அதிமுகவில் மு.க. அழகிரியா?

மதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும் அக்கட்சியின் தலைமை உயர்நிலைக் குழு உறுப்பினருமான பாலவாக்கம் க.சோமு அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் திங்கள்கிழமை இணைந்திருக்கிறார். வரவிருக்கிற தமிழக சட்டப்பேரவை தேர்தலின் ‘தாவல்’ அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கிறார் சோமு. அடுத்தடுத்து சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் தாமரைகண்ணனும் பெண்கள் அணித்தலைவி குமரி விஜயகுமாரும் திமுக தலைவர் மு. கருணாநிதி தலைமையில் வியாழக்கிழமை இணைந்தனர். மேலும் சிலரும் மதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைய உள்ளதாக ஊடகங்கள் கிசுகிசுக்கின்றன.

தன் குடும்பத்துடன் திமுக-வில் இணைந்த சோமு...
தன் குடும்பத்துடன் திமுக-வில் இணைந்த சோமு…

திமுக-வை நெருங்கிவந்த மதிமுக பொதுச் செயலாளர், சசிபெருமாள் இறந்ததை அடுத்து நடந்த ‘போராட்டங்கள்’ மூலம் திமுக-வுக்கு ‘டஃப்’ கொடுக்க ஆரம்பித்தார். தன்னுடன் போராட்டங்களில் இணைந்த ஐந்து கட்சிகளைக் கொண்ட சமூகப் போராட்டக் கூட்டணியை உருவாக்கினார். இது தேர்தல் கூட்டணி அல்ல என்றும் அடிக்கடி விளக்கம் கொடுத்தார்(கள்). ஆனால் திமுக தலைமைக்கு இது அவ்வளவு நல்லதாகப் படவில்லை. வந்தது லயோலா கருத்துக் கணிப்பு, தந்தது தெம்பு. அடுத்தடுத்து காய் நகர்த்தலில் ஈடுபட்ட திமுக, தனக்கு ‘டஃப்’ கொடுத்த மதிமுக காரர்களுக்கு வலைவீசுவோம் என தேர்தல் கால அஸ்திரத்தைக் கையில் எடுத்தது.

'திமுகவைவிட அதிமுகவே மேல்'
‘திமுகவைவிட அதிமுகவே மேல்’

1993-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வைகோ பிரிந்து சென்றபோது அவருடன் சென்றவர் பாலவாக்கம் சோமு. தற்போது தனது ‘தாய் கழக’த்திற்கு திரும்பியிருக்கும் அவர் மதிமுக மீது பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். “சமீபத்தில் நடந்த மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில், ஐந்து கட்சிகளுடன்தான் கூட்டணி, சூரியன் உதிக்கும் திசை மாறினாலும் திமுக-வுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என்று வைகோ கூறினார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐந்து கட்சிகளுடன் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிந்து அதிமுக வெற்றி பெற்றுவிடுமே என்று நான் கேட்டபோது, அதிமுக வெற்றி பெறட்டும். திமுகவைவிட அதிமுகவே மேல் என்று வைகோ கூறினார். இந்த பேச்சு என்னை போன்றவர்களை வெறுப்பு அடைய செய்தது” என்று பேசியிருக்கிறார். அதோடு வரும் நாட்களில் தன்னைப் போல பலரும் மதிமுக-விலிருந்து விலகி திமுக-வில் இணைவார்கள் என்று முன் அறிவிப்பும் செய்தார். அதுபோலவே இன்னும் சிலர் இணைந்திருக்கிறார்கள்.

கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவதும் சேர்வதும் தேர்தல் காலத்தில் ஒரு அத்தியாயமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் தொடர்புடைய இரண்டு கட்சிகளுக்கும் பலனோ இழப்போ ஏற்படப் போவதில்லை என்பதுதான் கடந்த கால கட்சித் தாவல் வரலாறுகள் கூறுகின்றன. நாஞ்சில் சம்பத் மதிமுகவிலிருந்து விலகியதால் அதிமுகவுக்கு என்ன பலன் கிடைத்துவிட்டது? மதிமுகவுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இனோவா காரும் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியும் பெற்று லாபம் அடைந்தது என்னவோ நாஞ்சிலார்தான்! எனவே கட்சிகள் இன்னும் பெரிய ‘தாவல்’களை நிகழ்த்துவதே கட்சிக்கு பலன் சேர்க்கும். வைகோ, கட்சியைக் கலைத்துவிட்டு திமுகவில் இணைந்தாலோ திமுக-வில் இருந்து விலகிய மு.க. அழகிரி அதிமுக-வில் சேர்ந்தாலோ தேர்தல் காலத்தில் நல்ல பலனை தொடர்புடைய கட்சிகள் அறுவடை செய்யலாம்!