நீங்கள் எதற்காக தங்கத்தை வாங்குகிறீர்கள்?

தங்கத்தின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் மோகம் அதீதமானது. இந்த அதீத மோகம்தான் சமீப வருடங்களில் ஆபத்தாகவும் மாறியிருக்கிறது. தினசரிகளைப் புரட்டினால் குறைந்தது ஒரு செய்தியாவது (பதிவு செய்யப்பட்டது, பதிவு செய்யப்படாதவை ஏராளமானவை) தங்கத்தை மையமாக வைத்து நடந்த குற்றமாக இருக்கும்.

நகைக்காக கழுத்து அறுத்துக் கொலை, ஓடும் பஸ்ஸில் நகை பறிப்பு, பூட்டியிருந்த வீட்டை உடைத்து கிலோ கணக்கில் தங்கம் கொள்ளை என குற்றங்களின் வகைகள் நீளும். இதில் கொள்ளையடிப்பவரோ, குற்றத்தை தடுக்க முடியாத அரசு காவல்துறையோ குற்றவாளிகள் அல்ல. அதீத மோகத்தில் தங்கத்தை வாங்கிக் குவிக்குப்பவர்கள்தான் குற்றவாளிகள்.

நீங்கள் எதற்காக தங்கத்தை வாங்குகிறீர்கள்? சில சுயபரிசோதனை கேள்விகள்…
1. லாபமான சேமிப்பு
நீங்கள் வாங்கியபோது ஒரு கிராம் தங்க ஆபரணத்தின் விலை ரூ. 2500 ஆக வைத்துக்கொள்ளுங்கள். வாங்கிய ஒரு மாதத்தில் விற்றால் உங்களுக்கு ரூ. 2400 கிடைப்பது கூட கஷ்டம்தான், ஆக.. உங்களுக்குத்தான் நட்டம்,. பதிளைந்து வருடத்துக்கு முன்பு கிராம் ரூ. 500க்கு வாங்கினேன். இப்போ ரூ. 2900 விற்கிறது என்று நீங்கள் பெருமை பேசினால் பணவீக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள். உண்மை உங்களுக்குப் புரியும்.
2. பெண்ணின் திருமணத்துக்காக சேமிக்கிறேன்
எதற்காக உங்கள் பெண் தங்கம் அணியவேண்டும்? ‘ஆத்திர அவசரத்துக்கு அவளுக்கு உதவுமே’ என்பது பெற்றோரின் வாதம். ஐயா, உங்கள் பெண் பிள்ளைகளை படிக்க வைத்து, சுயமாக சிந்திப்பதற்கும் கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கும் கற்றுக்கொடுங்கள். ஆத்திர அவசரத்துக்கு தங்க நகைகளை அடகு வைப்பதை அல்ல.
3. அந்தஸ்தின் அடையாளம்
தங்கத்தைப் போலவே, பளபளக்கும் தங்க முலாம் பூசி, தங்க கரைசலில் முக்கியெடுத்த ஆபரணங்கள் வகைவகையாக கடைகளில் கிடைக்கின்றன. அவற்றில் அசல் தங்க ஆபரணங்கள் போலவே நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை அணிந்தால் நீங்கள் ஏன் இதையெல்லாம் அணிந்திருக்கிறீர்கள் என்று யாரும் உளவு பார்த்து கண்டுபிடிக்கப்போவதில்லை. தங்க நகைகள் அணிந்தாலும் தங்க முலாம் பூசிய நகை அணிந்தாலும் ஒரேவிதமாகத்தான் மதிக்கப்படுவீர்கள். உங்கள் அந்த அந்தஸ்து உங்கள் செய்கைகளில் வெளிப்பட வேண்டும். நீங்கள் அணிந்து கொள்ளும் நகைகளில் அல்ல. நீங்கள் அணிந்துகொள்ளும் நகைகள் மூலமாக அந்தஸ்து வரும் என்றால், ஜாக்கிரதை நீங்கள் ஒரு கிராம் தங்கத்துக்காகக்கூட கொல்லப்படலாம்.
தங்கத்தை ஏன் வாங்குகிறீர்கள் என்பதற்கு மேலே சொல்லப்படும் காரணங்களை இந்தியர்கள் காலம்காலமாக சொல்லிவருகிறார்கள். இதற்கு பின்னே ஏராளமான விஷயங்கள் இருப்பதை நாம் ஆராய வேண்டியிருக்கிறது.
1. தங்கத்தைத் தவிர நமக்கு சேமிப்பு முறைகள் எதுவும் தெரியாது.
உண்மையிலும் உண்மை. பெரும்பாலான இந்தியர்களின் ஒரே முக்கிய சேமிப்பு தங்கம் வாங்குவது மட்டுமே. பொதுத்துறை வங்கிகளில் சேமிப்பதோ, அல்லது பொதுத்துறை வங்கிகளை பயன்படுத்திக்கொள்வதோ மூன்றில் இரண்டு பகுதி இந்திய மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. வங்கிகளின் கடுமையான நடைமுறைகள் ஒருபக்கம், இன்னொரு பக்கம் இன்றுவரை பணம் இருக்கும் நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தின் பயன்பாட்டுக்கு மட்டுமே வங்கிகள் என்ற நிலை. ஏதோ ஒரு வங்கிக்குப் போய் சிடுமூஞ்சி வங்கி அதிகாரியின் கடுமையான பேச்சுக்களுக்கிடையே அவர்தரும் புரிந்துகொள்வதற்கு சிக்கலான படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, அவர் வரச்சொன்ன ஒரு நாளில் மீண்டும் வந்து அவரைப் பார்த்து வங்கியின் கணக்குப் புத்தகத்தை வாங்கி, தொடர் வைப்பு கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்குள் நமக்கு ‘ச்சீ’ என்றாகிவிடும். இதைவிட, ‘வாங்க.. வாங்க’ என வாய்நிறைய சிரிப்போடு வரவேற்கும் நகைக்கடைக்காரர் எவ்வளவு உயர்வானவர்.

இப்போதெல்லாம் நம்ம ஃபேவரைட் ஸ்டார் சூர்யா, நேற்றைய ஃபேவரைட் மாதவன், கடந்த பத்தாண்டின் ஃபேவரைட் ஸ்டார் பிரபு என வீட்டுக்கே வந்து கைப்பிடித்து நகைக்கடைகளுக்கு அழைத்துச் செல்கிறார்களே… அப்போ தங்க நகை வாங்கித்தானே ஆகணும்.

இந்த அக்கப்போர்களையெல்லாம் பார்த்து ‘நாம் மட்டும் சளைத்தவர்களா என்ன?’ என்று பொதுமக்களுக்கு வங்கி பயன்பாட்டினை எளிமையாக்க வேண்டிய பணிகளை விட்டுவிட்டு தங்கக் கட்டிகளை கூவிக்கூவி விற்கின்றன வங்கிகள். அட்சய திருதியைக்கு தங்கத்தை விற்பதற்கு இவர்கள் செய்யும் விளம்பரச் செலவு, பொதுத்துறை வங்கிகளிடம் விஜய் மல்லையா வாங்கிய கடனைவிட அதிகமாக இருக்கக்கூடும்.
2. ஏறிக்கொண்டிருக்கும் தங்கத்தின் விலை
2000ம் ஆண்டுவரை மிதமான விலையில் (கிராம் ரூ 500க்கு) விற்றுக் கொண்டிருந்த தங்கம், பாய்ச்சலாக கிராம் 2900க்கு விற்க என்ன காரணம்? இந்த அதீத விலையேற்றம் இந்தியாவில் மட்டும்தான் என்கிறது ஒரு பொருளாதார ஆய்வு. ஆக இது இந்திய முதலாளிகளின் கொள்ளை வணிகம் என்பது தெளிவாகிறது. இதற்கு ஊழல் அரசுகள் உடந்தை.

மிஸ்டர் பொதுஜனத்துக்கு ஒரு கேள்வி…
நீங்கள் அணுஉலைக்கு எதிராக போராடியிருக்கிறீர்களா? அல்லது கருத்து சொல்லியிருக்கிறீர்களா? அல்லது அதுபற்றி ஏதாவது தெரியுமா?
மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதி வரியை அதிகரித்தபோது என்னமாக குரல் கொடுத்தீர்கள்., தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் ஏறினாலும் உங்கள் வீட்டில் அடுப்பு எரிவதில்லை. அது எப்படி வீதியில் இறங்கி போராடத்தொடங்கிவிடுகிறீர்கள்? பெட்ரோல் விலை ஏறினாலும்கூட நீங்கள் கவலைப்படுவதில்லை. இந்த போராட்ட குணத்தை உசிப்பிவிடுவது நகைக்கடைக்காரா? இல்லை நகைகளை உங்கள் வீட்டுக்கே வந்து விற்கும் ஃபேவரைட் ஸ்டார்களா?

மிஸ்டர் பொதுஜனம்,
அணுஉலை நாளை உங்கள் சந்ததியையே இல்லாமல் ஆக்கிவிடும். சொல்லுங்கள் நீங்கள் எதற்காக போராட போகிறீர்கள்? உங்கள் சந்ததிகளின் வாழ்வுக்காகவா, அல்லது நீங்கள் கழுத்தறுபட்டு சாவதற்காகவா? உங்கள் முடிவு உங்கள் கையில்.

தங்கம் பற்றிய என் பதிவுகள் தொடரும்.

 

ஆண்கள் சமைத்தால் வேகாதா என்ன?”

”வாசிக்க வாசிக்க, எழுத்து மறைந்து, அதில் சொல்லப்பட்டு இருக்கும் வாழ்க்கை மட்டுமே மனதில் நிற்க வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து. உணர்வுமயமான எழுத்துதான் என்னை வசீகரிக்கிறது. நான் நெகிழ்ச்சியானவனாக இருப்பதால் என் எழுத்தும் நெகிழ்ச்சியானதாகவே இருக்கிறது!” என்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.
மதுரகவி பாஸ்கரதாஸின் பேரன். சிறந்த சிறுகதை ஆசிரியர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராக, சமூகம், கலை, பண்பாடு குறித்துத் தீவிரமாகச் செயல்படுபவர்…

”இலக்கியத்தில் இயங்குபவர்களுக்கு அரசியல் பார்வை இருக்கா? பெரும்பாலான பிரச்னைகளில் எழுத்தாளர்கள் மௌனம் சாதிக்கிறார்களே, ஏன்?”

”அரசியல் இல்லாமல் இந்தப் பூமியில் எதுவும் இல்லை. எனக்கு அரசியல் வாடையே ஆகாது என்று சொல்வதே ஒரு அரசியல்தான்! 1940களில் தஞ்சாவூர் பகுதியிலிருந்து மிகப் பெரிய எழுத்தாளர்கள் உருவாகி இருக்கிறார்கள். அதே காலகட்டத்தில் தஞ்சாவூர் பகுதிகளில் விவசாயக் கூலிகள் செய்கிற சிறு தவறுக்குக்கூட சாட்டை அடியும் சாணிப்பாலை வாயில் ஊற்றுகிற கொடுமைகளும் நடந்திருக்கின்றன. அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட எழுதாமல், ஆண்பெண்ணுக்கு இடையில் உள்ள காதலை நுட்பமாக விவரிக்கிற எழுத்தையே அந்த மிகப் பெரிய எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். நடக்கிற அநியாயங்களைப் பார்த்து அமைதியாக இருப்பதும் அரசியல்தான். பெண்ணுடல் பற்றியும் காதலைப் பற்றியும் எந்தக் காலத்தில், எந்தச் சந்தர்ப்பத்தில் எழுதுகிறோம் என்பதிலும் அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தாளனும் ஒகேனக்கல் பிரச்னைக்கு அறிக்கைவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதைச் சக மனிதர்களின் ஜீவாதாரப் பிரச்னையாக, அவலமாகத் தனது எழுத்தில் பதிவு செய்ய வேண்டிய தார்மிகப் பொறுப்பு இருக்கிறது!”

”அறிவொளி இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர் நீங்கள். பாலியல் கல்வி, மாற்றுக் கல்வியின் அவசியங்கள் குறித்த விவாதங்கள், ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்குமா..?”

”நம் சமூகம் ஆணாதிக்கச் சமூகம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதை மாற்றி சமத்துவமான சமூகத்தை உருவாக்க, ஒரு கோடி விஷயங்கள் செய்ய வேண்டியிருக் கிறது. அதில் ஒரு சிறு முயற்சிதான் பாலியல் கல்வி!
ஆண் குழந்தைகள் 12 வயது வரை அம்மாவின் நெருக்கமான அரவணைப்பில் வளர்கிறார்கள். அதன் பிறகு, திருமணமாகி மனைவி வரும்போதுதான் அவனுக்குப் பெண்ணின் அரவணைப்பு கிடைக்கிறது. 12க்கும் 25க்கும் இடைப்பட்ட இந்த வருடங்களில்தான் ஒருவன் மனிதனாக மாறுகிறான். இந்தக் காலத்தில் ஆண், பெண் உறவு குறித்துச் சரியான புரிதல்கள் நம்மிடையே ஏற்படுவதில்லை. ஆண், பெண் உறவு குறித்த உரையாடல்களை மறுக்கிற சமூகமாக நம் சமூகம் இருக்கிறது. இயல்பாக ஓர் ஆணும் பெண்ணும் பேசுவது சாத்தியமற்றதாக இருக்கிறது. உடல்ரீதியான மாற்றங்கள் ஏற்படும் இந்தக் காலகட்டத்தில் ஆண்பெண் உடல் குறித்துத் தெளிவு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதைச் சொல்லாமல் விடும்போதுதான் பாலியல் குறித்த வக்கிரமான சிந்தனைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. வக்கிரமான சிந்தனை கள் பதிவான பிறகுதான், நாம் பாலியல் குறித்துப் பாடப் புத்தகங்கள் மூலம் சொல்லித் தருகிறோம். இது தவறான வழிமுறை. சிறு வயதிலேயே பாலியல் கல்வியைக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதுதான் சமூகத்தை ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி நகர்த்தும்.
குழந்தைகளின் மூளைகளை காலியான பாட்டில்களாக நினைத்துக்கொண்டு இருக்கிறது நமது கல்வி முறை. அந்த பாட்டில்களை நிரப்பி அனுப்பும் வேலையையே பள்ளி, கல்லூரிகள் செய்கின்றன. ஆனால், உண்மையில் ஒரு நாளின் 24 மணி நேரமும் குழந்தைகள் ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆள்பவர்களுக்குத் தேவையான அலுவலர்களையும் அதிகாரிகளையும் உருவாக்குவதையே நோக்கமாகக்கொண்டு இருக்கிறது நமது கல்வி முறை. குழந்தைகளின் தனித் திறன்கள் அடையாளம் காணப்பட வேண்டும். மாற்றுக் கல்வி முறை அதற்கு வழி செய்யும்!”

”ஒருவழியாக உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது… ‘க்ரீமிலேயர்’ நிபந்தனையோடு! இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

”வருட வருமானம் இரண்டரை லட்சம் உள்ளவர்களைத்தான் ‘க்ரீமிலேயர்’ என்கிறார்கள். சாதாரணமாக ‘ஐ.ஐ.டி’, ‘ஐ.ஐ.எம்’ நுழைவுத் தேர்வுப் பயிற்சிகளுக்கே 80 ஆயிரம் வரைக்கும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால்கூட இவ்வளவு தொகை செலவழிக்க முடியாது. ‘க்ரீமிலேயர்’ என்பது ஏமாற்று வேலை!
உயர் கல்வியிலும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது கொள்கை ரீதியாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அதற்குள் ஏராளமான ஓட்டைகள் இருக்கின்றன. 27 சதவிகிதத்தையும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டவர்களை மட்டுமே வைத்து நிரப்ப முடியாது. எனவே, மீதமிருப்பவற்றையும் பிற்படுத்தப்படுத்தப்பட்டவர்களுக்கே வழங்க வேண்டும், பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லக் கூடாது என்பதுதான் எங்கள் நிலை.”

”ஆண்களும் சமையல் கட்டுக்குப் போக வேண்டும் என்று நீண்ட காலமாகச் சொல்லிவருகிறீர்களே… நம் சமூகத்தில் இது சாத்தியமா?”

”சமைப்பது பெண்களுக்கு மட்டுமேயானது என்பதைக் கேள்விக்குள்ளாக்கத்தான் ‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது’ என்ற புத்தகத்தை எழுதினேன். உலகிலேயே சமைப்பதுதான் அதிமுக்கியமான வேலை. கவனம், உடல் உழைப்பு, தொழில் நுட்பம், அக்கறை எல்லாம் சேர்ந்தது சமையல் வேலை. இப்படி பெரும்சுமையான வேலையை ஆயிரம் ஆண்டுகாலமாக பெண்கள் தலையிலேயே சுமக்க வைத்துக்கொண்டு இருக்கிறோம்.
‘நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறாமல் மனித குல விடுதலை சாத்தியமில்லை’ என்றார் லெனின். வீட்டு வேலை செய்து பார்த்தால்தான் அவர் சொன்னதன் அர்த்தம் தெரியும். வியாபார ரீதியான எல்லா இடங்களிலும் ஆண்கள்தான் சமைக்கிறார்கள். வீட்டில் சமைத்தால் மட்டும் வேகாதா என்ன?”

”எழுத்தாளர் என்பதையும் தாண்டி பண்பாட்டுத் தளத்திலும் செயல்பட்டு வருகிறீர்கள். பண்பாட்டுத் தளத்தில் செயல்படுவதற்கான தேவை இங்கே இருக்கிறதா?”

”அரசியல், பொருளாதாரம், பண்பாடு என மூன்று தளங்களில் இயங்குகிறது சமூகம். அரசியல், பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பண்பாட்டுத் தளத்திலிருந்துதான் தொடங்குகின்றன. ஆனால், அந்த மாற்றங்கள் பற்றிய அக்கறையே இல்லாத சமூகமாக இருக்கிறோம்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் மதச் சார்புள்ள விஷயங்கள் பயங்கரமாக வளர்ந்திருக்கின்றன. மக்களை மதவாதிகளிடம் சுலபமாகத் தள்ளுவதற்கான சூழல் இங்கே உருவாகியிருக்கிறது. இதைத் தடுக்க பண்பாட்டுத் தளத்தில் நாம் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. இல்லையென்றால், நாளை தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது!”
நன்றி: ஆனந்த விகடன்