மோடி ஃபார்முலாவில் சமூக ஊடகங்களில் தமிழகக் கட்சிகளின் பிரச்சாரம்!

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார உத்தியில் தெரு முனைக் கூட்டங்கள் எல்லாம் பழங்கதைகளாகிக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களில் பிரச்சாரம்தான் இனி தங்களுடைய வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகின்றன என்பதை தமிழக கட்சிகளும் உணர ஆரம்பித்துவிட்டன. 2014-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலின் போது இந்த டிரெண்டை இந்தியாவில் தொடங்கி வைத்த பெருமைக் குரியவர் நரேந்திர மோடி.  பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற சமூக ஊடங்களின் பங்களிப்பு முக்கியமானது. மோடியின் வெற்றிக்காக சமூக ஊடக உழைக்க வைத்தது ஒரு நிறுவனம். மேலை நாடுகளில் பிரபலமான தகவல் தொடர்பு நிறுவனங்கள் நடத்தி தரும் தேர்தல் போல, மோடியும் நடத்திக் காட்டினார். அதில் வெற்றியும் பெற்றார்.

மோடி ஃபார்முலா என்று உருவாகிவிட்ட அதைத்தான் இந்திய அரசியல்வாதிகள் பலரும் பின்பற்ற நினைக்கிறார்கள். நிதிஷ்-லாலு-காங்கிரஸின் மெகா கூட்டணி வெற்றி பெற கிஷோர் என்ற தகவல் தொடர்பு நிபுணரின் உதவி முக்கியமானது என்று ஆங்கில ஊடகங்கள் எழுதின. கிஷோர் மோடிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர். இந்தியாவில் இந்த ஆண்டு வரவிருக்கிற தேர்தலுக்காக கிஷோரை வலைவீசி பல மாநில அரசியல்வாதிகள் காத்துக்கொண்டிருக்கிறார்களாம். அதில், திமுகவும் அதிமுகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டின் தேர்தலின் வெற்றி தோல்வியை இளம் வாக்காளர்கள்தான் நிர்ணயிக்க இருக்கிறார்கள் என்பதால் தமிழகத்தின் கட்சிகள் அவர்களை குறிவைத்து சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கின்றன. இந்த பிரச்சாரத்தை முதலில் தொடங்கியது பாமக. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கையோடு, சமூக ஊடக பிரச்சாரத்தையும் தொடங்கியது பாமக. இந்த பிரச்சாரத்தை கவனித்துக் கொள்ள தனி பிரிவே இருக்கிறது.

அடுத்து, திமுக ’நமக்கு நாமே’ பயணத்தை மு.க. ஸ்டாலின் தொடங்கிய வேளையில் தனி வலைத்தளம், ஃபேஸ்புக், ட்விட்டரில் ஸ்டாலின் பயணம் பற்றிய தகவல்கள் உடனடியாக பதியப்பட்டன. திமுக தலைவர் கருணாநிதிக்கென்றும் தனி வலைத்தளம் திறக்கப்பட்டது. அதிமுகவும் தன்னுடைய சமூக ஊடக பிரச்சாரத்துக்கென்று தனி பிரிவை அமைத்திருக்கிறது. அதிமுக அரசின் விடியோக்கள், ஆடியோக்கள் என வெளியிட்டு தாங்களும் கடமையாற்றுகிறார்கள்.

மக்கள் நலக் கூட்டணி சளைத்ததா என்ன? மதிமுகவுக்கு என்று தனி வலைத்தளம் இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணிக்கு பிரத்யேகமாக வலைத்தளம் அமைத்திருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், ஃபேஸ்புக்கில் ஆர்வமாக பங்கெடுக்கிறார். இவர் திங்கள்கிழமை பதிவிட்ட மக்கள் நலக் கூட்டணி செல்ஃபி வைரல் ஆனது! மதுரை மாநாட்டுக்குப் பிறகு, மக்கள் நலக் கூட்டணிக்கு மவுசு கூடியிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதற்கு முன்பு வரை ஜி. ராமகிருஷ்ணன் பக்கத்தை கட்சித் தோழர்கள் மட்டும்தான் பார்த்து வந்தார்கள். இன்று அவர் போடும் ஒவ்வொரு பதிவும் பலரால் பகிரப்படுகிறது.

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக உள்ள அரசியல்வாதி கருணாநிதிதான். ஃபேஸ்புக்கில் தினமும் பதிவிடக்கூடியவராகவும் அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்பவராகவும் கருணாநிதி இருக்கிறார்.

இளைஞர்களுக்காக அரசியல்வாதிகளும் தங்களை நவீனப்படுத்திக் கொண்டது சரிதான். ஆனால், கொள்கைகள் இளைஞர்களைக் கவரும் விதமாக இருக்க வேண்டுமே!

தினச்செய்தி(10-02-2016) நாளிதழில் வெளியானது.

ஸ்டாலினின் சமூக ஊடகத்தொடர்பு கேலியாகிறது ஏன்?

வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவிருக்கிற 30 சதவிகிதத்துக்கு அதிகமாக உள்ள இளைஞர்களை கவரும் விதமாக இளைஞர் அதிக அளவில் நேரத்தை செலவிடும் சமூக ஊடகங்கள் மூலம் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிடுகிறன. இதில் அதிகம் கவனம் செலுத்தி வருவது பாமகவும் திமுகவுதான்.

அன்புமணியை முன்னிறுத்தி பாமக சமூக வலைத்தளங்களில் செய்யும் பிரச்சார உத்திகள் சமூக வலைத்தளங்களில் மீமிக்களாக உலவும். அதுபோலத்தான் திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் உள்பட பலர் அரசியல் வாதிகளை நெட்டிசன்கள் வருத்தெடுக்கிறார்கள்.

ஆனால், மு. க.ஸ்டாலினின் சமூக வலைத்தள பொறுப்பாளர்கள் பல நேரங்களில் மு.க. ஸ்டாலினின் பகிரத் தேவையில்லாத படங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். ‘நமக்கு நாமே’ பயணத்திலிருந்து மு.க.ஸ்டாலினுடன் குறைந்தது நான்கு ஒளிபடக்காரர்கள் உடன் செல்கிறார்கள். எல்லா தலைவர்களும்தான் தங்களுடன் ஒளிப்படக் குழுவை அழைத்துச் செல்கிறது. ஆனால் மு.க.ஸ்டாலின் வலைத்தளங்களில் பகிரப்படும் பல படங்களில் ஸ்டாலினுடன் இந்தக் குழுவினரும் இருக்கும் படங்களும் இடம் பெற்றுவிடுகின்றன.

மீமிக்காரர்களுக்கு மட்டுமல்ல, பொது மக்களுக்கும்கூட இது நல்ல அபிப்ராயத்தை எடுத்துச் சொல்லாது. சமீபத்தில் ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு படம், மோசமான சமூக ஊடக கையாளுதலுக்கு உதாரணம். அந்தப்படமும் அதுகுறித்து வந்த விமர்சனங்களும் இங்கே…

sta mk stalin twit

சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம்: களமிறங்கும் கட்சிகள்

socail media

தமிழக தேர்தல் களத்திலிருந்து காதைப் பிளக்கும் ஒலிப்பெருக்கிகள், வழியை மறிக்கும் ஆளுயற கட் அவுட்களுக்கு இனி ஓய்வெடுக்கும் காலம் வந்துவிட்டதுபோல. இப்போது சமூக வலைத்தளங்கள்தான் தேர்தலுக்காக பரபரத்துக்கொண்டிருக்கின்றன. 35 சதவித இளம் வாக்காளர்களை முன்வைத்து கட்சிகள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கென்றே தனிப் பிரிவுகளை ஏற்படுத்தி செயல்பட்டுவருகின்றன.

தமிழக தேர்தல் களத்தில் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து வேலையை ஆரம்பித்த பாட்டாளி மக்கள் கட்சி, சமூக வலைத்தளத்திலும் தன்னுடைய பிரச்சாரத்தை ஆறு மாதத்துக்கு முன்பே முடுக்கிவிட்டது. இதற்கென்றே பாமகவில் தகவல் தொழிற்நுட்பம் படித்தவர்களைக் கொண்டு தமிழ் சமூக ஊடகத்துறை என்ற பெயரில் ஒரு பிரிவு செயல்படுகிறது.

“சமூக வலைத்தளங்களில் பாமகவின் முக்கிய உத்தி, அன்புமணியின் பெயரில் வெளியிடப்பட்ட ஆப் என்று சொல்லலாம். இந்த ஆப்பை பாமகவினர் அதிகம் பயன்படுத்துவார்கள். இந்த ஆப் மூலம் ‘விழித்திரு’ என்ற பெயரில் தினமும் அன்புமணி ஒரு ஊக்கப்படுத்தும் வாக்கியத்தை அனுப்புவார். சில சமயம் விடியோக்களும் ஆப் வழியாக அனுப்பப்படும். இந்த விஷயங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்வதற்கு ஆப்’பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆப் வைத்திருப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் இவற்றைப் பகிர்ந்துகொள்வார்கள்” என்கிறார் பாமகவின் சமூக வலைத்தள நிர்வாகிகள் குழுவில் உள்ள ஜெயக்குமார்.

பாமக அறிவித்துள்ள வரைவு தேர்தல் அறிக்கையை சிறு சிறு பகுதிகளாக்கி அதை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பகிர்வதை தற்சமயம் செய்துவருவதாகச் சொல்லும் இவர், தமிழக கட்சிகளில் பாமக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் முன்னோடியாகச் செயல்படுவதாகச் சொல்கிறார்.

“மீம்ஸ் வடிவமைத்த பிறகு மின்னஞ்சல் குழுக்கள், வாட்ஸ் அப் குழுக்கள் வழியாக கட்சியினருக்கு அனுப்புவோம். அவர்கள் அதை சமூக வலைத்தளங்களில் பகிரச் செய்வார்கள்” என்கிறார். இந்தக் குழுவில் பெண்களும் இருப்பதாகச் சொல்கிறார் ஜெயக்குமார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ பயணத்தை சமூக வலைத்தளங்களில் பரப்ப ஐந்து பேர் கொண்ட குழு செயல்படுகிறது. இணையதளத்தை நிர்வகிப்பது, ஸ்டாலினின் பயணங்கள் பற்றிய பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொள்வது இந்தக் குழுவின் முக்கியமான வேலை. மற்ற கட்சியினரை விமர்சிக்கும் மீம்ஸ் வடிவமைப்பது திமுகவினரும் திமுக அனுதாபிகளுமே என்கிறார் இந்தக் குழுவில் உள்ள ஒருவர்.

“ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தை கேலி செய்து நிறைய மீம்ஸ் வரும். அதற்கு கவுண்ட்டர் கொடுப்பதுபோல நமக்கு நாமே பயணத்தைப் பற்றிய பாஸிட்டிவ் மீம்ஸை வெளியிடுவார்கள். எதிர் தரப்பை கேலி செய்யும் மீம்ஸும் போடுவார்கள். பெரும்பாலும் திமுகவினரே இதைச் செய்கிறார்கள்” என்கிறார் திமுக சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கும் பிரிவைச் சேர்ந்த ஒருவர்.

எதிர்க்கட்சிகள் சமூக வலைத்தள பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கும் நிலையில் கடந்த விஜயதசமி அன்று தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறது அதிமுக. அஸ்பையர் சாமிநாதன் தலைமையில் தகவல் தொழிற்நுட்பப் பிரிவு இந்தப் பணிக்கென்றே செயல்படுகிறது.

“இளைஞர் இன்று கண்விழிப்பதே ஃபேஸ் புக்கிலும் ட்விட்டரிலும்தான். அவர்கள் தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்க முடியாது. அதனால்தான் அம்மாவின் நல்லத் திட்டங்கள் பற்றி எடுத்துச் சொல்ல விஜயதசமியில் ‘ஒளிரும் நிகழ்காலம் மிளிரும் வருங்காலம்’ என்று ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தோம். பத்து நாட்களுக்குப் பிறகு, ‘தழைக்கட்டும் தமிழர்கள் செழிக்கட்டும் தமிழகம்’ என்ற கோஷத்தை முன்னெடுத்தோம். அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை
பெசண்ட் நகர் கடற்கரையில் புதிய பிரச்சாரப் பயணம் ஒன்றை தொடங்கவிருக்கிறோம்” என்கிற சாமிநாதன், விஜயதசமியில் வெளியிடப்பட்ட அதிமுகவின் சாதனைகளைச் சொல்லும் விடியோவை இரண்டு கோடி பார்வைகளுக்கும் மேல் சென்றிருப்பதாகச் சொல்கிறார்.

சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதற்காக தனிக் குழு என்று சொல்லும் இந்தக் கட்சிகளைத் தவிர, காங்கிரஸ், பாஜக, மக்கள் கூட்டணி போன்ற கட்சிகள் சமூக ஊடகப் பிரச்சாரம் குறித்து அறிவிக்கவில்லை. ஆனால், அந்தந்த கட்சி சார்ந்தவர்கள் அவ்வவ்போது நடக்கும் நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.