பாஜக அரசு கண்டுபிடித்திருக்கும் சரஸ்வதி நதி இதுதான்!

சரஸ்வதி நதி… புராணங்களில் சொல்லப்படும் நதி. ரிக் வேதத்தில் சில இடங்களில் சரஸ்வதி நதி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. புனித நதியாகக் குறிப்பிடப்படும் சரஸ்வதியைத் தேடி, இந்துத்துவவாதிகள் இப்போது கையில் செம்பட்டியும் கடப்பாரையுமாக களம் இறங்கியிருக்கிறார்கள்.

ஹரியாணாவை ஆண்டுகொண்டிருக்கும் பாஜக அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, புராண நதியை நிஜத்தில் தேட பல கோடி ஒதுக்கி, பூமியைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சாமியார் உமா பாரதி, 2014-ஆம் ஆண்டு சரஸ்வதி நதியைக் கண்டுபிடிப்பதில் அரசு தனிச் சிரத்தையுடன் நடந்து கொள்ளும் என்று தெரிவித்தார்.
ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் (முஸ்லீம்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் மாட்டுக்கறி உண்பதை நிறுத்த வேண்டும் என்றாரே,அவரேதான் ) கடந்த பிப்ரவரி மாதம், சரஸ்வதி நதியைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். அதன்படி மே மாதம், ஒரு இடத்தில் ஆய்வுக்குழுவினர், தோண்டிக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் தண்ணீர் வந்தது, உடனே சரஸ்வதி நதி கண்டறியப்பட்டு விட்டது என்று குதூகலித்தனர். அந்த இடத்தை வணங்க ஆரம்பித்தார்கள்.

saraswathi river

சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையாக, இல்லாத சரஸ்வதி நதி நாகரிகத்தை நிறுவும் பொருட்டு இந்துத்துவவாதிகள் சரஸ்வதி நதியைத் தேடும் பணியைச் செய்துவருவதாக காட்டமான விமர்சனம் வைக்கிறார் வரலாற்று அறிஞர் இர்பாஃன் ஹபீப்.

ஹரியாணா அரசின் கூற்றுப்படி சரஸ்வதி நதி, இமயமலையில் உற்பத்தியாகி, ஹரியாணா வழியில் பாய்ந்து அரபிக் கடலில் கலந்ததாம். ஆனால் தொல்லியல் ஆய்வாளர்களும் வரலாற்று அறிஞர்களும் இப்படியொரு நதி, இந்தப் பாதையில் கடந்த 10ஆயிரம் ஆண்டுகளில் பாய்ந்திருப்பதற்கான எந்தச் சுவடும் இல்லை என்கிறார்கள். நதியல்ல, ஓடை ஓடியதற்கான சான்றுகூட இல்லை என்கிறார்கள்.

ஆனாலும், ஹரியாணா அரசு பின்வாங்குவதாக இல்லை. நிலத்தை ஆழமாகத் தோண்டும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. தோண்டிய பிறகு, நதி எதுவும் கிடைக்காவிட்டாலும் செயற்கையாக ஒரு நதியை உருவாக்கும் மாற்றுத் திட்டத்தை இவர்கள் வைத்திருக்கிறார்கள். ஹரியாணாவின் யமுனா நகர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு தோண்டி ஒரு ‘நதி’ப் பாதையை உருவாக்கியிருக்கிறார்கள்.  தொலைவில் உள்ள நீர்த்தேக்கத்திலிருந்து இந்த இடத்துக்கு நீரைக் கொண்டு வந்து சரஸ்வதி நதியாக ஓட விடுவார்களாம். சரஸ்வதி நதி நாகரீகம் மிகப் பழமையான நாகரீகம் என உலகத்துக்கு காட்டுவதற்கான ஏற்பாடு இது என்கிறது அரசு.

கடந்த 2014-ஆம் ஆண்டு மருத்துவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “யானையின் தலையுடன் விநாயகரின் தலையை ஒட்ட வைத்து அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அறிவியலில் முன்னோடியாக நமது முன்னோர்கள் திகழ்ந்திருக்கிறார்கள்” என்று பேசினார்.  ஒரு நாட்டின் பிரதமரே அறிவியலுக்கும் புராணத்துக்கும் வேறுபாடு தெரியாமல் பேசும்போது, அவர் வழி வந்த ஒரு மாநில அரசு இல்லாத நதியைத் தேடுகிறோம் என்று பூமியைக் குடைகிறது.

இல்லாத நதியைத் தேடுவதில் காட்டும் அக்கறை ‘இந்து’க்களின் பாவங்களைப் போக்கும் நதிகளாக போற்றப்படும் கங்கை, யமுனை இன்னும் பல இந்திய நதிகளைக் காப்பாற்றுவதில் ஏன் காட்டுவதில்லை? அதன் பெயர்தான் இந்துத்துவ அரசியல்!

Bloomberg.com ல் வந்த கட்டுரை அடிப்படையாகக் கொண்டு எழுதியது.

தினச்செய்தி(30-12-2015) நாளிதழில் வெளியானது.

ரூ. 7 கோடியில் தெலுங்கானா முதல்வர் வளர்த்த யாகம்!

அவரவர் மதநம்பிக்கைகளை பின்பற்ற முழுசுதந்திரத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கிறது. அதே நேரத்தில் தனிப்பட்ட நபர், அரசின் பிரதிநிதியாக வரும்போது அவர் மதசார்பற்றவராக, மதத்தை முன்னிறுத்தாதவராக இருக்க வேண்டும் என்கிறது அதே அரசியலமைப்புச் சட்டம். ஆனால் பல நேரங்களில் இந்திய அரசியல்வாதிகள், அரசின் பிரதிநிதிகளாக அமரும்போது தங்களுடைய மதத்தை முன்னிறுத்திக் கொள்கிறார்கள். இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். சமீபத்திய உதாரணம், தெலுங்கானா மாநில முதல்வர், மிக பிரமாண்டமாக நடத்திய யாகத்தைச் சொல்லலாம்.

தெலுங்கானா என்ற தனி மாநிலம் அமைந்ததற்காக மகா சண்டி யாகத்தை ஐந்து நாட்களுக்கு நடத்தினார்  சந்திர சேகர ராவ். ரூ. 7 கோடி செலவில் பிரமாண்ட யாக சாலை இதற்காக அமைக்கப்பட்டது. தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், தமிழகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இரண்டாயிரம் வேத பண்டிதர்கள் இந்த யாகத்தை நடத்தினர்.
ஹைதராபாதை அடுத்துள்ள மேடக் மாவட்டம், எர்ரவள்ளி கிராமத்தில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் நடந்த இந்த யாகத்தில் தமிழக ஆளுநர் ரோசைய்யா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பண்டாரு தத்தாத்ரேயா, காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்பராமி ரெட்டி, மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் சிவபிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்பதாக இருந்தார்.

ஆட்சியாளர்கள் ஏதோ ஒரு மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் அப்படித்தான் தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இங்கு நடப்பதைப் போல தனிப்பட்ட மத உணர்வுகளை பொதுமைப் படுத்துவதில்லை. மதத்தை அடிப்படையாக நாடுகளில் இது நடக்கலாம். ஆனால், மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் ஒரு மாநில அரசே முன்நின்று யாகம் நடத்துவது நிச்சயம் தவறான முன்னுதாரணமே. அதில் கட்சி பாகுபாடு இல்லாமல், அனைத்து கட்சியினர் கலந்து கொள்வது, குடியரசுத் தலைவர் கலந்துகொள்வது மக்கள் மத்தியில் ஆட்சியாளர்களின் மதச்சார்பின்மை மீது கேள்வியைத்தான் எழுப்பும்.

புது வீடு கட்டினால் யாகம் ஒருவருடைய தனிப்பட்ட விவகாரம், ஆனால் புது மாநிலம் அமைந்திருக்கிறது என்று ஒரு மாநில அரசு  யாகம் செய்கிறோம் என்று சொல்வது அரசே ஒரு குறிப்பிட்ட மதச்சார்புக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதாக மாறுகிறது. இது அரசியலமைப்பு எதிரான செயல்.  கிறித்துவ, முஸ்லிம் விழாக்களில் பங்கேற்பதுபோல இந்து மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எந்தவிதத்திலும் கேள்வியாவதில்லை. ஒரு மதக் கருத்தை விதைக்கும் யாகம் வளர்ப்பது போன்ற பிரமாண்ட நிகழ்வுகளை அரசே நடத்துவது வளர்ந்து வரும் இந்துத்துவ கருத்து பரவலுக்கு மெருகூட்டுவதாக அமையும் என்பதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

தினச்செய்தி(28-12-2015) நாளிதழில் வெளியானது.

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இந்த யாகக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

#FreeProfSaibaba நீதியின் முன் சல்மானும் சாய்பாபாவும் எப்படி ஒன்றாக முடியும்?

நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. நாக்பூர் சிறையில் குண்டா செல்லில்(தப்பிச்செல்லும் வாய்ப்புள்ள குற்றவாளிகளுக்கான சிறை) அடைக்கப்பட்ட இவர், கடுமையான உடல் நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார்.  போலியோவால் பாதிக்கப்பட்ட ஜி. என். சாய்பாபாவால், நகரும் நாற்காலியின் உதவியால்தான் இயங்க முடியும். பலமுறை சாய்பாபாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்.

இவருடைய வழக்கறிஞர், சாய்பாபாவின் உடல்நிலை குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருந்தார். அதன் அடிப்படையில் பூர்ணிமா என்ற சமூக செயல்பாட்டாளர் தாக்கல் செய்த பொதுநல மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவருக்கு மூன்று மாத காலத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை, சாய்பாபாவின் ஜாமீனை ரத்து செய்துள்ளது. இரண்டு நாட்களில் அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் காவல்துறை கைது செய்ய வேண்டும் என்றும் அது தெரிவித்திருந்தது.  இதன் அடிப்படையில் சனிக்கிழமை சாய்பாபா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

“சிறையில் சரியான படுக்கும் வசதியும் கழிப்பிட வசதியும் இல்லாததால் இடது தோள்பட்டையிலும் முதுகுதண்டிலும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது” என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கும் சாய்பாபா வாரம் தோறும் முதுகுதண்டு சிகிச்சை எடுத்து வருவதாக சொல்லியிருக்கிறார்.

சாய்பாபா செய்த குற்றமாக சொல்லப்படுவது தடை செய்யப்பட்ட புரட்சிகர இயக்கத்துடன் இணைந்து பழங்குடி மக்களை போராடத் தூண்டுகிறார் என்பதே. இங்கே தான் எது நீதி என்கிற கேள்வி வருகிறது?

நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றிக் கொண்ட சல்மான் கான் கைது செய்யப்படவில்லை. அவர் மேல் போடப்பட்ட வழக்கு இழுத்தடிக்கப்பட்டு தாமதமாக சல்மானுக்கு தண்டனை கிடைத்தது. தண்டனை அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சல்மான் செய்த மேல்முறையீட்டின் மேல் விரைவாக தீர்ப்பு வந்தது, அவர் விடுதலையானார்.

ஆனால், சாமானியர்களுக்காக குரல்கொடுக்கும் சாய்பாபா போன்றவர்களுக்கு நீதி கிடைப்பது இருக்கட்டும்; நீதியே அவர்களை தண்டிக்கிறது…

பின்குறிப்பு: சாய்பாபாவுக்கு ஆதரவாக எழுதியதாக அருந்ததி ராய் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதானிக்காகவும் அம்பானிக்காகவும்தான் ‘மேக் இன் இந்தியா’!

‘மேக் இன் இந்தியா’ அதாவது ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ என்பதை பிரதமர் நரேந்திர மோடி, தனது வெளிநாட்டுப் பயணங்களின் போதெல்லாம் உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்தியாவை வெளிநாட்டினருக்கு திறந்து விடுவதை இத்தனை நாசூக்காக,  உணர்ச்சிப் பொங்க வைக்கும் வாக்கியத்தின் மூலம் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாகத்தான் இருக்க முடியும்.

ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில்  20 நாடுகளுக்கும் மேல் பயணம் மேற்கொண்டார் நரேந்திர மோடி. மோடி நாட்டில் இருப்பதைக் காட்டிலும் வெளிநாட்டில் இருக்கும் நாட்கள் அதிகம் என்கிற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை அவர் காதில் போட்டுக்கொள்வதில்லை. சமூக வலைத்தள பகடிகளை அவர் சட்டை செய்வதில்லை (அவர்களை கவனித்துக்கொள்ள மோடி பக்தர்கள் இருக்கிறார்கள் என்பதால் பிரச்சினை இல்லை). தொடர்ந்து விமானம் ஏறிக்கொண்டே இருக்கிறார். யாருக்காக?

தன்னை ஏகபோக பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவைத்த மக்களுக்காக அல்ல; ஆட்சியில் அமர வைக்க ஏகத்துக்கும் ‘பொருள்’ உதவி செய்த, தொழிலதிப நண்பர்களுக்காக. ஆஸ்திரேலியாவுக்குப் போனார், நண்பர் அதானிக்கு நிலக்கரி சுரங்கத்தை ஒப்பந்தம் செய்துகொடுக்க. தன் அருகிலேயே தொழிலதிபர் அதானி வைத்துக்கொண்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார். இந்திய ஊடகங்களில் படங்கள் வெளியானதோடு விமர்சனங்களும் வெளியானது. எனவே, தன்னுடைய அடுத்தடுத்த வெளிநாட்டுப் பயணங்களை மோடி இந்த விஷயத்தில் கவனமாக இருந்தார்.

எனினும், மோடியின் மேக் இன் இந்தியா(வழக்கமானதுதான் வெளிநாட்டு கம்பெனிகள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ சேராமலோ இந்தியாவில் பொருட்களைத் தயாரிப்பார்கள்) எதைப் பற்றியது என்பது அம்பலமான பிறகும் மோடி தன் நண்பர்களுக்கான பயணத்தை நிறுத்தவில்லை. சமீபத்தில் ரஷ்யாவுக்குப் பயணமானார், அனில் அம்பானிக்காக!

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் அல்மாஸ் ஆன்டே நிறுவனமும் இணைந்து இந்திய ராணுவத்துக்கு எஸ்.400 வகை ஏவுகணை வாங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மதிப்பு 6 பில்லியன் டாலர்கள். 400 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட, நிலத்திலும் வான்வெளியிலும் தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணை இது.

ரஷ்யாவின் ஆயுதத் தயாரிப்பில் மகுடமாக குறிப்பிடப்படும் இந்த ஏவுகணையை சீன, பாகிஸ்தான் நாடுகளின் ஆயுத சக்திக்கு ஈடுகட்டும் வகையில் வாங்குகிறது இந்தியா. ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து இதை வாங்கி, இந்தியத் தன்மைக்கேற்றபடி மாற்றம் செய்துகொடுக்கும் பணி ரிலையன்ஸ் நிறுவனத்தினுடையது. ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய ராணுவத்துக்கு ரோந்து கருதுவிகளை செய்துகொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் ‘பாதுகாப்பு’க்காக ஏவுகணை வாங்குகிறது; நல்லது. ஆனால் அதை ஏன் மோடி அரசு மறைக்கிறது என்பதே கேள்வி. அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கார்மோவ் ரக ஹெலிகாப்டர் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காக வாங்கப்படும் ஏவுகணை குறித்து எந்த விவரமும் அரசு சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

ரஷ்யாவின் அரசு ஊடகம், எஸ்.400 ரக ஏவுகணையை இந்தியா வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது என செய்தி வெளியிடுகிறது. அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. உலக அளவிலான வர்த்தக பத்திரிகைகள் இதுபற்றி எழுதுகின்றன. ஆனால், அரசு இதுகுறித்து மவுனம் காக்கிறது. அரசு மவுனம் காப்பது ராணுவ ரகசியத்தைக் காப்பாற்ற என்று நாம் நினைக்கலாம். ரஷ்யாவுக்கு இந்தியாவைவிட சீனா நெருங்கிய கூட்டாளி என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதோடு, ரஷ்யாவே உலகத்துக்கு தெரியப்படுத்திவிட்ட பிறகு ராணுவ ரகசியமும் இல்லை; ஒன்றும் இல்லை. எல்லாம் மோடியின் ‘நண்பர்கள்’ பற்றிய ரகசியம்தான்!

இனி மக்கள் ராமர் நினைவாகத்தான் இருக்கப் போகிறார்கள்!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கற்களை இறக்கிக் கொண்டிருக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத்.  இதைப் பார்த்து ஆச்சயப்படவேண்டியதில்லை! அயோத்தியில் இடிக்கப்பட்ட மசூதியின் செங்கற்களைக் கொண்டுதான் இந்துத்துவ அமைப்புகளின் கட்டுமானங்கள் வளர்ந்தன. குறிப்பாக பாஜக வின் அரசியல் வாழ்க்கை ஆரம்பித்ததே 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான்.

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தி முதல் ஆரியக் குடியேற்றம் நடந்த இடங்களில் ஒன்று. வரலாற்று ரீதியாக ஆரியக் குடிகளுக்கும் அயோத்திக்கும் உள்ள தொடர்பு இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. டி. என். ஜா போன்ற வரலாற்றிஞர்கள் இந்த நகரம் குறித்து இப்படித்தான் குறிக்கிறார்கள். இராமாயணம் புராணமாக இருந்தாலும் அதில் உள்ள கதாபாத்திரங்கள் நிஜத்தில் வாழ்ந்தவர்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் மூக்கை நுழைப்பதில் யாருக்கும் உரிமை இல்லைதான். ஆனால், இதையே காரணம் காட்டி அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் அடைவதைக் கேள்வி கேட்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது.

1949-ஆம் ஆண்டு பாபர் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமர் சிலையை வைத்ததில் இருந்து இந்த அரசியல் ஆரம்பிக்கிறது. அந்த சிலையை அகற்ற முஸ்லிம் மக்கள் அஞ்சியது, அதைக் காரணம் காட்டி, சிலை உள்ள இடத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்றதும் அது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் மத சுதந்திரம் என்று சட்டத்தை துணைக்கு அழைத்துக்கொண்டன இந்துத்துவ அமைப்புகள். 1986-ஆம் ஆண்டு வழிபடும் உரிமையை நீதிமன்றம் பெற்றுக்கொடுத்தது.

பெரும்பான்மை இந்து மக்கள் இந்த மூளைச்சலவைகளுக்கு  ஆளான இந்தக் காலக்கட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியும் வளரத் தொடங்கியது. இந்து-முஸ்லீம்கள் பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்த 1990களில் ராமர் கோயில் கட்டுவதில் பாஜகவின் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அசோக் சிங்கால் போன்றோர் தீவிரம் காட்டினர். அதற்கான திட்டங்களைத் திட்டினர். தங்களுடைய திட்டத்துக்கு நாடு முழுவதும் ரதயாத்திரை நடத்தினார் அத்வானி.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதற்கு அடுத்த வந்த 1996-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரண்டாவது பாஜக திட்டமிட்டதுபோல வளர்ச்சி கண்டது.  ஆட்சியமைக்க முயன்று ஆட்சியும் அமைத்தது. 13 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.

பாபர் மசூதிக்குப் பிறகான 20 ஆண்டுகளில் பாஜக அமோக வளர்ச்சியைக் கண்டுள்ளது. இன்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலும் அமர்ந்திருக்கிறது. நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்பதை முக்கிய அம்சமாக முன்வைத்தார். அதைக் காப்பாற்றுவார் என்பதற்காகவே இந்துத்துவ அமைப்புகள் அவரைக் கொண்டாடின. நடுநிலையாளர்கள் பயந்தார்கள். அதுபோலவே தான் இப்போதை சம்பவங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.

பாஜக ஆட்சிக்கு வந்த முதலே மதவன்முறையை, சகிப்பின்மையைத் தூண்டும் விவகாரங்கள் நாடெங்கிலும் அதிகரித்தன. ஒன்று மாற்றி ஒன்றாக மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை, பீதியை மக்கள் மத்தியில் ஆட்சியாளர்களே ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலை அடுத்த அச்சுறுத்தலாக வந்து நிற்கிறது ராமர் கோயிலைக் கட்டும் விவகாரம். இனி மக்கள் மோடியின் வளர்ச்சி பற்றி ஆசைக்காட்டிய வார்த்தைகளை மறந்துவிடுவார்கள்; கருப்பு பணம் தங்களுடைய வங்கிக் கணக்குக்கு வந்து சேருமா என்கிற ஏக்கத்தை விட்டுவிடுவார்கள்; கல்வி அந்நியமயமாக்கப்படுவதை பற்றி கேள்விக் கேட்கமாட்டார்கள். இனி எப்போதும் ராமர் நினைவுதான், அவர்களை ஆக்கிரமிக்கப் போகிறது!

தினச்செய்தி நாளிதழில் வெளியானது