பாகிஸ்தானின் துனியா டிவி என்கிற தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான மணி சங்கர் அய்யர், “இந்தியாவின் பிரதமராக உள்ள மோடியை அகற்றினால்தான் பாகிஸ்தானுடன் இந்தியா அமைதிப் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்பதற்கான சூழ்நிலை அமையும்” என்று தெரிவித்தார்.
அதற்கு, நிகழ்ச்சி தொகுப்பாளர், “நீங்கள் நினைத்தால் மோடியை நீக்கலாமே” என்று கேட்டார். பதிலளித்த மணி சங்கர் அய்யர், “ஆமாம், நாங்கள் அவரை நீக்குவோம். அதற்கான காலம் வரும்வரை பொறுத்திருக்க வேண்டும்” என்றார்.
இதற்கு பாஜக கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. ‘இந்தியாவுக்கு எதிரான’ கருத்தாக உள்ளதாகவும் மணி சங்கர் அய்யர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், ‘மணி சங்கரின் பேச்சில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் எதுவும் இல்லை. மணி சங்கர் சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதுகுறித்து விளக்கியிருக்கிறார்’ என்று பாஜகவின் கண்டனத்துக்கு விளக்கம் அளித்திருக்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுரஜ்வாலா.
முன்னதாக, பாரீஸ் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்திருந்த மணி சங்கர் அய்யர், “இஸ்லாமுக்கு எதிரான ஃபோயியா(பயம்)வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஃபிரான்ஸில் வாழும் முஸ்லீம்கள் அனைத்து உரிமைகளுடனும் பாதுகாப்புடன் வாழ ஃபிரான்ஸ் அரசு உறுதியளிக்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பிரச்சாரம் செய்வதாக இருப்பதாக மணி சங்கருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.