இது இறுதி அறுவடை!

DSCN1881

எல்லோருக்குமான கவலை நதிகள் பாய்ந்து வளப்படுத்தும் விவசாய நிலங்கள் பற்றியதாக இருக்கிறது. நதி வழி விவசாயம் இன்று மேட்டிமைதனத்தோடு யாரோ உழைத்து யாருக்காகவோ விளைவிப்பதாக மாறிவிட்டது. சம்பா அரிசி விளைவிக்கும் விவசாயி, ரேஷன் அரிசியை உண்பதுதான் யதார்த்தம். இந்த சம்பா அரிசி நாளை இல்லாமல் போய்விடுமே என்கிற ஆதங்கம்தான் இதை உண்பவர்களுக்கு இந்த விவசாயிகளின் மேல் அதீத அக்கறையை ஏற்படுத்துகிறது. ஊடகங்களை அணுக முடியும் இவர்களால் அவர்களுக்காக குரல் கொடுக்க முடிகிறது. அல்லது குரல் கொடுப்பதாக பாவ்லா காட்ட முடிகிறது. இவர்கள் இருக்கட்டும், வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து, தன் வயிற்றுக்கு பருப்பையும் திணையையும் விளைவிக்கும் விவசாயிகளும் இங்கே பெருமளவில் இருக்கிறார்கள். தமிழகம் என்ன திரும்பிய பக்கமெல்லாம் நதிபாயும் வெனீஸா என்ன? இல்லை, வறண்ட பூமியும் இங்கே உண்டு.  ஆனால் இன்றைய மக்களின் சொத்து குவிக்கும் ஆர்வம் மானாவாரி நிலங்களை கூறுபோட்டு வீட்டு மனைகளாக மாற்றிவிட்டது. எல்லா ஊர்களில் மானாவாரி விவசாய நிலங்கள் கூறுபோடுவது கண்மூடித்தனமாக நடந்துவருகிறது.

DSCN1891

DSCN1941
சமீபத்தில் என் ஊருக்குச் சென்றிருந்தபோது இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டேன். எங்கள் வீட்டருகே இருந்த விவசாய நிலம் கூறுபோடப்பட இருக்கிறதாம். இதுதான் கடைசி அறுவடை என்று தெரிவித்தார் அந்த நிலத்தில் விவசாயம் செய்யும் அந்தப் பாட்டி. மகனின் கடன்களை அடைக்க நிலத்தை கூறுபோடப் போவதாக சொன்னாள் பாட்டி. அந்த நிலத்தின் மீது எங்கள் குடும்பத்திற்கு இருந்த பிணைப்பு நெடியது. மழைக்காலங்களில் காளானையும் கீரைகளை எங்களுக்கு தந்தது அந்த நிலம். மாடுகள் இருந்தபோது அந்த நிலத்தில் வரும் புல்லும் எங்களுக்கு பயன்பட்டது. அதைவிட மகிழ்ச்சி நிலம் பூ, காயுமாக நிறைந்திருப்பதை காணும்போது கிடைக்கும். இதை நம்பி வரும் கரிச்சான், மைனா, அக்காக் குருவி, தவிட்டுக்குருவியை காண்பதும் இனிது. இனி எதைக் காண்போம் என்று தெரியவில்லை!