ஊர் திரும்புதல்…

டந்த ஒரு வாரமாக சென்னையின் தட்ப வெப்ப சூழல் சற்றே இதமானதாக உள்ளது. கோடையில் கருகிவிட்ட தொட்டிச் செடிகளில் உயிர் பிழைத்தவை, பசுமையாக பளிச்சென்று காட்சியளிக்கின்றன. கோடையின் கொடும் வெப்பத்தால் வாடி வதங்கி, நுனி இலைகள் கருகி, இலை உதிர்ந்து கிடந்த ராமேஸ்வரம் மல்லி பூத்திருக்கிறது. அதற்கே உரிய பிரத்யேக மணம், அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் காற்றில் மிதந்து வருகிறது. பால்யத்தை நினைவு படுத்துகிறது அந்த மணம்.

பத்து வயது வரை நாங்கள் வாழ்ந்த அந்தக் கிராமத்தின் வீடுகளில் புழைக்கடை தோட்டங்களில் ராமேஸ்வரம் மல்லிச்செடி ஆக்கிரமித்திருக்கும். டிசம்பர் பூச் செடிகள், டெரியா பூக்கள், பீன்ஸ் செடிகள், மிளகாய் செடிகள் என புழைக்கடை தோட்டத்தில் பலவகையான செடிகள் இருந்தாலும் மணத்தால் ஆக்கிரமித்திருந்தது ராமேஸ்வரம் மல்லியே..

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னோக்கி போகச் சொன்னால், நான் அந்தக் காலக்கட்டத்துக்குத்தான் போவேன். பத்து வயதில் அந்த ஊரை விட்டு வந்ததோடு சரி, மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை. ஆனால், அந்த ஊரைப் பற்றிய நினைவு மட்டும் என்னை விட்டுப் போனதேயில்லை.

கோடையில் கடுமையான தண்ணீர் வறட்சி இருக்கும் ஊர். கோடையைத் தவிர மற்ற நேரங்களில் எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் நிரம்பி வழியும். சிறு வயதில் Aquaphobia என்கிற நீரைக்கண்டால் அலறுகிற பிரச்சினை இருந்தது. குட்டை அளவு நீரைப் பார்த்தாலும் கண்களை மூடிக்கொள்வேன்.

அந்த கிராமத்திலிருந்து எங்கு சென்றாலும் ஏரி அல்லது குளம், குட்டை, நீரோடைகளைக் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கும். என் அம்மாவை இறுகப் பற்றிக்கொண்டு, நீர்நிலைகளை ஒட்டிய ஒற்றையடிப்பாதைகளைக் கடந்து செல்வேன். அதுபோல, பேருந்து பயணத்தின் போது, நிரம்பி வழியும் நான்கைந்து ஏரிகளைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும். பேருந்து ஏரியில் கவிழ்ந்துவிடுமோ என்கிற பயம், ஏரியைக் கடக்கும் வரை இருந்துகொண்டே இருக்கும்.

கிராமத்திலிருக்கும் குழந்தைகள் நான்கைந்து வயதுகளில் நீச்சல் பழகிக்கொள்வார்கள். நான் மட்டும் நீர் பயம் காரணமாக பழகவேயில்லை. ஒருமுறை என் அண்ணன் கடுப்பாகி, கிணற்றின் மேலிருந்து உள்ளே தூக்கிப் போட்டான். அப்போதும் நீரின் மீதான பயம் காரணமாக நீச்சல் கற்கவில்லை. என் வயதுள்ள நண்பர்கள் கிணற்றில் குளிப்பார்கள். நான் மட்டும் கால்வாயில் குளிப்பேன்.

பிறகு, வெவ்வேறு ஊர்களில் குடியிருந்து சென்னை வரை வந்தாகிவிட்டது. முதன்முதலாக கடலை பார்த்தபோது பயம் வரவில்லை. நீர் மீதான பயம் விட்டுப்போய்விட்டது தெரிந்தது..

……………………………………………………………………………………………………………………
சென்னை வந்து கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக கோடையின் கடுமை, இந்த நகரத்தை விட்டுப் போய்விடலாமா என்கிற எண்ணத்தை அதிகப்படுத்திவிட்டது. கிட்டத்தட்ட போய்விடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன்.

கோசிகனுக்குமேகூட சென்னையை பிடிக்கவில்லை. ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறை எங்களுடைய பூர்வீக கிராமத்துக்கு சென்றாலும், அதுதான் அவனைப் பொறுத்தவரையில் சொந்த ஊர்.

ஊரைப் பற்றிய பேச்சு எடுத்ததும், “காலையில சில்லுன்னு காத்து வரும்..ஏசியே போட்டுக்க தேவையில்லை. அப்புறம் ஆறு மணிக்கெல்லாம் குருவிங்க வந்து எழுப்பிவிடும். பயங்கரமாக மின்னல் அடிக்கும், நிறைய மழை பெய்யும்…” என கண்கள் விரிய வர்ணிப்பான்.

இத்தனைக்கும் அங்கிருக்கும் வீட்டில், இங்கிருப்பதைப் போன்ற எவ்வித வசதிகளும் கிடையாது. ஆனாலும், கிராமத்து வீட்டின் மீது அவனுக்கு இயல்பான ஈர்ப்பிருக்கிறது. முடிவெடுப்பதில் எனக்கு இது உதவியாக இருந்தது. எதிர்காலத்தில் அங்கேதான் வாழப்போகிறோம் என்கிற எண்ணமிருந்தபோதும், எப்போது என தீர்க்கமாக முடிவெடுக்க முடியவில்லை. அது இப்போது முடிந்திருக்கிறது.

ஊரில் வெறுமையாக உள்ள வீட்டை, வாழும் வீடாக மாற்ற வேண்டும். சில நேரங்களில் ஒன்றுமில்லாத வெறுமை, மன உளைச்சலை ஏற்படுத்தியதுண்டு. முதலில் புத்தகங்களும் சில மரச் சாமான்களும் செல்கின்றன. அடுத்த கோடைக்குள் ‘வாழ்வதற்கான வீட்டை’ உருவாக்கிவிட வேண்டும். அதில் பல சிக்கல்களும் சவால்களும் இருந்தாலும், இந்த முறை முடியும் என்றுதான் தோன்றுகிறது.

2 thoughts on “ஊர் திரும்புதல்…

  1. என்ன ஆச்சு நந்தினி? ஏன் இந்த முடிவு? அங்குப் போன பின் உங்கள் பத்திரிக்கைப் பணியைத் தொடர முடியுமா?

    • நீண்ட நாட்களாகிவிட்டது உங்களுடன் பேசி… நலமா நீங்கள்? சற்றே தாமதமான முடிவு இது. ஊருக்குப் போன பின்பும் இப்போது போல பத்திரிகைகளுக்கு எழுதும் பணியைச் செய்வேன். இணைய வசதி இருப்பதால், எங்கிருந்து வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம். இப்போதும் அப்படித்தான் செய்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.