ஆண்வயப்பட்ட சமூகம் பெண்ணுடல் மீது திணிக்கும் வன்முறை

muslimwomen

எந்த​வொரு பெண்ணும் குற்றவாளியாக இருக்க இயலாது. குற்றவாளியாக இருப்பதற்கு ஒருவர் ஆணாக இருந்தாக வேண்டியது அவசியம்!”

– ‘சூன்யப்புள்ளியில் பெண்’ நாவலில் இருந்து…

பெண்ணிய சொல்லாடல்களும் பெண்ணிய புரட்சியும் காலந்​தோறும் நடந்தபடி​யே உள்ளன. அ​வை அந்தந்த காலகட்டத்தில் தாக்கத்​தை ஏற்படுத்துகின்றன​​வே தவிர, தொடர்ந்து பேரியக்கமாக வளர்ந்து மா​பெரும் சமூக மாற்றத்​தை ஏற்படுத்த தவறிவிடுகின்றன. சாதி ஒழிப்பு, பிராமணீய எதிர்ப்பு, பெண் விடுத​லை உள்ளிட்ட புரட்சிக்கருத்தாக்கங்க​ளை ஏற்படுத்தியவர் பெரியார். அவர் வழிவந்த திராவிட இயக்கம் அ​மைப்பு ரீதியாக வலுவாக வளர்ந்தும், திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து​கொண்டும் இருக்கின்றன. ஆனால் பேரியக்கமாக வளர​வேண்டிய பெரியாரின் கருத்துக்கள் நீர்த்துப்​போய் வெறும​​​னே பிராமணீய எதிர்ப்பு என்பது மட்டு​​மாக எஞ்சி நிற்கிறது. சாதி ரீதியிலான ஒடுக்குதல்களும் பெண்கள் மீதான சமூக வன்மு​​றைகளும் இன்று வடிவம் மாறி முன்​பைவிட கொடூர முகத்துடன் வ​ளைய வருகின்றன.

பெண்கள் கடல் தாண்டிப்போய் பணம் சம்பாதிக்கும் இக்காலக்கட்டத்திலும்கூட, ஒரு பெண்ணின் மறுமணம் என்பது கனவிலும் நி​னைத்துப்பார்க்கக்கூடாத விஷயம்தான்! எட்டு மாத கைக்குழந்தையானாலும் சரி, எண்பது வயது மூதாட்டியானாலும்சரி பெண்ணுடல் எப்போதும் இச்சைக்குரியதாகவே உள்ளது ஆண்களுக்கு. வீடு, பள்ளி,கல்லூரி, பணியிடம் என சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண் சுரண்டலுக்கு உள்ளாகிறாள். பெண் ஒடுக்குமுறை குறித்து நாம் நிறைய பேச வேண்டியுள்ளது. பெரியார் கருத்துக்களை கொண்டு செல்ல அவருடைய நிறுவன வழிதோன்றல்களால் இனி முடியாது என்னும் உண்மையோடு சூன்யப்புள்ளியல் பெண் நாவல் குறித்து எனது பகிர்தல்களை உங்கள் முன் வைக்கிறேன். சூன்யப்புள்ளியில் பெண் நாவலில் வரும் ஃபிர்தவுஸின் வாழ்க்கைச் சூழல், அவள் எதிர்க்கொள்ளும் வன்முறைகள்ம் சூழலுக்கும் பொருந்திப்போவதாலேயே நாவல் குறித்து பேச விரும்புகிறேன் .

எகிப்தின் நைல் நதியோரம் வாழும் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மூத்தவள் ஃபிர்தவுஸ். வறுமை சூழ்ந்த அந்த குடும்படும் அவளைச்சுற்றியுள்ள சமூகமும் சிறந்த அடிமையாக வாழ்வதற்கான அடிப்படையை குழந்தைப்பருவம் முதலே கற்றுக்கொடுக்கத் தொடங்குகின்றன. வீட்டு வேலைகளை செய்வதற்கும் உடன் பிறந்தவர்களை கவனிப்பதற்கும் தன் வீட்டிலேயே அடிமையாக பணிக்கப்படுகிறாள். எதிர்பாராத சூழ்நிலையில் அப்பாவும் தொடர்ந்து அம்மாவும் இறந்துவிட, உடன் பிறந்தவர்களும் வறுமை காரணமாக குழந்தைகளாகவே பலியாகிடும் போது மாமாவின் பராமரிப்பில் விடப்படுகிறாள் ஃபிர்தவுஸ். அவளின் குழந்தைமையை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட அதே மாமாவுடன் எகிப்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம். மாமா தன்னை வேலைக்காரியாக, பாலியல் அடிமையாக நடத்தினாலும் பள்ளிக்கு அனுப்பி வைப்பவனாகவும் இருக்கிறான். நடுநிலைப்பள்ளி வகுப்புகளை முடிக்கும் ஃபிர்தவுஸை, அவசரஅவரசமாக 60 வயது கிழவனுக்கு கணிசாமான வரதட்சணைத் தொகைக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் மாமாவும் அவரது மனைவியும். குணத்திலும் உருவத்திலும் அருவருப்பை ஏற்படுத்தும் அந்தக்கிழவனின் அடிஉதைகளை தாங்கப்பொறுக்காமல் வீட்டை விட்டு ஓடிப்போகிறாள் ஃபிர்தவுஸ்.

மற்றவர்களை பசியில் விட்டு, தான் மட்டும் உண்டு ஏப்பம் விடும் அப்பா, அப்பாவுக்குரிய இடத்தில் இருந்துகொண்டு தன் உடலைச் சுரண்டிய மாமா, பேராசைப் பிடித்த கருமி கணவன் என அதுவரை எதிர்கொண்ட ஆண்களைவிட, வீட்டை விட்டு வெளிவந்த பிறகு ஃபிர்தவுஸ் எதிர்கொள்ளும் ஆண்கள் எந்த வகையிலும் வேறுபட்டவர்கள் அல்ல. வேலை வாங்கித்தருகிறேன் என்ற பெயரில் தானும் சுரண்டி, அவளை விற்பனை பொருளாக்குகிறான் ஒருவன். அவனிடமிருந்து தப்பித்துப்போனவள் முற்போக்கு பேசுபவனின் காதலில் விழுகிறாள். அவனுடைய முற்போக்குத்தனம் படுக்கை அறையை பகிர்ந்துகொண்டு, பணம் நிரம்பப் படைத்த இன்னொருத்தியுடன் செல்கிறது. சோர்ந்துபோகும் ஃபிர்தவுஸ், மேல்தட்டு வர்க்க பாலியல் தொழிலாளி ஒருத்தியின் மூலம் தன்னுடலுக்குரிய விலையை தானே நிர்ணயிப்பவளாக மாறுகிறாள். அன்பு, காதல் என்ற பெயரில் இலவசமாக தன்னைப் பயன்படுத்திக்கொள்ள இனி ஒருபோதும் எந்த ஆணையும் அனுமதிப்பதில்லை என முடிவெடுக்கிறாள். அரபு மன்னர்களையும் அரசு உயர்பதவியில் இருப்பவர்களையும் மகிழ்விக்கும் தேர்ந்த மேல்தட்டு பாலியல் ​தொழிலாளி ஆகிறாள் அவள். தனக்குரிய தானே நிர்ணயித்து வாழ்ந்து கொண்டிருப்பவளின் வாழ்க்கையில் அரசியல் செல்வாக்குமிக்க தரகனின் தலையீடு ஏற்படுகிறது. தனக்குரிய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க முடியாதவளாய் சந்தர்ப்ப வசத்தில் தரகனை கத்தியில் குத்திக் கொல்கிறாள். ஃபிர்தவுஸை கைது செய்து குற்றவாளியாக்கி தூக்கு தண்டனை விதிக்கிறது அரசு. நீதி வலுபடைத்தவர்களுக்கானது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்.

எகிப்து உளவியல் மருத்துவரும் பெண்ணிய எழுத்தாளருமான நவ்வல் எல் ஸதாவி சிறையில் இருந்தபோது சந்தித்த தூக்கு தண்டனைக் கைதி ஃபிர்தவுஸ். ஓர் எளிய விவசாயப் பின்னணியில் ஆரம்பிக்கும் ஃபிர்தவுஸின் வாழ்க்கை திசை மாறி இறுதியில் அசாதாரணமாக முடிகிறது என்பதை அழுத்தமாக கூறுகிறது இந்நாவல். ஆரம்பத்திலும் நாவல் முடியும்போது மட்டும் ஆசிரியர் வந்துபோகிறார். மற்றபடி நாவல் முழுக்க ஃபிர்தவுஸின் பார்வையிலேயே செல்கிறது, சுயசரிதைக்குரிய நடையுடன். ஃபிர்தவுஸின் மனஉணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது நவ்வலின் எழுத்து.

ஃபிர்தவுஸின் வாழ்க்கையில் சற்றுநேர பூன்னகையைப் பூக்க வைத்தவர்கள் பால்ய வயது தோழனும் நடுநிலைப் பள்ளியில் வகுப்பு ஆசிரியை இக்பாலும்தான். தன் வாழ்க்கையை ஒவ்வொரு கட்டத்திலும் சூன்யமாக்கியது ஆண்களே என்பது ஃபிர்தவுஸின் நிலைப்பாட இறுதியில் நிற்கிறது. பெண்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆண்தான் பின்னணி என்பது அவள் முன்வைக்கும் முடிவு. “நீங்கள்(ஆண்கள்) எல்லோரும் பயங்கர குற்றவாளிகள். நீங்களெல்லோருமே அப்பாக்கள், மாமாக்கள், கணவர்கள், தரகர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், எல்லாவகையான தொழில்களை செய்யும் எல்லா ஆண்களும்…”

ஆண்வயப்பட்ட சமூகத்தில் பெண்ணுடல் மீது திணிக்கப்படும் வன்முறைக்கு ஆவணமாக இருக்கிறது இந்நாவல். இதுபோன்ற ஆயிரம் ஆவணங்களை நம் சமூகத்திலிருந்தும் எடுக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டுவதே இந்நாவல் குறித்த எனது இந்தப்பதிவின் நோக்கம். மறுக்கிறவர்கள் தினத்தந்தி கட்டம்கட்டி எழுதும் அழகி பிடிபட்டார்கதைகளைப் படிக்காமல் அழகிகளின் மறுபக்கத்தைப் படித்துப் பாருங்கள்!

சூன்யப் புள்ளியில் பெண்

நவ்வல் எல் சதாவி

தமிழில்  : லதா ராமகிருஷ்ணன்
வெளியீடு
உன்னதம்-638455

ஆலந்தூர் அஞ்சல்

கவுந்தப்பாடி

ஈரோடு மாவட்டம்

பேசி-9940786278

12 thoughts on “ஆண்வயப்பட்ட சமூகம் பெண்ணுடல் மீது திணிக்கும் வன்முறை

 1. நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!

  //மறுக்கிறவர்கள் தினத்தந்தி கட்டம்கட்டி எழுதும் “அழகி பிடிபட்டார்” கதைகளைப் படிக்காமல் அழகிகளின் மறுபக்கத்தைப் படித்துப் பாருங்கள்!//

  நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள், இது தவிர இன்று வரை அழகிகள் மட்டுமே பிடிபடுவது பற்றியும் பத்திரிக்கைகள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

  எனக்கொரு கேள்வி,
  //“எந்த​வொரு பெண்ணும் குற்றவாளியாக இருக்க இயலாது. குற்றவாளியாக இருப்பதற்கு ஒருவர் ஆணாக இருந்தாக வேண்டியது அவசியம்!”//
  எல்லா ஆண்களிடமும் தவறிருக்கிறது என்றால் புரிந்துகொள்ள முடிகிறது, அதே நேரத்தில் எல்லா ஆண்களுமே குற்றவாளிகளென்றால் அவர்களுக்கு சமுதாயத்தில் என்ன இடம் இருக்கிறது? அவர்கள் இல்லாமல் சமுதாயம் இருக்க முடியாதே?

  • வருகைக்கு நன்றி.

   //எல்லா ஆண்களிடமும் தவறிருக்கிறது என்றால் புரிந்துகொள்ள முடிகிறது, அதே நேரத்தில் எல்லா ஆண்களுமே குற்றவாளிகளென்றால் அவர்களுக்கு சமுதாயத்தில் என்ன இடம் இருக்கிறது? அவர்கள் இல்லாமல் சமுதாயம் இருக்க முடியாதே?//

   எல்லா ஆண்களும் குற்றவாளிகள் என்பதல்ல என் கருத்து. சாதி,மதம்,கலாச்சாரம் ஆகியவற்றின் மூலமாக தங்களுக்குள் காலம்காலமாக திணிக்கப்பட்டு வரும் ஆண்மயப்படுத்தல் கருத்துகளை இனம்கண்டு கொள்ள வேண்டும் என்பதைத்தான் சொல்கிறோம்.

 2. ஆண் பெண் கற்பு நிலை பற்றிய எனது பதிவுகளைப் பார்க்கவும்:
  http://dondu.blogspot.com/search/label/ஆண்%20பெண்%20கற்புநிலை

  அதே சமயம் பெண் விடுதலைக்காக பேசிய பெரியாரே தனது முதல் மனைவி நாகம்மையை சரியாக நடத்தவில்லை என அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார், பார்க்க:
  http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 3. பெரும்பான்மையும் ஆண்வயப்பட்ட சமூகம் என்றே சொல்லியிருக்கலாம்,சிறுபான்மையாக ஆண்கள் நிகழ்த்தும் வன்முறைகள் ,வக்கிரங்கள் அனைத்தையும் இப்போது பெண்களும் சம உரிமை என்ற பெயரில் நடத்த துவங்கி ஒரு மீள முடியாத நரக சூழலை அனுபவிக்கும் கொடுமை எங்கும் நிறைந்து விட்டது, யாருக்கும் வெட்கமில்லை,

  //எட்டு மாத கைக்குழந்தையானாலும் சரி, எண்பது வயது மூதாட்டியானாலும்சரி பெண்ணுடல் எப்போதும் இச்சைக்குரியதாகவே உள்ளது //

  கசக்கும் உண்மை இது,

  குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றிப் படிக்க உள்ளம் நடுங்குகிறது ஒவ்வொரு முறையும்,எத்தனை உதாரணங்கள் பார்த்து விட்டோம், அரபு நாட்டு பணக்கார வக்கிரம் பிடித்த கிழவர்களுக்கு இங்கிருந்து திருமணம் என்ற பெயரில் விலை பேசப் படும் முஸ்லீம் பள்ளிச் சிறுமிகள்,

  சந்தேகப் பட இயலாத வகையில் குடும்பத்துக்குள்ளேயே பல விஷ விதைகள் நடமாடும் ஆரோக்கியமற்ற குடும்ப உறவுகள் ,பள்ளி ,பக்கத்து வீடு என அடையாளம் காண முடியாமல் விரவிப் புரையோடிப் போயிருக்கும் பல கண்டுபிடிக்க முடியாத பாலியல் ஆபத்துக்கள்.

  என்ன செய்ய வேண்டும் பெற்றோர்கள் ?

  பொறுப்பான பெற்றோர்கள் எனில் சுயநலத்தை விட்டு ஒழிக்க வேண்டும் முதலில்,எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் தெளிவு வேண்டும்.

  “உடையவர் பார்க்கா விட்டால் ஒரு முழம் கட்டை என்ற பழமொழி ” குழந்தை வளர்ப்பிலும் பொருந்தும் .பொருளாதார தாராளம் என்ற பெயரில் அம்மா அப்பா இருவரும் காலையில் வேலைக்குப் போய் பெருநகரங்களில் போக்குவரத்தை தாண்டி வீடு வந்த சேர பின்மாலை ஆகிறது.

  அதற்குள் குழந்தைகள் தூங்கி விடக் கூடும், அவர்களுடன் தினம் பேசக் கூட முடியாதொரு சூழல் தொடர் கதையாகி கட்டாயமாகும் போது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே தூரம் தெரியாக் கோடு அழுத்தமாகப் படிந்து குழந்தைகள் சொல்ல வரும் எந்த ஒரு விசயத்தையும் சரி வரக் காது கொடுத்துக் கேட்க பொறுமை இன்றி நாட்கள் நகர்கின்றன.

  யாரிடம் அந்தக் குழந்தைகள் தங்களின் சந்தேகங்களை கேட்டுத் தீர்த்துக் கொள்ள முடியும்,

  பிற உறவுகள் அம்மா … அப்பா என்ற உறவுக்கு ஈடாகக் கூடுமா? முடியுமா?

  விளைவு !?

  யோசிக்க வலுவின்றி …தங்கள் கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு சரியான பகிர்தலுக்கு ஆட்களின்றி தடம் மாறும் அல்லது மாற்றப் படும் …மாற்றப் பட்ட பல்லாயிரக் கணக்கான குழந்தைகள்,

  “கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் “என்பதைப் போல மனரீதியாக குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது அதைக் கவனிக்க நேரமின்றி ஓடி விட்டு பிறகு ஆற அமர உட்கார்ந்து அழுவதில் பிரச்சினை தீர்ந்திடுமோ???

  தினம் பேசுங்கள் பெற்றோர்களே …பெற்ற குழந்தைகளிடம் மிதமான அளவில் எல்லா விசயங்களைப் பற்றியும் அந்தந்த வயதுக்கு ஏற்ற விசயங்களை சொல்லித் தரலாம்,

  “குட் டச் ..பேட் டச் “…பற்றி சொல்லிக் கொடுக்கலாம்

  யாரிடம் எந்த அளவுக்குப் பழகலாம் என்ற வரம்புகளைப் பற்றி கோடிட்டுக் காட்டலாம்.

  தனிக் குடும்பங்கள் மலிந்து விட்ட இந்த காலத்தில் வீட்டில் ஒற்றைக் குழந்தைகள் எனும் நிலை. அப்படிப் பட்ட வீடுகளில் எக்காரணம் கொண்டும் குழந்தைகள் தனித்திருக்கும் சூழலை தவிர்த்தே ஆக வேண்டும்,

  எதையோ எழுத ஆரம்பித்து எதையோ சொல்லிக் கொண்டு போகிறேன், மனம் நடுங்கத்தான் செய்கிறது,இந்தியா போன்ற சற்றே அமைதி நிலவும் சூழல் உள்ள நாட்டிலேயே பல குற்றங்களை நம்மால் ஜீரணிக்க இயலவில்லை, ஈழத்திலும் ,காஷ்மீரிலும் போர்ச் சூழலில் பல கொடூரங்களை கண்ணெதிரே கண்டு வளரும் குழந்தைகளின் மனநிலை மாறுதல்களைப் பற்றி யோசித்தால் குழப்பமான பயமே மிஞ்சுகிறது, ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

  குழந்தைகள் போர்…பகைமை …வக்கிர எண்ணங்களுக்கு அப்பாற்ப்பட்ட தெய்வீக மலர்கள் அல்லவா ?…!!! ?என்னத்தைச் சொல்ல ? சொல்ல ஒன்றுமில்லை,

  பூக்களை சிதைக்காதீர்கள் ப்ளீஸ் …அப்படிச் செய்யும் ஒவ்வொருவரும் மனநோயாளிகளே.

 4. “எந்த​வொரு பெண்ணும் குற்றவாளியாக இருக்க இயலாது. குற்றவாளியாக இருப்பதற்கு ஒருவர் ஆணாக இருந்தாக வேண்டியது அவசியம்!”

  பாதிக்கப்பட்ட பெண்ணுடைய மனநிலையில் வெளிவரும் வார்த்தைகள் தான் தவிர. முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகள்.

  //அழகி பிடிபட்டார்” கதைகளைப் படிக்காமல் அழகிகளின் மறுபக்கத்தைப் படித்துப் பாருங்கள்!//

  மறுபக்கம் கண்டிப்பாக வாழ்க்கை சூழலில் சிக்கி வழி தெரியாமல் தடம் மாறியதாக இருக்கும். இருந்தாலும் 498A பிரிவில் போடப்படும் வழ்க்குகள் எத்தனை பொய்யானவை என்பதையும் பாருங்கள். பெண்ணுரிமையை நிலைநாட்ட தொடுக்கபட்ட சட்டங்கல் சதாரண சண்டைகளுக்கும், பழிவாங்கும் நோக்கத்திற்க்கும் தவறான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவருகிறது.

 5. அருமையான பதிவு,

  ஆனால் இந்த பெண் விடுதலை தொடர்பான கேள்விகளில் ஒரு factor-ஐ சேர்க்க வேண்டும், அது ” பாலியல் வறட்சி – sexual poverty”.

  கவனிக்கவும் நான் சொல்ல வருவது பாலியல் வறட்சி என்பது மற்றும் ஒரு காரணி அது மட்டுமே எல்லா தவறுக்கும் வன்கொடுமைக்கும் காரணம் இல்லை, இன்றைய சூழ்நிலையில் பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்தும் எண்ணம் இல்லா ஒரு நாகரீக யுவனும் இந்த சமுதாயத்தில் இருக்கும் பாலியல் வரட்சியினாலேயே தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை sexual harassment செய்ய முயல்கிறான்.

  ஆனால் ஒரு 60 வயது கிழவன் 18 வயது பெண்ணை மணப்பதற்கு இந்த பாலியல் வறட்சி முக்கிய காரணம் இல்லை (ஆனால் மிக லேசான ஒரு காரணம்)

  பெண் விடுதலை பெண் உடல் மீதான வன்முறை இவை இரண்டும் ஒரு சமுதாயத்தின் பாலியல் வறட்சிக்கு மிகவும் நெருங்கியவை, எங்கு பாலியல் வறட்சி இல்லையோ அங்கே பெண் கொடுமை குறைவு.

  கலாசாரம் என்ற பெயரில் என்று பாலியல் வறட்சி (ஆண்களுக்கும் பெண்களுக்கும் )ஏற்பட்டதோ அன்றே பெண் உடல் மீதான வன்கொடுமையும் ஆதிக்கமும் அதிகரிக்க (கவனிக்கவும் அதிகரிக்க) தொடங்கி இருக்கும்.

  மற்றபடி ஆண் என்ற ஆணவத்தில் செய்யும் செயல்களை நாம் பாலியல் வரட்சியுடன் தொடர்பு படுத்தி பார்க்க முடியாது அது முழுக்க முழுக்க ஆணின் உளவியலை சார்ந்தது.

  என்று நம் நாட்டில் ஒரு ஆணோ பெண்ணோ தனக்கு பிடித்தவனுடன் பிடித்தவளுடன் உடல் உறவு வைத்துக்கொள்ள (அதாவது சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதுத்தடன்) முடிகிறதோ அன்றுதான் பெண் உடல் மீதான பாலியல் வன்முறை குறையும்.

  மீண்டும் தீர்மானமாக சொல்கிறேன் monogomy is against nature.

  ஒருவன் அல்லது ஒருத்தி பருவம் எய்தியபின்பு பாலியல் வேட்கை வந்த பின்பு சுமார் 10-12 வருடங்கள் ஆகின்றது உடல் உறவு வைத்துக்கொள்ள..ஆணுக்கு வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் இது சுமார் 40-42 வயதில் அடக்கிக்கொள்ள இந்த சமுதாயம் அறிவுறுத்துகின்றது, அது வெடிக்கும்போதுதான் 60 வயதில் 18 வயதை பார்க்க தூண்டுகிறது. இன்று எஜமானனாக இருக்கும் ஆண்களுக்கே இந்த கதி என்றால் பெண்களின் பாலியல் வறட்சி நினைத்து பார்க்க முடியாதது என்பதனையும் நான் அறிவேன்.

 6. டோண்டு ராகவன், மிஸஸ் தேவ், விஷ்ணு, கோகுல்,
  நண்பர்களின் பகிர்தலுக்கு நன்றி.
  தங்கள் ஒவ்வொருவரின் கருத்தும் புது கோணத்தில் சிந்தனையை தூண்டுகிறது.

 7. அன்புள்ள சகோதரிக்கு வணக்கம்,

  பெண்களின் உரிமை என எதை, எப்படி என்பதை தெலிவாக சொன்னால் எனது கருத்தை சொல்ல சரியாக இருக்கும்.

 8. Excellent writing.. I do think sometimes sex ratio would be one of the main reason behind this atrocities.. Insome cases, we know the good education and wisdom changes the things very differently. But this is the only case where you do see a difference between a educated and educated.

 9. //எந்த​வொரு பெண்ணும் குற்றவாளியாக இருக்க இயலாது. குற்றவாளியாக இருப்பதற்கு ஒருவர் ஆணாக இருந்தாக வேண்டியது அவசியம்//

  பாதிக்கப்பட்ட சகோரிகளுக்காக இயற்றப்பட்ட 498ஏ என்றம் வரதட்சணை கொடுமை சட்டத்தை சில பெண்கள் (???) தவறாக பயன்படுத்தி அப்பாவி வயதான தாய்த்நதையர் பக்கத்து வீட்டுக்காறர்…. இளம் சகோதரிகள் ஆகியோரை சிறையில் அடைக்கின்றனரே இதைப்பற்றி தங்கள் கருத்தென்ன?

 10. //“எந்த​வொரு பெண்ணும் குற்றவாளியாக இருக்க இயலாது. குற்றவாளியாக இருப்பதற்கு ஒருவர் ஆணாக இருந்தாக வேண்டியது அவசியம்!”//

  இந்தச் செய்தியை வாசியுங்கள்:

  உயர் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரிகள் என்றால், மிகவும் நேர்மையானவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன்.அவரை சி.பி.ஐ., மடக்கிய விதமும், அதற்குப் பின் நடைபெறும் விசாரணைகளும் பார்த்தால் மலைக்க வைக்கின்றன. அவர் பணியாற்றிய அலுவலகத்தில் அவரை கைது செய்ததில் மகிழ்ச்சி அடையாதவரே இல்லை என்று கூறப்படுகிறது.

  (நன்றி தினமலர் 1-5-2009)

  இரு பாலர்களிடையேயும் நல்லவர்களும் கெட்டவர்களும் உண்டு. சமுதாயத்தின் அணுகுமுறை பொதுவானதாக இருக்கவேண்டும். பெண்மையைச் சிறப்பிக்க வேண்டுமென்றால், ஆணினத்தை கேவலப்படுத்த வேண்டுமா? இத்தகைய மனப்பாங்கு வெறுப்பைத்தான் வளர்க்கும். இணக்கத்தை ஏற்படுத்தாது. இதுபோல் ஆண்களை மட்டம் தட்டி எழுதுவது, பேசுவது என்பது ஒரு ஃபேஷனாகப் போய்விட்டது!

 11. அம்மணி!

  பதிவை வாசித்து முடித்ததும் நாக்கு சுளுக்கிக் கொண்டது. இந்த கொடுந்தமிழ் வன்முறையை எழுத்தில் செலுத்தி அப்பாவி ஆணான என்னை துன்புறுத்தியிருக்கிறீர்கள் 😦

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.