கான்கிரீட் நகரத்திற்கு நடுவே பசும் காடு!

கண்ணை மூடித் திறப்பதற்குள் தேவதை ஒருத்தி உருவாக்கிய பசும் வெளியாக, கான்கிரீட் நகரத்திற்கு நடுவே பரந்து கிடக்கிறது அந்தக் காடு! நான்கு பக்கமும் வாகன இரைச்சல் காடுகளைக் கிழித்துக் கொண்டிருக்க…சற்றே சாலையிலிருந்து விலகி உள்ளே சென்றால் நிசப்தமான பசும்வெளியில், எங்கோ ஒரு மூலையில் இருந்து வரவேற்கின்றன முகம்தெரியா பறவைகளின் ‘கீச்’ குரல்கள்… நீங்கள் வியப்பதற்கு இன்னுமொரு விஷயம் இருக்கிறது. இந்தக் காடு இருப்பது வறட்சிக்குப் பெயர்போன சென்னையில்!

தாம்பரத்தை அடுத்த மேடவாக்கம், சந்தோஷபுரம் பகுதிகளுக்கு நடுவே இருக்கிறது நன்மங்கலம். அரசால் ‘காப்புக் காடுகள்’ என்று அறிவிக்கப்பட்ட பகுதி நன்மங்கலம். இந்த இடத்தில் இப்படியொரு காடு இருக்கிறது என்பதை இந்தப் பகுதி வாசிகளே அறிந்திருக்க மாட்டார்கள். இன்னும் தெரியாத பல விஷயங்களை தனக்குள்ளே அடக்கி வைத்திருக்கிறது அந்தக் காடு.
‘‘நன்மங்கலத்தோட ஸ்பெஷலே எந்த சூழ்நிலையிலும் மாறாத அதன் பசுமைதான். எப்போதும் ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கிறதால பட்டாம்பூச்சிகள் நிறைய வருது. பட்டாம்பூச்சி போன்ற சிறு பூச்சி இனங்களை சாப்பிடற பறவைகள். அதைச் சாப்பிடற பருந்து. இப்படி பேலன்ஸான சூழல் நிலவுற இடம் இது.
20 வருஷமா எங்களைப் போல சூழலியல் ஆர்வலர்கள் இந்த காட்டை கண்காணிச்சுட்டு வர்றோம். மற்ற இடங்கள்ல காடுகள் அழிக்கப்பட்டு, அங்க இருக்கிற உயிரினங்கள் காணமல் போயிட்டு இருக்கு. ஆனா இங்க நாளுக்கு நாள் இயற்கை வளம் அதிகமாயிட்டே வருது. முழுவதும் அழிஞ்சிடுச்சினு நினைச்ச இந்திய கொம்பு ஆந்தைகள் பத்துக்கும் மேல இங்க இருக்குங்கிறதை நாங்க கண்டுபிடிச்சிருக்கோம்.

இந்தியாவின் முன்னோடி பறவையியல் ஆராய்ச்சியாளரான சலீம் அலி ஒரே ஒரு கொம்பு ஆந்தையை மட்டுமே பார்த்ததா தன்னோட ஆராய்ச்சி குறிப்பில சொல்றார்.
சில வருஷங்களுக்கு முன்னாடி இங்க ஆறு குவாரிகள்ல கருங்கல் எடுத்துட்டு இருந்தாங்க. ஆழமா வெட்டப்பட்ட அந்த குவாரிகளோட இடுக்குகள்லதான் ஆந்தைகள் வசிக்குது. குவாரிகள்லேயும் புதர்கள்லேயும் வசிக்கிற எலிகள்தான் ஆந்தையோட முக்கியமான உணவு. சில சமயம் முயல், காட்டுப்பூனைகளையும் ஆந்தைகள் சாப்பிடறதுண்டு.

கொம்பு ஆந்தைகளைத் தவிர, அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய கானான் கோழிகளை சமீபத்திலே இங்கே பார்த்தோம். இவை தவிர, செம்பகப் பறவை, சுடலை குயில், கள்ளி புறா, மஞ்சள் குருகு, கோகிலம், வெண்மார்பு மீன்கொத்தி, சிரல் மீன்கொத்தி,, மாங்குயில், நாகணவாய் மைனா என்று கிட்டத்தட்ட 83 வகையான பறவைகள் இங்கே வாழுது.

குவாரிகள்ல தேங்கிருக்கிற மழைத்தண்ணீர் கோடை காலங்களிலும் வறண்டு போகாமல் இருக்கிறதால, அந்த இடத்திலும் நிறைய நீர் வாழ் உயிரினங்கள் பெருக ஆரம்பிச்சிருக்கு. ஆபூர்வமான உயிரினமாகிட்ட நன்னீர் ஆமைகள், இங்க நிறைய இருக்கு. இன்னும் மூலிகைச்செடிகள், பூச்சியினங்கள்…இப்படி பட்டியல் போட்டா நீண்டுக்கிட்டே போகிறமாதிரி ஏராளமான விஷயங்கள் 320 ஹெக்டேர் பரப்பளவு உள்ள இந்த மினி காட்டுல வாழ்ந்துட்டு இருக்கு’’ என்கிறார் சூழலியல் ஆர்வலர் திருநாரணன்.

இப்படியொரு உயிர்சூழல் பற்றித் தெரியாமல், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் குளிப்பதற்காகவும் வாகனங்களை கழுவதற்காகவும் இங்கே வந்துகொண்டிருக்கிறார்கள். சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து இந்தக் காட்டைப் பாதுகாப்பதன் அவசியத்தை வனத்துறையினரிடம் எடுத்துச் சொன்னதன் விளைவாக மக்கள் வருவதற்கு தடை போட்டிருக்கிறார்கள்.
‘‘மனுஷன் புழங்க ஆரம்பிச்சா எப்படிப்பட்ட வளமான காடும் இருக்கிற இடம் தெரியாம போயிடும். மக்களுக்கு இந்த விஷயத்துல விழிப்புணர்வு தேவை. குறைந்தபட்சம் 200 வகையான பறவைகள், விலங்கினங்கள் இருந்தாதான் அந்த இடத்தை உயிரியல் பூங்காவா அறிவிப்பாங்க. வனத்துறையினரும் மக்களும் அக்கறையோட ஒத்துழைச்சா இருக்கிறதை தக்கவைக்கிறது மூலமா உயிரினங்களைத் தேடி வர வைக்கலாம்.
இங்க வளர்ச்சிப் பணிங்கிற பேர்ல என்ன செய்தாலும் அது இயற்கைக்கு அழிவு தருகிற வேலையாதான் இருக்கும். சென்னைங்கிறது செங்கல்பட்டு வரைக்கும் நீண்டுக்கிட்டு இருக்கு. இந்த நிலைமைல இன்னும் பத்து வருஷத்துல நன்மங்கலம் காடு இருக்குமான்னு கேட்டா இருக்கும்னுதான் நம்பிக்கையோடு சொல்வேன்’’ என்கிறார் திருநாரணன்.
2007 தினகரன் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை இது.

புலி உறுமல் கேட்குமா?

புலிகளை வீரத்தின் அடையாளமாகக் கருதி கொண்டாடிய சமூகம் நம்முடையது. இன்று அதே சமூகத்தின் சந்ததிகள்தான் புலிகள் எங்கே இருக்கின்றன? என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் நம் தேசிய விலங்கான புலிகள் எஞ்சியிருப்பது வெறும் 1411 மட்டுமே.

புலி ஒரு காட்டுயிர் மட்டுமல்ல, வளமான காட்டின் அடையாளம். அதாவது நாமும் நமக்குப் பின்னால் வரும் சந்ததிகளும் சிறப்பான வாழ்வை வாழப்போகிறோம் என்பதற்கான குறியீடு. அடர்ந்து வளர்ந்த மரங்களும் புல்லும் புதரும் நிறைந்த காட்டில் அதை உணவாக உண்ணும் முயல், மான், மாடு, காட்டுப் பன்றி, குரங்கு போன்ற உயிரினங்கள் வாழும். இவற்றின் எண்ணிக்கை கூடும்போது புலி, சிறுத்தை, நரி, ஓநாய் உயிரினங்களின் உணவுத் தேவை தீர்ந்து அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. இந்த மூன்றும் சங்கிலித்தொடராக தொடரும்போதுதான் காடு தன் இயல்பைத் தொலைக்காமல் இருக்கிறது. பருவ மழை சரியான பருவத்தில் பொழிந்து ஆறு பெருகி மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. எல்லாமே ஒன்றொடொன்று தொடர்புடையவை. சென்னையில் இருக்கும் நான், மேற்கு தொடர்ச்சி மலையின் ஏதோ ஒரு சரணாயத்தில் வாழும் புலிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என ஏன் கவலைப்பட வேண்டும் என கேட்டுவிட முடியாது! நம் ஒவ்வொருவரின் கவனத்துக்கும் அக்கறைக்கும் உரியவை புலிகள். காடுகள் வேகமாக அழிக்கப்படுவதாலும் தோலுக்காக வேட்டையாடப்படுவதாலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அழிவின் விளிம்பில் இருக்கும் இவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசும் தன்னார்வர்லர்களும் முழுமூச்சில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த செயல்பாடுகளால் புலிகளின் எண்ணிக்கையும் சக இரையுண்ணிகள், அவற்றின் இரைகள், தாவர வளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக வருடந்தோறும் மத்திய வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
கடந்த ஒன்பது வருடங்களாக வனவிலங்குகள் கணக்கெடுப்பில் பங்கேற்று வருகிறார் சென்னையிலிருந்து இயங்கிவரும் நேச்சர் டிரஸ்ட் அமைப்பைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் திருநாரணன்.
“தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள வனங்களில் நடந்த கணக்கெடுப்பில் பங்கேற்று வருகிறேன். இந்த வருடம் ஆனைமலை பகுதியில் கணக்கெடு எடுத்தோம். புலிகள் கணக்கெடுப்பு என்று பெயர் இருந்தாலும் காட்டில் உள்ள அதாவது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் இருக்கும் மரம், செடி, விலங்குகள், பறவைகள் என அத்தனையையும் கணக்கெடுக்க வேண்டும். இதுதான் செயல்முறை. இதை வைத்துதான் புலிகளின் எண்ணிக்கையும் வாழ்வாதாரமும் கணிக்கப்படும்.

அந்த வகையில் ஆனைமலை சரகம் வளமோடு இருக்கிறது என்பதை நேரிடையாக பார்க்க முடிந்தது.
இவ்வளவு உயிரினங்கள் இருக்கின்றன என்று ஆறே நாட்களில் கணக்கிட்டு சொல்லிவிட முடியாது. புலி, சிறுத்தை போன்றவற்றை நேரிடையாக பார்ப்பதும் அரிதான விஷயம். அதனால் அவற்றின் கால்தடங்கள், கழிவுகள், மரங்களின் மேல் அவை ஏற்படுத்திச் சென்ற உராய்வுகள் இவற்றை வைத்து கணக்கெடுப்பு செய்கிறோம். மான் இனத்தில் பல்வேறு வகைகள் உண்டு. அவற்றின் கழிவு பொருட்களை வைத்துதான் அவை இந்த வகையைச் சேர்ந்தவை என்று குறித்துக்கொள்கிறோம். நீர் நிலைகளில் விலங்குகளின் நடமாட்டம் இருக்கும். அங்கு அவை விட்டுச்சென்ற அடையாளங்களையும் சேகரிப்போம். நீர்நிலைகளை வைத்து யானைகளின் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ள முடியும். இதெல்லாம் மறைமுக கணக்கெடுப்பில் வருபவை. பெரும்பாலும் காட்டுயிர் கணக்கெடுப்பில் இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. » » » »

பல காலமாக பின்பற்றிவரும் கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கையை துல்லியமாக கூறமுடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு சொல்லும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள செல்லுலர் மற்றும் மாலிக்குலர் மையம் (Centre for cellular and Molecular Biology) புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது புலிகள் விட்டுச்சென்ற தடயங்களிலிருந்து அவற்றின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து அவற்றின் எண்ணிக்கையை கணக்கெடுப்பதே இந்த முறை. உயிரினம் ஒவ்வொன்றுக்கும் டிஎன்ஏ அமைப்பு வேறுபட்டு இருக்கும். இதை வைத்து துல்லியமாக புலிகளின் எண்ணிக்கை சொல்ல முடியும் என்கிறது இந்த ஆராய்ச்சி நிறுவனம். முதுமலை வனசரணாலயத்தில் இந்த கணக்கெடுப்பு முறை சோதனை செய்து பார்க்கப்பட்டிருக்கிறது. இது ஆராய்ச்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்டால் அனைத்து சரணாலயங்களிலும் இந்த முறை செயல்படுத்தப்படும் என்கிறது இந்நிறுவனம்.

« « « காட்டுயிர் வளத்தை மட்டுமல்ல, காட்டை நம்பி, அவற்றை சுற்றி வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையை கவனிப்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற வகையில் முக்கியமான பணி. இந்த வருடம் ஆனைமலையில் வசிக்கும் முதுவர் பழங்குடி மக்களை சந்திக்க முடிந்தது. காட்டின் நடுவே உடுவம்பாறை, சங்கரன்குடி, பரமன்குடி போன்ற வசிப்பிடங்களில் அவர்களைப் பார்த்தோம். காடு, வனஉயிரினங்கள் குறித்த அவர்களின் அறிவு வியத்தலுக்குரியது. பழங்குடி இன மக்களைத்தான் வேட்டை தடுப்பு நடவடிக்கைக்காக அரசு பயன்படுத்திவருகிறது. காடு குறித்த அறிவுச்செல்வம் மிக்க இந்த மக்கள் வாழ்வாதாரத்தில் மிகவும் கீழ்நிலையில் இருக்கிறார்கள். இவர்களின் அறிவை பயன்படுத்திக் கொள்ளும் அரசு, அதற்குரிய வேலை உள்ளிட்ட பொருளாதார தேவைகளை செய்துகொடுக்க வேண்டும்” என்ற திருநாரணன்…» » » »

அடர் காடுகளில் மட்டுமே புலிகள் வசிக்கும். கடலும் ஆறு சேரும் முகத்துவாரப் பகுதியில் வசிப்பதால் வங்காளப் புலிகள் தனிச்சிறப்பானவை. அலையாத்தி(மாங்குரோவ்) மரங்கள் நிறைந்த சுந்தரவனக்காடுகளில் வாழும் வங்காளப் புலிகள், இன்னும் 60 வருடங்களில் அழிந்து விடும் என எச்சரித்துள்ளது உலக காட்டுயிர் பாதுகாப்புக்கான நிதியம்.

« « « “ஆனைமலை சரகத்தில் காட்டுவளம் நல்லநிலையில் இருந்தாலும் காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்களின் தலையீடு அதிகமாகவே இருக்கிறது. புதிதாக முளைத்திருக்கும் தேயிலை தோட்டங்களும் அதை ஒட்டி எழுந்துள்ள குடியிருப்புகளும் காட்டுயிர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவை. இப்படி காட்டின் பகுதிகளை அபகரித்துக்கொண்டு, பின் நாளில் புலிகள் வேட்டையாடுகின்றன, யானைகள் அட்டகாசம் செய்கின்றன என்று கூச்சலிடுவதில் எந்த நியாயமும் இல்லை!” என்று முடித்தார்.


நாடு முழுவதும் நடந்த கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு காட்டுயிர் ஆர்வலர்களுக்கு இது ஆறுதலுக்குரிய செய்திதான் என்றாலும் இந்த வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு இன்னும் நிறைவே செய்யவேண்டியிருக்கிறது.