அமீர்கான் நீக்கம் களங்கத்தைத் துடைக்குமா?

நாட்டில் நிலவிவரும் சகிப்புத்தன்மையற்ற சூழ்லுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுகளை திருப்பி அளிக்கும் போராட்டத்தில் அறிவுஜீவிகள் ஈடுபட்டிருந்த நேரத்தில், பாலிவுட் நடிகர் அமீர்கானும் அதில் இணைந்துகொண்டார். விருதைத் திருப்பி அளிப்பதில் நம்பிக்கை இல்லை என்றபோதும், நாட்டில் நிலவரும் அசாதார சூழல் தன் குடும்பத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசினார். பாலிவுட் நடிகர் ஷாரூக் கானும் இதே கருத்தை சொல்லியிருந்தார். ஆனால் அமீர்கான் அடுத்ததாக சொன்னதுதான் சர்ச்சையைக் கிளப்பியது. சகிப்புத்தன்மையற்ற சூழலைக் கருதி நாட்டை விட்டு வெளியேறிவிடலாமா என தன் மனைவி தன்னிடம் ஆலோசித்ததாக சொன்னார் அமீர்கான்.
சமூக ஊடகங்களில் உள்ள மோடி பக்தர்கள், இந்த வரிகளைப் பிடித்துக்கொண்டு அவரை ஓடஓட விரட்டியடித்தார்கள். அமீர்கான் தேசப்பற்றில்லாதவர் என வழக்கமான முத்திரையை அவர் மேல் குத்தினார்கள். அமீர்கான் தனது தேசப்பற்றை நிரூபிக்க, சீதையைப் போல நெருப்பில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சகிப்புத்தன்மை இல்லை என்று சொன்னது தனக்கே நடக்கிறது என நொந்துகொண்டார் அமீர்கான்.
இந்தச் சம்பவங்கள் நடந்து ஒரு மாதங்களுக்கும் மேலான நிலையில்,  பாஜக அரசு முக்கியமான முடிவை அறிவித்திருக்கிறது. இந்தியா சுற்றுலாத் துறையில் விளம்பரத் தூதராக இருந்த அமீர்கான் நீக்கப்பட்டுள்ளார். சகிப்பின்மை நிலவுவதாக பேசியதை அடுத்தே அவர் நீக்கப்பட்டதாக வட இந்திய ஊடகங்கள் பரபரத்தன. ஆனால் இதை மறுத்திருக்கிறார் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா. அமீர்கானை ஒப்பந்தம் செய்தது விளம்பர ஏஜென்ஸிதான், அந்த ஏஜென்ஸியின் ஒப்பந்தம்தான் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அமீர்கான் போன்ற  மக்களின் நம்பிக்கைக்குரிய முன்னணி நடிகர் வேண்டும் என்கிற அடிப்படையில்தான் இந்திய சுற்றுலாத் துறை அமீர்கானைத் தேர்ந்தெடுத்தது. ஏதோ ஒரு மாடல் விளம்பரத் தூதராக இருந்தால் போதும் என்ற அடிப்படையில் தூதர் தேர்வு நடந்திருந்தால் அமைச்சர் சொல்லும் காரணம் ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், நோக்கத்தோடு தேர்ந்தெடுத்துவிட்டு, அரசியல் காரணங்களுக்காக அவரை நீக்குவதை நியாயப்படுத்துகிறது மத்திய அரசு.
வழக்கமாக அரசியல் எதிரிகளைத்தான் ஆட்சிக்கு வந்ததும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஆளும் அரசு ஈடுபடும். ஆனால், மோடி அரசு தன்னை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தயவு தாட்சண்யமின்றி பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. அதேசமயத்தில் தனக்கு வேண்டியவர் என்றால் தகுதியே இல்லையென்றாலும், எதிர்ப்பையும் மீறி பணியில் அமர்த்துகிறது. இதற்கு உதாரணமாக புனே திரைப்படக் கல்லூரி தலைவராக புராண தொலைக்காட்சி நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதைச் சொல்லலாம்.
தற்போது இந்தியாவின் சுற்றுலாத் துறை விளம்பரத் தூதராக நடிகர் அமிதாப் பச்சனை நியமிக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அம்மாநில சுற்றுலா தூதராக 10களுக்கு மேலாக இருந்தவர் அமிதாப் பச்சன். அந்த ‘நட்பு’ காரணமாக பிரதமர் அலுவலகத்தின் பரிந்துரையின் பேரில் அமிதாப் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
உலகைக் கவர இந்தியா யாரை விளம்பரத் தூதராக நியமித்தாலும் உலக அரங்கில் கடந்த ஆண்டு ஏற்பட்ட களங்கம் மாறப்போவதில்லை. அமெரிக்காவில் இங்கிலாந்தில் மோடிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களே இதற்கு சாட்சி!

தினச்செய்தி நாளிதழில் வெளியானது.

இந்தியாவின் எதிரி பாகிஸ்தான் தானா?

“மோடி, நவாஸ் ஷெரீஃப்புடன் ஒரு கப் டீக்காக, ஏழு இந்திய உயிர்களை பலிகொடுக்க வேண்டியிருக்கிறது. உலக ஒற்றுமைக்காக பாடுபடும் முன், இந்தியா மீது கவனம் கொள்வது நல்லது” சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சாம்னா பத்திரிகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து எழுதிய வார்த்தைகள் இவை.
கடந்த மூன்று நாட்களாக இந்தியாவின் பாஞ்சாப் மாநில எல்லை வழியாக ஊடுருவிய தீவிரவாதிகள், பதன்கோட் விமான படை தளத்துக்குள் நுழைந்து சுட ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதலில் ஏழு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ஆறு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த வாரம், ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்ப இருந்த மோடி திடீர் பயணமாக பாகிஸ்தானுக்குச் சென்றார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லச் சென்றதாக பிறகு பிரதமர் அறிவித்தார்.  ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு, காஷ்மீர் விவகாரம், எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்தது.
பாகிஸ்தான் – இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என்று எதிர்க்கிற இயக்கங்கள் பதன்கோட் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒரு மாதம் முன்பு பஞ்சாப்பில் ஒரு காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத் தகுந்தது. முதல் கட்ட தகவலில் பஞ்சாப் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையோரத்தில் கண்காணிப்பு குறைவே தீவிரவாதிகள் ஊருவக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த எல்லைப் பகுதியில் கடுமையான நிலப்பகுதி காரணமாக தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலை இருந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், பாதுகாப்பில் குறைபாடு எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிறது பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தத் தாக்குதல் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது, குழுவின் அறிக்கையில் என்ன காரணம் என்று தெரிந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், மோடியின் நடவடிக்கைகளே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என எதிர்க்கட்சிகளும் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சிவ சேனாவும் கடுமையாக தாக்கிவருகின்றன. குறிப்பாக பாகிஸ்தானியர் இந்தியாவுள் சுற்றுலாப் பயணிகளாக வருவதற்குக் கூட எதிர்ப்பு தெரிவிக்கும் சிவ சேனா, இந்திய பிரதமரின் ‘திடீர்’ பயணத்தை கடுமையாகத் தாக்கியது. பாகிஸ்தானை நம்ப வேண்டாம் என்று தாங்கள் எச்சரித்தது இப்போது உண்மையாகிவிட்டது என உத்தவ் தாக்கரே சீறுகிறார்.
பாகிஸ்தானிய முன்னாள் அமைச்சரை பத்திரிகை வெளியீட்டு அழைத்த சுதீந்திர குல்கர்னி மீது கருப்பு மை வீசியது, பாகிஸ்தான் பாடகரை மும்பையில் பாட அனுமதிக்க மாட்டோம் என அவரைத் துரத்தியது, சுற்றுலா வந்த பாகிஸ்தான் பயணிகளுக்கு ஹோட்டலில் இடம் தரக்கூடாது என ஹோட்டல்காரர்களை மிரட்டி சொல்ல வைத்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணனையாளர்களை விரட்டியது என சிவசேனா தனது பழைய ‘எதிரி பாகிஸ்தான்’ என்கிற அரசியலை கையில் எடுத்திருக்கிறது. மகாராஷ்டிராவில் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ள சிவ சேனாவுக்கும், சிவ சேனாவின் ஆதரவில் ஆட்சியமைத்திருக்கும்  பாஜகவுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டிருக்கிறது. தன்னை முதன்மையாக காட்டிக்கொள்ளும் விதத்தில் மீண்டும் கையிலெடுத்திருக்கும் ‘எதிரி பாகிஸ்தான் அரசியலு’க்கு உரமூட்டக்கூடியதாக இருக்கிறது பதன்கோட் தாக்குதல்.
பாகிஸ்தானின் அல்லது பாகிஸ்தானின் பேரைச் சொல்லிக்கொண்டு இந்தியா மீது நடக்கு தாக்குதல்களுக்கு பாகிஸ்தானின் குடிமக்கள் எந்தவகையிலும் பொறுப்பாக முடியாது. ஆனால், சிவசேனா போன்ற அரசியல்வாதிகள்  பாகிஸ்தான் என்கிற பெயரிலிருந்து எல்லாமே நமக்கு எதிரிகள்தான் என்பதுபோல பொதுமக்கள் மனதில் விதைக்க ஆரம்பிக்கிறார்கள்.
‘இந்துத்துவத்தை நிலைநிறுத்த வாஜ்பாயிக்கு கார்கில் யுத்தம் தேவைப்பட்டதுபோல, மோடிக்கு பாகிஸ்தானுடன் இன்னொரு யுத்தம் தேவையாக இருக்கலாம்’ என்கிறார்கள் சில அரசியல் நோக்கர்கள். பாகிஸ்தானிய அடிப்படைவாதிகளின் எழுச்சி இடமளிக்கும் வகையில் இந்திய அரசியல்வாதிகள் இந்துத்துவ அடிப்படைவாதத்தைக் கையில் எடுக்க நினைக்கிறார்கள். அதற்கு இந்திய அரசு துணைபோகக்கூடாது. பாகிஸ்தானிய அடிப்படைவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவதைத் தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதைப்போல இந்திய அடிப்படைவாதத்தையும் வளரவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், பாஜக அரசு தனது சக கூட்டாளியான சிவ சேனாவின் வாயைக் கட்டுப்படுத்துமா என்பது கேள்வியாகவே இருக்கும்!

தினச்செய்தி (5-1-2016) நாளிதழில் வெளியான கட்டுரை..

அதானிக்காகவும் அம்பானிக்காகவும்தான் ‘மேக் இன் இந்தியா’!

‘மேக் இன் இந்தியா’ அதாவது ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ என்பதை பிரதமர் நரேந்திர மோடி, தனது வெளிநாட்டுப் பயணங்களின் போதெல்லாம் உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்தியாவை வெளிநாட்டினருக்கு திறந்து விடுவதை இத்தனை நாசூக்காக,  உணர்ச்சிப் பொங்க வைக்கும் வாக்கியத்தின் மூலம் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாகத்தான் இருக்க முடியும்.

ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில்  20 நாடுகளுக்கும் மேல் பயணம் மேற்கொண்டார் நரேந்திர மோடி. மோடி நாட்டில் இருப்பதைக் காட்டிலும் வெளிநாட்டில் இருக்கும் நாட்கள் அதிகம் என்கிற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அவர் காதில் போட்டுக்கொள்வதில்லை. சமூக வலைத்தள பகடிகளை அவர் சட்டை செய்வதில்லை (அவர்களை கவனித்துக்கொள்ள மோடி பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதால் பிரச்சினை இல்லை). தொடர்ந்து விமானம் ஏறிக்கொண்டே இருக்கிறார். யாருக்காக?

தன்னை ஏகபோக பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவைத்த மக்களுக்காக அல்ல; ஆட்சியில் அமர வைக்க ஏகத்துக்கும் ‘பொருள்’ உதவி செய்த, தொழிலதிப நண்பர்களுக்காக. ஆஸ்திரேலியாவுக்குப் போனார், நண்பர் அதானிக்கு நிலக்கரி சுரங்கத்தை ஒப்பந்தம் செய்துகொடுக்க. தன் அருகிலேயே தொழிலதிபர் அதானி வைத்துக்கொண்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார். இந்திய ஊடகங்களில் படங்கள் வெளியானதோடு விமர்சனங்களும் வெளியானது. எனவே, தன்னுடைய அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்களை மோடி இந்த விஷயத்தில் கவனமாக இருந்தார்.

எனினும், மோடியின் மேக் இன் இந்தியா(வழக்கமானதுதான் வெளிநாட்டு கம்பெனிகள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ சேராமலோ இந்தியாவில் பொருட்களைத் தயாரிப்பார்கள்) எதைப் பற்றியது என்பது அம்பலமான பிறகும் மோடி தன் நண்பர்களுக்கான பயணத்தை நிறுத்தவில்லை. சமீபத்தில் ரஷ்யாவுக்குப் பயணமானார், அனில் அம்பானிக்காக!

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் அல்மாஸ் ஆன்டே நிறுவனமும் இணைந்து இந்திய ராணுவத்துக்கு எஸ்.400 வகை ஏவுகணை வாங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மதிப்பு 6 பில்லியன் டாலர்கள். 400 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட, நிலத்திலும் வான்வெளியிலும் தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணை இது.

ரஷ்யாவின் ஆயுதத் தயாரிப்பில் மகுடமாக குறிப்பிடப்படும் இந்த ஏவுகணையை சீன, பாகிஸ்தான் நாடுகளின் ஆயுத சக்திக்கு ஈடுகட்டும் வகையில் வாங்குகிறது இந்தியா. ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து இதை வாங்கி, இந்தியத் தன்மைக்கேற்றபடி மாற்றம் செய்துகொடுக்கும் பணி ரிலையன்ஸ் நிறுவனத்தினுடையது. ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய ராணுவத்துக்கு ரோந்து கருதுவிகளை செய்துகொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் ‘பாதுகாப்பு’க்காக ஏவுகணை வாங்குகிறது; நல்லது. ஆனால் அதை ஏன் மோடி அரசு மறைக்கிறது என்பதே கேள்வி. அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கார்மோவ் ரக ஹெலிகாப்டர் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக வாங்கப்படும் ஏவுகணை குறித்து எந்த விவரமும் அரசு சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

ரஷ்யாவின் அரசு ஊடகம், எஸ்.400 ரக ஏவுகணையை இந்தியா வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது என செய்தி வெளியிடுகிறது. அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. உலக அளவிலான வர்த்தக பத்திரிகைகள் இதுபற்றி எழுதுகின்றன. ஆனால், அரசு இதுகுறித்து மவுனம் காக்கிறது. அரசு மவுனம் காப்பது ராணுவ ரகசியத்தைக் காப்பாற்ற என்று நாம் நினைக்கலாம். ரஷ்யாவுக்கு இந்தியாவைவிட சீனா நெருங்கிய கூட்டாளி என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதோடு, ரஷ்யாவே உலகத்துக்கு தெரியப்படுத்திவிட்ட பிறகு ராணுவ ரகசியமும் இல்லை; ஒன்றும் இல்லை. எல்லாம் மோடியின் ‘நண்பர்கள்’ பற்றிய ரகசியம்தான்!

அத்வானியைப் புறக்கணித்தவர்களுக்கு கீர்த்தி ஆசாத் எம்மாத்திரம்?

அரசியல் கட்சிகள் சில நேரங்களில் மூத்தத் தலைவர்கள், கட்சிக்காக உழைத்தவர்களை தூக்கியெறிவது சர்வ சாதாரண விஷயம்தான். ஆனால், மோடி-அமித் ஷா பாஜகவின் அதிகார மையங்களாகிவிட்ட பிறகு பல மூத்தத் தலைவர்கள், நேர்மையான அரசியல்வாதி என பெயர் எடுத்தவர்களை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அதன் பட்டியல் இதோ…

அத்வானி

மோடி தலைமைக்கு பாஜக பலிகொடுத்த மூத்தத் தலைவர் ‘ரத யாத்திரை’ புகழ் அத்வானி. பிரதமர் கனவில் இருந்த அத்வானியை ஓரங்கட்டி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் முழு பங்கும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பையே சாரும்.  மோடி போன்ற அதிரடியாளர்கள்தான் தற்போதை ‘இந்துத்துவ’ வளர்ச்சிக்குத் தேவை என்பது அவர்களுடைய கணக்கு. அதன்படி மோடியை முன்னிறுத்தினார்கள்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அத்வானிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அறை ஒதுக்குவதில் ஆரம்பித்து, அவரை ‘கார்னர்’ செய்தது மோடி தலைமை.  அத்வானியுடன் முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டனர். அவர்களுடைய ஆலோசனைகளை அமித் ஷா புறக்கணித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த ஜுன் மாதம் அத்வானி,

“ஜனநாயகத்தை ஒடுக்கும் சக்திகளின் ஆதிக்கம் நாட்டில் மேலோங்கி இருக்கின்றன. அரசியல் சாசன பாதுகாப்பு வலுவாக இருப்பினும் கூட ஜனநாயகத்தை ஒடுக்கும் சக்திகளின் ஆதிக்கமே வலுவாக இருக்கிறது. இப்போது உள்ள சட்டதிட்டங்கள் அவசர நிலையை தவிர்க்க போதுமானதாக இல்லை.

மீண்டும் அவசர நிலை ஏற்படாமல் தடுக்கும் அளவிற்கு முதிர்ச்சியுடைய அரசியல் தலைமை இந்தியாவில் இல்லை என நான் கூறவில்லை. ஆனால், அந்த தலைமைக்கு அத்தகைய சூழலை தடுக்கும் வலிமையில்லை என்பதே எனது நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது. எனவே, நாட்டில் மீண்டும் அவசர நிலை ஏற்பட வாய்ப்பில்லை என நான் முழுமையாக நம்பவில்லை” எனக் கூறியிருந்தார்.

அருண்சோரி

பாஜகவின் மற்றொரு மூத்தத் தலைவரான அருண் சோரி, “முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பலகீனமான பிரதமர் நாட்டை ஆள்வதாக நான் உணர்கிறேன். பொருளாதார நிர்வாகம் என்பதை இந்த அரசு தலைப்புச் செய்திகளை நிர்வகிப்பது என்று தவறாக புரிந்துகொண்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

“மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தை எல்லோரும் இப்போது நினைவு கூற ஆரம்பித்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தின் செயல் திட்டங்கள் காங்கிரஸ்+பசு என்பதாகவே உள்ளது. காங்கிரஸ் வழியிலேயே பாஜக அரசும் செயல்படுகிறது” என்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் அருண் சோரி.

மோடியை விமர்சிக்க ஆரம்பித்ததிலிருந்து, மோடி ஆதரவாளர்கள் தன்னை சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சிப்பதோடு, மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தன் மகனையும் கேலி செய்வதாக அருண் சோரி தெரிவித்தார்.

“இந்த நிகழ்ச்சியில் என் மீதும் என் மகன் மீதும் தனிப்பட்ட முறையில் நடந்த தாக்குதல்கள் குறித்து பேச ஆரம்பித்தால், பார்வையாளர்கள் அதிர்ச்சியடைவார்கள். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன்…‘அவருக்கு பைத்தியக்கார மகன் ஒருவன் இருக்கிறான். அவனைப் போல இவருக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது’. இத்தகைய முட்டாள்களை பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களில் பின்தொடர்பவராக இருக்கிறார்” என்று பேசினார்.

கீர்த்தி ஆசாத்

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் தலைமை பதவியில் இருந்தபோது ஊழல் செய்ததாக அருண் ஜேட்லி மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை வைத்தார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கீர்த்தி ஆசாத்.  இதற்காக அவரைக் கட்சியில் இருந்து  இடைநீக்கம் செய்துள்ளது பாஜக.இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கீர்த்தி ஆசாத்,“நான் செய்த தவறு என்ன? என்னை கட்சியில் இருந்து நீக்கி தண்டித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்.  ஊழல் குறித்து பேசுவதும், உண்மை பேசுவதும் குற்றம் என்றால், அந்த குற்றத்தை தொடர்ந்து செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

வன்முறையை தூண்டும் படியாக பேசுபவர்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு அரவணைத்துச் செல்லும் பாஜக, தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் தவறு செய்கிறார்கள் என்று சுட்டிக்காட்டியவர்களை நீக்கம் செய்வதும் அவர்களை கட்சியில் ஓரங்கட்டுவதையும் செய்கிறது பாஜக.

மஃபளர் மேனை கதறவைத்த சிபிஐ!

‘மஃப்ளர் மேன்’ அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி மேல் நெருக்கடி வந்துகொண்டிருக்கிறது. இந்த முறை மனிதர் நிதானத்தை இழந்து “மோடி ஒரு கோழை, மனநோயாளி” எனப் பொரிந்து தள்ளிவிட்டார். மத்திய அரசின் கீழ் இயங்கும் யூனியன் பிரதேசமான டெல்லிக்கு முதல்வராக பெரும்பான்மை பலத்துடன் அமர்ந்தாலும், முழு அதிகாரமும் மத்திய அரசின் கையில்தான். டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து தருவோம் என்று வாக்குறுதி தந்தார் பிரதமர் மோடி.  பாஜக படுதோல்வி கண்டது.  தனி மாநில அந்தஸ்து விவகாரம் வரும்போதெல்லாம் அதைப் பற்றி பரிசீலிப்பதாகச் சொன்னது மத்திய அரசு.

மத்தியில் பெரும் வெற்றி கண்ட மோடி, முதல் படுதோல்வியாக டெல்லி தேர்தல் அமைந்துவிட்டது. புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சி, பெரும்பான்மை பலம் பெற்று விட்டதும் பாஜகவை அசைத்தது உண்மை. அந்த அசைவை நிமிர்த்தும் பொருட்டு, டெல்லியின் அதிகாரம் என்ற கடிவாளத்தை தன்னிடமே வைத்துக் கொள்ள விரும்புகிறது மத்திய அரசு.
டெல்லியில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை, டெல்லி மாநில அரசின் பரிந்துரையைப் பெறாமல் தானாகவே நியமித்தது மத்திய அரசு. கெஜ்ரிவாலுக்கும் மோடிக்கும் நிழல் யுத்தம் ஆரம்பமானது இங்கேதான். இந்தச் செயலுக்கு மோடியின் தலைமையிலான பாஜக அரசை நேரடியாகத் தாக்கினார் கெஜ்ரிவால்.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் மோடி வாயைத் திறந்து பேசவில்லை. அவருடைய அமைச்சரவை சகாக்களே பதில் சொன்னார்கள். துணை நிலை ஆளுநரை நியமிக்க மத்திய அரசுக்கு சட்டப் பூர்வமான அதிகாரம் உள்ளதென தெரிவித்தார்கள்.  டெல்லி போலிஸ் தன்னுடைய தினசரி அறிக்கைகளை ஆளுநரிடம் சமர்பித்தது.

இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், அரவிந்த கெஜ்ரிவாலின் சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர்,  மோசடி கல்விச் சான்றுதழ் அளித்தார் என்பதற்காக டெல்லி காவல்துறை அவரைக் கைது செய்ய அலையோ அலையென்று அலைந்தது. இதே குற்றச்சாட்டு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது இருந்தும், அது ஏதோ கிணற்றில் போட்ட கல்லாக எந்த நடவடிக்கைக்கும் இல்லாமல் கிடக்கிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.

குற்றம்சாட்டப்பட்ட அமைச்சரை உடனே அமைச்சரவையில் இருந்து நீக்கி சர்ச்சையை இல்லாமல் ஆக்கினார். தன்னுடைய அரசு எல்லா தடைகளையும் தாண்டிசிறப்பாக நடத்திப் படுவதாக விளம்பரங்களில் வெளியிட்டார்.

ஆம் ஆத்மி கட்சியைத் தொடங்குயபோது இணைந்திருந்த பிரசாந்த் பூஷனும், யோகேந்திர யாதவும் கட்சியை விட்டு விலகினார்கள். பாஜக கடுமையாகத் தாக்கிய போது கட்சியை, தன்னை காத்த இவர்களுடைய இழப்பு பேரிழப்புதான் என்பதை கெஜ்ரிவால் உணராமல் இல்லை. இருந்தாலும் தனிமனிதனாக கட்சியைத் தாங்கி நின்றார்.

கூட்டத்திலிருந்து விலகிய ஆடுகளை வேட்டையாடுவது பெரிய விலங்குகளுக்கு எளிதானது. அதே யுத்தியைக் கையாள்கிறது பாஜக.  சமீபத்தில் டெல்லியில் அரசு நிலத்தில் ஆக்ரமித்திருந்த குடிசைகளை அகற்றுவது குறித்து டெல்லி அரசு-மத்திய அரசு-காங்கிரஸிடையே கடும் வார்த்தை போர் நடந்தது.  இதற்கு அடுத்தடுதடுத்த நாளில் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமாரின் பேரில் எழுந்த குற்றச்சாட்டுக்காக டெல்லி போலீஸ் அல்ல, சிபிஐயே நேரடியாக டெல்லி முதல்வர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டது.
தன்னை அரசியல் ரீதியாக எதிர்க்க திராணி இல்லாமல் தன்னுடைய அலுவலகத்தை சிபிஐ சோதனைக்கு உட்படுத்தியதன் மூலம் பாஜகவும் மோடியும் பழிவாங்கப் பார்க்கிறார்கள் என்று கடுமையாகக் குற்றம்சாட்டினார் கெஜ்ரிவால். இதன் உச்சம்தான் மோடியை கோழை, மனநோயாளி என்று பேசியது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தபோது, அருண் ஜேட்லி ‘முதல்வர் அலுவலகத்தில் சோதனை நடக்கவில்லை. முதல்வர் அலுவலகத்தின் அருகில் உள்ள அறையில்தான் சோதனை நடந்தது’ என்று விளக்கினார். இந்த விளக்கத்தை கசக்கி எறிந்த கெஜ்ரிவால் நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி புளுகுகிறார் என்று ட்விட்டினார்.

இந்த விவகாரங்கள் பற்றி, அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் சகாவும் சட்ட வல்லுநருமான பிரசாந்த் பூஷண் இப்படிச் சொல்கிறார்…“முதன்மைச் செயலாளர் குற்றம் செய்தவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவருடைய குற்றச்சாட்டை நிரூபிக்கும் முன்பே குற்றவாளியைத் தப்பவிடும் வகையில் அதிரடி சோதனைகளை சிபிஐ செய்தது நகைப்புக்குரியது. அதேபோல கெஜ்ரிவால் இந்த அளவுக்கு கதற வேண்டிய அவசியமும் இல்லை!”

தினச்செய்தி(16-12-2015) நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரை.