நான் எழுத வந்தது எனக்கே வியப்பான விஷயமா இருக்கு. ரொம்ப குறைச்சலான நிலத்தை வச்சி விவசாயம் பார்த்த சிறு விவசாய குடும்பம் எங்களோடது. அந்த நிலத்துல வருசம் முழுக்க உழைச்சிக்கிட்டே இருந்தாதான் சாப்பிட முடியும். மேட்டுக்காடுன்னு எங்க வட்டாரத்துல சொல்லக்கூடிய மேடும் பள்ளமுமாக, கரடுமுரடா இருந்த நிலம். அதுல விவசாயம் பார்க்கணும்னா இடைவிடாத உழைப்பைக் கொட்டித்தான் ஆகணும். படிப்பு வாசனையே இல்லாத குடும்பம். என் தலைமுறையில அண்ணன், தங்கைகள்எல்லாம் ஆறு, ஏழு வகுப்பிலேயே படிப்பை நிறுத்திட்டாங்க. நான்தான் எங்க குடும்பத்துல முதல்ல பத்தாவது பாஸாகி வரலாறு படைச்சவன். முதல் முதல்ல அரசு வேலைக்கு போனவனும் நான்தான்!
எங்க ஊரு பக்கமெல்லாம் விவசாயிகள் ஊருக்குள்ள வசிக்க மாட்டாங்க. அவங்கவங்க விவசாய நிலங்களுக்குள்ளேயே வீடு கட்டி குடியிருப்பாங்க. இதனால என் வயசு குழந்தைகளோட சேர்ந்து விளையாடவோ, பழகவோ வாய்ப்பு இல்லாம போயிடுச்சு. என்கூட பிறந்தவங்க ஒண்ணு என்னைவிட அஞ்சு வயசு அதிகமானவங்களாகவோ, இல்லைன்னா அஞ்சு, ஆறு வயசு குறைஞ்சவங்களாகவோ இருந்தாங்க. அதனால சின்ன வயசை தனிமையில கழிக்க வேண்டியதா போச்சு. மனுசனுக்கு பகிர்தல் என்பது அடிப்படையான விஷயம். அது எனக்கு இல்லாமலேயே போயிடுச்சு. சக மனுசங்களோட இந்த பகிர்தல் இல்லாததால யாரும் இல்லாதப்போ தன்னந்தனியா பேச ஆரம்பிச்சேன். நானே எனக்காக பாடிக்குவேன், பாராட்டிக்குவேன்.
நான் ஏழாவது படிச்சிட்டு இருந்தப்போ என்னோட தனிமைக்குள்ள வந்தது வானொலி. அதுவே எனக்கு மிகப்பெரிய உலகமா இருந்தது. அப்போ ஞாயிற்றுகிழமை காலை திருச்சி வானொலியில ‘மணிமலர்‘னு குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை ஒலிபரப்புவாங்க. அதுல பூனைக்குட்டி, நாய்க்குட்டின்னு அவங்களா ஒரு தலைப்பு கொடுத்து பாட்டு எழுத சொல்வாங்க. நானும் பாடல்கள் எழுதி அனுப்புவேன். அப்படி நான் அனுப்பினதுல நிறைய பாடல்கள் ஒலிபரப்பு ஆனது. என்னை வெளிப்படுத்திக்கறதுக்கு இதை ஒரு வாய்ப்பா நினைச்சேன்.
அப்புறம் சிறுபத்திரிகைகள், வார பத்திரிகைகள் அறிமுகமாச்சு. தனிமையில இருந்த எனக்கு பகிர்ந்துக்கணும்கிற ஆசை எப்போதும் இருந்துக்கிட்டிருந்தது. நான் நினைக்கிறதை பகிர்ந்துக்கணும். அந்த பகிர்தல் நண்பர்களோடவோ, உறவுகளோடவோ ஊர்க்காரர்களோடவோ ஒரு குறுகிய வட்டத்துல அடங்கிடாம, உலகத்துல இருக்கிற மற்றவர்களிடமும் அடுத்தடுத்து வர்ற தலைமுறைகளிடமும் போய் சேரணும்னு விரும்பினேன். அதற்காக நான் தேர்ந்தெடுத்த வடிவம்தான் எழுத்து.
ஸ்கூல் முடிச்சு, கல்லூரியில காலடி எடுத்து வைக்கிற வரைக்கும் நான் பாட புத்தகத்துல படிச்ச மரபுக் கவிதைகளை பின்பற்றி மரபுக் கவிதைகளைத்தான் எழுதினேன். புதுக்கவிதை, சிறுபத்திரிகை விசயங்கள் அறிமுகமான பிறகு அதுவரைக்கும் எழுதினதை மறுபரிசீலனை பண்ண முடிஞ்சது. என்னைச் சுத்தி நடக்கிறது, என் கிராமம், என் குடும்பம் சார்ந்த விசயங்கள், தமிழ் வாழ்க்கை சார்ந்த விசயங்களை எழுத ஆரம்பிச்சேன்.
முதல் நாவல் ‘ஏறுவெயில்’(மருதா வெளியீடு) வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டுவதற்காக விவசாய நிலத்தை விட்டுப்போன குடும்பங்கள் எப்படி வாழ்வியல் பாதிப்புக்குள்ளானதுங்கிறதுதான் கதை. என் சின்ன வயசுல இப்படியொரு நிகழ்வு எங்க ஊருல நடந்தது. அரசாங்கம் கொடுத்த சொற்ப பணத்தை வாங்கிக்கொண்டு பிழைப்புக்கான வழி தெரியாமல் சிதைவுக்குள்ளான குடும்பங்களில் எங்களுடைய குடும்பமும் ஒன்று. இந்த நாவல் எழுதி 15 வருடங்கள் ஆகிடுச்சு. ஆனா விவசாய நிலங்களைப் பிடிங்கிக்கொண்டு அந்த விவசாயிகளை விரட்டக்கூடிய நிலை இன்னைக்கும் இருந்துகிட்டு இருக்கு. அது தொடர்ந்து பேசக்கூடிய விசயமாகவும் இருக்கும்.
அதுக்குப்பிறகு, நாங்க நகரம் சார்ந்த வாழ்க்கைக்கு போயிட்போம். அப்பா ஒரு தியேட்டர்ல கடை வெச்சிருந்தார். அங்க பலவிதமான அனுபவங்கள். அந்த அனுபவங்களை ‘நிழல் முற்றம்’ (காலச்சுவடு) நாவல்ல பதிவு செய்தேன். தமிழ்ல திரைப்படத் துறை பற்றிய பதிவு இருக்கு. ஆனா திரைப்படங்களை சார்ந்து வாழக்கூடிய தியேட்டர்ல சோடா, மிக்சர் வித்து பிழைக்கிற விளிம்பு நிலை சிறுவர்களைப் பற்றிய பதிவுகள் இல்ல. அதைத்தான் ‘நிழல் முற்ற’த்துல சொன்னேன்.
அடுத்து வந்த ‘கூளமாதாரி’ ஆடு மேய்க்கிற சிறுவர்களிடையே ஜாதிங்கிற ஏற்றத்தாழ்வுகள் எப்படி வருதுங்கிற பற்றிய நாவல்.
எழுத்துங்கிற குறிப்பிட்ட ஒரு விசயத்தோட மட்டுமே நின்னுடறது கிடையாது. நான் இதுவரைக்கும் எழுதின நாலு நாவல்லேயும் ஒவ்வொரு விதத்திலும் வித்தியாசமான பிரச்னைகள சொல்லியிருக்கேன்.
சமீபத்தில வந்த ‘கங்கணம்’ (அடையாளம்) திருமணத்தைப் பற்றி பல கேள்விகளை எழுப்புகிற நாவல். இந்த சமூகத்துல திருமணம்கிறது ஆணும் பெண்ணும் முடிவு பண்றதா இல்லை. பொருளாதாரம் போன்ற வேறு விஷயங்கள்தான் தீர்மானிக்குது. இதுல உள்ளோட்டமா பெண் சிசு கொலை பற்றிய பதிவை செஞ்சிருக்கேன். ஒரு குறிப்பிட்ட வருசத்துல ஒரு குறிப்பிட்ட சமூகத்துல பெண் சிசு கொலைகள் அதிகமா நடக்கும்போது. அதே சமயத்துல பிறக்கிற ஆண்கள் வளர்ந்து திருமணத்திற்கு நிற்கும்போது அந்த சமூகத்துல பெண்கள் இல்லாம போயிடறாங்க. இதையும் நான் சொல்லியிருக்கேன்.
நாம் வாழற சூழல்ல நம்மை பாதிக்கிறமாதிரி நடக்கிற செயல்களுக்கு நம்மால் உடனடியா எதிர்வினை செய்ய முடியறதில்லை. கையாளாகாத நிலைமைதான் இருக்கு. அந்த வகையில எழுத்தாளன் சமூக உணர்வோட செயல்பட முடியுது. அதுலேயும் சிலதை மட்டும் பேசலாம், செய்யலாம்,. எழுத்துல கொண்டுவரக்கூடாதுன்னு வரையறை வேற செய்யறாங்க. எழுத்துன்னா நீங்க நல்லது கெட்டதுன்னு எல்லாத்தையும் கொண்டுவரத்தான் வேணும்.
‘பீக்கதைகள்’ (அடையாளம்) சிறுகதை தொகுப்புல அப்படி மற்றவங்க பேச தயங்கின, புறக்கணிச்சதை நான் பேசியிருக்கேன். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைன்னு பல வடிவங்கள்ல அதை வெளிப்படுத்தறேன்.
இதுல கவிதையை எனக்கு நெருக்கமான வடிவமா என்னோட அக விசயங்களை பேச பயன்படுத்திக்கறேன். எந்த வடிவமானாலும் சரி, ஒவ்வொரு வரி எழுதும்போதும் என்னை முழுமையா வெளிப்படுத்த முடியுமான்னு பார்க்கிறேன். எப்பவும் அதிருப்தி இருந்துகிட்டுதான் இருக்கு. ஆனாலும் எழுத்துங்கிறது எனக்கு மிகப் பெரிய வடிகாலா இருக்கு. பணத்தாலும் பதவிகளாலும் கிடைக்காத சந்தோசம் எனக்கு எழுத்துல கிடைக்குது. மனிதனுக்கு எதுல திருப்தியோ அதுல ஈடுபடறது நல்லது. அந்த வகையில சமூகத்துல வேற எந்த மனிதருக்கும் கிடைக்காத திருப்தி ஒரு எழுத்தாளரா எனக்கு கிடைச்சிருக்குன்னு நினைக்கிறேன்.
குங்குமத்தில் இலக்கிய ஆளுமைகளின் தன் அறிமுக தொடரான ‘நான்’ இல் பதிவுசெய்யப்பட்டது.