அருண் ஜெட்லியின் அமைதியும் சாமியார் பிராச்சியின் சகிப்பின்மையும்

pirachi

காங்கிரஸார் சகிப்பின்மையை எதிர்த்து பேரணி சென்றபோது நாட்டில் எங்கே சகிப்பின்மை நிலவுகிறது? அமைதியும் சுபிட்சமும் நிலவுவதாகச் சொன்னார் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி. அதே நேரத்தில் பாஜக தலைவர் ஒருவரும் பாஜகவின் ஆதரவான விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவரும் ஷாருக்கானை நாடு கடத்தச் சொல்லி கட்டளை இடுகிறார்கள்.

தனது 50-வது பிறந்த நாளின் போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்துவருவதாகவும் இது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றும் பேசியிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் நடுநிலையாளர்களும் ஷாருக்கானின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் வழக்கமாக இந்துத்துவ அடிபொடிகள் ஷாருக்கான் மீது வசைமாரி பொழிய ஆரம்பித்துள்ளனர். ஷாருக்கானை, பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என பெண் சாமியார் சாத்வி பிராச்சி கூறியிருக்கிறார். அதோடு அவர் விட்டுவிடவில்லை ஷாருக்கானை பாகிஸ்தானின் ஏஜென்ட் என விளித்துள்ளார். சகிப்புத்தன்மை குறித்த அவரது கருத்திற்காக, அவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும் என்று சாத்வி கூறினார். மத்திய அரசு ஷாருக்கானுக்கு வழங்கியுள்ள விருதை, அவர் திருப்பியளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சாத்வி பிராச்சி 2013-ஆம் ஆண்டு முசாபர் நகரத்தில் நடந்த கலவரத்திற்கு காரணமானவர் என குற்றம்சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரைப் போல மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா, ‘ஷாரூக்கான் இந்தியாவில் வசிக்கிறார். ஆனால், அவரது உயிர் பாகிஸ்தானில் உள்ளது. அவரது திரைப்படங்கள் நம் நாட்டில் கோடிக்கணக்கான ரூபாயை வசூல் செய்கின்றன. அவரோ சகிப்பின்மை உள்ளதாகப் பேசுகிறார்’ என்று பேசியிருக்கிறார்.

மாட்டிறைச்சி சாப்பிட்டால் பொது இடத்தில் தலையைத் துண்டிப்பேன் என கர்நாடக முதல்வருக்கு பாஜக தலைவர் எஸ்.என்.சன்னபசப்பா கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுதான் இந்தியாவில் நிலவும் அமைதியின் லட்சணமா? அருண் ஜெட்லியும் வெங்கய்யா நாயுடுவும் சகிப்புத்தன்மை நிலவுவதாக ஊடகங்களில் விளக்கம் தருவதை நிறுத்திவிட்டு, தங்களுடைய கட்சிக்காரர்களுக்கு சகிப்புத்தன்மை என்றால் என்ன என்று பாடம் எடுப்பதே நல்லது. உலக நாடுகளிலிருந்து அடுத்த பொருளாதார அறிக்கை வருவதற்குள் அதை செய்துவிடுவது மிகவும் நல்லது!