சிங்களவர்களின் விருப்பம் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான்!

vithanageஉலகசினிமாவில் தவிர்க்கமுடியாத இயக்குநர் பிரசன்னவிதனாங்கே. போரின் ஆழமான பாதிப்புகளுக்கிடையே மனிதத்தைத்தேடும் இலங்கைப்படைப்பாளி. இவருடையடெத் ஆன் எ  ஃபுல் மூன் டேசர்வதேச அளவில் பலவிருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றபடம். தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளுக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

”உங்களுடைய பின்னணி…”

”நான் கொழும்பு நகரத்தைச் சேர்ந்தவன். என் அப்பா தீவிர சினிமா ரசிகர். தமிழ், இந்தி, சிங்களம் என எல்லா மொழிப் படங்களுக்கும் என்னை அழைத்துச் செல்வார். இப்போது நான் இருக்கும் இடத்துக்கான தயாரிப்புகள் அத்தனை யும் குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பமாகிவிட்டன. சினிமாவும் புத்தகங்களும் தனிமையில் எனக்கான கனவுலகத்தைத் திறந்துவைத்தன. சிறுவனாக இருந்தபோது நடிகனாக வேண்டும் என்றுதான் விரும்பினேன். வளர வளர… ‘பதேர் பாஞ்சாலி’ போன்ற படங்கள் பார்க்கக் கிடைத்த போது, என்னுடைய சிந்தனையின் தடம்மாறிவிட்டது. ‘எது நல்ல படம்’ என்ற புரிதல் கிடைத்தது. இலங்கையில் சினிமாவைக் கற்றுத் தர பள்ளிகள் கிடையாது. சினிமாவைப் பார்த்து, எனக்குநானே ஆசானாக இருந்து சினிமா எடுக்கக் கற்றுக் கொண்டேன். சினிமாவில் திரைக் கதாசிரியராக நுழைந்து, இயக்குநராக மாறினேன். 92ல்முதல் படம் ‘சிசிலா கினி கனி’ வந்தது. இப்போது ஆறாவது படமான ‘ஆகாச குசும்’ தயாராகிக்கொண்டு இருக்கிறது. சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடகத் துறையில் சிறிது காலம் இருந்தேன். என் படங்களில் நல்ல நடிகர்களும், நல்ல நடிப்பும் வருவதற்கு நாடகத் துறை அனுபவம்தான் கை கொடுக்கிறது.”

”நீங்கள் ஒரு சிங்களராக இருந்தபோதும், ஆளும் சிங்கள அரசின் மீதான விமர்சனத்தைத் தயங்காமல் உங்கள் படங்களில் வைக்கிறீர்கள். இதற்குஅரசுத் தரப்பிலிருந்து ஏதும் அச்சுறுத்தல்கள் வரவில்லையா?”

”இருபத்தைந்து ஆண்டுகால போர்ச்சூழல் இலங்கையின் ஒவ்வொரு மனிதனையும் பாதித்திருக்கிறது. இலங்கையில் ஒவ்வொருவரும் தான் நேசித்த யாராவது ஒருவரைத் தொலைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். போருக்குப் பின்னால் இருக்கக்கூடியஉண்மை யைச் சொல்லும்போது கசப்பு இருக்கத்தான் செய்யும். நான் உணர்ந்த உண்மையை என் படங்களில் சொல்ல விரும்புகிறேன். ‘டெத் ஆன் எ ஃபுல் மூன் டே’ படத்துக்கு அரசு தடை விதித்தது. நான் உயர்நீதிமன்றம் வரை சென்று போராடி திரையிட அனுமதி வாங்கினேன். ‘நீ அவன் ஆள்’ போன்ற முத்திரையும் குத்தினார்கள். ஒரு படைப்பாளி என்ற வகையில் இதை எதிர்கொள்வதும் என்னுடைய பணிதான்!”

”உங்கள் படங்கள் மக்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?”

”வளரும் படைப்பாளியாக இருந்தபோது விருதுகளைப் பெரிய அங்கீகாரமாக நினைத்த துண்டு. ‘டெத் ஆன் எ ஃபுல்மூன் டே’ சிறப்பு அனுமதியோடு யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்டது. சிங்கள ராணுவத்தில் பணியாற்றி, போரில் பலியான ஒரு ராணுவ வீரன்… அவன் இறந்துவிட்டதை அறிந்தும் அவன் வருவான் என காத்திருக்கும் ஒரு வயோதிகத் தந்தை… இதன் பின்னணியில் போரின் விளைவுகளைப் பேசும் படம். தமிழ் இளைஞர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அவர்களுடைய வாழ்த்துக்களை நெகிழ்ச்சியோடு வெளிப்படுத்தி இருந்தார்கள். பிரித்துவைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் உள்ளுக்குள் உறைந்துபோன மனிதத்தைத் தோண்டி எடுக்கும் வேலையை ஒரு படைப்பு செய்ய வேண்டும். அப்படியான படைப்புகளுக்குத்தான் உள்ளத்தில் இருந்து பாராட்டுக்கள் வரும்! அது என் படங்களுக்குக் கிடைக்கிறபோது நான் முழுமையான படைப்பாளியாகிறேன்.”

”இலங்கையில் தற்போதுள்ள நிலைமை என்ன? தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நடக்கும் உரிமைப் போரின் முடிவுக்கு, ஒரு சிங்களராக நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?”

”இந்தியாவில் பணவீக்கம் 11 சதவிகிதமாக இருக்கிறது என்கி றார்கள். ஆனால், இலங்கையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பண வீக்கம் 20 சதவிகிதத்தைத்தாண்டி விட்டது. அத்தியாவசியப் பொருட் களின் விலை பத்து மடங்கு விலையேற்றம்செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஒரு நிம்மதியான, அமைதியான சூழலுக்கு மக்கள் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள். சிங்களவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் தங்களுடைய சுயநலத்துக்கு நம்மைப் பிரித்து ஆண்டார்கள். அதையே ஏன் நாமும் கடைப்பிடிக்க வேண்டும்? எல்லோருடைய வாழ்க்கையிலும் போரின் பாதிப்புகள் நிறையத் தழும்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. ஒரு குடிமகனாக என்னுடைய கருத்தெல்லாம்… அமைதியை அமைதியான முறையில்தான் கொண்டு வர வேண்டும்என்பது தான்!”

ஆனந்த விகடன் (09-07-08)

பின் குறிப்பு :பிரசன்னவிதானங்கே குறித்து ஆனந்தவிகடனில் வந்த உலகசினிமா தொடரில் படித்தபோது பிரமிப்பும் மரியாதையும் உண்டானது. அவர்அடிக்கடிசென்னை வருகிறார் என்ற தகவலின் அடிப்படையில் ரொம்ப காலம் யாரைப் பிடித்தால் அவரை சந்திக்க முடியும் என்று தேடிக்கொண்டிருந்தேன். ஒருநாள் எதேச்சையாக அஜயன்பாலாவிட ம்இதைசொல்லப்போகஎழுத்தாளர் விஸ்வாமித்திரன், பிரசன்னவிடம் இணை இயக்குநராக இருக்கும் விஷயத்தைசொன்னார். உடனே விஸ்வாமித்திரனை கைபேசியில்பிடித்தேன். 3 மாதங்களுக்கு பிறகுதான் அவர் சென்னை வரவிருக்கிறார் என்றார் விஸ்வாமித்திரன். 3 மாதங்கள் முடிந்தநிலையில் மீண்டும் அவரிடம் பேசினேன். இங்குதான் இருக்கிறார் எனறார். மகிழ்ச்சிஒரு சந்திப்புக்குஉதவி செய்யுங்கள் என்றேன். சரி என்றார். நினைவுபடுத்த மீண்டும் அழைத்தேன். அடுத்த வாரம் என்றார். வாரம் கழிந்த நிலையில் மீண்டும்அழைத்தேன். வேலைபளு என்றார்இப்படியாக சில மாதங்கள் கழிந்தநிலையில் ஒருநாள் விஸ்வாமித்திரனிடம் சண்டையே போட்டுவிட்டேன். பாவம் பயந்துவிட்டாரோ என்னவோ பிரசன்னவின் முந்தையபடங்களைப் பார்க்கச்சொல்லி, சந்திக்கவும் ஏற்பாடு செய்துகொடுத்தார்.
பிரசன்னவின் படங்களைப்போல அவருடைய சுபாவமும். வெளிபூச்சு இல்லாத மனிதராக பழகினார். என்னுடைய கேள்விகளுக்கு மனதிலிருந்து பேசினார். இலங்கை அரசிமிடருந்து அவருக்கு வந்துகொண்டிருந்த மிரட்டல்கள் காரணமாக அரசியல் பேசுவதை தவிர்த்தார். அப்படியிருந்தும் அவருடைய பேட்டி, அமைதியை விரும்பும் ஒரு மனிதநேயவாதியின் எதிர்ப்பார்ப்பை கூறுவதாகவே அமைந்திருந்தது. அரசியல் பேசியது. இன்றைசூழலுக்கு இது மிகவும்தேவை என்பதால் பிரசன்னவின் பேட்டியை மீள்பிரசுரம் செய்திருக்கிறேன்.