மியாட் மருத்துவமனை மீது மட்டும் ஏன் இவ்வளவு கரிசனம்?

பிரபல நாளிதழ்கள், ஊடகங்கள் (நானும் அவர்கள் பாணியிலே சொல்கிறேன்) தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் 18 பேர் இறந்ததாக செய்தி போட்டார்கள்.  இன்னும் சிலர் அதுபற்றிய செய்தியைக்கூட பிரசுரிக்கவில்லை. எல்லாம் விளம்பர நோக்கம்தான் என்று மேம்போக்காக புரிந்துகொண்டாலும் ஊடகங்கள் தனியார் மயத்துக்கு ஆதரவாகத்தான் செயல்படுகின்றன; பிரச்சாரம் செய்கின்றன என்கிற உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் தனியார்மயம், தாராளமயம் தனிநபர்களை மிகப் பெரும் சொத்துக்களுக்கு அதிபதிகளாக மாற்றியதுபோல, ஊடகங்களின் நிறுவனர்களையும் மிகப் பெரும் பணக்காரர்களாக்கியுள்ளது. இதை கைவிட யாரும் விரும்பமாட்டார்கள். ஜனநாயகத்தின் மற்ற மூன்று தூண்கள் சாய்ந்ததுபோலவே, நான்காவது தூணும் விளம்பரங்களுக்காக ஏங்கி சாய்ந்து நீண்ட நெடுங்காலம் ஆகிறது.  எனவே தனியார் மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் செய்யும் தகிடு தத்தங்களை இவர்கள் ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டார்கள்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் மேல் எழுந்த ‘அக்கறை’யால் அனைத்து ஊடகங்களும் மாய்ந்து மாய்ந்து எழுதின.  அரசுத் துறையில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் இருக்கும் அக்கறையால் அல்ல; வெகுஜென மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்திய அந்தச் சம்பவங்களைக் காசாக்கிப் பார்க்கும் ஆர்வம் ஊடகங்களுக்கு இருந்தது.

அப்படி உண்மையிலே மக்கள் மீதான கரிசனம் இருக்குமானால் ஏன் ஊடகங்கள் 18 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த மியாட் மருத்துவமனை மீது எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை? இந்த 18 பேரின் உயிரிழப்பில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், பாமகவின் ராமதாஸ் தவிர, மியாட் மருத்துவமனை மீது நடவடிக்கை வேண்டும் என எந்த அரசியல்வாதியும் கேட்கவில்லை. ஆளும் அரசு ஓடிவந்து மியாட் மருத்துவமனைக்கு முட்டுக் கொடுக்கிறது.

தனியார்மயத்துக்கும் தாராளமயத்தும் ஆதரவு கரம் நீட்டும் மேல்தட்டு வர்க்கத்தினரே மருத்துவமனையில் படுகொலைகளை செய்யப்பட்டிருக்கிறார்கள்.  அவர்களுக்காக குரல் தர, அவர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள். அப்படி குரல் கொடுத்தால் தன்னையே குற்றவாளி கூண்டில் நிறுத்திக் கொள்ள நேரிடலாம்.