ரோமுலஸ்விட்டேகர்… இந்தியாவின் ஸ்டீவ் இர்வின். ஆனால், இருவருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இவர், ஸ்டீவ் இர்வினைப் போல முதலைகளையும் பாம்புகளையும் வைத்து வேடிக்கை காட்டும் சாகசக்காரர் அல்ல. அவற்றைக் காப்பாற்ற வந்த காட்ஃபாதர்! சென்னை, கிண்டி பாம்புப்பண்ணையும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப்பண்ணையும் இந்த அமெரிக்கர் உருவாக்கியவை. கிட்டத்தட்ட அழிந்தேவிட்ட சில அரியவகை முதலைகளும் பாம்புகளும் உயிரோடு இருப்பது இவருடைய பண்ணைகளில்தான். ஆக்ரோஷமான முதலைகளிடம் அத்தனை பரிவுகாட்டும் இவருக்கு மனிதர்கள் மீதுதான் கொஞ்சம் கோபம்!
”முதலைகள் பற்றி உங்கள் தாத்தா பாட்டியிடம் கேட்டுப்பாருங்கள். அவ்வளவு கதை சொல்வார்கள். ஆனால், நாமோ மிருகக்காட்சிச் சாலைகளில்தான் முதலைகளைப்பார்க்கிறோம். இன்று ஆறுகளில் முதலைகளே இல்லை என்று சொல்லலாம். மனிதனுக்கும் முதலைகளுக்கும் நடந்த ‘யார்பெரியவன்?’ போட்டியில் முதலைகள் பாவம், தோற்றுப் போய்விட்டன. மீன்களையே சாப்பிடும் மீன்கள் இருக்கின்றன. அந்த மீன்களை மட்டும்தான் முதலைகள் சாப்பிடும். முதலைகள் அழிக்கப்பட்டதால் மீன்களைச் சாப்பிடுகிற மீன்கள் அதிகமாகிவிட்டன.எனவே, மற்ற மீன் இனங்கள் குறைந்துவிட்டன. இயற்கையின் சங்கிலித்தொடரில் ஒரு கண்ணியை உருவினாலும் பாதிப்பு எல்லோருக்கும்தான்!
வட இந்திய ஆறுகளில் மட்டுமேவாழ்ந்த ‘கரியால்‘ இனமுதலைகள்அவற்றின் தோலுக்காக மிச்சசொச்சம் இல்லாமல் வேட்டையாடப்பட்டன. தென்னிந்தியாவில் முதலைகளின் முக்கியத்துவம் தெரியாமல், அவை பயங்கரமானவை என்ற காரணத்துக்காகவே அழிக்கப்பட்டுவிட்டன. ‘பயங்கரமானது‘ என்று வர்ணிக்கப்படும் எந்தவொரு உயிரினமும் உண்மையில் பயங்கரமானது அல்ல. தன்னைத் தற்காத்துக்கொள்ளவே தாக்குகின்றன. முதலை அற்புதமான குணம் கொண்டது. மனிதர்களைப்போல் தாய்மை குணமுள்ள உயிரினம் அது. முட்டையிடும் சமயத்தில் அதை நெருங்கவே முடியாது. தன் முட்டையை யாராவது களவாடுகிறார்கள் என்று தெரிந்துவிட்டால், எவ்வளவு வேகமாகப்போனாலும் துரத்தி வந்து பிடித்துவிடும்.
மீன்களின் பெருக்கத்துக்குக் காரணமாக இருப்பதால் முதலைகள், மீனவர்களின் நண்பன். அதுபோல பாம்புகள், விவசாயிகளுக்கு நண்பன். விளைவதில் சரிபாதி விளைபொருள்களை வீணாக்கும் அத்தனை எலிகளையும் நம்மால் ஒழிக்கமுடியாது. வயல்வெளி எலிகளை ஒழிக்க அரசாங்கம் எத்தனையோ கோடிகளைக் கொட்டிக்கொடுக்கிறது. ஆனால், பாம்புகள் சர்வசாதாரணமாக ஆயிரக்கணக்கான எலிகளை ஒழித்துவிடும். நாம் அதனைச் சீண்டாதவரை அதுநம்மை எந்தவிதத்திலும் துன்புறுத்தாது. ஆனால், அந்தப் பண்பு நம்மிடம் இல்லையே!
பாம்புகளிலேயே மிக மிக சுவாரஸ்யமானது ராஜநாகம். 13 அடிஅழகானராட்சசன்! பாம்புகளிலேயே ராஜநாகம்மட்டும்தான் கூடுகட்டி முட்டைகளை வைக்கும். மலைக்காடுகளில்தான் வசிக்கும். மேற்குவங்காளத்தில் இருக்கும் சுந்தரவனக்காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் என இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே ராஜநாகங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்போது மேற்குத் தொடர்ச்சிமலைகளில் வாழும் ராஜநாகங்கள் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.” ”இதுவரை எந்தப் பாம்பும் உங்களைக் கடித்ததில்லையா” என்றுகேட்டால், தன் வலது ஆள்காட்டி விரலைத் தடவிக்கொண்டு சிரிக்கிறார். ”இருபது வயதில் அமெரிக்க பாலைவனத்தில் வாழக்கூடிய பற்றிய ஆராய்ச்சிக்காகப் போயிருந்தேன். கொஞ்சம் அலட்சியமாக ஒருபாம்பைப்பிடித்துவிட்டேன். அதுதன்னை தற்காத்துக் கொள்ள என் வலதுகை ஆள்காட்டிவிரலைக் கடித்து விட்டது. அந்தவிரலில்நரம்புகள் துண்டிக்கப்பட்டு, உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. அந்த பாம்புமேல தப்பு இல்லை. தப்பு என்மேல் தான்!” என்பவர் தொடர்ந்து… ”நான் பிறந்தது நியூயார்க். ஏழுவயதில்அம்மாவோடு இந்தியா வந்தேன். பாம்புபிடிக்க ஆரம்பித்தது நான்கு வயதில். என் ஆர்வத்தைப்புரிந்து கொண்டு பாம்புகள் பற்றிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார் அம்மா. பாம்பு, முதலைகளைத்தேடி இந்தியா முழுக்கத் திரிந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் சூழல் எனக் கேற்றதுபோலஇருந்ததால், இங்கேயே தங்கிவிட்டேன். இயற்கை சூழலைக்காப்பாற்றுவது குறித்து எந்த அக்கறையும் நம்மில் பலருக்குக் கிடையாது. முக்கால் பங்குகாடுகள் அழிந்துபோய், தொழிற்சாலைகளாகவும் பொறியியல் கல்லூரிகளாகவும் நிற்கின்றன. சுதந்திரப்போராட்டத்துக்கு இந்தியமக்கள் ஒன்று சேர்ந்ததுபோல, இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மக்கள் ஒன்று சேரவேண்டும். இயற்கையைச் சமநிலைப்படுத்துகிற உயிரினங்களைக் காப்பாற்றினால் போதும்… உலகம் சூடாவது பற்றியும் கவலைப்படவேண்டாம், பசுமைப்புரட்சி செய்ய மண்டையை உடைத்துக் கொள்ளவும் வேண்டாம்!” என்கிறார் ரோமுலஸ், ஆதங்கமும் வருத்தமும் தோய்ந்தகுரலில்.