பாஜக மூத்த தலைவர்கள் போர்க்கொடி: அமித் ஷாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

கடந்த ஜுன் மாதம் “தற்போதைய சூழலில், ஜனநாயகத்தை ஒடுக்கும் சக்திகளின் ஆதிக்கம் நாட்டில் மேலோங்கி இருக்கின்றன. அரசியல் சாசன பாதுகாப்பு வலுவாக இருப்பினும் கூட ஜனநாயகத்தை ஒடுக்கும் சக்திகளின் ஆதிக்கமே வலுவாக இருக்கிறது. இப்போது உள்ள சட்டதிட்டங்கள் அவசர நிலையை தவிர்க்க போதுமானதாக இல்லை.

மீண்டும் அவசர நிலை ஏற்படாமல் தடுக்கும் அளவிற்கு முதிர்ச்சியுடைய அரசியல் தலைமை இந்தியாவில் இல்லை என நான் கூறவில்லை. ஆனால், அந்த தலைமைக்கு அத்தகைய சூழலை தடுக்கும் வலிமையில்லை என்பதே எனது நம்பிக்கையின்மையை அதிகரித்துள்ளது. எனவே, நாட்டில் மீண்டும் அவசர நிலை ஏற்பட வாய்ப்பில்லை என நான் முழுமையாக நம்பவில்லை” எனக் கூறியிருந்தார் பாஜக மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி.

பாஜகவின் மற்றொரு மூத்தத் தலைவரான அருண் சோரி, “முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பலகீனமான பிரதமர் நாட்டை ஆள்வதாக நான் உணர்கிறேன். பொருளாதார நிர்வாகம் என்பதை இந்த அரசு தலைப்புச் செய்திகளை நிர்வகிப்பது என்று தவறாக புரிந்துகொண்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் பாஜகவும் பாஜக ஆதரவு அமைப்புகளும் முன்னெடுத்த வெறுப்பு அரசியல் பீகார் தேர்தலில் எதிரொலித்தது. 40 தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது பாஜக 50 இடங்களை ம்ட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது.

இந்தத் தோல்விக்கு ஆர் எஸ் எஸ் தலைவரின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான பேச்சும் பாஜக தலைவர் அமீத் ஷாவின் வெறுப்பு பேச்சுகளும்தான் தோல்விக்குக் காரணம் என கூட்டணி கட்சிகளின் தலைவர்களே பேசினார். பாஜகவுக்குள் சலசலப்பு எழுந்தது. பாஜக எம்பி சத்ருஹன் சின்ஹா வெளிப்படையாக பீகார் தேர்தல் பிரச்சாரங்களின் போதே விமர்சனம் வைத்தார்.

இந்நிலையில், பீகார் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததன் எதிரொலியாக பாஜக மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்கா, சாந்தகுமார், அத்வானி ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பீகார் தோல்விக்கு அனைவரும் காரணம் என்பதை ஏற்கமுடியாது என சுட்டிக்காட்டியுள்ளதோடு, டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வி முடிவில் இருந்தும் பாடம் கற்காததால் தான் பீகாரிலும் தோல்வி அடைந்ததாக கூறியுள்ள மூத்த தலைவர்கள் பீகார் தோல்வி குறித்து முழுமையான மறுஆய்வு தேவை எனவும் தெரிவித்துள்ளனர்.

மோடி மற்றும் அமித் ஷாவின் தன்னிச்சையான எதேச்சதிகார நிலைப்பாட்டையே அவர்கள் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். செவ்வாய்கிழமை முரளி மனோகர் ஜோஷியின் இல்லத்தில் கூடிய மூத்தத் தலைவர்கள் கலந்தாலோசித்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அருண் சோரி இந்த அறிக்கையை தயாரித்ததாகவும் ஊடகங்கள் சொல்லியிருக்கின்றன.

“கட்சியின் கருத்தொருமிப்பு அழிக்கப்பட்டுவிட்டதும் அதன் பின்விளைவாக கடந்த ஓராண்டாக கட்சி பலவீனப்பட்டு வருவதும் பீகார் தேர்தல் தோல்விக்கு காரணம்” என்று தங்களுடைய கூட்டறிக்கையில் தெரிவிக்கிறார்கள் பாஜக மூத்தத் தலைவர்கள்.

திங்கள்கிழமை நடந்த பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தின் முடிவில் பேசிய அருண் ஜெட்லி, “அமித் ஷாவை மாற்றும் எண்ணத்துக்கே இடமில்லை” என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.