கோவன் அப்படியென்ன தவறு செய்துவிட்டார்?

may-day-kovilpatti-kalai-2

மக்கள் பாடகர் கோவன் அரசியல்வாதிகளைப் போய் சந்தித்தது குறித்து நிறைய விமர்சனங்கள் வருகின்றன. சில முற்போக்காளர்களும்கூட சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார்கள். நாகரிகமாக எதிரியிடம் கைக்குலுக்குவதைக்கூட விரும்பாத எல்லா நேரத்திலும் பகைமை தோலில் தூக்கி சுமக்க வேண்டும் என்பது இவர்களுடைய எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. மனிதத்தை வலியுறுத்தும் பலரும் இதைச் சொல்வது முரணாக இருக்கிறது.

சாதாரணமாக வயதான ஒரு பெரியவரிடம் பேசும்போது குனிந்து வளைந்துதான் பேசமுடியும். அதுதான் பணிவு. அந்தப் பணிவு 90 வயதுகளில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியைப் பார்க்கும்போது வருவது இயல்பானதே. அதற்கெல்லாம் ஒரு சாயம் பூசப்பார்ப்பது அநாகரிகம். கருணாநிதியைப் பார்த்ததுபோலத்தான் மற்ற தலைவர்களையும் கோவன் சந்தித்திருக்கிறார்.  மரியாதை நிமித்தமாகத்தான் இந்தச் சந்திப்பு நடந்ததாக கோவன் சார்ந்த மகஇக அமைப்பு சொல்லிவிட்டது.

எதிர்நிலையில் நின்று பேசக்கூடியவர்கள் ஆனால், தன்னுடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல்கொடுத்தவர்களைச் சந்திப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? இன்னமும் வினவு தளத்தில் கருணாநிதியை, ஸ்டாலினையும் திருமாவளவனையும் விஜயகாந்தையும் கடுமையாக விமர்சித்து எழுதிய கட்டுரை அப்படியேதான் உள்ளன. வினவு தளத்தில் ஆட்சியாளர்களின் தவறு விமர்சித்து எப்போதும் எழுதப்பட்டுதான் வந்திருக்கிறது. நாளை இந்த அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா செய்ததையே செய்தாலும் அவர்கள் விமர்சிக்கத்தான் போகிறார்கள்.

எனவே, எல்லா செயலுக்கும் முடிச்சுகள் போடாமல் கொஞ்சம் நாகரிகக் கண்கொண்டு பாருங்கள் நண்பர்களே!