தலித் குழந்தைகள் எரித்துக் கொலை: ஆணவமா? நாயின் மீது கல்லெறிவது போன்ற நிகழ்வா?

hariyana children

“நாடு முழுவதும் நம்பிக்கை மற்றும் புத்துணர்ச்சி நிலவுகிறது. சிறு சிறு சம்பவங்களால், இந்துக்களின் பண்பாட்டையும், இந்தியாவையும் சிதைத்துவிட முடியாது” என்று ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் 90வது ஆண்டுவிழாவில் பேசியிருக்கிறார் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத்.

உ.பியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கொல்லப்பட்ட முகமது அக்லக், ஹரியானா மாநிலம் ஃபாரிதாபாத்தில் சாதியத்தால் எரித்துக்கொல்லப்பட்ட இரண்டு தலித் குழந்தைகள் என சிறுபான்மையினரை பதற்றத்துக்குள்ளாக்கியிருக்கும் சம்பவங்கள் ஆளும் பாஜகவுக்கு வழிகாட்டியாக இருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவருக்கும் சிறு பிரச்சினையாகத் தெரிகின்றன. வளர்ந்துவரும் மதவாத வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களுடைய விருதுகளை அங்கீகாரங்களை அரசின் முகத்தில் விட்டெறிந்துகொண்டிருக்கிறார். எழுத்தாளர்களின் இந்தப் போராட்டம் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது.

மாட்டிறைச்சி அரசியலுக்கு காஷ்மீரிலும் ஹிமாச்சல் பிரதேசத்திலும் அடுத்தடுத்த உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இந்துக் கடவுளின் உருவத்தை பச்சைக் குத்தியிருந்தார் என்பதற்காக ஆஸ்திரேலியா பயணி, கடுமையான சொற் தாக்குதலுக்கு ஆட்பட்டு, பச்சைக் குத்திக்கொண்டதற்காக காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்து மன்னிப்புக் கேட்கிறார். மாட்டிறைச்சி விருந்துகொடுத்தார் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி மக்கள் மன்றத்திலேயே அடிக்கப்படுகிறார், பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து அவர் மீது மை பூசப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பகிரங்கமாக இந்துத்துவ பயங்கரவாதிகள் எதிர்கருத்து பேசுபவர்களை மிரட்டுகிறார்கள். அடுத்து தாக்கப்படுவது நீங்களாகவும் இருக்கலாம் அல்லது நானாகவும் இருக்கலாம் என்கிற பதற்றத்தை பரவவிட்டு “புத்துணர்ச்சி” நிலவுவதாகச் சொல்வதன் பெயர்தான் பயங்கரவாதம்.

வியாழக்கிழமை நடந்த ஆர்எஸ்எஸ் 90-வது ஆண்டு விழா கூட்டத்தில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் மகாராஷ்டிர பாஜக முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் அந்த அமைப்பின் பிரத்யேக உடையான அரை நிஜார் உடையுடன் கலந்துகொண்டார்கள். பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸுக்கும் உள்ள உறவு வெளிப்படையானதுதான். ஆர்எஸ்எஸ்ஸின் தீவிர கருத்துக்களை உள்வாங்கி, அதைச் செயல்படுத்தும் பணியில் இருக்கும் பாஜகவினரிடம் இரக்கத்தை எதிர்ப்பார்ப்பது அறியாமையாகிவிடுகிறது.

பாஜகவின் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலரும் மத்தியில் ஆட்சி அமைந்ததிலிருந்து மதவாதத்தை ஊக்குவிக்கும் பேச்சுக்களையும் சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மையினரை தூண்டிவிடும் பேச்சுக்களையும் பேசிவருகின்றன. அந்த வகையில் முன்னாள் ராணுவ ஜெனரலும் மத்திய அமைச்சருமான வி.கே.சிங், ஹரியானாவில் ஆதிக்க சாதியினரால் தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து தன்னுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

“நாய் மீது கல்லெறிவது போன்ற சம்பவத்துக்கெல்லாம் அரசாங்கத்தைக் குறை சொல்லலாமா?” என்கிறார். ஹரியானாவில் ஆட்சியில் இருப்பதும் பாஜகதான். இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் எரிக்கப்பட்டு, துணியால் பொட்டலாமாக சுற்றிக் கிடத்தப்பட்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு விஷயமா என்றுகூட மத்திய அமைச்சர் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் நாய் மீது கல்லெறிவது போன்ற நிகழ்வாக அதைச் சொல்வது ஆணவத்தின் உச்சமன்றி வேறென்ன? அந்தக் குழந்தைகளையும் அவர்களுடைய பெற்றோர்களையும் எரித்த ஆணவ நெருப்புதானே, மத்திய அமைச்சரின் பேச்சிலும் இருக்கிறது?