இலங்கை தமிழர் பிரச்சினையும் சுரணையற்ற மனிதர்களை உற்பத்தி செய்யும் கல்விக்கூடங்களும்!

20071112503903012க பத்திரிகையாளரும் என்னுடைய தோழியுமான சுகிதா,இரண்டு வாரங்களுக்கு முன் நண்பர்கள் எல்லோரையும் தன் மகள் தீட்சண்யாவின் பள்ளி ஆண்டுவிழாவைக் காண வருமாறு அழைத்திருந்தார். மழலையர் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் இரண்டரை வயது தீட்சண்யா மறுவேடப்போட்டியில் கலந்துகொள்ளப்போவதாகக் கூறி,நேரில் வந்து அவளை உற்சாகப்படுத்தும்படி சொல்லியிருந்தார். சுகிதா இது போன்ற போட்டிகளிலெல்லாம் விருப்பம் அற்றவர். மாறுவேடப்போட்டி என்று பெயரிருந்தாலும் கலந்துகொள்ளும் அனைத்து குழந்தைகளும் வெற்றிப்பெற்றவர்களாகவே கருதப்படுவர் என பள்ளியின் நிர்வாகத்தரப்பு உறுதியாகச் சொன்னதன் பேரில் தீட்சண்யாவின் பெயரை பதிவு செய்திருக்கிறார். மாறுவேடப்போட்டி என்றதும் தங்களுடைய குழந்தைகளை திருவள்ளுவர், விவேகானந்தர் போன்று வேடமிட்டு மழலைத் தத்துவங்களை உளற வைப்பதிலும் கடவுளர் வேடமிட்டு மத விஷத்தை பிஞ்சிலே ஆழப்பதிய வைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சுகி ரொம்பே விலகி நின்று சிந்தித்து விட்டார்.போர்ச்சூழல் குழந்தைகளை எவ்வகையில் பாதிக்கிறது என்பதை சக பெற்றோருக்கும் விழா பார்வையாளர்களுக்கும் உணர்த்த, தன் குழந்தையை இலங்கை போரில் பாதிக்கப்பட்ட குழந்தையைப்போன்று வேடமிடப்போவதாக எங்களிடன் சொல்லியிருந்தார். அவருடைய முயற்சிக்குநேரில் வாழ்த்துக்கூற நண்பர்கள் கிளம்பினோம். சாலிக்கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆண்டுவிழா களைகட்டியிருந்தது. சரியாக நாங்கள் உள்ளே நுழைந்த நேரம் தீட்சண்யா மேடையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார். எப்போதும் உற்சாகத்தோடு பார்த்து பழகிய சுகியின் முகத்தில் அன்றுதான் முதல்முறையாக சோர்வைக் கண்டேன். தீட்சண்யா மேடையேறியதைக் காணாவிட்டாலும் மற்ற குழந்தைகளின் மழலைப்பேச்சுக்களை சிறுது நேரம் கேட்டுக்கொண்டிருந்தோம். வழக்கம்போல ஓளவையார்,திருவள்ளுவர்,விவேகானந்தர்,முருகன்,சிவன்,கூடவே உலக அழகி வேடமிடப்பட்ட குழந்தைகள்…அதற்கு மேல் எங்களுக்கு பொறுமையில்லை. எல்லோருக்கும் பரிசுஎன்று சொல்லியிருந்த .பள்ளி நிர்வாகம் 6 குறளை ஒப்பித்த ஒரு குழுந்தைக்கு முதல் பரிசு என்று அறிவித்தது. அடுத்தடுத்த பரிசுகளும் இப்படியாக நீதிபோதனை,ஆன்மிக குப்பைகளை ஒப்பித்த குழந்தைகளுக்கு அறிவித்துக்கொண்டிருந்தபோது தோழியின் வீட்டுக்குப்போக நாங்கள் ஆட்டோ பிடித்துக்கொண்டிருந்தோம்.தோழியின் முக வாட்டத்திற்கான காரணமும் எங்களுக்கு புரிந்துபோனது.

நடந்ததை சொல்ல ஆரம்பித்தார் சுகி…விழா நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த தொகுப்பாரிடம் இலங்கையில் நடக்கும் பிரச்சினை குறித்து இரண்டு வரி அறிமுகத்தை தமிழில் பேசுமாறு சொல்லியிருக்கிறார் தோழி.மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் அவர் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கிறார். நிர்வாகத் தரப்பில் கூறப்பட்ட காரணம் ,அடுத்து இலங்கை தமிழர் மீதான தாக்குதலை,குழந்தைகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று எழுதிக்கொண்டு போயிருந்த பதாகையை மேடையில் வைக்க அனுமதி மறுத்திருக்கிறது கல்விச் சான்றோர்கள் நிரம்பிய அந்த மேடை!இதுகுறித்து விழாவுக்கு வந்திருந்த “தமிழ்” பெற்றோர் எவருக்கும் எந்த புகாரும் இல்லை,வருத்தமுமில்லை. தோழி தனி ஒருவராக மன்றாடிவிட்டு எதுவும் நிகழாத சூழலில் குழந்தையோடு மேடையிலிருந்து இறங்கியிருக்கிறார்.

கல்விக்கூடங்கள் எனும் மூளை மழுங்கடிக்கப்பட்ட மனித உற்பத்தி சாலைகளில் இதுபோன்ற முற்போக்கான சிந்தனைகளுக்கு ஆதரவை எதிர்ப்பார்ப்பது நம் தவறுதான். ஒருபுறம் இலங்கை தமிழருக்காக இங்கிருந்து குரல்கொடுக்கும் தமிழர்களையும் இன்னொரு புறம் எங்கே எது நடந்தால் என்ன என் குழந்தை தங்கிலீஷ் படித்து அமெரிக்கா போனால் சரியென்று கிடக்கிற தமிழர்களையும் ஒருசேர பார்க்க முடிகிறது. இதில் யாரைக்குற்றம் சொல்லியும் பலனில்லை. ஏற்கனவே சமுதாயத்தில் ஊன்றப்பட்டு வேறோடியிருக்கிற ஒரு பிரச்சினைக்கு ஒருவரியில் தீர்ப்பு சொல்லிவி்ட முடியாது. ஆனாலும் குறைந்தபட்ச சமூக சிந்தனைகூட நம் கல்விக்கூடங்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்கிற கேள்வியும் நம்முன் எழத்தான் செய்கிறது…