற்க முடியாது என்பதே இந்தச் சட்ட மசோதாவின் எதிர்ப்புக்கு அவர்கள் சொல்லும் காரணம்.

மத்திய குற்ற ஆவணக் காப்பகம் 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோரில்  5 சதவிகிதம் சிறார் என்கிறது.  ஆண்டுக்கு ஆண்டு இந்த சதவிகிதம் அதிகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் இந்தச் சிறார்களின் குற்றத்துக்கு 3 வருட தண்டனை என்பது போதுமானதல்ல என்பதே சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்பவர்களின் வாதம். சிறார் குற்றங்களை பொது சட்டத்தின் மூலம் தண்டிக்கும் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளில் சிறுவர் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் இவர்கள் சொல்கிறார்கள்.

தூக்குதண்டனைகளால் குற்றங்கள் குறைந்துவிடுவதில்லை என்பதைப் போல சிறார் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவது குற்றத்தை குறைத்துவிடாது என்பது சமூக செயல்பாட்டாளர்களின் கருத்து.  இவர்கள் முன் வைக்கும் முக்கியமான காரணம், சிறார் குற்றவாளிகள் உருவாக்கப்படுவதற்கான சமூகக் காரணிகளை கண்டறியுங்கள் என்பதே.
முதல் வழக்கை எடுத்துக் கொள்வோம். இந்த வழக்கில் குற்றம் செய்த சிறுவன், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மதிப்பெண்களை முன்வைத்து சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும் அவனுடைய குடும்ப-சமூக சூழல்தான் அவனைக் குற்றவாளி ஆக்கியிருக்கிறது.

இரண்டாவது வழக்கில் கோடூர குற்றங்கள் செய்த சிறுவன், குழந்தை பருவம் முதலே பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியிருக்கிறார், மனதளவில் அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பழிவாங்கும் விதமாக அபலையாக தன்னிடம் சிக்கிய ஜோதி பாண்டே மீது செலுத்தியிருக்கிறார்.

குற்றவாளிகளாக்கப்படும் சிறார்களின்  பெரும்பாலான பின்னணிச் சூழல் வறுமையும் சுரண்டலும் நிறைந்ததாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர்கள் தண்டனை பெற்று தங்களை சீர்திருத்திக் கொள்ள அனுப்பப்படும் சிறார் சீர்திருத்தப் பள்ளிகளின் நிலைமை படுமோசமாக இருக்கின்றன என்பதை  இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன என்றும் அந்த இடங்களை வரும் ஜனவரிக்குள் நிரப்ப வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. சீர்திருத்தப் பள்ளிகளில் அடிக்கடி சிறுவர்கள் தப்பிச் செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.

அவர்களை கவனித்துக் கொள்ளவே ஆட்கள் இல்லை என்னும் போது அவர்களை பண்படுத்தும் சீர்திருத்தும் நடவடிக்கைகள் எந்த வகையில் சிறப்பாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. கொலை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் செய்த சிறார்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை நீட்டிக்க வேண்டும். சீர்திருத்தப் பள்ளிகளுக்கான பண்படுத்தும் நடவடிக்கைகளை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து மேம்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக குற்றங்களுக்கு காரணமான சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நடவடிக்கைகளை அரசு தொலைநோக்கோடு திட்டமிட வேண்டும். இவைதான் சிறார் குற்றங்களை குறைக்கும்; கடுமையான சட்டங்கள் அல்ல!

மீண்டும் நீதி கேட்கிறார் நிர்பயா!

நிர்பயாவை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. டிசம்பர் 16-ஆம் தேதி 2012ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் ஆறு பேரால் மிகக் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பேருந்திலிருந்து வீசியயெறியப்பட்டவர். வழிபோக்கர்கள் அவரை காப்பாற்றினர்.  படுபயங்கரமாக சிதைந்துபோன அவருடைய பால் உறுப்புகளும் அதனால் ஏற்பட்ட இரத்த இழப்பும் மருத்துவசிகிச்சையால் சரியாக்க முடியாத நிலைமைக்கு அவரைத் தள்ளின. நிர்பயா இறந்துபோனார்!

‘பயமற்றவள்’ என்று பொருள்படி ஜோதி பாண்டேவுக்கு ‘நிர்பயா’ என்கிற பெயர் (பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் பெயரை அவருடைய அல்லது அவருடைய குடும்பத்தாரின் அனுமதியின்றி பொதுவெளியில் சொல்லக்கூடாது என்பது சட்டம்) வைக்கப்பட்டது. “என் மகள் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. அவர் தன் மீது திணிக்கப்பட்ட குற்றத்துக்கு எதிராகப் போராடித்தான் தன் உயிரை இழந்திருக்கிறாள். எனவே, அவள் பெயரைச் சொல்வதில் எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை” என்றார் அவருடைய தந்தை.  என்றாலும் இந்தியாவில் நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கான உச்சபட்ச அறிவுறுத்தலாக  ‘நிர்பயா’ என்கிற பெயர் இருக்க வேண்டும் என்றே  அரசும் சமூக ஆர்வலர்களும் ஊடகங்களும் இந்தப் பெயரைப் பயன்படுத்தி வருகின்றனர்.

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் குற்றம் நடந்த அடுத்த 24 மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் 17 வயது சிறுவன். சிறைச்சாலையில் ஒரு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுவனைத் தவிர மற்ற நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  இந்திய தண்டனைச் சட்டத்தின்படி 18 வயதானவர்களுக்குத்தான் தண்டனைத் தர முடியும். 17 வயது 5 மாதங்களுமான சிறுவனுக்கு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி அங்கே அவன்  மூன்று வருடங்கள் தண்டனையை கழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னது.  இந்த விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் மற்றவர்களுக்கு கிடைத்த மரண தண்டனை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு சிறந்த பாடமாக இருக்கும் என மக்கள் அதை வரவேற்றார்கள்.

இந்தியாவின் எந்தவொரு மூலையில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாலும்  நம் நினைவில் வந்துபோனார் நிர்பயா.  தற்போது மீண்டும் செய்தியாகியிருக்கிறார் நிர்பயா. இந்த முறை மீண்டும் தன்னுடைய நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.  நிர்பயா வழக்கில் மிகக் கொடூரமான குற்றவாளி வேறு யாருமல்ல, அந்த 17 வயது சிறுவன்தான்.  தன்னுடைய மூன்று வருட தண்டனைக் காலத்தை முடித்துக்கொண்டு டிசம்பர் 16-ஆம் தேதி சிறார் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து சிறுவன் இளைஞனாக வெளிவருகிறார்.
பாலியல் வன்கொடுமை என்பதையும் தாண்டி, நிர்பயாவை இரும்புக் கம்பியால் பாலியல் உறுப்புகளில் தாக்கியது, உடலெங்கும் கடித்து காயத்தை ஏற்படுத்தியது போன்ற மிக மிகக் கொடூரமான குற்றங்களைச் செய்தது இந்த 17 வயது சிறுவனே. இந்நிலையில் எப்படி அவனை வெளியே சுதந்திரமாக விடலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

உள்துறை அமைச்சகம், அந்த இளைஞனிடம் இனி ஒழுங்காக நடந்துகொள்வேன் என கையெழுத்து வாங்கிக்கொண்டும் விடுதலை செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. விடுதலைக்குப் பிறகு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் அங்கேயே தங்க வைக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகிவருகிறது.

சிறு வயதில் பாலியல் ரீதியாக அவன் துன்புறுத்தப்பட்டதால்தான் நிர்பயாவிடன் அப்படி நடந்துகொண்டான் என குற்றவாளியின் வழக்கறிஞர் சொல்கிறார்.
இந்திய தண்டனைச் சட்டப்படி தண்டனை பெறும் வயதை 18லிருந்து 16ஆக குறைப்பது குறித்து விவாதங்கள் எழுந்துவருகின்றன.  16 வயது என்பது மனித வாழ்நாளின் மூன்றில் ஒரு பகுதி. 16 வயதில் தண்டனை பெற்ற ஒருவன் மீதி உள்ள தன் வாழ்நாளில் திருந்தி வாழ்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு என்பதாலேயே கடுமையான தண்டனை பெறும் வயதை 18 ஆக வைத்திருக்கிறார்கள்.

மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உள்ள மனிதநேய கண்ணோட்டத்தோடு, மிகக் கொடூரமான இதுபோன்ற குற்றங்களைச் செய்தவர்களை மிக சொற்ப தண்டனையுடன் வெளியே சுதந்திரமாக வெளியே விடுவது நல்ல முன்னுதாரணமாக முடியாது.  மூன்று வருட தண்டனை என்பதை அதிகப்படுத்தும் சட்ட திருத்தம் செய்யப்பட வேண்டும்.  ஏனெனில் சமீபகாலமாக சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது. இவர்கள் மற்ற வயதினரைக் காட்டிலும் மிகக் கொடூர மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். இவர்களை அதிகபட்ச தண்டனை வரம்புக்குள் கொண்டுவரவிட்டாலும் குறைந்தபட்ச தண்டனை இவர்கள் செய்த குற்றங்களுக்கு ஒருபோதும் நீதி பெற்றுத்தராது என்கிறார்கள் சமூக செயல்பாட்டாளர்கள்.

“அவன் சுதந்திரமாக வெளியே வந்தால், எங்களுக்கு எப்படி நீதி கிடைத்ததாக சொல்லிக் கொள்ள முடியும்? அரசு அவனை வெளியே விட்டால், மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். இது போன்ற கொடூர குற்றச் செயல்களில் ஈடுபடும் இவன் வயதில் உள்ளவர்களுக்கு தவறான செய்தியைத்தான் அரசு சொல்லப் போகிறதா?” என்று தன் மகளுக்கு நீதி கேட்கிறார் நிர்பயாவின் தாய்.

நீதி மீண்டும் அரசின் கைகளில்!

தினச்செய்தி(13-12-2015) நாளிதழில் வெளியான கட்டுரை.

 

சென்னையின் பெருமழையில் ஒரு பயணம்

CUgc0EpWUAAWjAk

நுங்கம்பாக்கத்தில் தேங்கிய நீரில் நீந்திச் செல்லும் பேருந்து

சென்னை மக்கள் திங்கள்கிழமை(23-11-2015) இரவை ஆயுசு முழுக்கவும் நினைவில் வைத்துக் கொள்வார். அப்படியொரு அனுபவம்; கொட்டித்தீர்த்த பெருமழையும் நகர முடியாமல் திணறிய வாகனங்களும் திங்கள் இரவை பேரிடர் நேர அனுபவமாக்கிவிட்டன.  அதிகபட்சம் ஒரு மணிநேரத்தில் போய் சேர்ந்துவிடக்கூடிய தொலைவில் இருக்கும் வீட்டுக்கு நான்கரை மணி நேரத்தில் போய் சேர்ந்தேன்.

விடாது துரத்திய மழையும், வழி நெடுக மக்கள் பட்ட பாடுகளும் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் நிறைந்துவிட்டன.  குறிப்பாக பெண்களின் அவஸ்தைகளை சொல்லியே ஆக வேண்டும். அதிகாலை 1 மணிக்கு, 4 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்த பெண்களின் அனுபவங்களைக் கேட்டபோது அவர்கள் மேல் அனுதாபம் கூடியது.

எனக்கிருந்த ஒரே பிரச்சினை என் மகன் பசியோடு காத்திருந்தான் என்பதுதான். ஒவ்வொரு அரை மணிநேரத்துக்கும் அவனைத் தொடர்பு கொண்டு ‘இதோ வந்துவிட்டேன்’ என சமாதானப்படுத்திக் கொண்டே இருந்தேன். ஒவ்வொரு முறையும் ‘நீ போம்மா அப்படித்தான் சொல்லுவ’ என்று சலித்துக்கொண்டு இணைப்பைத் துண்டிப்பான்.

பசிக்கிறதே என்று பிஸ்கெட் பாக்கெட்டுகளை பிரிக்கப் பார்த்து அதை பிரிக்கத் தெரியவில்லை என்றான். மனம் வலித்தது.  நல்லவேளையாக உணவகத்தில் தோசை கிடைத்தது. இருவரும் சேர்ந்து உண்டபோது மணி 11 ஆகியிருந்தது.

என் நிலைமை பரவாயில்லை என்றே தோன்றுகிறது. இரவு 1 மணி, 4 மணிக்கெல்லாம் வீடு போய் சேர்ந்தவர்களின் குழந்தைகள் எப்படி உண்டிருப்பார்கள்?  பெண் தான் வீட்டுக்கு வந்து சமைக்க வேண்டும்; குழந்தைகளுக்கு உணவிட வேண்டும் என்கிற நிலை இந்தக் காலத்திலும் நீடிப்பது சரிதானா? ஆண்கள் எப்போது தங்கள் வீட்டுப் பெண்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்?

பெருமழையும் திங்கள்கிழமை இரவின் அசாதாரண பயணச் சூழலும் நீண்ட நாட்களாக எனக்குள் இருந்துகொண்டிருக்கும் இந்தக் கேள்விகளை  மீண்டும் கிளறிவிட்டிருக்கின்றன!

சொத்துக்காக சொந்த மகளைக் கொன்ற இந்திராணி, பீட்டர்: வெளிவராத உண்மைகள்

தன் சொந்த மகளையே, தங்கை என்று சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய இந்திராணி
முகர்ஜி, தற்போது அதே சமூகத்தின் பகட்டு வாழ்க்கை வாழ்வதற்காக தன் சொந்த
மகளையே கொலை செய்யத் தூண்டியவர் என்ற பழியுடன் நிற்கிறார்.

அனைத்துப் பிரச்சினைகளையும் முந்திக் கொண்டு தேசிய ஊடகங்களில் கடந்த
மூன்று மாதங்களாக முக்கியத்துவம் பெறும் ஷீனா போரா கொலை வழக்கு முக்கிய
கட்டத்தை அடைந்திருக்கிறது. யாரும் எதிர்பாராத திருப்பமாக இந்தக்
கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியாகப் பார்க்கப்படும் இந்திராணி
முகர்ஜியின் முன்னாள் கணவர் பீட்டர் முகர்ஜி கைது
செய்யப்பட்டிருக்கிறார்.

ஷீனா போரா வழக்கில் இந்திராணியுடன் சேர்த்து முக்கிய குற்றவாளிகளாக கைது
செய்யப்பட்ட இந்திராணியின் கார் ஓட்டுநர், இந்திராணியின் முன்னாள் கணவர்
சஞ்சீவ் கன்னா ஆகியோரைவிட பீட்டர் முகர்ஜியின் பங்கு இந்தக் கொலையில்
முக்கியமானதாக இருக்கிறது என்கிறார்கள் இந்த வழக்கை விசாரித்துவரும்
சிபிஐ.

1. பீட்டர் முகர்ஜிக்கு தன்னுடைய முந்தைய திருமணத்தில் பிறந்த மகன்
ராகுல். பீட்டர் குடும்பத்திடம் தனது மகள் ஷீனாவை தங்கை என்று கூறி
அறிமுகப்படுத்தினார் இந்திராணி.

2. ஷீனாவுக்கு ராகுலுக்கு காதல் ஏற்பட்டது. இந்தக் காதலுக்கு பீட்டரும்
இந்திராணியும் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் காதல்
ஆரம்பித்த 2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஷீனா தன்னைப் பற்றிய
விவரங்களை ராகுலுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். இவர்கள் இருவரும்
உறுதியுடன் இருந்து தங்களுடைய காதலை, திருமண பந்தத்தில் இணைக்க முடிவு
செய்தனர். 2011-ஆம் ஆண்டு நிச்சயதார்த்தமும் ஆனது.

3. ஸ்டார் நெட்வொர்க்கின் முன்னாள் முதன்மை செயல் அதிகாரியான
பீட்டருக்கும் ஷீனாவுக்கும் தங்களுடைய சொத்துக்கள், இவர்கள் திருமணம்
செய்துகொண்டால் இவர்களுக்குப் போய்விடும் என்று கணக்குப் போட்டனர்.

4. தங்களுடைய சொத்து பறிபோய்விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு தன்னுடைய
கார் ஓட்டுநர் மூலம் ஷீனாவை கொலை செய்ய வைத்து அந்த பிணத்தை எரிக்கவும்
வைத்தார்கள் இந்திராணியும் பீட்டரும். இதற்கு சஞ்சீவ் கன்னா துணை போனார்.
சஞ்சீவ் கன்னா, இந்திராணியை விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் திருமணம்
செய்துகொள்ளவில்லை. இவர்கள் இருவருக்கும் பிறந்த மகள் விதி மீது
இந்திராணிக்கு தனி பிரியம்.

5. ஆரம்பத்தில் பீட்டருக்கு இதில் உள்ள தொடர்பு கண்டறியப்படாமல்
இருந்தது. பீட்டர் தன்னுடைய மகன் ராகுலுடன் பேசிய தொலைபேசி பேச்சுகள்
மூலம், ஷீனாவின் கொலையில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கிறது எனக்
கண்டறிந்திருக்கிறது சிபிஐ.

6. ஷீனா கொலையானதுக்குப் பின், ராகுலிடம் ஷீனா, அமெரிக்காவில்
இருப்பதாகவும் அவருடன் தான் பேசியதாகவும் அடிக்கடி சொல்லி
வந்திருக்கிறார்.

7. அதுபோல, ஷீனா கொலையான நாளிலும் ஷீனாவின் பிணம் எரிக்கப்பட்ட நாளிலும்
இந்திராணியுடன் பீட்டர் நீண்ட நேரம் பேசியிருக்கிறார். அந்த நேரத்தில்
லண்டனில் இருந்த பீட்டரை, இந்த கொலை விஷயங்களை முடித்துக்கொண்டு
இந்திராணி அங்கே போய் சந்தித்திருக்கிறார்.

8. தன் குடும்பத்து உறுப்பினரான ஷீனா காணாமல் போனது குறித்து பீட்டர்
எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்பது பீட்டர் மீதான சந்தேகத்தை
வலுப்படுத்துகிறது என்று சிபிஐ சொல்கிறது.

9. இந்திராணி மற்றொரு மகளான விதிக்கு, இந்திராணி-பீட்டர்-சஞ்சீவ்
இவர்களிடம் திட்டம் தெரிந்திருக்கிறது. இதை வைத்து தனது சகோதரி ஷீனாவை
ஜாக்கிரதையாக இருக்கும்படி அவர் எச்சரித்து குறுஞ்செய்தி அனுப்பியதையும்
சிபிஐ கண்டறிந்துள்ளது.

10. விதிக்கு தன்னுடைய சொத்துக்கள் சிலவற்றை எழுதி வைத்ததாகவும் அந்த
விதத்திலே விதியின் தந்தை சஞ்சீவ், ஷீனா போரா கொலையில் ஈடுபட்டதாகவும்
குற்றப்பத்திரிகையில் சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

11. கொலையின் முடிச்சுகள் எல்லாம் அவிழ்ந்துவிட்ட நிலையில்
குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ
சொல்லியிருக்கிறது.

12. இந்தக் கொலை முழுக்க முழுக்க சொத்துக்களுக்காகவே
செய்யப்பட்டிருக்கிறது என்பதே சிபிஐ கண்டறிந்த உண்மை.

இன்ஜினியரிங் படிப்பை முடிக்க பணமில்லாமல் தவிக்கும் முதல் திருநங்கை

Grace Banu

சென்னை அடுத்த அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு எலக்டிரிக்கல் & எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங் படிக்கிறார் கிரேஸ் பானு. தமிழகத்தில் பொறியியல் பட்டப் படிப்புக்கு தேர்வு பெற்ற முதல் திருநங்கையான இவர் தற்சமயம் தனது படிப்பை தொடரமுடியாமல் தவிக்கிறார்.

 

கிரேஸ் பானுவுக்கு உதவுவதற்காக ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் சிந்து கோவிந்தசாமி ஆன் லைனில் நன்கொடை முகாம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். திருநங்கைகளின் வாழ்க்கை, சக மனிதர்களின் வாழ்க்கையைப் போல இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் தன்னால் ஆன உதவியைச் செய்யுங்கள் என்கிறார் சிந்து. 500 ரூபாயாவது கொடுங்கள், உங்களால் முடியும் என்று கிரேஸ் பானுவுக்கு தோள் கொடுக்கிறார்.

நீங்கள் உதவ விரும்பினால் இங்கே சென்று உதவுங்கள்

கிரேஸ் பானுவின் முழுக் கதையையும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக்குங்கள்