குடியுரிமை சட்ட திருத்தம்: ஹிட்லரின் இன அழிப்பு திட்டங்களுக்கு இணையானது!

நாம் அனைவரும் வரலாற்றை முழுவதுமாக அறிந்தவர்கள் அல்ல. நம்முடைய மறதி அல்லது அறியாமை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மேலும் அதிக பலத்தைக் கொடுக்கிறது. ஹிட்லரை நாம் அறிவோம். அவருடைய இனவெறி நமக்கு மறந்துவிட்டது அல்லது இனவெறி எப்படிப்பட்டது என்பதை நாம் அறியவில்லை. தமிழ் தேசியம் என்னும் பெயரில் ஹிட்லரைக் கொண்டாடும் ஒரு கும்பல் உருவாகியிருக்கிறது. அது ஒரு சிறிய கும்பல்தான் என்றாலும், அது பெரிய பேரரழிவு திட்டத்துடன் களமிறங்கியுள்ள இந்து தேசியம் என்ற இனவெறி – மதவெறி திட்டத்துக்கு நம்மை தயார்படுத்துவதாக உள்ளது. பாசிச அரசு அல்லது மதவெறி அரசு என உண்மையை எழுதுவது பலருக்கு உவப்பாக இல்லை. ஆனபோதும் வரலாற்றின் குறிப்புகளோடு பாசிசத்தின் நடைமுறையாக்கலில் நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என நேர்மையாக பரிசோதித்துக் கொள்வோம்.

நாசி கட்சி (தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி என்பதன் சுருக்கமே ‘நாசி’)யின் தலைவரான அடால்ஃப் ஹிட்லர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தவர். நாசி கட்சிக்கு சித்தாந்த பின்புலம் கொடுத்தது ‘துலே சமூகம்’என்ற ரகசிய அமைப்பு. அதாவது தாங்களே ஆரிய இனத்தின் தூய வாரிசுகள் என அறிவித்துக்கொண்டவர்கள் இவர்கள். கிரேக்க புராண கதையில் வரும் துலே என்ற பிராந்தியத்தில் புனையப்பட்ட ‘ஹைபர்போரியா’ என்ற தலைநகரில் வாழ்ந்த ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் என நாசிக்கள் பரப்பினார்கள். தொடக்கத்தில் ரகசிய அமைப்பாக இருந்தது. பரப்புரை, பத்திரிகை போன்றவற்றின் துணையுடன் ஜெர்மானியர் ஏகபோக ஆதரவு பெற்றது. துலே அமைப்பால் வளர்க்கப்பட்டவர் ஹிட்லர். அதன் பின்னணியிலேயே ஸ்வதிக் முத்திரையை நாசி கட்சியின் கொடியாக அவர் வரைந்தார்.

1920களில் ஜெர்மனியில் மார்க்சிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருந்தனர். ஹிட்லரின் எதிரிகளாக மார்க்சியர்களும் யூதர்களுமே இருந்தார்கள். அவர்கள் குறித்து அவதூறான அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலம் மக்களை கவர்ந்தார் ஹிட்லர். தனக்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் செல்வாக்கைக் காட்டி, கட்சியில் இருந்த மூத்தவர்களை பின்னுக்குத்தள்ளி முன்னேறினார். கட்சியில் சேர்ந்த பத்தாண்டுகளில் அக்கட்சியின் தலைவரானார்.

ஹிட்லர் தலைமையிலான நாசி கட்சி, தீவிர தேசியவாதத்தை கொள்கையாக அறிவித்தது. தனது அனைத்து கொள்கை அறிக்கையிலும் யூதர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து உறுதியுடன் நின்றது. அடுத்த பத்தாண்டுகளில் நாசி கட்சி படிப்படியாக தேர்தலின் மூலமாக முக்கியமான கட்சியாக வளர்ந்தது. பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து 1933-ஆம் ஆண்டு ஜெர்மன் அதிபராக ஆனார் ஹிட்லர். இதெல்லாம் நடந்தது பெரும்பான்மை மக்களின் ஆதரவுடனே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுவரைக்குமான வரலாறுகூட நமக்கு இந்தியாவில் பதவியில் அமர்ந்திருக்கும் கட்சியை/பதவியில் அமர்ந்திருப்பவரை நினைவூட்டுவதாக இருக்கலாம். பதவியில் அமர்ந்த பிறகு, யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் செய்தவை, சரியாக இந்தியாவில் முசுலீம்களுக்கு என்ன நடந்துக்கொண்டிருக்கிறதை என்பதை அப்படியே காட்டுகின்றன.

அதுவரை ஜெர்மானிய மக்களை பொதுவாகப் பார்த்த அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்தில் இருந்த அதிகார பலத்தால் ஹிட்லருக்கு கிடைத்தது. யூதர்களின் மத சடங்கு அடிப்படையிலான விலங்குகளை பலியிடும் சடங்குக்கு பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது. ஜெர்மானியர் தூய ரத்தத்தை காக்க, யூதர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கு இனக்கலப்பு அதாவது திருமணம் செய்துகொள்வது தடை செய்யப்பட்டது. மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் உள்ளிட்ட பணிகளுக்கு யூதர்கள் வருவது தடை செய்யப்பட்டது. பள்ளிகளில் அனைவரும் படிக்கக்கூடாது என்பதற்காக சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பள்ளிகளில் தூய இனவாதத்தை போதிக்கும் பாடங்கள் கொண்டுவரப்பட்டன.

உச்சமாக 1933-ஆம் ஆண்டு குடியுரிமை மற்றும் இயற்கைமயமாக்கல் சட்டம் என்ற பெயரில் யூதர்களை ஜெர்மன் சமூகத்திலிருந்து நீக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே ஒன்றரை லட்சம் யூதர்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. யூதர்கள் விவசாயம் செய்வதைத் தடுக்கவும் சட்டம் கொண்டுவரப்பட்டது. நடிக்கவும் கலாச்சாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடவும்கூட யூதர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன்பின், ‘நூரெம்பர்க் சட்டங்கள்’ என்ற பெயரில் யூதர்களை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை 1935-ஆம் ஆண்டு கொண்டுவந்தார் ஹிட்லர். இதில் குடியுரிமை சட்டம் முக்கியமானது. ஜெர்மன் ரத்த முறையினர் மட்டுமே குடியுரிமை உள்ளவர்கள். யூதர்களுக்கு முற்றிலுமாக குடியுரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் சொந்த நாட்டிலேயே அவர்கள் ‘வெளிநாட்டினர்’ என அழைக்கப்பட்டனர்.

இனியும் ஹிட்லரின் வரலாறு நமக்குத் தேவையில்லை. இந்திய யதார்த்ததுக்கு வருவோம். இங்கே என்ன நடக்கிறது? மதத்தின் பெயரால், முசுலீம்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காகவே பல மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது. மாட்டிறைச்சியின் பெயரால் முசுலீம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், முசுலீம் சமூகத்தை அச்சுறுத்தின; நடுங்க வைத்தன. தூண்டப்பட்ட கும்பலால் நடந்த படுகொலைகளுக்கு ஒன்றுக்குக்கூட நீதி கிடைக்கவில்லை. லவ் ஜிகாத் என்ற புனைகதை கட்டி, முசுலீம் ஆண்கள் இந்து பெண்களை கவர்ந்து திருமணம் செய்து மதமாற்றம் செய்வதாக பரப்பப்பட்டது. இந்தியாவின் ஒரு பகுதியான அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு செயலாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான முசுலீம் மக்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. முசுலீம்களுக்கு முழு உரிமை உள்ளது என்றபோதும், பெரும்பான்மை இந்து மனப்பான்மையின் அடிப்படையில் நாட்டின் உச்சநீதிமன்றமே பாபர் மசூதி உள்ள இடத்தில் கோயில் கட்டலாம் என தீர்ப்பு எழுதியது.

இப்போது முசுலீம்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது ஆளும் அரசு. இச்சட்டப்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறித்தவர், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், டிச.31, 2014-க்குள் வந்து இந்தியாவில் குடியமர்ந்திருந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இச்சட்டம் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இசுலாமிய மக்களுக்குப் பொருந்தாது. மேலும் இலங்கையிருந்து வந்த ஈழத் தமிழர்கள், மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முசுலீம்களுக்கும் பொருந்தாது.

குடியுரிமை சட்ட திருத்ததின் தொடர்ச்சியாக தேசிய அளவில் குடியுரிமை பதிவேடு செயலாக்கவிருக்கிறது அரசு. அசாமில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை பதிவேடு 20 லட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்றது. இவர்களில் 12 லட்சம் மக்கள் இந்துக்கள். நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் குடியிரிமை திருத்தச் சட்டம் சான்றாவணங்கள் இல்லாத அனைத்து மக்களையும் சட்டவிரோத குடியேறிகள் என வகைப்படுத்தி வதை முகாம்களில் அடைக்கும். முசுலீம் மக்களோடு, வர்ணாசிரமத்தின் படிநிலைப்படி சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்களுமே இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

ஒருவர் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்டவர்தான் இந்தியக் குடிமகன் என தன்னை, குடியுரிமைத் தீர்ப்பாயம் சென்று நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் சாலை ஓரங்களில், நாடோடிகளாக, வெள்ளம், இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களாக, எவ்வித ஆவணங்களும் அற்ற பலகோடி மக்கள் உள்ளனர். இவர்கள் பிறந்த சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், வங்கி கணக்கிற்கு எங்கே போவார்கள்? ஆக, ஒடுக்கப்பட்ட அம்மக்களும் குடியுரிமையை இழப்பார்கள்.

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் அங்கு சிறுபான்மையினர் என்றால் இலங்கையில் இந்து-தமிழ் மக்களும், மியான்மர்-ரோகிங்கியா முசுலீம் மக்களும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது ஆளும் அரசின் இனவாத நோக்கத்தைக் காட்டுகிறது.

“ஒரு கணம் அரசியலையும், சட்டப்படியான கேள்விகளையும் ஒதுக்கி விடுங்கள். மில்லியன் கணக்கான ஏழை மக்களுக்கு நீங்கள் இரக்கமில்லாமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தியுங்கள். எந்தவொரு முடிவும் இருப்பதாகத் தெரியாத ஒரு பேரழிவை அரசு எவ்வாறு உருவாக்க முடியும்?” முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் மனித உரிமை செயல்பட்டாளருமான ஹர்ஸ் மந்தர் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து எழுப்பிய கேள்வி இது.

பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் விசயங்களாக மக்கள் தொகை பெருக்கமும் அதற்கேற்றபோல அடிப்படைவசதிகள் இல்லாதது, ஏழ்மை நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை போன்ற பல விசயங்கள் இருக்கும்போது ஹர்ஸ் மந்தர் கேட்பதுபோல குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை என்ன நோக்கத்திற்காக, எந்த முடிவுக்காக கொண்டுவரப்படுகின்றன? ‘வளர்ச்சி…வளர்ச்சி..வளர்ச்சி…’என ஓயாமல் முழங்கிய பாஜக சொல்லும் வளர்ச்சி யாருடையது? யாருக்கானது? 30, 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்துவந்தாலும் குடியுரிமை இல்லை. ஆனால், அமெரிக்கா உள்பட உலகெங்கும் உள்ள நாடுகளில் குடிபெயர்கிறவர்கள் இந்தியர்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றனர். சமகால நிதர்தனத்தோடு ஆட்சியாளர்கள் உருவாக்கிய முரண்பாடு இது. 72 ஆண்டு காலம் சகோதர – சகோதரிகளாக பழகிய மக்களை மதத்தின் பெயரால் பிரிப்பது மதவெறி அன்றி வேறென்ன?

அரசியலமைப்பு தத்துவத்தை புதைத்துவிட்ட ஆளும் அரசு, மதவாத தத்துவத்தை கையிலெடுத்துள்ளது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. நாம் வரலாற்றிலிருந்து கொஞ்சமேனும் பாடம் கற்கவேண்டியுள்ளது. மேலும் ஒரு இன அழிப்பை நாம் அனுமதித்தால், வரலாறு நம்மை மன்னிக்காது என்பதை பெரும்பான்மை சமூகம் உணர வேண்டும்.

ரஜினி தமிழகத்தின் தலைவராக முடியுமா

ரஜினி அரசியலுக்கு வருவேன் எனக் கூறியபோதும் பலர், அவர் அரசியலுக்கு வருவார் என்பதை நம்பத் தயாராக இல்லை. தான் நடிக்கும் படங்களின் வெளியீடுகளின்போது மட்டும் அரசியல் பேசுவதன் மூலம், படங்களை பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார் அவ்வளவே, அவர் அரசியலுக்கு வரவே மாட்டார் என விளக்கமும் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், தான் அரசியலுக்கு வருவதற்கு தக்கத் தருணம் வந்துவிட்டதை ரஜினி உணர்ந்தே இருக்கிறார். ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் தலைவர்களின் இறப்புக்குப் பின் அதற்கான தயாரிப்பு வேலைகளில் அவர் வெகுஜாக்கிரதையாக ஈடுபட்டுவருகிறார்.

பெருமளவில் ரஜினியின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவும் அவருக்கு இருக்கிறது என்பதும் வெளிப்படையானது. சமீப காலமாக ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் உருவாகியிருக்கும் ரஜினியின் படை , அவர்களை விமர்சிப்பவர்களை விரட்டிக்கொண்டிருக்கிறது. ரஜினி வெகு விரைவில் அரசியலில் இறங்க இருக்கிறார் என்பதற்கான முன் தயாரிப்புகளை அடையாளம் காட்டுகின்றன மேற்கண்டவை.

ஆனாலும், ரஜினியின் அரசியல், தமிழகத்தின் அரசியலோடு ஒத்துப்போகுமா என்பது முக்கியமானதொரு கேள்வி. ரஜினியும் ரஜினியை ஆதரிப்பவர்களும் ஆராய மறுக்கும் கேள்வி இது.

முதலில் ரஜினியின் அரசியல் என்னவென்று பார்ப்போம். தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தபோது, ‘உங்களுடைய அரசியல் எப்படிப்பட்டது?’ என செய்தியாளர்கள் ரஜினியிடம் கேட்டனர். ரஜினி சொன்ன பதில் ‘ஆன்மீக அரசியல்’. அவர் அப்படி சொன்ன அடுத்த நாள், இந்து சமயம் சார்ந்த ஒரு மடத்துக்குச் சென்று வந்தார். அதாவது தன்னுடைய அரசியல் ‘இந்து ஆன்மீக அரசியல்’ என பட்டவர்த்தனமாக அறிவித்தார் ரஜினி.

‘இந்துத்துவம்’, ‘காவி’ ஆகிய வார்த்தைகள் தமிழகத்தைப் பொறுத்தவரை ‘தேச விரோத’ சொற்கள். இந்த வார்த்தைகளை உச்சரிக்கும், உச்சரித்த அரசியல்வாதிகள் சட்டமன்ற தொகுதி தேர்தலில்கூட வெல்ல முடியாது. அத்திவரதரை தரிசிக்க முண்டியடித்துக்கொண்டு சென்ற அதே ஆன்மிக நாட்டம் கொண்ட மக்கள்தான், ஆன்மீகத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களையும் நிராகரிக்கிறார்கள் என்பதை ’ஆன்மீக அரசியல்’ கனவு காண்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, ரஜினி அதை உணர்வாரா என்பது கேள்விக்குறியானதே..!

ரஜினி தன்னுடைய ஆன்மீக அரசியலில் பிடிவாதமாக இருப்பதைப் போன்றே, மக்கள் போராட்டங்களை அவர் அணுகும்விதமும் தமிழக மக்களின் உணர்வுகளிலிருந்து பாரதூரமாக விலகியிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் திரள் போராட்டத்தின்போது நடந்த காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அந்த சமயத்தில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பிய ரஜினி,

“தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டது மக்கள் கிடையாது, சமூக விரோதிகள்தான். இது போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா விஷக்கிருமிகளை அடக்கி வைத்திருந்தார். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டனர்” என்றார்.

ஆயிரக்கணக்கான மக்கள் தன்னுணர்வோடு கலந்துகொண்ட போராட்டத்தை, மக்கள் தலைவராக வரத்துடிக்கும் ஒரு நபர் ‘சமூக விரோதிகள்’, ‘விசக்கிருமிகள்’ என கொச்சைப் படுத்தினார். தூத்துக்குடி மக்கள் வெகுண்டெழுந்தனர், ரஜினியை இனி தங்கள் மண்ணில் அனுமதிக்கப்போவதில்லை என்றனர். ஆனாலும், ரஜினி தன் அரசியலில் பிடிவாதமாகவே தொடர்ந்தார்; தொடர்கிறார்.

இப்போது காஷ்மீர் பிரச்சினையை கையிலெடுத்திருக்கிறது பாஜக அரசு. ‘இந்து தேசியம்’ என்ற தங்களுடைய நீண்ட கால இலக்கின் அடிப்படையில் பாஜக அரசு காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறது. காஷ்மீரில் வீட்டுக்கு வீடு இராணுவத்தை நிறுத்தி, தகவல் தொடர்புகளை துண்டித்து, வெகுஜென அரசியல்வாதிகளை சிறை வைத்து தன்னுடைய அகண்ட பாரத கனவை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கிறது பாஜக அரசு.

காஷ்மீரை திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்றிவிட்டு, அம்மக்களின் உணர்வுகளை கேட்டறியாமல் திணிக்கப்பட்ட முடிவை ரஜினி ஆதரிக்கிறார். காஷ்மீர் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட தமிழக மக்கள், திமுக உள்ளிட்ட பெரும்பாலான தமிழக வெகுஜென அரசியல் கட்சிகள் அரசின் முடிவை எதிர்க்கிறார்கள். மீண்டும் ரஜினியும் தமிழக மக்களும் எதிரெதிர் திசையில் நிற்கிறார்கள்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய நூல் வெளியிட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினி, பாஜக அரசின் முடிவை புகழ்ந்து தள்ளினார்.

“உங்களின் மிஷன் காஷ்மீர் ஆபரேஷன் நடவடிக்கையை மனதார பாராட்டுகிறேன். இதுகுறித்து நீங்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மிகச்சிறப்பு. அமித் ஷா யார் என்பதை மக்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள். அதுகுறித்து நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன். மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜுனன் போன்று இருக்கிறார்கள். இதில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்” என ரஜினி பேசியது சர்ச்சையானது` ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

தமிழகத்தில் பாஜகவின் அரசியலை புகழ்ந்து யார் பேசினாலும் பேசுகிறவர்களை மக்கள் ஒதுக்கிவிடுவர். அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, நாற்பது ஆண்டு காலம் தங்களை மகிழ்வித்த ரஜினியும் விலக்கல்ல. மக்களின் உணர்வோடு பல்வேறு சமயங்களில் முரண்பட்டு நின்ற ரஜினியை, காஷ்மீர் குறித்த பேச்சின் மூலமாக மேலும் சற்று தள்ளி வைத்தனர். சமூக ஊடகங்களில் ரஜினிக்கு கிடைத்த எதிர்ப்பே அதற்கு சாட்சி!

அதோடு விட்டாரா என்றால், இல்லை. விளக்கமளிக்கிறேன் என்கிற பெயரில் காஷ்மீர் மக்களின் உணர்வுகளில் கல்லெறிந்துவிட்டுப் போனார் ரஜினி.

“காஷ்மீர் மிகப்பெரிய விஷயம்; அது நம் நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய விஷயம். அந்த காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் ஒரு தாய் வீடாக இருந்துகொண்டிருக்கிறது. அவர்கள் எல்லாரும் இந்தியாவில் ஊடுருவ அது ஒரு நுழைவு வாயிலாக இருக்கிறது. அதை நம் கைப்பிடியில் கொண்டுவர வேண்டும் என்பதற்காக ராஜதந்திரத்துடன், முதலில் 144 தடை உத்தரவு போட்டு, பிரச்னை செய்பவர்களை வீட்டுக்காவலில் வைத்து, என்ன செய்யப்போகிறார்கள் என்று சொல்லாமல், பெரும்பான்மை இல்லாத ராஜ்யசபாவில் சட்டத்தைக் கொண்டுவந்து அமல்படுத்தியிருக்கின்றனர். இது அருமையான ராஜதந்திரம். தயவுசெய்து நமது அரசியல்வாதிகள் எதை அரசியல் ஆக்க வேண்டும் என புரிந்துகொள்ள வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு பிரச்னை” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை மிஞ்சும் அளவுக்கு பாஜக அரசின் நடவடிக்கை வக்காலத்து வாங்கினார் அவர்.

சுயாட்சி, தன்னாட்சி, மாநில சுய உரிமை இதெல்லாம்தான் தமிழக மக்களின் உணர்வு. நூறாண்டு கால தமிழக அரசியல் இந்த உணர்வின் மீது கட்டப்பட்டதே. இந்த உணர்வுகளை அடித்து நொறுக்கும் எவரையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மோடியுடன் தனிப்பட்ட முறையில் நட்பாக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மோடி பிரதமர் வேட்பாளராக நின்றபோது ஏன் அவருடன் கூட்டணி அமைக்கவில்லை? ஜெயலலிதாவுக்கு மக்களின் உணர்வுகள் தெரியும். மோடியை, பாஜகவை முன்னிறுத்தினால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். திமுக நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றிக்கண்டதும் இதே உணர்வின் அடிப்படையில்தான்.

ஏன் புதிய அரசியல்வாதி கமலும்கூட தமிழரின் உணர்வை தெரிந்து வைத்திருக்கிறாரே? ரஜினியைப் போல் அரசியலுக்கு வருவேன் என பூச்சாண்டி காட்டாமல், பாஜகவின் அடாவடி திட்டங்களை விமர்சிக்கும் விஜய் சேதுபதி, சித்தார்த் போன்ற நடிகர்களுக்கு இருக்கும் துணிவும் பொறுப்பும்கூட இந்த ஆன்மீக பெரியவருக்கு இல்லை.

இந்து ராஷ்டிர கனவுடன் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்திருக்கிறது பாஜக. அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிறது. மதத்தின் பெயரால் மக்களை ஒரு இனப்படுகொலைக்குத் தயார்படுத்தும் இவற்றை எதிர்த்து தன்னெழுச்சியாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. போராடும் மக்களை ஒடுக்க துப்பாக்கி குண்டுகள் பாய்கின்றன. கல்லூரி வளாகங்களுக்குள் புகுந்து மாணவர்களை இரக்கமில்லாமல் அடித்து விரட்டுகிறார்கள் அமித் ஷாவின் ஏவலர்கள்.

போராட்டங்கள் வலுவடைந்திருக்கும் நிலையில், “எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” பாஜகவின் குரலை அமைதி விரும்பி வேசம் கட்டி கருத்து கூறியிருக்கிறார் ரஜினி.

அமைதி வழியில் வளாகத்துக்குள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துகொண்டிருந்த ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை மாணவர்களை ஈவு இரக்கமில்லாமல் அடித்து உதைத்தது டெல்லி போலீசு. நூலகமெங்கும் இரத்தக்கறை! அதைக் கண்டுதான் மாணவர் சமூகம் வெகுண்டெழுந்தது. அப்போது ரஜினி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். சமூகம் கொந்தளிக்கும்போது அதிகாரத்துக்கு கால் பிடித்துவிடும் அவருடைய கேடுகெட்ட ஆன்மீக ஆன்மா விழித்தெழுந்துகொள்கிறது.

ரஜினி பாஜகவின் குரலாக ஒலிப்பதன் பின்னணி என்ன? ரஜினியின் ‘இந்துத்துவ ஆன்மீக ஈடுபாடு’ம் அவற்றை அவர் நடிக்கும் படங்களில் திணிப்பதும், மட்டுமல்லாமல் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ‘பார்ப்பன இந்து மத’த்தின் மேன்மைகளை எடுத்துச் சொல்வதும் பாஜகவினருக்கு நெருக்கத்தை உண்டாக்கிறது.

இப்போது அல்ல, நீண்ட காலமாகவே ரஜினி, இந்துத்துவ அரசியலுக்கு தோதான ஆளாகவே பாஜகவினரும் ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்பினரும் பார்த்து வந்துள்ளனர். ரஜினிக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் இந்து முன்னணி அவரை காத்து நின்றது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரும் சோ விட்ட அரசியல் தரகு பணியைத் தொடர்பவருமான குருமூர்த்தி ‘பாஜகவும் ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும்’ என ரஜினி உள்ள மேடையிலேயே இணைப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

முழுக்க முழுக்க எதிர்ப்பு நிலையிலேயே தங்களை வைத்திருக்கும் தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடிக்க பாஜக பல வகையிலும் திட்டமிடுகிறது. சினிமா செல்வாக்குள்ள, தங்களுடைய ‘கொளுகை’களுக்கு ஒத்துப்போகும் ரஜினி போன்ற பிம்பத்தின் பின்னால் வளரலாம் என்பது அவர்களுடைய நீண்ட கால திட்டம்.

ரஜினியின் ‘கொளுகை’கள் காவிமயமானவை; தமிழக மக்களின் எண்ணங்களுக்கு, வாழ்வியலுக்கு எதிரானவை. இதை அவர் உணர்ந்திருந்தாலும் தன்னுடைய சித்தாந்தத்திலிருந்து அவர் ஒருபோதும் கீழே இறங்கியதில்லை. தமிழகத்தின் மத எதிர்ப்பு அரசியலை எதிர்கொள்ள அவருக்குப் போதிய மன தைரியம் இல்லை என்பதோடு அது வெற்றி பெறவும் செய்யாது என்பதை அறிந்திருக்கிறார். அவருடைய இத்தனை ஆண்டுகால தயக்கமே இதை உணர்த்தக்கூடியதுதான். ஆனாலும், பாஜகவுக்கு இது பொருட்டில்லை.

ரஜினி என்பது பாஜகவுக்கு ஒரு முகமதிப்பு மட்டுமே. பணபலத்தைப் பற்றியோ, ஆள் பலத்தைப் பற்றியோ ரஜினி கவலைகொள்ளத் தேவையில்லை; அதை பாஜக கவனித்துக்கொள்ளும். பாஜகவுக்குத் தேவை தங்களுடைய சித்தாந்தத்தைத் தாங்கிச் செல்லும் ஒரு முகம். அந்தப் பணிக்கு ரஜினி கச்சிதமாகப் பொருந்துவார் என அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வசிக்கும் நடிகர் ரஜினிகாந்த், தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாதவராகவே இருக்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ரஜினியின் சிந்தனை பள்ளியான காவி, இந்துத்துவ அரசியலை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அவர்களின் அரசியல் வார்ப்பு அப்படிப்பட்டது. ரஜினி தன்னுடைய சித்தாந்தத்தை தமிழக மக்களிடம் திணித்து வெற்றி கொள்ளலாம் என நினைத்தால் அவருக்கு தோல்வியே மிஞ்சும்.

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 130 பேர் மட்டும்தான் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தக் கட்சியை வளர்க்கத்தான் ரஜினி களமிறங்கப் போகிறார்.  உங்களுடைய ஆன்மீக அரசியலுக்கு பாடம் கற்பிக்க தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள், வாருங்கள் ரஜினி.

முசுலீம் அல்லாத மக்களுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி கடவுளா?

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவருமான சிவராஜ் சிங் சவுகான், கடந்த திங்கள்கிழமை நடந்துவரும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்து கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.

மத ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இசுலாமியர் அல்லாத மக்களுக்கு மோடி கடவுளைப் போன்றவர் என்றும் 2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முசுலீம் நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் வந்த இந்து அல்லாதவர்களுக்கும் குடியுரிமை வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி சொல்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முசுலீம் அல்லாத அகதிகளுக்கு மோடி வாழ்க்கையை வழங்கியிருப்பதாகவும் நெகிழ்ந்தார். “நரகத்தைப் போன்ற வாழ்க்கையை வாழ்ந்துவரும் மக்களை காப்பாற்றும் கடவுளாக நரேந்திர மோடி மாறியிருக்கிறார். கடவுள் அவர்களுக்கு வாழ்க்கையை கொடுத்தார். அவர்களுடைய அன்னையர் பிறப்பு கொடுத்தனர். ஆனால், நரேந்திர மோடி அவர்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறார்” எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பவர்களும் பாஜகவினரும் திரும்பத் திரும்ப பிரதமர் மோடியை ‘ஆபத்பாந்தவராக’ ‘கடவுளுக்கு இணையானவராக’ முன்னிறுத்தி வருகின்றனர். பொதுப்படையாக நல்லதுதானே செய்கிறார் என்கிற தொனியும் மக்களிடைய இவர்கள் கொண்டு சேர்க்கிறார்கள்.

கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் என்றே அனைத்து மதங்களும் சொல்கின்றன. ஆனால், இவர்களுடைய கூற்றுகளில் உள்ள இரு வேறு விசயங்கள் மூலமாக, இவர்களின் ஒருதலைபட்சமான ‘கடவுளை’ இனம் காணலாம்.

முதலாவதாக, முசுலீம் நாடுகளில் மற்ற மதத்தினர் மத ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்ற கூற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்வோம். உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது, 1947-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 23% சிறுபான்மையினர் இருந்ததாகவும், அவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டோ அல்லது துரத்தப்பட்டோ அல்லது கொல்லப்பட்டோ தற்போது 3.7 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் கூறினார்.

அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறிய இந்த ‘புள்ளிவிவரம்’ பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைக்குள் உலகத்தை அடக்கி விடுகிற இந்தக் காலத்தில் ஒரு கணம்கூட பொய் நிலைத்திருக்காது. பாகிஸ்தான் அரசின் அலுவலர் ரீதியிலான விவரங்களில் 1947-ஆம் ஆண்டு 2.83 சதவீத சிறுபான்மையினர் அங்கு வசித்துள்ளனர். 1972-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது 3.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. 1981-ஆம் ஆண்டு 3.3 சதவீதமாகவும் 1998-ல் 3.7 சதவீதமாகவும் உயர்ந்திருக்கிறது.

இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் 2017-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் தோராயமாக 4 சதவீத சிறுபான்மையினர் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள், பாகிஸ்தானின் தென்பகுதியான சிந்து மாகாணத்தில் இவர்கள் வசிக்கிறார்கள்.

மோடி – ஷா திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கொண்டிருக்கும் முசுலீம் நாடுகளில் ‘பாதுகாப்பில்லாமல் வாழும்’ சிறுபான்மையினருக்கான இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை பாகிஸ்தானில் வாழும் இந்துக்களும் சீக்கியர்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். தங்களுக்கு இப்படியொரு குடியுரிமை தேவையில்லை என அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். அதோடு, முன்னெப்போதையும்விட, பாகிஸ்தான் அரசு சிறுபான்மையினரின் நலனின் அக்கறை செலுத்திவருவதும் செய்தியாக ஊடகங்களில் வெளியாகிக்கொண்டுதான் உள்ளது.

அடுத்து, வங்கதேசத்துக்கு வருவோம். அங்கு சிறுபான்மையினரான இந்துக்கள் 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்புப் படி 10. 7 சதவீதமாக உள்ளனர். இந்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துதான் காணப்படுகிறது.

வங்கதேசத்தின் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசில் இரண்டு இந்து அமைச்சர்கள் பதவியில் இருக்கிறார்கள். ஒருவர் உணவுத்துறை அமைச்சர் சதன் சந்திர மசூம்தார், இன்னொருவருவர் ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்வபன் பட்டார்சார்ஜி. ஆளும் அவாமி லீக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களும் உள்ளனர். இவர்களைத் தவிர ஏழு இந்து எம்.பிக்களும் உள்ளனர்.

அரசியல் தவிர, நீதித்துறையிலும் அரசு நிர்வாகத்தில் பல இந்துக்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். கலை – பண்பாடு சார்ந்த துறைகளிலும் பல இந்துக்கள் கோலோச்சி வருகின்றனர்.

இதுநாள்வரை இந்து தேசியவாதிகள் அண்டை முசுலீம் நாடுகள் குறித்து பரப்பி வந்தவை மிகையானவை என கள நிலவரங்கள் சொல்கின்றன. வங்கதேசத்தின் அடிப்படைவாதிகள் அவ்வவ்போது இந்துக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கைகொண்டபோது, வங்க தேச மக்கள் அதை முறியடித்திருக்கிறார்கள்.

அடிப்படையில் வங்கதேசம் ஒரு மக்கள் குடியரசு நாடு. அங்கே மத அடிப்படைவாதம் இருந்தாலும் சிறுபான்மையினருக்கான அதிகார பகிர்வில் தற்போதுள்ள மோடி தலைமையிலான அரசைவிட அது முற்போக்கானது. பாஜக ஒரு முசுலீம் வேட்பாளரைக்கூட நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்கவில்லை. முசுலீம்கள் பெருவாரியாக உள்ள உத்தர பிரதேசத்தில் ஒரு முசுலீம் எம்.எல்.ஏ., எம்.பி.கூட பாஜகவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. முசுலீம்களை முற்றிலுமாக ஒதுக்குகிறது இந்த அரசு என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

எனவே, அமித் ஷா முசுலீம் நாடுகளில் இந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதும் சிவராஜ் சிங் சவுகான் மோடி முசுலீம் நாடுகளில் உள்ள சிறுபான்மையினரின் கடவுள் என்பதும் திரிக்கப்பட்டவை; உண்மைக்கு புறம்பானவை.

இரண்டாவதாக, குடியுரிமை பெறப்போகும் முசுலீம் அல்லாத இந்துக்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள், சமணர்களுக்கு என்ன திட்டங்களை இந்திய அரசு வைத்திருக்கிறது என்பதும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. அண்மையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, குடியுரிமை பெறுகிறவர்கள் எங்கே குடியமர்த்தப்படுவார்கள் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கும் ஆளும் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் தரப்படவில்லை.

அசாமில் ‘சட்டவிரோத குடியேறிகளை’ வெளியேற்றுவதற்காக செயல்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்துக்காக அரசு ரூ. 1600 கோடி செலவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் இந்தப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். குடிமக்கள் அல்லாதவர்களை அடைத்து வைக்கும் ‘தடுப்பு முகாம்’களுக்கு கணிசமான தொகை செலவிடப்படுகிறது. அவர்களை கண்காணித்தல், அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தல், அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புதல் என கூடுதல் செலவினங்களும் உள்ளன.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் அதன் பிறகு நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தவிருப்பதற்கும் இன்னும் ஏராளமான நிதி ஒதுக்கப்பட வேண்டியிருக்கும். எதிர்ப்புகள் தீவிரமாக கிளம்பியுள்ள நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேடு இப்போது நடைமுறைப்படுத்தப்படாது என அரசு அறிவித்து, குறுக்கு வழியான தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்துக்கு கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது.

இந்த விவகாரங்களால் நாடு பற்றி எரிந்துகொண்டிருக்கும் அதே வேளையில் சர்வதேச கண்காணிப்பு நிதியம், இந்தியாவின் பொருளாதார மந்தநிலை உடனடியாக மேலே எழ முடியாத நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறது.

இத்தகையதொரு நிலையில், எந்தவொரு முடிவையும் உடனடியாக எட்டாத நாட்டு மக்களுக்கு எந்தவகையில் நன்மை தராத ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பின் வெளிப்பாடாக மத்திய அரசு தனது திட்டங்களை அமலாக்கிக் கொண்டிருக்கிறது.

பர்மாவில் பெரும்பான்மை பவுத்த மத அரசால் மிகக் கடுமையாக இன அழிப்புக்கு ஆளான (சர்வதேச சமூகம் இதை இன அழிப்பு என்றே சொல்கிறது) ரோகிங்கியா மூசுலீம்களுக்கு ‘சிறுபான்மையினரின் கடவுளான’ மோடி எந்தவித கரிசனத்தையும் காட்டவில்லை. இனப்படுகொலையிலிருந்து தப்பி வந்த ரோகிங்கியாக்கள், சர்வதேச சட்டங்கள் அனுமதித்துள்ள அடிப்படைவசதிகள்கூட இல்லாமல் இந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். ரொகிங்கியாக்கள் பழங்குடியின சமூகம் என்பதால், சர்வதேச முசுலீம் சமூகமும் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்பதும் துயரமானது.

அவ்வளவுதூரம் போவானேன்… 30 ஆண்டு காலம் பவுத்த பெரும்பான்மைவாதத்தால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்த தமிழ் ‘இந்துக்களை’ ஏன் ‘கடவுள்’ மோடி கரிசனம் காட்டவில்லை. தமிழர் இந்துக்கள் இல்லையா? அல்லது தமிழர்கள் மீது கடவுளுக்கு கருணையில்லையா? சிவராஜ் சிங் சவுகான் புகழ்ந்ததைப் போல, மோடி இவர்களுக்கு மட்டும் ஏன் புதிய வாழ்க்கையை தர மறுக்கிறார்?

முசுலீம் நாடுகளில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகிறார்கள் எனக் கூறி, இங்கிருக்கும் முசுலீம்களை அச்சுறுத்தி, அகற்றும் இந்து தேசியவாதத்தின் திட்டத்தை அமலாக்கிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. எத்தனைதான் பூசி மெழுகினாலும் இவர்களுடைய இனவெறுப்பு திட்டத்தின் உண்மை முகத்தை மூடி மறைக்க முடியாது.

ஆறாண்டுகாலம் இந்து தேசியவாத அரசு விதைத்திருக்கும் முசுலீம்கள் மீதான வெறுப்பின் விதை, இப்போது சட்டமாக்கல் முறைகளால் முளைவிட்டுக்கொண்டிருக்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், மதச்சார்பற்ற நாடு என்கிற அடித்தளத்தில் கட்டப்பட்ட ‘இந்தியா’ காணாமல் போகும். எனவே, இந்தப் பொய்க்கடவுள் பிம்பங்களில் விழுந்துவிடாமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

நன்றி: தின செய்தி. (27-12-2019)

 

காஷ்மீருக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?

இந்திய சுதந்திரத்தின் போது இணைக்கப்பட்ட ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு தரப்பட்டிருந்த சிறந்த அந்தஸ்த்தை மோடி அரசாங்கம் நீக்கி நாற்பது நாட்களாகிவிட்டன. இந்திய அரசியலமைப்பு பிரிவு 370 மற்றும் 35 ஏ பிரிவுகள் மற்ற இந்திய மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பை காஷ்மீருக்கு அளித்திருந்தன. காஷ்மீர் இந்தியாவின் ஆளுகைக்குள் இருந்த தனிநாடாகவே செயல்பட்டுவந்தது. காஷ்மீர் மக்களின் விருப்பமும் இந்திய அரசின் விருப்பமும் வேறு வேறாக இருந்ததால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னும் அம்மாநில மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலேயே இருந்தது.

பிரச்சினையின் மையப்புள்ளி இந்திய அரசு, காஷ்மீர் முழுவதையும் தனதாகக் கருதியதே. ஆனால், அம்மக்களின் விருப்பம் அது இல்லை. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான பட்டேலிடம் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்துக்கொள்ளலாம் என பரிந்துரைத்தார். 1950-ஆம் ஆண்டு மவுண்ட் பேட்டனின் கூற்றை நினைவு படுத்தி கடிதம் எழுதிய பட்டேல், அவர் சொன்னது எத்தனை தீர்க்கதரிசனமானது என்பதை நிகழும் சம்பவங்கள் எடுத்துரைப்பதாக கூறினார்.

வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுவதுபோல், 370வது பிரிவை நீக்கி காஷ்மீரை இந்திய அரசு தனதாக்கிக் கொண்ட பிறகு பிரச்சினை ஓய்ந்தபாடில்லை; ஓயப்போவதும் இல்லை.

பிரிவு 370வது நீக்கப்பட்ட பின் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் சொல்லும் பாதுகாப்பு எப்படிப்பட்டது? கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரின் நான்கு வீடுகளுக்கு ஒரு வீரர் என்ற அளவில் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். முன்னாள் முதலமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள், அரசியல்வாதிகள், கிளர்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் என பலர் வீட்டுச் சிறையிலும் விடுதிகளிலும் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்துக்கும் மேலாக ‘கல்லெறிகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பதின்பருவ, பள்ளி மாணவர்களை பாதுகாப்புப் படை கைது செய்து சிறையில் அடைக்கிறது. அதுவும் பொது அமைதி பாதுகாப்பு சட்டப்பிரிவின் கீழ் கைது செய்கிறது. விசாரணை இல்லாமலேயே இந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறவர்களை ஆறு மாதம் வரையில் சிறையில் வைத்திருக்க முடியும்.

இப்படி கைதாகும் சிறுவர்களில் பலர், தாங்கள் செய்யாத குற்றத்துக்காகவே கைதாகிறார்கள். ஸ்ரீநகரின் மத்திய சிறைச்சாலை முன்பு காத்திருக்கும் குடும்பத்தினர், தங்கள் மகன் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை அல்லா அறிவார் என கதறிக்கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவு ரோந்துகளின்போது கைதான பலரைப் பற்றிய தகவலைக்கூட அளிக்க மறுக்கிறது போலீசு. ‘முன்பு கல்லெறிதலில் ஈடுபட்டதற்காக முன்னெச்சரிக்கையுடன் கைது செய்யப்பட்டிருக்கும் சிறுவர்கள், வெளி மாநில சிறைகளுக்கு அனுப்பப்படுவார்கள்’ பகிரங்கமாக அறிவிக்கிறது காவல்துறை.

கைது, ஆறு மாத காலை விசாரணை இல்லாத கட்டாய சிறை ஆகியவை மட்டும்தானா? பிபிசி, வாஷிங்டன் போஸ்ட் போன்ற சர்வதே ஊடகங்கள் இந்திய படைகள் காஷ்மீரிகளை கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்குவதாக ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுவருகின்றன.

“அவர்கள் ஓயாமல் மூன்று மணி நேரம் என் பின்புறத்தின் தாக்கினார்கள்; மின்சார அதிர்ச்சி கொடுத்தார்கள். எங்களை கொன்றுவிடுங்கள் என கெஞ்சினோம். அப்போதும் அவர்கள் விடவில்லை. அழுக்கையும், சாக்கடை நீரையும் குடிக்க வைத்தார்கள்” என காஷ்மீரைச் சேர்ந்த பஷீர் அகமது கூறியதாக செய்தி நிறுவனமான ஏபி பதிவு செய்துள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் அவர்கள் சேர்ந்துவிட்டதாக சந்தேகப்பட்டு அவர்களை இப்படி சித்ரவதை செய்துள்ளது பாதுகாப்புப் படை. இதேபோன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாங்கள் சித்ரவதைக்குள்ளானதை கூறியுள்ளனர்.
.
அதுபோல, கடுமையான பாதுகாப்பையும் மீறி தங்கள் உரிமை பறிப்பை எதிர்த்து வெறும் முழக்கம் எழுப்பி போராடும் மக்கள் மீது பெல்லட் குண்டுகளால் தாக்குவதையும் பாதுகாப்புப் படை செய்துவருகிறது. இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட காரணத்துக்காக அரசியல் செயல்பாட்டாளர் ஷெஹ்லா ரசீது மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் சென்ற அவர் கைது நடவடிக்கைக்கு தடை வாங்கியிருக்கிறார்.

தகவல் தொடர்புகள் ஒரு மாதமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் ஆங்காங்கே மீண்டும் இணைக்கப்பட்ட பிறகு, முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் காஷ்மீர் குறித்து எழுதுவதற்கு தடை செய்துள்ளது அரசாங்கம்.

பிரதமர் தனது சுதந்திர தின உரையில் களிபொங்க கூறிய ‘காஷ்மீரிகளின் பாதுகாப்பு’ மேற்கண்ட நிலையிலேயே உள்ளது. பாதுகாப்பு ஆலோசகர் ஒருபடி மேலே போய், காஷ்மீரிகள் மத்திய அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக கூறினார். காஷ்மீரிகள் முடிவை வரவேற்கிறார்கள் எனில், ஏன் இத்தனை பாதுகாப்பு? இத்தனை சித்ரவதைகள்? கைதுகள்? இந்திய அரசுக்கு ஆதரவாக இதுநாள்வரை செயல்பட்ட காஷ்மீர் அரசியல்வாதிகள் ஏன் இன்னமும் விடுவிக்கப்படவில்லை? ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவதும், சுதந்திரமாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் முடக்கப்படுவதும் ஏன்?

‘தேசபக்தி’யின் பெயரால் இந்தக் கேள்விகளுக்கான விடையை அளிக்க மறுக்கிறது அரசாங்கம். ‘நாடு பிடிக்கும் போட்டியினென’ வீழ்ந்துகொண்டிருக்கும் பொருளாதாரத்தைப் பற்றிய கவலை கொள்ளாமல் பொது சமூகம் ‘காஷ்மீரை பிடித்துவிட்டோம்’ என குதூகலிக்கிறது. பக்கத்துவீட்டுக்காரரின் விருப்பம் இல்லாமல் அடாவடியாக அவருடைய வீட்டை பிடிங்கிக் கொள்வது போன்றது ‘காஷ்மீரை பிடித்துவிட்டோம்’ என குதூகலிப்பது.

காஷ்மீரில் வசிக்கும் பெரும்பான்மை முசுலீம் மக்களால் தங்களுடைய பண்டிகையைக் கூட கொண்டாட முடியவில்லை. பக்ரீத்தில் தொடங்கிய அதிர்ச்சி, மிலாது நபி வரை தொடர்ந்தது. இந்திய அரசியலமைப்பு வழிபடுதலை அடிப்பை உரிமை என்கிறது. அதையும்கூட பறித்துக்கொண்டு தொழுகைக்காக கூடுவதையும் குற்றம் என்கிறது மத்திய அரசாங்கத்தின் கெடுபிடி.

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது உறுதியளிக்கப்பட்ட அரசியலமைப்பு உரிமையை மீறி எதேச்சதிகாரமாக நடந்துகொண்டிருக்கும் மத்திய அரசாங்கள் கிட்டத்தட்ட அனைத்து உரிமைகளையும் முடக்கி வைத்துள்ளது. ‘காஷ்மீரிகளுக்கு விடுதலை’ என்ற பெயரில் காஷ்மீரை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கடுமையாக எழுதுகிறார்கள். சமீப ஆண்டுகளில் இல்லாத இத்தகைய கடுமையான முடக்கம் இன்னும் 20 -25 நாட்களுக்கு தொடரும் என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

விஜயகாந்த் படங்களில் வருவதுபோல, காஷ்மீரிகள் தீவிரவாதிகளும் அல்ல, இந்தியர்கள் அவர்களை ஒழிக்க வந்த ஆபத்பாந்தவர்களும் அல்ல. பொதுபுத்தியில் உருவாகியிருக்கும் இத்தகைய கருத்துக்கள் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். காஷ்மீரிகள் தங்கள் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களுடைய உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.

இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் காஷ்மீர் விவகாரம் குறித்து இந்திய மக்கள் என்ன எதிர்வினை ஆற்றுகிறார்களோ அதைப் பொருத்துதான் அமையும் என பத்திரிகையாளர் ஜோ அதிலே கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார். அரசியலமைப்பு கொடுத்த உறுதி மீறப்படுகிறது எனில் அங்கே ஜனநாயகமும் சோதனைக்குள்ளாவதாகத்தான் பொருள். காஷ்மீரிகள் போராட்டத்தோடு வாழ்பவர்கள். அவர்கள் ஒடுக்குமுறையை 70 ஆண்டுகாலம் எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆழ்ந்த அமைதி நிலவுகிறதென்றால், அங்கே பெருவெடிப்பு காத்திருக்கிறது என்பது மற்றொரு பொருள்.

அனைத்துக்கும் மேலாக, பொது சமூகமாகிய நாம் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படும்போது மவுனம் காத்தால், நமது அடிப்படை உரிமைகளையும் இழந்து குரலற்றவர்களாகிவிடுவோம். பெரும்பான்மைவாதத்துக்கு ஜனநாயக நெறிமுறைகள் மட்டும் வேண்டாதவையல்ல, அடிப்படை உரிமைகளை கேட்கும் குரல்களும் வேண்டாதவைதான்.

தினச்செய்தி (13-09-2019) நாளிதழில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை.

குஜராத் படுகொலை தீர்ப்பும் அறிய வேண்டிய உண்மைகளும்

குஜராத் படுகொலைகளில் மிக மோசமான நிகழ்வாகக் கருதப்படுவது அகமதாபாத் குல்பர்க் குடியிருப்பில் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களே. சமூபத்தில் இந்த குடியிருப்பில் நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பையொட்டி ஏராளமான தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது.

குல்பர்க் குடியிருப்பில் கொல்லப்பட்ட முன்னாள் எம்பி இஸான் ஜஃப்ரியின் மகள் நிஸ்ரின் எழுதிய இந்த பதிவு என்னை கண் கலங்க வைத்தது. “காந்தி, நேரு, கார்ல் மார்க்ஸ், தஸ்தாவெஸ்கி, ஆஸ்கர் ஒய்ல்டு சாட்சியாக என் அப்பா கொல்லப்பட்டார்”: இஸான் ஜாஃப்ரி கொலையான அந்த நாள்

இந்தத் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த பார்ஸி பெண் ரூபா பென்னின் இந்த வாக்குமூலத்தையும் படியுங்கள் “உதவி கேட்ட இஸான் ஜஃப்ரியிடம்  நீங்கள் இன்னும் சாகவில்லையா என்று கேட்டார் மோடி”

இந்தப் படுகொலைகளின் பின்னணியில் மோடியின் பங்கு குறித்து பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜனின் பதிவு முக்கியமானது. குஜராத் படுகொலைகளின் பல உண்மைத் தகவல்கள் இதில் இருக்கின்றன.

மேக் இன் இந்தியாவிற்கு முன்பு, குஜராத்தின் அந்த குடியிருப்பு முழுவதும் இல்லாமல் ஆக்கப்பட்டது: சித்தார்த் வரதராஜன்.

மூன்று நாட்களாக குஜராத் படுகொலை நிகழ்வுகள் குறித்து மீண்டும், மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். படுகொலைகளுக்குப் பிறகு மோடி என்னும் நபருக்கு கிடைத்திருக்கும் ‘அங்கீகாரம்’ குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதும், நீதி என்ற ஒன்று இங்கே உண்டா என்கிற கேள்விகளும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.

பிகு: நண்பர் வேகநரிக்கும், இன்னும் சில நண்பர்களுக்கும் உங்கள் அன்புக்கு நன்றி. இனி தொடர்ந்து இங்கே எழுத முயற்சிக்கிறேன். தமிழ்மணத்தில் என் வலைப்பதிவை இணைப்பதில் ஏதோ தொழிற்நுட்ப தடை இருக்கிறது போலும். சரியாக்க முயற்சித்து தோற்றுவிட்டேன்.