வித்யா பாலனுக்கு என்னாச்சு?

vidhya balan

சினிமா நடிகர்களை சமூகத்தின் தலைவர்களாக ஏற்றி வைத்திருக்கும் சமூகம் இது. ஆனால், நடிகர் எல்லோரும் தலைவர்களாவதில்லை. குறைந்தபட்சம் சமூக உணர்வு உள்ளவர்களாகக்கூட நடந்துகொள்வதில்லை. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் நாட்டில் அதிகரித்துவரும் மதவன்முறைகளைக் கண்டித்தும் புதன்கிழமை ஒரே நாளில் எட்டு இயக்குநர்கள் தங்களுடைய தேசிய விருதை திரும்பத் தருவதாக அறிவித்தனர்.

இதுகுறித்து தேசிய விருதுபெற்ற நடிகை வித்யா பாலனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இது இந்த நாடு கொடுத்தது, அரசாங்கம் கொடுத்ததல்ல” என்று பதில் கூறியிருக்கிறார். கூடவே, அவர் இந்நாட்டு சாமானிய மக்கள் உணவுக்காகவும் கருத்துச் சுதந்திரத்துக்காகவும் உயிர்விட்டதற்கு கண்டனமோ, எதிர்ப்போ தெரிவித்திருக்கலாம். ஆனால் அவர் ஒற்றை வாக்கியத்தோடு முடித்துக்கொண்டார்.

நாட்டு மக்களைவிட விருதுக்கு முக்கியத்துவம் தரக்கூடியவர்கள், தங்கள் விருதுகளுக்கு முட்டுக் கொடுக்க அந்த நாட்டு மக்களை நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது. அதைத்தான் வித்யா பாலனும் செய்திருக்கிறார். மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ் எழுத்தாளர்களைப் போல வித்யா பாலனும் யோசிப்பது வியப்புக்குரியதல்ல. வித்யாவும் தமிழ்ப் பெண் தானே?!

வித்யாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் புகழ்பெற்ற வித்யா பாலன், தமிழ் சினிமாவின் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘டர்ட்டி பிக்சர்’ படத்துக்காக தேசிய விருது பெற்றார்.