
கொன்றை மலர், சென்னை கோட்டூர் புரத்தில்.
தமிழில் இயற்கை தொடர்பான எழுத்தைப் படிக்கும் பரவசத்துக்கு இணையாக வேறு எந்த வகையான எழுத்திலும் நான் உணர்ந்ததில்லை. எந்த வகையான எழுத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு உணர்வு. நான் பரவசத்தை இயற்கை எழுத்தில் அடைகிறேன்.
நேற்று காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன் அவர்களின் வலைப்பதிவை நானும் என் குழந்தை கோசியும் பார்த்தோம். நான் படித்தேன், அவன் பதிவின் ஊடாக இருந்த காட்டுயிர் புகைப்படங்களை ரசித்தான். தமிழில் காட்டுயிர் எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலே இருக்கிறார்கள். அதில் நிச்சயம் ப. ஜெகநாதன் குறிப்பிடத்தகுந்தவராக கொள்ளலாம். இவருடைய பறவைகள் பற்றிய நூலான பறவைகள் :அறிமுகக் கையேடு (க்ரியா வெளியீடு, மற்றொரு ஆசிரியர் ஆசை) நூலை படித்திருக்கிறேன். அப்போதுதான் இவரைத் தெரிந்துகொண்டேன். தமிழகத்தில் காணப்படும் பறவைகளின் தமிழ் பெயர்கள், அவற்றின் தோற்றம், பொதுவான இயல்புகளை படங்களோடு வெளியிட்டிருக்கும் அந்த நூல் பறவைகள் பற்றி அறிதலில் ஆர்வமிருப்பவர்கள் சிறந்த ஆரம்ப நிலை வழிகாட்டி. என் குழந்தைக்கு பறவைகள் பற்றிச் சொல்லித்தரவும் இதைத்தான் நான் பயன்படுத்துகிறேன். தமிழில் இப்படியொரு நூல், இதை விரிவுபடுத்திய அடுத்தடுத்த நூல்கள் நிறைய வரவேண்டும். அந்த வகையில் க்ரியாவும் ப.ஜெகநாதன் மற்றும் ஆசை ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
நான் குறிப்பிடவந்தது பா.ஜெகநாதன் இயற்கையை ரசனையோடு எழுதக்கூடிய கட்டுரையாளராகவும் இருக்கிறார் என்பதே. கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் அவ்வவ்போது எழுதிவந்திருக்கிறார். எனக்குத்தான் தெரியவில்லை. இயற்கை எழுத்தைப் பொறுத்தவரையில் இயற்கையின் மீது அன்பு கொண்ட ஒருவரால் மட்டுமே சிறந்த எழுத்தை உருவாக்க முடியும். அந்தவகையில் ப.ஜெகன்நாதனின் எழுத்தில் இயற்கை மீதான அன்பு பல கட்டுரைகளில் புலப்படுகிறது. கோடையில் பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்களை நம்மில் எத்தனை பேர் ரசிக்கப் பழகியிருக்கிறோம். கொன்றை பற்றிய ஒரு கட்டுரைக்கு பொன் என கொன்றை மலர் என கவித்துமாக தலைப்பு வைத்திருக்கிறார். பல கடினமான வாழ்க்கைச் சூழல்களை நான் இந்தக் கொன்றை மலர்களிடம் தொலைத்திருக்கிறேன். இதன் பெயரே ஒரு கவிதைப்போலத்தான் எனக்குத் தெரிகிறது. இயற்கை எழுத்து என்பது வெறுமனே ரசிப்பது மட்டுமல்ல, அதன் அறிவியல் தன்மையையும் பேச வேண்டும். அதையும் செய்கின்றன இவருடைய எழுத்துக்கள். இயற்கை எழுத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள் இவருடைய வலைதளத்திற்குச் சென்று கட்டாயம் படியுங்கள். நேற்றும் இன்றும் நானும் என் குழந்தையும் இவருடைய வலைதளத்திற்குச் சென்று ரசித்தோம்.
…………………………………………………………………………………………………………………………………………………………………………….
கர்ப்ப்பை வாய் புற்றுநோய் சோதனைக்காக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பெண்களை பயன்படுத்துவதாக வினவில் இன்று படித்தேன். இதுகுறித்து 2010ல் மருத்துவர் புகழேந்தி கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்போது நான் பணியாற்றிய இதழில் இந்த கட்டுரையை எழுதியிருந்தேன். அப்போது ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பழங்குடியினப் பெண்களை இந்த சோதனைக்காக பயன்படுத்தியிருந்தார். அந்த சோதனையில் 3 பெண்கள் தடுப்பு மருந்து உட்கொண்டு பரிதாபதாக உயிரிழந்தார்கள். அந்த சமயத்தில் அதைப் பற்றி சில மாற்று இதழ்களில் கட்டுரைகள் வந்தன. ஆனால் இப்படி இந்தியப் பெண்கள் சோதனை எலிகளாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. இப்போது தமிழகம்வரை இந்த சோதனைக்களம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதைக் கண்டிக்க, இதைத் தடுத்த நிறுத்த ஏன் யாரும் அக்கறை காட்டவில்லை. அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்களுக்கு இதெல்லாம் பெரிய பிரச்னையாகப் படவில்லையா? நாளை நம் வீட்டுப் பெண்ணும் சோதனை எலியாக்கப்படலாம் என்பதை இவர்கள் உணர்வார்களா?
Like this:
Like ஏற்றப்படுகின்றது...