ஒரு கூடு, இரண்டு பறவைகள்!

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ காதல் கவிதை(பிப்ரவரி மாதம் ஆயிற்றே)க்கான தலைப்பென்று நினைக்கலாம். இல்லை, இது இரண்டு பறவைகளின் இருப்பிடப் பிரச்னை குறித்து! கடந்த பொங்கலின் போது கிராமத்து வீட்டருகே உள்ள தோட்டத்தில் கண்ட இந்தக் காட்சிகளை படம் பிடித்தோம். ஒரு பட்டுப்போன தென்னை மரத்தில் இருந்த பொந்தில் கூடமைத்து தங்கியிருந்த மைனாவின் வீட்டை ஆக்ரமித்துக் கொண்டது ஒரு கிளி. முதல் அதிகாலையில் பார்த்தபோது சில மைனாக்கள் இருந்த அந்த கூட்டில் சற்றே வளர்ந்திருந்த மைனா குஞ்சு ஒன்றும் இருந்தது. அந்த மைனா பெற்றோர் இல்லாத சமயத்தில், பகல் நேரங்களில் வெளியே வந்து அருகில் இருக்கும் மரக் கிளைகளில் அமர்ந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் அந்தக் கூட்டை ஆக்ரமித்துக் கொண்டது கிளி ஒன்று. கூடு பறிபோனதைப் பார்த்த மைனா குஞ்சு, கிளியிடம் போராடிப் பார்த்தது, கிளி விடுவதாக இல்லை. கிளி முட்டையிடும் காலத்தில் இருந்திருக்கலாம், கூட்டை வெகு நாட்கள் நோட்டம் விட்டு, சமயத்தில் கூட்டைப் பிடித்துக் கொண்டது. மைனா செய்வதறியாது அருகில் இருந்த தென்னை மரக் கிளையில் அமர்ந்து கொண்டிருந்தது. கிளி, மைனா இல்லாத நேரத்தில் கூட்டை விட்டுப் பறந்து அருகில் இருந்த வயலில் காய்ந்த சோளத்தை தின்றுவிட்டு மீண்டும் கூட்டுக்குள் அடங்கியது. கூடு, அருகிலேயே உணவுக்கு வசதி என கிளியின் தேர்வு எனக்கு வியப்பைத் தருகிறது. அடுத்தடுத்த நாட்களில் மைனா குடும்பம் தன் வீட்டைக் கைப்பற்ற முயற்சித்தும் இறுதிவரை கிளி விட்டுத் தருவதாக இல்லை. உண்மையில் கிளிகள்தான் அந்த பட்டுப்போன தென்னையில் முதன்முதலாக குடியேறி இருந்தன. எனவே கிளி ஆக்ரமித்தது என்று சொல்வதைவிட மீண்டும் தன் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது என சொல்லலாம். மைனா குஞ்சும் தனியே வாழும் அளவில் வளர்ந்திருந்தது, எனவே அது ஒரு புது வீட்டை தேடிக் கொண்டிருக்கும்!

DSCN0265

DSCN0436

DSCN0508

DSCN0509

DSCN0439

DSCN0559படங்கள்: சண்முகசுந்தரம், நந்தினி

 

இது இறுதி அறுவடை!

DSCN1881

எல்லோருக்குமான கவலை நதிகள் பாய்ந்து வளப்படுத்தும் விவசாய நிலங்கள் பற்றியதாக இருக்கிறது. நதி வழி விவசாயம் இன்று மேட்டிமைதனத்தோடு யாரோ உழைத்து யாருக்காகவோ விளைவிப்பதாக மாறிவிட்டது. சம்பா அரிசி விளைவிக்கும் விவசாயி, ரேஷன் அரிசியை உண்பதுதான் யதார்த்தம். இந்த சம்பா அரிசி நாளை இல்லாமல் போய்விடுமே என்கிற ஆதங்கம்தான் இதை உண்பவர்களுக்கு இந்த விவசாயிகளின் மேல் அதீத அக்கறையை ஏற்படுத்துகிறது. ஊடகங்களை அணுக முடியும் இவர்களால் அவர்களுக்காக குரல் கொடுக்க முடிகிறது. அல்லது குரல் கொடுப்பதாக பாவ்லா காட்ட முடிகிறது. இவர்கள் இருக்கட்டும், வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து, தன் வயிற்றுக்கு பருப்பையும் திணையையும் விளைவிக்கும் விவசாயிகளும் இங்கே பெருமளவில் இருக்கிறார்கள். தமிழகம் என்ன திரும்பிய பக்கமெல்லாம் நதிபாயும் வெனீஸா என்ன? இல்லை, வறண்ட பூமியும் இங்கே உண்டு.  ஆனால் இன்றைய மக்களின் சொத்து குவிக்கும் ஆர்வம் மானாவாரி நிலங்களை கூறுபோட்டு வீட்டு மனைகளாக மாற்றிவிட்டது. எல்லா ஊர்களில் மானாவாரி விவசாய நிலங்கள் கூறுபோடுவது கண்மூடித்தனமாக நடந்துவருகிறது.

DSCN1891

DSCN1941
சமீபத்தில் என் ஊருக்குச் சென்றிருந்தபோது இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டேன். எங்கள் வீட்டருகே இருந்த விவசாய நிலம் கூறுபோடப்பட இருக்கிறதாம். இதுதான் கடைசி அறுவடை என்று தெரிவித்தார் அந்த நிலத்தில் விவசாயம் செய்யும் அந்தப் பாட்டி. மகனின் கடன்களை அடைக்க நிலத்தை கூறுபோடப் போவதாக சொன்னாள் பாட்டி. அந்த நிலத்தின் மீது எங்கள் குடும்பத்திற்கு இருந்த பிணைப்பு நெடியது. மழைக்காலங்களில் காளானையும் கீரைகளை எங்களுக்கு தந்தது அந்த நிலம். மாடுகள் இருந்தபோது அந்த நிலத்தில் வரும் புல்லும் எங்களுக்கு பயன்பட்டது. அதைவிட மகிழ்ச்சி நிலம் பூ, காயுமாக நிறைந்திருப்பதை காணும்போது கிடைக்கும். இதை நம்பி வரும் கரிச்சான், மைனா, அக்காக் குருவி, தவிட்டுக்குருவியை காண்பதும் இனிது. இனி எதைக் காண்போம் என்று தெரியவில்லை!

பாவம், இந்த மடையான்கள்…

தருமபுரி-சென்னை சாலையில் கடந்த 13 வருடங்களாக பயணித்துக்கொண்டிருக்கிறேன். முன்பு போரூர் வரைக்கும்கூட வயல்களைக் காணமுடிந்தது. இப்போது தருமபுரியைச் சுற்றியிருந்த விளைநிலங்கள்கூட துண்டுபோடப்பட்டுள்ளன, வீட்டுமனைகளுக்காக. சென்னையானது திருப்பத்தூர் வரை நீண்டுவிட்டது. சாலையோரங்களில் வீட்டுமனை வாங்குவது இன்று லாபகரமான முதலீட்டு வழியாகிவிட்டது. இதில் வர்க்கபேதம் இல்லாமல், தினப்படி சம்பளம் வாங்குபவர்களில் ஆரம்பித்து லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்கள் வரை அத்தனை பேரின் முதலீட்டு விருப்பமும் இதுவாகத்தான் இருக்கிறது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் ஊதி பெருக்கப்பட்ட இந்த லாபகரமான முதலீட்டு மாயை விரைவில் உடையும். லாபத்தை நோக்கியிருக்கும் முதலீட்டாளர்கள் நட்டத்தை ஈடுகட்ட இப்போதே வேறுவழிகளை தேடிவைத்துக்கொள்வது நல்லது.

DSCN0113

மைனா

DSCN0125

தவிட்டுக் குருவிகள்

DSCN0118

பனங்காடை

DSCN0139

செண்பகப்பறவை

எங்கள் ஊரை ஒட்டியுள்ள விளைநிலங்களும் வீட்டுமனைகளாக மாறும் எத்தனிப்பில் இருக்கின்றன. வறட்சி என்ற காரணம் போதும் விளைநிலங்களைத் துண்டு போட. ஊரில் இருக்கும் மக்களெல்லாம் புதுமனைகளில் குடிபுகுந்துவிட்டால் இந்த விளைநிலங்களை நம்பியிருக்கும் இந்த மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் செண்பகப் பறவைகளும் பனங்காடைகளும் எங்கே போகும்?

விளைநிலங்களெல்லாம் துண்டுபோடப்படுவதால் கிராமங்களில் பல்லுயிர்ச்சூழல் மெதுமெதுவாக காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஏரிகளுக்கு தண்ணீர் வரும் வழிகளெல்லாம் அடைக்கப்படுகின்றன. ஏரிகளைச் சுற்றியிருந்த மரங்கள் வெட்டப்பட்டு அவற்றில் வாழ்ந்துவந்த மடையான்களும் உண்ணிகொக்குகளும் திசைதெரியாமல் பறந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் பழந்தமிழர் உணவு என்ற புத்தகத்தைப் படித்தேன். அதில் பிரபல எழுத்தாளர் ஒருவர் மடையான் வலசை வருவதாக எழுதியிருந்தார். கொக்கு, மடையான் கறி எவ்வளவு ருசியாக இருக்கும் என நாக்கைச் சப்புக்கொட்டி எழுதியிருந்த அவர், மடையான் நம்ம ஊர் ஏரிக்கரை மரத்தில் இருக்கும் என்பதைக்கூட அறியாமல் இலக்கியம் படைத்துக்கொண்டிருக்கிறார்!  பாவம், இந்த மடையான்கள்…

DSCN1040 copy

மடையான்