“800 ஆண்டுகளுக்குப் பின் இந்து ஆட்சி”

மக்களவையில் திங்கள்கிழமை சகிப்பின்மை விவாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனம் கிளப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் முகமது சலீம் எழுப்பிய விவகாரம், பெரும் சர்ச்சைகளுடன் மக்களவையில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

“800 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் இந்து ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாக இதழ் ஒன்றில் வெளியான ராஜ்நாத்தின் பேட்டியை மேற்கோள் காட்டிப் பேசினார் முகமது சலீம்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய ராஜ்நாத் சிங், தான் ஒருபோதும் அப்படி பேசவில்லை என்றார். “என்னுடைய நாடாளுமன்ற வாழ்க்கையில் இந்த அளவுக்கு நான் காயம்பட்டதில்லை. இப்படி நான் ஒருபோதும் பேசியதில்லை. நான் எப்போது சொன்னேன் என்பதை சலீம் நிரூபிக்க வேண்டும். இதற்காக அவர் மன்னிப்புக் கோர வேண்டும்” என்றார். பாஜக உறுப்பினர்களும் சலீம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றனர்.

இது குறித்து மேற்கொண்டு பேசிய சலீம், “இல்லாததை எதையும் நான் சொல்லவில்லை. ராஜ்நாத் சிங் பேசியதை வெளியிட்ட பத்திரிகையை இதுகுறித்து நீங்கள் கேட்க வேண்டும். அப்படித் தவறாக எழுதியிருந்தால் அந்த பத்திரிகை மீது அவதூறு வழக்குத் தொடருங்கள்” என்றார்.

இந்நிலையில் ட்விட்டரில் ராஜ்நாத் சிங் பேசியதாக மார்க்சிஸ்ட் உறுப்பினர் சலீம் பேசிய விஷயத்தைச் சொன்னவர் மறைந்த விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் என்று பலர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

 

மதசார்பற்ற, சோஷலிச வார்த்தைகள் மேல் பாஜகவுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு?

மதசார்பற்ற, சம்தர்மம்(Secular, socialist) என்கிற சொற்கள் அடிப்படைவாதிகளுக்கு எப்போதும் பிரச்சினைக்குரியவைதான். இன்றைய மக்களவைக் கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், அம்பேத்கரை புகழும் சாக்கில் அவரை இந்தச் சொற்களுக்கு எதிராக நிறுத்தியிருக்கிறார். அவையிலே எதிர்க்கட்சிகள் கண்டித்திருக்கின்றன.
கடந்த குடியரசு தினத்தன்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியான விளம்பரத்தில் அரசியல் சாசனத்தின் முகப்புரை (Preamble) படம் இடம்பெற்றிருந்தது. இந்த முகப்புரையில் மதசார்பற்ற, சமதர்மம் என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை.
மதசார்பற்ற, சமதர்ம என்கிற வார்த்தைகள் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சேர்த்தவை என்று கூறி இந்த வார்த்தைகளை பாஜக அரசு நீக்கிவிட்டதாகவும் அதை வரவேற்பதாகவும் இந்துத்துவ அமைப்புகள் வரவேற்றன.  எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததற்கு விளம்பரத்தில் பயன்படுத்தியது 42-வது அரசியல் சாசன திருத்தத்துக்கு முந்தைய முகப்புரை தவறுதலாக பிரசுரமாகிவிட்டது என்று சொன்னது மத்திய அரசு.
இந்து ராஷ்டிரத்தை அமைக்க விரும்பும் பாஜக, வெளிப்படையாக மதசார்பற்ற நாடு இந்தியா என்று இனி சொல்லப் போவதில்லை என்று அறிவித்திருக்கலாம். ஆனால் தன்னுடைய ‘அரசியலுக்கு’ தவறுதலாக வெளியான விளம்பரம் என்று சப்பைக் கட்டு கட்டியது.
அதே நேரத்தில் மதசார்பற்ற, சமதர்ம ஆகிய வார்த்தைகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நீக்குவது தொடர்பாக, தேச அளவில் விவாதம் நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசினார்.  நெருக்கடி காலக்கட்டத்துக்குப் பிறகே இந்த வார்த்தைகள் அரசியல் சாசன முகப்பில் சேர்க்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
இவர்கள் சொல்வதுபோல இந்த வார்த்தைகள் யாரால், எந்தக் காலக்கட்டத்தில் சேர்க்கப்பட்டவையாக இருந்தபோதும் மதசார்பற்ற, சமதர்மம் என்கிற வார்த்தைகள் இவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது இரண்டு காரணங்களுக்காக.. ஒன்று இந்த சொற்கள் கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து பிறந்தவை என்பதும் இரண்டாவது தாங்கள் கட்டிக்காத்த ‘இந்து’ தர்மத்தை தகர்ப்பவை என்பதும் இவர்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள்.