வேட்பாளர் நேர்காணல் என்பது ஏமாற்று வித்தையா?

இன்னும் கூட்டணி குழப்பமே முடிவுக்கு வரவில்லை; அதற்குள் சில கட்சிகள் மும்முரமாக வேட்பாளர் விண்ணப்பங்களை விநியோகித்து, நேர்காணலையும் நடத்த ஆரம்பித்துள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால், உள்கட்சி ஜனநாயகம் தழைத்தோங்குவதாகப் பார்க்கலாம். தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் தாமாகவே முன்வந்து விருப்பத்தை தெரிவிப்பதும் அவர் தகுதியான வேட்பாளர்தானா என கட்சித் தலைமை முடிவெடுத்து அவரை கட்சியின் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட வைப்பதும் பாராட்டப் பட வேண்டிய நடைமுறைகள்தான். உண்மையில் அப்படித்தானா?
பெரிய கட்சிகள் முதல் இப்போது தொடங்கிய கட்சிகள் வரை வேட்பாளர் விண்ணப்பிக்கும்போது பொதுத் தொகுதிகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலும் தனித் தொகுதிகளுக்கு ரூ. 2500 முதல் ரூ. 15 ஆயிரம் வரையிலும் செலுத்த வேண்டும் என நிர்ணயித்திருக்கிறார்கள்.
ஒரு தொகுதியில் 20 பேர் போட்டியிட விண்ணப்பித்து, அவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் மற்றவர்களின் பணம் திரும்ப அளிக்கப்படமாட்டாது. போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கும் தொகுதி, கூட்டணி கட்சிக்குப் போகும்பட்சத்தில் மட்டுமே, விண்ணப்பித்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும். இதை பொருட்களை விற்கும் நிறுவனங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று அறிவிப்பார்களே அதுபோல, கட்சிகளும் முன்பே சொல்லிவிடுகின்றன.
இது என்ன மோசடியாக இருக்கிறதே? என்று கோபப்படுவர்களுக்கு கட்சிகள் சொல்லும் விளக்கம், ‘தேர்தல் செலவுகளை கட்சி தானே செய்கிறது; அதை கட்சிக்கு அளிக்கும் தேர்தல் நிதியாகத்தான் கருத வேண்டும்’. அப்படியென்றால் தேர்தல் நிதி வசூல் என்ற பெயரிலேயே ஒன்று திரட்டப்படுகிறது அது என்ன? திராவிட கட்சிகள் உருவாக்கிவைத்திருக்கும் கட்சி நிதி கொள்ளை வழிகளில் இதுவும் ஒன்று. அதை நாங்கள் மாற்று என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகளும் பின்பாற்றுகின்றன என்பதை அழுத்திச் சொல்ல வேண்டும்.
சரி, இடதுசாரிகளின் வேட்பாளர் தேர்வு ஜனநாயக முறையில் நடக்கிறதா என்று பார்ப்போம். இடதுசாரி கட்சிகளில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வேண்டுமென்றால், அவர் படிப்படியாக கட்சியில் உயர்ந்தவராக இருக்க வேண்டும். போராட்டங்களில் பங்கேற்றவராக, மக்களின் செல்வாக்கைப் பெற்றவராக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாவட்ட பிரதிநிதிகள் தயாரித்துக் கொடுக்கும் முதல் கட்ட பெயர் பட்டியலை உயர்மட்டக் குழு இறுது செய்யும். வேட்பாளர் படிவ விண்ணப்பம், நேர்காணல் இந்த வழிமுறையெல்லாம் இல்லை. ஆனால் இவர்கள் மீதும் வேட்பாளர்களை முன்கூட்டியே தேர்வு செய்துவிட்டு ஒப்புக்கு மாவட்ட பிரநிதிகளிடம் பரிந்துரை கேட்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு.
சிறு கட்சிகளைப் பொறுத்தவரை  எத்தனை தொகுதியில் போட்டியிடப் போகிறோம் என்பதே தெரியாத நிலையில், 234 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணல் நடத்தப்படுகிறது. எதன் அடிப்படையில் இப்படியான முடிவு என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
ஆக, தெளிவாகப் புரிவது இவைதான். பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள், திராவிட கட்சிகள், கம்யூனிஸ்டுகள் என எல்லோரும் வேட்பாளர் தேர்வை மேலிடத்தின் முடிவுக்கே விட்டுவிட்டு, வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் நேர்காணல் என ஜனநாயக சக்திகளாக வேஷம் கட்டுகின்றன.

தினச்செய்தி(23-02-2016)நாளிதழில் வெளியானது.