மியாட் மருத்துவமனை மீது மட்டும் ஏன் இவ்வளவு கரிசனம்?

பிரபல நாளிதழ்கள், ஊடகங்கள் (நானும் அவர்கள் பாணியிலே சொல்கிறேன்) தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் 18 பேர் இறந்ததாக செய்தி போட்டார்கள்.  இன்னும் சிலர் அதுபற்றிய செய்தியைக்கூட பிரசுரிக்கவில்லை. எல்லாம் விளம்பர நோக்கம்தான் என்று மேம்போக்காக புரிந்துகொண்டாலும் ஊடகங்கள் தனியார் மயத்துக்கு ஆதரவாகத்தான் செயல்படுகின்றன; பிரச்சாரம் செய்கின்றன என்கிற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் தனியார்மயம், தாராளமயம் தனிநபர்களை மிகப் பெரும் சொத்துக்களுக்கு அதிபதிகளாக மாற்றியதுபோல, ஊடகங்களின் நிறுவனர்களையும் மிகப் பெரும் பணக்காரர்களாக்கியுள்ளது. இதை கைவிட யாரும் விரும்பமாட்டார்கள். ஜனநாயகத்தின் மற்ற மூன்று தூண்கள் சாய்ந்ததுபோலவே, நான்காவது தூணும் விளம்பரங்களுக்காக ஏங்கி சாய்ந்து நீண்ட நெடுங்காலம் ஆகிறது.  எனவே தனியார் மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் செய்யும் தகிடு தத்தங்களை இவர்கள் ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டார்கள்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் மேல் எழுந்த ‘அக்கறை’யால் அனைத்து ஊடகங்களும் மாய்ந்து மாய்ந்து எழுதின.  அரசுத் துறையில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் இருக்கும் அக்கறையால் அல்ல; வெகுஜென மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்திய அந்தச் சம்பவங்களைக் காசாக்கிப் பார்க்கும் ஆர்வம் ஊடகங்களுக்கு இருந்தது.

அப்படி உண்மையிலே மக்கள் மீதான கரிசனம் இருக்குமானால் ஏன் ஊடகங்கள் 18 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மியாட் மருத்துவமனை மீது எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை? இந்த 18 பேரின் உயிரிழப்பில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், பாமகவின் ராமதாஸ் தவிர, மியாட் மருத்துவமனை மீது நடவடிக்கை வேண்டும் என எந்த அரசியல்வாதியும் கேட்கவில்லை. ஆளும் அரசு ஓடிவந்து மியாட் மருத்துவமனைக்கு முட்டுக் கொடுக்கிறது.

தனியார்மயத்துக்கும் தாராளமயத்தும் ஆதரவு கரம் நீட்டும் மேல்தட்டு வர்க்கத்தினரே மருத்துவமனையில் படுகொலைகளை செய்யப்பட்டிருக்கிறார்கள்.  அவர்களுக்காக குரல் தர, அவர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள். அப்படி குரல் கொடுத்தால் தன்னையே குற்றவாளி கூண்டில் நிறுத்திக் கொள்ள நேரிடலாம்.

“800 ஆண்டுகளுக்குப் பின் இந்து ஆட்சி”

மக்களவையில் திங்கள்கிழமை சகிப்பின்மை விவாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனம் கிளப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் முகமது சலீம் எழுப்பிய விவகாரம், பெரும் சர்ச்சைகளுடன் மக்களவையில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

“800 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் இந்து ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாக இதழ் ஒன்றில் வெளியான ராஜ்நாத்தின் பேட்டியை மேற்கோள் காட்டிப் பேசினார் முகமது சலீம்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய ராஜ்நாத் சிங், தான் ஒருபோதும் அப்படி பேசவில்லை என்றார். “என்னுடைய நாடாளுமன்ற வாழ்க்கையில் இந்த அளவுக்கு நான் காயம்பட்டதில்லை. இப்படி நான் ஒருபோதும் பேசியதில்லை. நான் எப்போது சொன்னேன் என்பதை சலீம் நிரூபிக்க வேண்டும். இதற்காக அவர் மன்னிப்புக் கோர வேண்டும்” என்றார். பாஜக உறுப்பினர்களும் சலீம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றனர்.

இது குறித்து மேற்கொண்டு பேசிய சலீம், “இல்லாததை எதையும் நான் சொல்லவில்லை. ராஜ்நாத் சிங் பேசியதை வெளியிட்ட பத்திரிகையை இதுகுறித்து நீங்கள் கேட்க வேண்டும். அப்படித் தவறாக எழுதியிருந்தால் அந்த பத்திரிகை மீது அவதூறு வழக்குத் தொடருங்கள்” என்றார்.

இந்நிலையில் ட்விட்டரில் ராஜ்நாத் சிங் பேசியதாக மார்க்சிஸ்ட் உறுப்பினர் சலீம் பேசிய விஷயத்தைச் சொன்னவர் மறைந்த விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் என்று பலர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

 

’விஷ்ணுப் பிரியாவின் மரணம் தற்கொலையே அல்ல!’

திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப் பிரியா மரணத்தை விசாரிக்கும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட சிபிசிஐடி விசாரணை குறித்து விஷ்ணுப் பிரியாவின் தந்தை ஆரம்பத்திலேயே இது நீதியைப் பெற்றுத்தரும் விசாரணையாக இருக்காது என்று ஆட்சேபம் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், திமுக, தேமுதிக, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் சிபிசிஐடி விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சட்டப்பேரவையில் சிபிசிஐடி விசாரணையே போதுமானது என்று அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. சிபிஐ விசாரணை கோரி திமுக சார்பில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

ஆனால் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், விஷ்ணுப் பிரியாவின் வழக்கை திசைமாற்றும் நோக்கில் சிபிசிஐடி போலீசாரே ஈடுபட்டது வெட்ட வெளிச்சமானது. விஷ்ணுப் பிரியா விசாரித்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜ், பகிரங்கமாக வாட்ஸ் அப்பில் அடுத்தடுத்து காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் சவால் விடும் வகையில் பேசிய பிறகும், அவரை கைது செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை சிபிசிஐடி போலீஸ். ஆனால் அதே போலீஸ் விஷ்ணுப் பிரியா மரணத்தில் உள்ள மர்மத்தை மூடும் வேலையில் இறங்கியது. அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார் என போலீஸ் தரப்பில் இருந்தே வதந்திகள் கிளப்பப்படுவதாக விஷ்ணுப் பிரியாவின் உறவினர் சந்தேகம் எழுப்பினர்.

இந்நிலையில் விஷ்ணுப் பிரியாவின் நண்பர் வழக்கறிஞர் மாளவியா, தன்னிடம் சிபிசிஐடி போலீசார் விஷ்ணுப் பிரியாவுடன் காதல் இருந்ததாகச் சொல்லும்படி மிரட்டினர் என பகீர் புகார் தெரிவித்தார். விஷ்ணுப் பிரியாவின் வழக்கில் சிபிசிஐடி போலீஸ் சரியான திசையில் விசாரிக்கவில்லை என்றும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வலியுறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாளவியா வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இதேபோல முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமூக சமத்துவப் படை கட்சியின் நிறுவனருமான சிவகாமி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விஷ்ணுப் பிரியா வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மனுத்தாக்க செய்திருந்திருந்திருந்தார். இந்த மனுவில், ‘சிபிசிஐடி போலீசாரின் விசாரணை சுதந்திரமாக நடக்க வாய்ப்பில்லை; எனவே, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.விஷ்ணுப் பிரியா மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன; மாநில போலீசார் மீதும் புகார்கள் எழுந்துள்ளதால், இவ்வழக்கை மாநில போலீசார் விசாரிப்பது ஏற்புடையதல்ல. எனவே சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சிவகாமி வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர், விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிப்பது பற்றி தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் மற்றும் தமிழக உள்துறை செயலாளர் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விஷ்ணுப் பிரியாவின் குடும்பமும் சிபிஐ விசாரணைக் கோரி நீதிமன்றம் செல்ல இருக்கிறது. இதுகுறித்து விஷ்ணுப் பிரியாவின் மாமா ஆனந்த் பேசினார்..

“போலீஸ் சொல்வதுபோல இது தற்கொலையே அல்ல. விஷ்ணுப் பிரியா தூக்கில் தொங்கியதாக சொல்லப்படும் இடத்தை வைத்து பார்க்கும்போது அதற்கான வாய்ப்புகளே இல்லை என்பது தெளிவாகிறது. அதோடு நாங்கள் செய்தி கேட்டு திருச்செங்கோடு செல்லும் முன்பாகவே விஷ்ணுப் பிரியாவின் உடலை சேலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். விதிமுறைப்படி திருச்செங்கோடு மருத்துவமனைக்குத்தான் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கே ஃபீரிசர் வேலை செய்யவில்லை என்று காரணம் சொன்னார்கள். வேகவேகமாக தடயத்தை அழிக்கும் பொருட்டே சேலம் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

மேலும், போலீஸ் கைப்பற்றிய பொருட்களாக செல்போன்கள், டாப்லட், லேப்டாப் பற்றித்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். முக்கியமான ஆதாரமான விடியோ கேமரா பற்றி சொல்லவேயில்லை. அதில்தான் கோகுல்ராஜ் வழக்குத் தொடர்பான அத்தனை ஆதாரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையும் போலீஸ் மறைப்பதாகவே கருதுகிறோம்.

விஷ்ணுப் பிரியாவின் தோழி, மகேஸ்வரியின் செல்போனை காணவில்லை. ஒரு காவலருடைய செல்போனையே காணவில்லை என்றால், இதுபற்றி எங்குபோய் முறையிடுவது? மகேஸ்வரியின் பாதுகாப்பு குறித்தும் எங்களுக்குக் கவலையாக உள்ளது.

விஷ்ணுப் பிரியா மரணத்தில் எத்தனையோ சந்தேகங்கள் இருக்க, விஷ்ணுப் பிரியாவையும் எங்களையும் கொச்சைப்படுத்தும் நோக்கத்துடன் போலீசாரே தவறாக சித்தரிக்கின்றனர். குடும்பப் பிரச்சினை என்றால் அதைப் பற்றி நாங்கள்தான் பேச வேண்டும். விசாரணை முடியும் முன்பாகவே அவர்களாக அறிவிக்கக்கூடாது. வழக்கை இப்படியெல்லாம் திசைதிருப்புவதால்தான் நாங்கள் அழுத்தமான ஆதாரங்களுடன் சிபிஐ விசாரணை கோரி வழக்குத் தொடுக்க இருக்கிறோம். சிபிஐ மட்டுமே எங்கள் வீட்டுப் பெண்ணுக்கு நீதி பெற்றுத்தரும்” என்று ஆதங்கத்துடன் முடித்தார் ஆனந்த்.