“தோற்பது எப்படி?”

கோசிகன் படிக்கும் பள்ளியில் ‘அம்மாவை பார்த்தே ஆக வேண்டும்’ என கடந்த வெள்ளிக்கிழமை கட்டாய அழைப்பு விடுத்திருந்தார்கள். திங்கள் காலையில் செல்ல முடியவில்லை. மாலைதான் சென்றேன்.

இரண்டாண்டுகளாக உள்ள குற்றச்சாட்டுத்தான். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே சொல்ல அழைத்திருக்கிறார்கள்..

“உங்க பையன் அறிவா இருக்கான்; கிளாஸ்ல நல்லா பதில் சொல்றான். ஆனா, எழுதவே மாட்டேன்கிறான். ஒரு மாசமா எழுதவேயில்லை… கடைசியா கட்டாயப்படுத்தி உட்காரவெச்சி எழுத வெச்சோம்… பெரிய தலைவலியா இருக்கான்னு எல்லா மிஸ்சும் சொல்றாங்க” என மென்மையான குரலில் வேகமாக பேசி முடித்தார் துணை தலைமை ஆசிரியர்.

“எதையும் எழுதிப் போடலைன்னு சொன்னான் மேம்.. வீட்லேர்ந்த நோட்டையே நான்தான் பையில் வெச்சு அனுப்பினேன்” நானும் வேகமாக சொல்லிவிட்டு,

அருகே நின்றிருந்த கோசியைப் பார்த்தேன். இருவரையும் மாறிமாறிப் பார்த்து “நோ மிஸ்…நோ மிஸ்” என்றான்.

“கோசி, ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் ல ஒரு டிராமா நடிச்சான் அதிலேர்ந்து அவனை பிடிச்சுபோச்சு..such a talented boy…

போன வருசம் complaint பண்ணப்போ, நான் பெரிசா எடுத்துக்கலை… இந்த வருசம் நானே அனுபவிக்கிறேன்… என்னால முடியல…” என்றார் ஆசிரியர் அவனைப் பார்த்து.

நானும் ‘என்னால முடியலை’ என்றேன்.

“இனி நீதான் திருத்திக்கணும்பா” என பஞ்சாயத்தை ஒருவழியாக முடித்து வைத்தார் ஆசிரியர்.

நான்காவது படிக்கிறான். இரண்டாவதில் இருந்து இதே குற்றச்சாட்டு; இதே பாராட்டு… இந்தப் பிரச்சினையை யாரிடமாவது சொன்னால் கற்றலில் குறைபாடு போன்ற பிரச்சினையாக இருக்குமோ எனக் கேட்பார்கள். அப்படியெதுவும் இல்லை.

சோம்பேறித்தனம்… நன்றாக (சொற்பொழிவே நடக்கும்) பேசுவான். குழந்தைகளுக்கே உரிய திக்கிப்பேசும் மழலை மொழியில் அல்லாமல் மிகச் சிறப்பாகவே உச்சரிப்பான். படிக்கவும் செய்வான். தூங்கும் முன் தினமும் புதுப்புது கதைகளை சொல்வான்.

எழுதுவதில் மட்டும் அத்தனை மெத்தனம். இரண்டு பக்கங்களை எழுத வைப்பதற்குள் நெஞ்சுலி வந்துடும். போன வருடம் நடந்த தேர்வுகளில் அனைத்து பதில்களும் தெரிந்திருந்தும்கூட ஒரே ஒரு விடையை மட்டும் தாளில் எழுதி வைத்திருந்தான்.

பள்ளிகளில் எழுதுவதை குறைத்து கொடுக்கலாம். ஆனால் பள்ளிக் கல்வி முறை அப்படியில்லை. பக்கம் பக்கமா எழுதியே ஆக வேண்டிய கல்வி முறை. எழுதியே ஆக வேண்டும். இந்த ஆண்டு சற்றே வேகம் கூடியிருக்கிறது.

“ஃபர்ஸ்ட் மார்க் வாங்கலாம், ஆனா நீ பாஸ் வாங்கினா போதும்” என பள்ளியிலிருந்து வரும்போது மென்மையாகவே சொன்னேன். தலையை ஆட்டினான்.

வகுப்பு ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் அவனைப் பற்றி புகார் சொல்லத்தான் அழைத்திருந்தார்கள். ஆனால், அவனைப் புகழ்ந்தார்கள். எனக்கு புகார் பற்றிய கவலை இல்லை; புகழ்ச்சி குறித்து மகிழ்ந்தேன்.

நான் எப்போது கடிந்துகொள்வேனோ என்கிற அச்சம் அவனிடம் இருந்தது. திங்கள் இரவு இரவு முதல் காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி எனக்கு. சுத்தமாக பேசவே முடியவில்லை. பேச முயற்சித்தபோது, “அம்மா, ப்ளீஸ் உன்னால பேச முடியலை..பேசதம்மா… ஏன் கஷ்டப்படற”. சிரித்துக்கொண்டே நக்கலாகச் சொன்னான். அவனுடைய கவலை அவனுக்கு. ஆனால், ஒரு நாள் விடுமுறை எடுத்து, என்னைப் பார்த்துக்கொண்டான். நன்றி மகனே… 🙂

………………………………………………………………………………………………………………………….

இரண்டு வாரங்களுக்கு முன் முகநூலிலிருந்து விலகிவிட்டேன். குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. சில நேரங்களில் நான் எழுதுவது பலருக்கு மனவருத்தத்தைக் கொடுக்கிறது, கோபத்தை உண்டாக்குகிறது. வினை…எதிர்வினை…விவாதம்… சலிப்பாக உணர்ந்ததால் விலகிவிட்டேன்.

செய்தியாளராக முகநூலிலிருந்து விலகியிருப்பது இழப்புதான். ஆனால், இப்போதைக்கு இந்த விலகல் தேவையாக உள்ளது.

……………………………………………………………………………………………………………………..

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் செயல்பாட்டாளர் முகிலனுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமூக ஊடகங்களில் எழுதிய பதிவுகளை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். சூழலியல் தொடர்பான பல பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த முகிலனுக்கு ஆதரவாகவே நிறைய பேர் எழுதியிருந்தனர்.

‘மீறல்கள்’ நிகழக்கூடிய சாத்தியங்கள், சந்தர்ப்பங்கள் எல்லோருக்குமே வர வாய்ப்பிருக்கிறது. அது இயல்பானதுதான். ஆனால், மீறல் நிகழ்ந்துவிட்டபின் என்ன நடக்கும் என்பது குறித்து பலர் சிந்திப்பதில்லை. உணர்ச்சிகளின் உந்துதலில் நடக்கும் மீறல்களுக்கான பலனை தொடர்புடையவர்கள் அனுபவிக்கத்தான் நேரிடும். அது உண்டாக்கும் தொடர் சங்கிலி நிகழ்வுகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

அதோடு, ஆண்மய சமூகத்தில் ‘கட்டிக்கிட்டது ஒன்னு; வெச்சிக்கிட்டது ஒன்னு’ என்கிற வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறைந்தபட்ச அறம் குறித்த உணர்வை தள்ளி வைத்து விடுகின்றன. தன்னுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை எனில் முகிலன் அதிலிருந்து வெளியேறியிருக்கலாம்; ‘காதலித்த’ பெண்ணை திருமணம் செய்துகொண்டிருக்கலாம். விவாகரத்தை நிகழக்கூடாத விசயமாகக் கருதும் சமூக உணர்வு, திருமண மீறல்களை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது.

…………………………………………………………………………………………………………………

’தோற்பது எப்படி?’ என்கிற ஒலிபரப்பு நிகழ்ச்சி குறித்து அண்மையில் அறிந்தேன். வெற்றியாளர்களின் தோல்வி அனுபவங்களை மட்டும் பகிர்வதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. பத்திரிகையாளர் எலிசபெத் டே தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சிகளை இங்கே கேட்கலாம்.

இப்படியொரு நிகழ்ச்சியை உருவாக்க பின்னணி காரணங்கள் குறித்து எலிசபெத் டே எழுதிய இந்தக் கட்டுரை Why we should learn to embrace failure. எனக்குப் பிடித்திருந்தது.

சமீப காலமாக சற்றே ஆழமாக விசயங்களை அணுகிப்பார்த்து எழுதும் யோசனை வந்துகொண்டிருக்கிறது. எலிசபெத்தின் கட்டுரை அகத்தூண்டலை உண்டாக்கியிருக்கிறது. அப்படியேதும் முயற்சித்தால் இங்கேயேதான் எழுதவிருக்கிறேன்.

………………………………………………………………………………………………………………..

கடந்த மாதம் நெருக்கடி காரணமாக மீண்டும் ஊடகங்களில் பணிவாய்ப்புத் தேடினோம்; நண்பர்களும் உதவினார்கள். ஆனால், நேர்மறையான எந்த பதிலும் கிட்டவில்லை. இது எதிர்ப்பார்த்ததுதான். உண்மையில், பணிதேடிவது எனக்கே பிடிக்கவில்லை. மனதளவில் தயார்ப்படுத்திக்கொண்டுதான் தேடினேன். அமையவில்லை. உண்மையாகவே மகிழ்ச்சி.

அந்த அமைப்பை குறை சொல்லிக்கொண்டே அதே அமைப்பில் 12 மணி நேரம் பணியாற்ற நேர்வது கொடுமையாகவே இருக்கும். 12 மணி நேர கொடுமையை தாங்குவதற்கு நான்கைந்து மணி நேர கொடுமையை தாங்கிக் கொள்ளலாம். அல்லது வேறு வழியைக் கண்டுபிடிக்கலாம்.

……………………………………………………………………………………………………………….

சில ஆண்டுகளாக எனக்கு PMDD (premenstrual dysphoric disorder) பிரச்சினை உள்ளது. பெண்களுக்குள்ள (20 பேரில் ஒருவருக்கு) பொதுவான பிரச்சினை இது. மாதவிடாய் காலத்துக்கு முன்பு கோபம், எரிச்சல், கவனக்குறைவு, இனம்புரியாத வருத்தம், காரணமே இல்லாத அழுகை, விரக்தி போன்ற உணர்வு உருவாகும். இதுதான் PMDD. சில நேரங்களில் மாதவிடாய் முடியும்வரைகூட தொடரும். ஹார்மோன் சமநிலை குலைவதால் இந்தப் பிரச்சினை வரலாம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். முழுமையான காரணமும், மருந்துகளும் இல்லை.

ஆபத்தாக, தற்கொலை உணர்வுகூட சிலருக்கு வரலாம். சில நேரங்களில் எனக்கும்கூட அப்படித் தோன்றுவதுண்டு. ஆனால், தற்கொலையைக் காட்டிலும் எனக்கு மன உறுதி அதிகம். என் நண்பர் ஒருவர், இந்தப் பிரச்சினை உள்ளவர். அவருக்கும் இந்த உணர்வு உள்ளதென்று கூறினார். இந்த உணர்வு நிலையிலிருந்து வெளியேற உடற்பயிற்சி செய்வேன் என்றார். பிரச்சினை உணர்ந்தவர்களுக்கு பிரச்சினை இல்லை. பிரச்சினையை கைகொள்வது அவர்களால் முடிகிறது. இப்படியொரு பிரச்சினையை அறியாத பெண்களும் இருக்கிறார்கள். பல சமூக அழுதத்தங்களின் காரணமாக அவர்களுக்கு மேலும் மன அழுத்தம் அதிகமாகவே வாய்ப்புகள் அதிகம்.

பெரும்பாலும் இந்த சமயத்தில் அமைதியைக் கடைப்பிடிப்பேன். பிரச்சினைகள் வலிய வந்தாலும் சுரணையில்லாமல் நடந்துகொள்வேன். விரக்தியாக எண்ணங்கள் வரும்போது அடுத்த வாரம் சரியாகிவிடும் என சொல்லிக்கொள்வேன்.

மோசமான முடிவுகளை எடுக்க மனம் உந்தித்தள்ளும், அப்போது அதன் பேச்சைக் கேட்கவே கூடாது. அழும் உணர்வு வந்தால், தனிமையில் அழலாம்.

குடும்பத்தில் உள்ளவர்களிடம் இந்தப் பிரச்சினையை சொல்லி, ஒத்துழைக்கக் கேட்கலாம். அதிகப்படியான கோபத்தை குறும்பு செய்யும் மகனிடம் காட்ட வேண்டியிருக்கும், தாமதிக்காமல் அவனிடம் மன்னிப்பு கேட்டு விடுவேன். பிரச்சினை முடிந்தது.

யாரும் இல்லையென்றாலும் பிரச்சினை இல்லை, உங்களுக்குப் பிடித்த விசயங்களை அந்த சமயத்தில் செய்யுங்கள். படம் பார்க்கலாம், படிக்கலாம், எழுதலாம். நான் கொரிய சீரியல்களைப் பார்ப்பேன். 🙂

PMDD காரணமாக ஏராளமான சண்டை- சச்சரவுகளும் வந்துள்ளன. அந்தக் காலத்தை கடந்துவிட்ட பிறகு, இதற்கெல்லாம் இப்படி வினையாற்றியிருக்கத் தேவையில்லை எனத் தோன்றும். அதே சமயம் சில நல்லவைகளும் நடக்கலாம். எனக்கு நடந்திருக்கிறது.

PMDD ஒரு மோசமான பிரச்சினைதான். ஆனால், அதை கடக்க பழக்கப்படுத்திக்கொள்ள முடியும்.

’பல லட்சம் கோடி முறைகேடு நடைபெற்ற மற்ற மாவட்டங்களிலும் சகாயம் விசாரிக்க வேண்டும்’

சென்னை உயர்நீதிமன்ற அமர்வு 2014-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் நாள் உத்திரவிட்டதன் அடிப்படையில் சகாயம் ஆய்வுக்குழுவினர் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை பற்றி 03-12-2014 முதல் முழுமையாக ஆய்வு செய்து 7 ஆயிரம் பக்க ஆவணங்கள், 600 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சகாயம் ஆய்வுக்குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும், 32- மாவட்டத்திலும் நடைபெற்று உள்ள அனைத்து கனிமவள முறைகேடுகளையும் சகாயம் ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க உதவும் வகையிலும் கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க தமிழக ஒருங்கிணைப்பு குழுவினர் சில தீர்மானங்களை இயற்றியுள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளரான முகிலன் இது பற்றிப் பேசினார்.

“தமிழக அரசு பல்வேறு முறையில் சகாயம் ஆய்வுக் குழுவிற்கு முழுக்க முழுக்க ஒத்துழைக்காமலும், பல்வேறு நெருக்கடிகளும் கொடுத்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் அணுகியே தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்று ஆய்வுப் பணியை மேற்கொண்டனர் சகாயம் ஆய்வுக்குழுவினர். எதற்கும் அஞ்சாமல் உறுதியாக நின்று, மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகளை பற்றிய ஆய்வுப் பணியை முடித்த சகாயத்துக்கும் அவருடைய குழுவினருக்கும் வாழ்த்துக்களைச் சொல்கிறோம்.

தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற அபாயகரமான நிலையிலும் கூட, சகாயம் ஆய்வுக்குழுவினரிடம் பல்வேறு உண்மைகளை தெரிவித்த அனைத்து பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல, மதுரை மாவட்ட சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றவர்,

“சகாயம் ஆய்வுகுழு நீதிமன்றத்தில் தெரிவித்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்ட கிரானைட் முறைகேட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உயரதிகாரிகளுக்கும், ஆட்சி செய்தவர்களுக்கும் தொடர்பு இருந்து வருவதால், கனிம முறைகேடுகள் குறித்து விரைந்து விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும், மேலும் கிரானைட் முறைகேடு குறித்து விரிவான விசாரணைகளை சுயேச்சையாக செயல்படும் நம்பிக்கையான சிறப்பு புலனாய்வு அமைப்பு மூலம் மேற்கொள்ள வேண்டும்” போன்றவற்றை தமிழக அரசு ஏற்றுச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

* இந்த கிரானைட் முறைகேடு பற்றி விசாரணையில் சாட்சி அளித்த மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சகாயம் குழு சொன்ன பரிந்துரையையும் தமிழக அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

* சகாயம் ஆய்வுகுழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள அறிக்கையை மக்களின் பார்வைக்கு தமிழக அரசு வைக்க வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு நியமித்த தாதுமணல் கொள்ளை தொடர்பாக ககன்தீப் சிங் பேடி அறிக்கையை வெளியிடாமல் மறைத்து வைத்தது போல் இதை மறைக்க முயற்சிக்க கூடாது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பின்பு சகாயம் அறிக்கையை வெளியே கொடுக்காமல், தமிழக அரசு தானே முன்வந்து இதை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்று தங்களுடைய குழு தீர்மானமாக இயற்றியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் முகிலன்.

* சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவின் படி பல லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் தமிழகத்தின் 32- மாவட்டத்திலும் நடைபெற்று உள்ள அனைத்து கனிமவள முறைகேடுகளையும் சகாயம் சட்ட ஆணையராக இருந்து விசாரிக்க வேண்டும் என்றும் இந்தக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

காவிரி டெல்டாவை பன்னாட்டு கம்பெனிகளுக்குத் தாரைவார்க்கக் காத்திருக்கும் அரசுகள்!

கடந்த நான்கு ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரைத் தரவில்லை கர்நாடக மாநிலம். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதம் 10 டி.எம்.சி, ஜூலை மாதம் 34 டி.எம்.சி, ஆகஸ்ட் மாதம் 50 டி.எம்.சி என கடந்த 31 ஆம் தேதி வரை 94 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டிருக்க வேண்டும். செப்டம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கு 1.3 டி.எம்.சி. வீதம் இன்று வரை 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை 67 டி.எம்.சி. மட்டுமே காவிரியில் திறக்கப்பட்டிருக்கிறது. காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் சரியான மழைப்பொழிவு இல்லை என்ற காரணத்தைக் கர்நாடகம் சொன்னதால் படிப்படியாக கடந்த நான்கு ஆண்டுகளில் சம்பா சாகுபடி பரப்பு குறைந்துவிட்டது. தற்சமயம் சம்பா சாகுபடி முடிந்து, குறுவை சாகுபடி தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் கர்நாடகம் தரவேண்டிய நீரை தராததால் காவிரி டெல்டா பகுதிகளில் நெற் பயிர்கள் கருகிவருகின்றன. தங்களுக்கு வந்து சேரவேண்டிய தண்ணீரைப் பெற்றுத்தரக் கோரி விவசாயிகள் கடந்த 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீர் போதுமானதாக இல்லை. அணையிலிருந்து வரும் நீர் டெல்டா மாவட்டங்களில் கடைமடை நிலங்களுக்குச் சென்று சேரவில்லை. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிரை காப்பாற்றும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
கர்நாடக அரசு இதுவரை உபரிநீரையும் கணக்கில் எடுத்துக்கொண்டு 67 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டதாக கூறுகிறது. அப்படியே பார்த்தாலும் நடுவர்மன்ற தீர்ப்புபடி கர்நாடகம் இன்னும் 47 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிடவேண்டும். டெல்லியில் நடந்த காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனால் கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளிலும் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால்கூட சாகுபடியை முழுமையாக முடித்துவிடலாம்” என்கிறார் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். சமீபத்தில் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்தக் குழு ஈடுபட்டது.

கர்நாடக அரசு தண்ணீர் இல்லை என்று சொல்வதும் அதைக் கேட்டு தமிழகத்தின் ஆளும் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும் கொதித்தெழுந்து போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் என செய்வதும் வாடிக்கையாகிவிட்டன. ஆனால் இறுதிவரையில் காவிரியில் தண்ணீர் வருவதில்லை. நெல் வயல்கள் நீர் இல்லாமல் வெடித்து பாளம், பாளமாக நிற்பதுதான் நடக்கிறது. தமிழகம்-கர்நாடகத்துக்கு காவிரி நீரைப் பகிர்ந்தளிக்கும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைந்தும் அது செயல்படாத ஒன்றாகவே இருக்கிறது. மத்தியில் எந்தக் கட்சித் தலைமையில் ஆட்சி அமைந்தாலும் காவிரி நீர் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கர்நாடக அரசுக்கு இந்த அரசுகள் சாதகமான முடிவை எடுக்கிறார்கள் என்பது மட்டும்தான் இதற்கெல்லாம் காரணமா?

காவிரி நீர்க் கேட்டு தமிழக டெல்டா விவசாயிகள் நடத்தும் போராட்டங்களில் பங்கெடுத்த சமூக ஆர்வலர் முகிலன் இது பற்றி விரிவாகப் பேசினார்..
“கடந்த ஒன்றரை மாதங்களாக திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தேன். அங்கே காவிரி நீரை நம்பி செய்துவந்த விவசாயம் இப்போது முழுக்க முழுக்க ஆழ்துளை கிணறுகளை மட்டுமே நம்பியுள்ளது. நஞ்சை நிலங்களில் கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கின்றன. 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செய்துவந்த நெல் சாகுபடி இன்று 14 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. கர்நாடக தண்ணீர் தரவில்லை என்ற ஒரு காரணம் மட்டும்தான் இங்கே அரசியலாக்கப்படுகிறது. இது அரசியல் அல்ல என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் இருப்பது பன்னாட்டு நிறுவனங்களுக்காக மத்திய அரசு செய்யும் சதி மட்டுமே.

ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ளுவதைத் தடுக்கக்கோரி

காவிரி டெல்டா பகுதியில் 30 வருடத்துக்கு மீத்தேன் எடுக்க முடியும்; 100 வருடத்துக்கு நிலக்கரி எடுக்கலாம். கூடுதலாக பாறைகளை வெடித்துத் தகர்ப்பதால் கிடைக்கும் ஷேல் வாயுவை எடுக்கலாம். இதன் பொருட்டே கடந்த 30 ஆண்டுகளாக, மத்தியில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு காவிரி நீரைப் பெற்றுத்தருவதில் விருப்பம் காட்டவில்லை. 80களிலே மத்திய அரசை மதிக்காமல் கர்நாடகம் காவிரியில் அணை கட்டியது. 1996-ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், கர்நாடக நீர் நிலைகளை சீரமைக்க ரூ. 500 கோடி ஒதுக்கினார். தமிழகத்தை தொடர்ந்து ஆட்சி செய்யும் அதிமுக, திமுக அரசுகளும் இதற்கு உடந்தையாகவே உள்ளன. மணல் அள்ளுவதில் இருந்து, கிரானைட் வெட்டி எடுப்பது, தாதுமணல் வரை எல்லா பெரும் ஊழல்களிலும் இந்த இரண்டு கட்சிகளும் பங்குதாரர்களாக இருக்கும்போது எப்படி மத்திய அரசை இவை பகைத்துக் கொள்ளும்?” என்று ஆதங்கப்படுகிற முகிலன், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் பணியை சத்தமேயில்லாமல் மத்திய அரசு செய்துவருவதாகக் கூறி அதற்கான புகைப்பட ஆதாரத்தையும் அளித்தார்.

எப்போது ஆறுகள் வறண்டுப் போகும் என்பதுபோல், மணல் அள்ளக் காத்திருக்கும் கொள்ளையர்களும் அவர்களுக்குத் துணைப் போகும் அரசு அதிகாரமும் தமிழகத்தை வறட்சிப் பாதைக்குத் தள்ளியுள்ளன. சமீபத்தில் வைகுண்டம் அணையில் தூர்வாறுவதாகச் சொல்லி மணல் அள்ளிய விவகாரம் பொதுமக்கள் கவனத்துக்கு வந்தது. வருடத்து வருடம் பருவ மழையும் பொய்த்து வருகிறது. தண்ணீர் இல்லை, உணவு உற்பத்தி இல்லை என்கிற நிலையை இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் எட்டுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன. பிரகாசம் என்பதை ஆழ்ந்த இருள் என்று பொருள் கொள்க!