90களின் இடையில் கிராமத்து பஞ்சாயத்து, தீவிரவாதி-அரசியல்வாதி-நேர்மையான கதாநாயக படங்கள் ட்ரெண்டாகி தமிழக மக்களை மாவாக்கிக் கொண்டிருந்த நிலையில் ஜெண்டில்மேன் படத்தின் மூலம் மசாலா படங்களுக்கு வித்யாச முலாம் பூசி அறிமுகமானார் இயக்குநர் ஷங்கர். 6 பாட்டு, 6 சண்டைதான். ஆனால், அதில் பிரமாண்ட செலவிருக்கும், திருடப்பட்ட ஹாலிவுட் கதையிருக்கும். இதுதான் ஷங்கரின் மசாலா படத்துக்கு தேவையானவை. இந்த மசாலா பாணி அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் கை கொடுத்தது. ஆனால் வரலாற்றில் தொடர் வெற்றியாளர் என்று யாரும் இல்லையே! முதல் சருக்கல் பாய்ஸ். அதைப் பற்றி ஏராளமானவர் பேசிவிட்டார்கள், ஏசிவிட்டார்கள். அடுத்தது பலத்த அடி…வசூல் மன்னனை வைத்து கொடுத்த எந்திரன். அதிலிருந்தாவது பாடம் கற்றுக் கொண்டு நமக்கு சரக்கு தீர்ந்துவிட்டது என படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கியிருக்கலாம். அடுத்து ஒரு ரீமேக் படத்தை இயக்கினார். அதுபோல ரீமேக்கிங்கிலாவது கவனம் செலுத்தலாம். அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மிகுந்த பில்ட் அப்பில் ஐ படத்தை இயக்கி உலவ விட்டிருக்கிறார்.
ஐ படத்தில் கதை, திரைக்கதை நேர்த்தி, பிரமாண்ட பொருட்செலவு குறித்தெல்லாம் நான் பேச வேண்டிய தேவையில்லை. நான் விமர்சகர் இல்லை. ஆனால் அந்த சினிமாவைப் பார்த்த ஒரு பார்வையாளராக என்னில் தோன்றியதை பகிர்கிறேன். சமீபத்தில் ஷங்கர் தயாரித்த, இயக்கிய படங்களைப் பார்த்தேன். முதலில் ஐ…
ஷங்கர் என்னும் அறிவாளி, தன்னைச் சுற்றிலும் மெத்தப் படித்தவர்களை வைத்துக்கொண்டுள்ள ஒருவர், முட்டாள்களுக்குப் படம் இயக்குகிறார். மெட்ராஸ் இளைஞனை தமிழகத்தின் கடைக்கோடி சினிமா ரசிகன்கூட நன்றாக அறிவான். உங்கள் சினிமாப் படி பார்த்தால் லிங்கேசன் (கதாநாயகன்) எங்கோ பிறந்து கூவத்து கரை பக்கம் தத்துக்கொடுக்கப்பட்டவனாகத் தெரிகிறான். மெட்ராஸில் வசிக்கும் ஒருவனைக் காட்ட அவனை ’இன்னாமா’ என்று பேச வைத்தால் போதும் என்பது பாலச்சந்தர் கால பழைய ஃபார்முலா. கதை சுடுவதில் உள்ள மெனக்கெடலை இதற்கும் சற்று பயன்படுத்தியிருக்கலாம்.
எனக்குத் தெரிந்த மெட்ராஸ் பையன் திருநங்கைகளோடு நட்பு பாராட்டித்தான் பார்த்திருக்கிறேன். வெறுமனே வசைச் சொற்களாக மட்டுமே ‘பொட்டை’ என்பது இங்கே பயன்படுத்தப்படுகிறது. பாலினம் மாறிய ஒருவரைப்பார்த்த சில நொடிகளிலேயே மிகக் கேவலமாக (மூன்றாம் தர ரசிகர்களை குஷிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு) ஊரோரம் புளிய மரம் பாட்டை பாடும் அளவுக்கு கேவலமான மெட்ராஸ்காரனை நான் பார்த்ததில்லை. அவனைத்தான் ஷங்கர் தன் படத்தில் காட்டியிருக்கிறார். நாட்டிலே திறமையான ஒருவரைப் பார்த்த உடனே அவர் திருநங்கை என்பதாலேயே அவரை மலினமாக கதாநாயகனும் அவனது தோழனும் அவமானப் படுத்துவதாக காட்சி வைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். படத்துக்கு தேவையே இல்லாத இந்தக் காட்சி அமைப்பின் மூலம் மெட்ராஸ் இளைஞர்களை திருநங்கைகளையும் என்னைப் போன்ற பார்வையாளர்களையும் அவமதித்திருக்கிறார். இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.
ஒரு திருநங்கை காதல் வயப்படக்கூடாதா? தெரிந்தோ, தெரியாமலோ சில காட்சி அமைப்புகள் மூலம் கதாநாயகியின் காதலைவிட அவருடைய காதல்தான் எனக்கு உயர்வானதாக பட்டது. கதாநாயகனால் அவருடைய காதல் நிராகரிக்கப்படும்போது அவரது துக்கத்தை உணர்ந்தேன். எப்படியோ சாமான்ய ரசிகனுக்கு ஒரு திருநங்கையின் காதலும் அதனால் உண்டான வலியும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
எனக்குத் தெரிந்து ஒன்போது என்று சொல்லிக்கொண்டிருந்த பலரும் இன்று திருநங்கைகள் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார். திருநங்கைகள் மீதான சமூக கண்ணோட்டம் நேர்மறையாக உருமாறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சமூகத்தின் ஆழம் வரை சென்று பாயும் கோலிவுட் மசாலாக்கள் சட்டென்று எல்லாவற்றையும் கலைத்துப் போட்டுவிடுகின்றன. இந்தப் படத்துக்கு எதிராக திருநங்கைகள் போராட்டம் முக்கியமானது. இனி இப்படிப்பட்ட காட்சிகளை வைப்பதற்கு கோலிவுட் கனவான்கள் யோசிப்பார்கள்.
மேக்கப் வித்யாசம் காட்ட வேண்டும் என்று எடுக்கப்பட்ட படத்தில் எதற்காக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தை கேவலமாக சித்தரிக்க வேண்டும்? இதனால்தான் சொல்கிறேன் ஷங்கரிடம் மசாலா சரக்கு தீர்ந்துவிட்டது என்று. படம் இயக்குவதில் மட்டும் அல்ல, படம் தயாரிப்பதிலும் இவரிடம் சரக்கு இல்லை. இவர் தயாரித்த கப்பல், கீழ்த்தரமான படம். பால் இச்சைக்காக அலையும் இளைஞர்கள்தான் கதைக்குரியவர்கள். இதையும் நாளை தமிழக தொலைக்காட்சி வரலாற்றீலேயே முதன்முறையாக காட்டும்போது தமிழர் குடும்பங்கள் பார்க்கத்தான் போகின்றன.
எனவே, என்னுடைய முடிவுரைக்கு வருகிறேன். திரு. ஷங்கர் அவர்களே இனி இயக்குவதை விட்டுவிடுங்கள், தயாரிப்பதையும்தான்! நீங்கள் நிறைய சம்பாதித்து சாதித்துவிட்டீர்கள். தமிழில் நல்ல படங்கள் வரவேண்டியிருக்கிறது. அவற்றுக்கு வழிவிடுங்கள்!