போராட்ட களமாகும் பட்டமளிப்பு விழா மேடைகள்!

“நாங்கள் ஆவணங்களைக் காட்டமாட்டோம். இன்குலாப் ஜிந்தாபாத்!” ஜாதவ்பூர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை திருத்த சட்டத்தின் நகலை கிழித்தெழிந்த மாணவி டெப்ஸ்மிதா சவுத்ரி மேடையில் முழங்கிய முழக்கம் இது. இன்று நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்திருக்கின்றபோராட்டத்தின் கனல், பட்டமளிப்பு விழா மேடைகளில் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. “எனது எதிர்ப்பு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல. மோடி அரசாங்கத்தின் பாரபட்சமான, மாணவர் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும்தான்” எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்.

கடந்த டிசம்பர் 15 அன்று குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் அமைதியாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை போர்க்களமாக மாற்றியது டெல்லி போலீசு. பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது; வகுப்பறை கண்ணாடி கதவுகள் – ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன; நூலகம் இரத்தத் துளிகளால் நிரம்பியது.

நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் அடங்கும் முன் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் போராடிய மாணவர்கள் மீது அதைக் காட்டிலும் கடுமையான வன்முறை ஏவப்பட்டது. மாணவர்கள் சிலர் முடமாகும் அளவுக்கு கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தங்களுடைய பட்டமளிப்பு விழா மேடையை எதிர்ப்புணர்வை காட்டும் மேடையாக மாற்றினர். தங்க பதக்கம் வென்ற அருண்குமார், கார்த்திகா, மேகலா ஆகியோர் தங்களுடைய எதிர்ப்புணர்வை காட்டும் வகையில் பட்ட விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர். அவர்கள் வெளிப்படுத்திய தார்மீக ரீதியிலான கோபம், அரசியல் செயல்பாட்டாளர்களிடம்கூட காணக்கிடைக்காதது.

“மக்களின் குரல்களைக் கருத்தில் கொள்ளாத அரசாங்கத்தால் என்ன பயன்?” என்கிற கார்த்திகா, எம்.எஸ்ஸி. எலக்ட்ரானிக் மீடியா படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர்.

“குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெறுமாறு நான் கோருகிறேன். என்னைப் போன்ற மாணவர்கள் கடினமாக உழைத்து பெற்ற மதிப்புகளை இதற்காக ஏன் விட்டுத்தருகிறோம் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். ஒரு தனிநபராக, இந்த வழியில் எதிர்ப்பு தெரிவிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. மற்றவர்களை தங்கள் எதிர்ப்பை எந்த வகையிலாவது பதிவு செய்ய நான் அழைக்கிறேன்” என்கிறார் கார்த்திகா.

“அரசாங்கம் சொல்வது அனைத்தையும் கேள்வி கேட்காமல் எப்படி பின்பற்ற முடியும்? இது ஒன்றும் பாசிச நாடு அல்ல, நாம் ஜனநாயக நாடு என்றுதான் அரசியலமைப்பு சொல்கிறது. எங்களுக்கு எது கொடுக்கப்பட்டாலும் அதை அப்படியே தலை வணங்கிய ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வழியிலும் நாம் போராட வேண்டும்” என கார்த்திகாவிடமிருந்து வார்த்தைகள் அத்தனை அரசியல் தெளிவோடு வெளிப்படுகின்றன.

பதக்கத்தை தூக்கி எறிந்த மற்றொரு ஆய்வுப் பட்ட மாணவரான அருண்குமார், “போலீசு தாக்குதலுக்கு ஆளான பல்கலை மாணவர்களுக்காக மட்டுமல்ல, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பு வீதிகளில் போராடுகிறவர்களுக்குமாகவும்தான் எங்களுடைய ஆதரவை தெரிவிக்கிறோம்.” என்கிறார்.

“நான் குடியரசு தலைவரிடமிருந்து பட்டத்தை வாங்க விரும்பவில்லை. அவர் நினைத்திருந்தால் அந்த மசோதாவை மீண்டும் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்க முடியும். ஆனால், அவர் கையெழுத்திட்டு அதை அமலாக்கினார்” என்கிறார் அவர்.

இன்னொரு மாணவி மேகலா சொன்ன காரணத்தை படியுங்கள்: “மத மற்றும் சமூக அடிப்படையிலான பாகுபாட்டை எந்த இந்திய குடிமகனும் பொருத்துக்கொள்ள முடியாது. இன்று முசுலீம்கள், நாளை கிறித்துவர்களாக இருக்கலாம். அதன்பின் தலித்துகள், பிறகு சிறுபான்மையினர். இது மக்களை பிரிக்கும். அதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்கிறார் அவர்.

“இதனால்தான் நாங்கள் படித்தவர்கள். நாங்கள் படிக்கிறோம், அதனால் காரணம் கண்டுபிடித்து கேள்வி எழுப்புகிறோம். நமக்கு தீங்கு விளைக்கும் எந்தவொரு விசயத்துக்கும் எதிராக குரல் எழுப்பும்போது, அரசு நம்மை ஏன் கொடூரமாக நடத்துகிறது?” என அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறார் அவர்.

இவர்களின் வழியில் புதுச்சேரி பல்கலை மாணவியான ரபீஹா அப்துரஹீம் தனது பதக்கத்தை விழா மேடையிலே வாங்க மறுத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பல மாதங்கள் கடுமையாக உழைத்து பெற்ற பதக்கங்களை, பாராட்டுக்களை எதிர்காலத்தின் நன்மைக்காக விட்டுக்கொடுத்த இந்த மாணவர்களின் அரசியல் தெளிவு, களத்தில் உள்ள வாக்கு அரசியல் கட்சிகளிடம் இல்லாத ஒன்று.

உண்மையில் எதிர்க்கட்சிகள் செய்வதறியாது, போராட்டத்தின் திசைவழி அறியாது தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், டெல்லியில் மையம் கொண்டு இந்தியா முழுவதும் பரவிய மாணவர்கள் எதிர்க்குரல் ஒட்டுமொத்த இந்திய சமூகத்துக்கும் வழி காட்டுகிறது.

இதை மூத்த அரசியல்வாதியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். அவருடைய வார்த்தைகளில் சொல்வதென்றால்,

“குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட 15 நாட்களில் மாபெரும் புரட்சி, நாடு முழுவதும் நடந்திருக்கிறது. அதற்கு அரசியல் கட்சிகள் காரணமல்ல. இந்தப் போராட்டத்துக்கு மாணவர்களும், இளைஞர்களும் சொந்தக்காரர்கள். நாடு முழுவதும் அவர்களாகவே முன்வந்து போராடுகிறார்கள். அரசியல் சாசனத்தின் அடிப்படை நெறிமுறைகளை காப்பாற்ற திரண்டிருக்கிறார்கள். இதில் அரசியல் கட்சிகள் தோல்வியடைந்து விட்டன.” .

பாஜக தலைமையிலான ஆட்சி மத்தியில் அமர்ந்தவுடன், முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறைகளைக் கண்டித்து சாகித்ய அகாதமி விருதாளர்கள் தங்களுடைய விருதுகளை திரும்ப அனுப்பி தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இது நாடு முழுவதும் பரவியது; உலகத்தின் கவனத்தைப் பெற்றது. ஒரு கட்டத்தில் வேறுவழியில்லாமல் பிரதமர் நரேந்திர மோடி, அடிப்பதென்றால் தன்னை அடிக்கும்படி பேசினார். மதத்தை முன்னிறுத்திய கும்பல் வன்முறையாளர்கள் சற்றே அடங்கினர்.

மாணவர்கள் கையில் எடுத்திருக்கும் போராட்டங்களும் அவர்கள் பட்டமளிப்பு விழா மேடைகளை எதிர்ப்புணர்வைக் காட்டும் மேடைகளாக மாற்றியிருப்பதும் விருதுகள் திரும்ப அளிக்கும் போராட்டங்களைக் காட்டிலும் வீரியமானது. அவசரநிலை காலக்கட்டத்துக்குப் பின், மாணவர் சமூகம் வேறு எந்த பிரச்சினைக்காகவும் இப்படியான போர்க்கோலத்தை பூணவில்லை என்கிறார் சமூக – அரசியல் செயல்பாட்டாளர் தீஸ்தா செடல்வாட் .

1974-ஆம் ஆண்டு பீகாரில் மாணவர்களால் தொடங்கப்பட்ட ‘பீகார் இயக்கம்’, பின்னாளில் காந்திய சோசலிசவாதி ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் ‘சம்பூரண கிர்ந்தி (முழுமையான புரட்சி இயக்கம்) அல்லது ஜெ.பி. இயக்கமாக’ பரிணமித்தது. அதுவே, இந்திரா காந்தியின் அவசரநிலை அரசு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தது.

பீகார் மாணவர் அமைப்பில் இருந்தவர்களே லாலு பிரசாத் யாதவ், சுஷில் குமார் ஷிண்டே, ராம்விலாஸ் பஸ்வான் போன்ற இந்நாளைய தலைவர்கள். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த சீதாராம் யெட்சூரி அந்நாளில் எமர்ஜென்ஸியை எதிர்த்து போராடியவர்கள். இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி குஜராத்தின் நவநிர்மாண் இயக்கத்தில் மாணவராக இருந்த காலத்தில் பங்கெடுத்தவர். எமர்ஜென்ஸியை எதிர்த்த இயக்கங்களில் மாணவர்களின் நவநிர்மாண் இயக்கமும் முதன்மையான பங்காற்றியது.

வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. ஆட்சி அதிகாரத்துக்கு வரும் எந்தவொரு கட்சியுமே போராட்டங்களை ஒடுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன. ஆனால் இப்போதையே நிலைமை அவசர காலக்கட்டத்தையும் விட மோசமானது.

அவசர காலக்கட்டத்தின் அரசாங்கத்தை எதிர்த்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டார்கள்; ஊடகங்கள் முடக்கப்பட்டன. இப்போது அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக நிற்கிறது. உலகின் மிகச்சிறந்த அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான முழக்கமான ‘மதச்சார்பின்மை’ இன்று கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இதுவரை கட்டிக்காக்கப்பட்ட இந்தியா என்கிற கருத்தாக்கத்தை மாற்றியமைக்கு முயற்சியில் இருக்கிறது ஆளும் அரசாங்கம்.

சென்ற தலைமுறை இதைக் கடந்து செல்ல முயற்சிக்கிறது அல்லது கண்டுகொள்ள மறுக்கிறது. இந்தத் தலைமுறை தனது உரிமைகளுக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காக இந்தியா என்கிற மதச்சார்பற்ற நாட்டை காப்பாற்றத் துடிக்கிறது; வீதியில் இறங்கிப் போராடுகிறது. தனக்கு வாய்க்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தனது நாட்டின் ஆன்மாவைக் காப்பாற்ற நினைக்கிறது. பாராட்டு மேடைகளை போராட்ட மேடைகளாக மாற்றுகிறது. அடக்குமுறைகளைக் கடந்து வீரியத்துடன் நிற்கும் மாணவர் பட்டாளம், பொது சமூகத்துக்கு போராட்ட அரசியலைக் கற்றுத்தருகிறது.

அரசு மூடிய அத்தனை கதவுகளையும் தனது போராட்ட வலிமையால் இந்த மாணவர்கள் திறக்க வைப்பார்கள் என்கிற நம்பிக்கையும் பிறக்கிறது.

– மு.வி. நந்தினி.